ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On the eve of the US midterm elections: The political issues facing the working class

அமெரிக்க இடைக்கால தேர்தல்களுக்கு முன்னதாக: தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அரசியல் பிரச்சினைகள்

Joseph Kishore
5 November 2018

அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் தீவிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகின்றன. அதன் முடிவுகள் என்னவாக இருந்தாலும், இந்த தேர்தல்கள் அமெரிக்க அரசியலைக் கூடுதலாக வலதுக்குத் திருப்பவே களம் அமைக்கும்.

ட்ரம்ப், தேர்தலுக்கு முந்தைய வாரங்களில், அதிகரித்தளவில் ஒரு பகிரங்கமான பாசிசவாத அழைப்புவிடுத்து, ஓர் அதிவலது இயக்கத்தை அபிவிருத்தி செய்யும் அவரது முனைவைத் தீவிரப்படுத்தி உள்ளார். மத்திய அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் முதலாளித்துவ சுரண்டலின் விளைவுகளிலிருந்து தப்பி வரும் புலம்பெயர்வோரைத் தாக்கி அவர் தொடர்ச்சியாக பல உரைகள் வழங்கியுள்ளார். இராணுவம் படுகொலை செய்யத்தக்க வன்முறையோடு அகதிகளைச் சந்திக்கும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க சட்டத்தை மீறி, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுமார் 15,000 துருப்புகள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அடிமைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு முழு உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பின் 14 வது அரசியலமைப்பு பிரிவு உத்தரவாதப்படுத்தும் பிறப்புஉரிமையால் கிடைக்கும் குடியுரிமையை நீக்குவதற்கு அவர் நிர்வாகம் தீர்மானகரமாக இருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

வன்முறைக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் அழைப்புகள் ஏற்கனவே பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவரால் குழாய் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பேர்க்கின் ஒரு யூத வழிபாட்டுத்தலத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, அதில் 11 பேர் கொல்லப்பட்டனர். இது அமெரிக்க வரலாற்றிலேயே யூதர்களுக்கு எதிரான படுமோசமான வன்முறை நடவடிக்கையாகும். இந்த அட்டூழியத்தை நியாயப்படுத்துவதில், குற்றஞ்சாட்டப்பட்ட கொலையாளி பயன்படுத்திய மொழி, நேரடியாக, புலம்பெயர்ந்தோர்-விரோத பேரினவாதத்துடன் கூடிய யூத-எதிர்ப்புவாதம் கலந்த ட்ரம்பின் பிரச்சார உரைகளில் இருந்து பெறப்பட்டிருந்தது.

ட்ரம்ப் ஒன்றோடொன்று கலந்த நீண்டகால நிகழ்வுபோக்கை முன்கொண்டு வருகின்றார். அவர் நிர்வாகமானது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் கால் நூற்றாண்டாக நடத்தப்பட்ட முடிவில்லா போர்கள் மற்றும் அத்தகைய போர்களுடன் தொடர்புபட்ட அனைத்து குற்றங்கள் —சித்திரவதை, நாடு கடத்தல், டிரோன் படுகொலைகள் ஆகியவற்றின்— அரசியல் விளைவாகும். அது பல தசாப்தங்களாக அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை, நிதியியல் ஒட்டுண்ணித்தனம் மற்றும் அரசு குற்றகரத்தன்மையின் விளைபொருளாகும். அது அமெரிக்க முதலாளித்துவத்தின் ஜீரணிக்க முடியாத காட்டுமிராண்டித்தனத்தை வாந்தி எடுத்து வருகிறது.

ட்ரம்ப், ஏதோவொருவித ஆரோக்கியமான அரசியல் அமைப்புமுறையில் வந்துவிட்ட ஒரு விதிவிலக்கான தனித்த சம்பவம் அல்ல என்பது ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் சொந்த பிரச்சாரத்தை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதில் —அதாவது, அவர்கள் என்ன கூறுகிறார்கள், என்ன கூறவில்லை, அவர்கள் யாருக்காக போட்டியிடுகிறார்கள் என்பதில்— எடுத்துக்காட்டப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினர் ஒவ்வொரு கட்டத்திலும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொண்டு அவர்களுக்குப் பாதை அமைத்து வருகின்றனர், அதேவேளையில் ஊடகங்களோ ட்ரம்ப் நடவடிக்கைகள் மற்றும் அவை முன்னிறுத்தும் அபாயங்களது முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டி வருகின்றன. ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை சிறுபான்மை தலைவர் நான்சி பிலோசி விளக்கியவாறு, "திரு ட்ரம்ப் விவரிப்பதைப் போல தாம் இடதுசாரி கும்பல்கள் இல்லை, தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனநாயகக் கட்சி ஒரு ஆளும் கட்சியாக உள்ளனர் என்பதை என்பதை வாக்காளர்களுக்கு நீரூபிப்போம் என்றும் ஒரு தேர்தல் பின்னடைