ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tamil nationalists support US-backed factions in Sri Lankan political crisis

இலங்கை அரசியல் நெருக்கடியில் தமிழ் தேசியவாதிகள் அமெரிக்க ஆதரவு கன்னைகளுக்கு ஆதரவளிக்கின்றனர்

By K. Nesan
10 November 2018

பாராளுமன்றத்தில் மஹிந்த இராஜபக்ஷவிற்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவிருப்பதாக நவம்பர் 3 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியதும் இராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததும் “பாராளுமன்ற மேலாளுமை”யை மீறிய “சட்ட-விரோதமான”, “அரசியலமைப்பு-விரோதமான” மற்றும் “ஜனநாயக- விரோதமான” செயல் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அறிக்கை விவரித்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் செல்வாக்கான கன்னையாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, நான்கு நாட்களுக்கு முன்னர் கூறும்போது, சூழ்ந்திருக்கும் அரசியல் நெருக்கடியில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை ”சர்வதேச சமுக”த்துடனும் இந்தியாவுடனும் கலந்தாலோசித்த பின்னரே கூட்டணி முடிவுசெய்யும் என்று கூறியிருந்தார்.

விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவிற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மாறாக இந்த அமைப்பு, 2015 இல் சிறிசேனவையும் விக்கிரமசிங்கவையும் அதிகாரத்தில் அமர்த்திய அமெரிக்க ஆதரவு ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு அது ஆதரவளித்த அதே ஏகாதிபத்திய ஆதரவு பாதையையே இப்போதும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நடவடிக்கை சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளது அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தை கொழும்பில் அமர்த்துவதை நோக்கமாய் கொண்டிருந்தது.

தமிழ் தேசியவாதிகளுக்கும் மற்ற நடுத்தரவர்க்க “இடது” அமைப்புகளுக்கும் எதிரான விதத்தில், இந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியை கொண்டுவரும் என்ற மோசடியான கூற்றுகளை நிராகரித்த ஒரேயொரு அரசியல் கட்சி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான ஒரு போரின் அபாயம் குறித்தும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையிலான சமூக சிக்கன நடவடிக்கைத் தாக்குதல்கள் குறித்தும் எச்சரித்த சோசலிச சமத்துவக் கட்சி, கொழும்பின் ஆட்சிக்கு எதிராய் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்தது. சமீபத்திய நிகழ்வுகள் சோசலிச சமத்துவக் கட்சி முற்றுமுழுதாக சரி என்பதை நிரூபணமாகியிருக்கின்றன.

சிறிசேனவை தேர்ந்தெடுத்தால் அது ”ஜனநாயகத்தின் ஒரு மறுமலர்ச்சி”யை உருவாக்கும் என வலியுறுத்தி சம்பந்தன் 2015 இல் சிறிசேனவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். சிறிசேன இப்போது ஒருதரப்பாக பிரதமரை பதவிநீக்கம் செய்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுபடியும் “ஜனநாயக”த்திற்கான ஒரு புனிதப் போரில் இறங்குகிறது, இம்முறை இலங்கையின் தலைமை “ஜனநாயகவாதி”யாக அது போற்றிய மனிதருக்கு எதிராக. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கோரிக்கைகளுடன் நெருக்கமான அரசியல் அணிவகுப்பை பராமரிக்க தமிழ் முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருக்கும் தீர்மானகரமான உறுதியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டு மாற்றத்தின் பின்னணி ஆகும்.

1983-2009 இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர், தமிழ் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் மீது நடத்தப்பட்ட நச்சுத்தனமான அரசு ஒடுக்குமுறையை “மனித உரிமைகளை” பாதுகாப்பதான மோசடிப் பதாகையின் கீழ் கொழும்பில் உள்ள ஆட்சிக்கு நெருக்குதலளிப்பதற்கான அரசியல் சாக்காக பயன்படுத்துவதற்கு வாஷிங்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டுமே முனைந்தன.

இராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு இருபத்திநான்கு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு: “மனித உரிமைகள், சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான ஜெனீவா உறுதியளிப்புகளை இலங்கை அரசாங்கம் மீளுறுதிசெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அறிவித்தது.

இராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு அவர் சீன ஆதரவு கொள்கை ஒன்றைப் பின்பற்றுவாரேயானால், வாஷிங்டன், 2015 இல் இராஜபக்‌ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு அது பயன்படுத்திய 2009 தமிழ் மக்கள் படுகொலைகள் தொடர்பான போர்க்குற்ற விசாரணைகளைக் குறித்த அதே மிரட்டல்களைக் கொண்டு கொழும்பை மீண்டும் மிரட்டக் கூடும் என்று அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டியது.

இலங்கையில் ஜனநாயகத்தை “பாதுகாப்பது” குறித்த மேற்கத்திய சக்திகளது அறிக்கைகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகள் அதிக வித்தியாசமின்றி ஒன்றுபோல் இருப்பதென்பது தற்செயலானதல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எம்.ஏ. சுமந்திரன் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், 2015 இல் இராஜபக்‌ஷவை தோற்கடிக்க “சக்திகளை” அணிதிரட்டியதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னணிப் பாத்திரம் வகித்ததை வலியுறுத்தி, “நாம் தீர்மானகரமான காரணியாக இருக்கிறோம்” எனக் கூறினார்.

ஜனநாயகத்திற்காகவும் 2009 க்குப் பின்னர் தமிழ் வெகுஜனங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் போராடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறும் சிடுமூஞ்சித்தனமான வசனங்கள், சிங்கள பேரினவாத ஜேவிபி இன் (மக்கள் விடுதலை முன்னணி) தலைவரான அனுர குமார திசநாயக்க தலைமையிலான அக்கட்சியின் குழு ஒன்றுடன் சம்பந்தன், சுமந்திரனின் சமீபத்திய சந்திப்பு மூலமாக அம்பலப்பட்டிருக்கின்றன.

சிறிசேனவை தாக்கி சுமந்திரன் “கூட்டமைப்பும் ஜேவிபியும் இந்த நடவடிக்கைகளை கூட்டாக எதிர்ப்பதற்கும் இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான மற்றும் ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவருடனும் கரம் கோர்ப்பதற்கும் முடிவெடுத்துள்ளன” என அறிவித்தார். திசநாயக்கவும் கைமாறாக, “ஜேவிபி மற்றும் வடக்கிலான மக்கள் இருவருமே ஜனநாயக-விரோத நிலைமைகளின் பின்விளைவுகளுக்கு முகம்கொடுத்து வந்திருக்கின்றனர்” எனக் கூறினார்.

இந்த பகட்டு ஆரவாரங்களை இலங்கை தொழிலாளர்கள் ஒரு பொருட்டாக எடுக்க போவதில்லை. 1966 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதலாக, ஜேவிபி தமிழ் மக்களை குறிவைக்கும் இனவாத அரசியலில் முதன்மையானதாக இருந்து.  ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொழும்பு ஆட்சியின் கரங்களால் இரத்தக்களரியில் கொலை செய்யப்படுவதில் முடிந்த அதனது 1971ன் முதலாவது கிளர்ச்சியின் போது ஜேவிபி, தமிழ் தோட்டத்துறை தொழிலாளர்களை இலங்கையில் இந்திய செல்வாக்கிற்கு ஆதரவான ஐந்தாம் படையினராக கண்டனம் செய்தது. ஜேவிபி, உள்நாட்டுப் போரின் போது தமிழ் தேசியவாத சக்திகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்திற்கு செயலூக்கமான ஆதரவு அளித்ததற்கும் சோசலிச சமத்துவக் கட்சி உள்ளிட்ட அதன் அரசியல் எதிரிகளுக்கு எதிரான அதன் கொலைபாதக அரசியல் வன்முறைக்கும் இழிபுகழ் பெற்றதாகும்.

அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் பின்னால் அணிவகுத்து இனவாத ஜேவிபியும் கூட்டமைப்பு தேசியவாதிகளும் கூட்டணி உருவாக்குவது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். இந்தக் கட்சிகள் சர்வாதிகாரத்தை நோக்கிய இலங்கை ஆளும் வர்க்கத்தின் முனைப்பில் முழுமையாக ஒருங்கிணைப்பு கொண்டவை என்பதுடன் தொழிலாளர்களுக்கு கடும் குரோதம் காட்டுபவையாகும்.

சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய மூன்றாண்டு ஆதரவின் கணக்குவழக்கு என்ன?

தொழிலாள வர்க்கத்தின் மற்றும் வெகுஜனங்களின் வாழ்க்கை நிலைமைகளை ஒரேயடியாக மோசமடையச் செய்திருக்கின்ற அரசாங்கத்தின், சர்வதேச நிதி நாணய கட்டளையிலான சிக்கன நடவடிக்கை வரவு-செலவு திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தமிழ் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 இல் வாக்குறுதியளித்தது, ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின் பின்விளைவுகள் எதுவுமே நிவர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை, போர்க் குற்றங்கள் மீதான எந்த விசாரணையும் நடைபெற்றிருக்கவில்லை, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை, இராணுவ வசமிருக்கும் தனியார் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை. போரினால் அழிக்கப்பட்ட வீடுகள் இதுவரை மறுபடியும் கட்டிக்கொடுக்கப்படவில்லை; போரில் அங்கவீனமாக்கப்பட்டவர்களும் விதவைகளும் இப்போதும் எந்த உதவிகளுமின்றி பாதிக்கப்பட்ட நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றனர்.

2016 இல், தமிழ் வெகுஜனங்களின் நெருக்கடி நிலை குறித்து பரந்த கோபம் பெருகிச் செல்வதை நிராகரித்த சம்பந்தன், "நீண்ட பயணமொன்றை பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவசரப்பட்டு அரசுடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது" என்று கூறினார்.

சென்ற மாதத்தின் அட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உடனடியாக சிறிசேன, தமிழ் மக்களுக்கு அவர் எந்த சலுகைகளும் வழங்கப் போவதில்லை என்றும், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை ஒருபோதும் “இணைப்பதற்கு அனுமதிக்கப் போவதோ அல்லது நாட்டை ஒரு சமஷ்டி அரசாக ஆக்க அனுமதிக்கப் போவதோ” கிடையாது என்று அறிவித்தார். என்னை ”கொன்றால் தான்” அத்தகையதொரு அதிகாரப் பரவலாக்கல் அமல்படுத்தப்பட முடியும் என்று அவர் அறிவித்தார்.

அப்படியிருந்தும், சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒரு குழு, நவம்பர் 7 அன்று சிறிசேனவை சென்று சந்தித்தது. அதன்பின் விடுக்கப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில், “அனைத்து அரசியல் கட்சிகளது ஒத்துழைப்புடன் நாட்டின் அரசியல் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதியால் எடுக்கப்படும் எந்த மேலதிக நடவடிக்கைகள் தொடர்பிலும் தனது முழு ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க” சம்பந்தன் உறுதியளித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கும் தமிழ் தேசியவாதிகள் மீதான தமிழ் தேசியவாத விமர்சகர்கள், அதனது பாராளுமன்ற சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர், தமிழ் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்கு வாஷிங்டன் மற்றும் பிற சக்திகளிடம் இருந்து கூடுதல் விரிவான வாக்குறுதிகளுக்கு அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். அரசியல் பகுப்பாய்வாளரான எஸ்.ஏ.ஜோதிலிங்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் “மகிந்த இராஜபக்ஷவுக்கு சீனாவின் ஆதரவு இருக்கிறது, மேற்கத்திய நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கின்றன. இந்த நாடுகளை சாட்சிகளாக வைத்து, இக் கட்சிகளிடம் இருந்து வாக்குறுதிகளை எழுதி வாங்குவதுதான் இந்த நிலைமையில் செய்யப்படக் கூடிய சிறந்த விடயமாய் இருக்கும்.” என தெரிவித்தார்.

இலங்கையின் அனைத்து இனப் பிரிவுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களது இயக்கம் பெருகிச் செல்வதின் எதிர்வினையாக ஆளும் கட்சிகளது வலது நோக்கிய அப்பட்டமான நகர்வு இருக்கின்றது. சிறிசேனாவின் அரசியல் சதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களது நாள் ஊதியம் 1,000 ரூபாயாக இரட்டிப்பாக்கப்படக் கோரி காலிமுகத் திடலில் 5,000 சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கிலான பல நகரங்களில், தொழிலாளர்களும் இளைஞர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தன்னியல்பாக வீதி ஆர்ப்பாட்டங்களில் இணைந்து கொண்டனர்.

இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாசைகளுக்கு எந்த தேசியவாதப் பாதையும் கிடையாது என்பதை கடந்த மூன்று ஆண்டு அனுபவங்களும் மீண்டுமொருமுறை நிரூபணம் செய்திருக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் பின்னால் தமிழ் தேசியவாதிகள் அணிவகுப்பதென்பது, அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றதும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களுக்கு குரோதமானதுமான முதலாளித்துவ வர்க்க நலன்களில் இருந்து பிறக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் ஒரு எழுச்சியின் மத்தியில், முன்னோக்கிய ஒரே பாதை, ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்கின் அடித்தளத்தில் அத்தனை தேசியங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியால் நடத்தப்படும் போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கிறது. கொழும்பிலான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் தொழிலாளர்கள் காட்டும் ஆதரவும் வடக்கில் காணாமல் போனவர்களது உறவினர்கள் வருடக்கணக்கில் நடத்தி வரும் போராட்டங்களுக்கு சிங்களத் தொழிலாளர்கள் காட்டும் அனுதாபமும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் பெருகுவதை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.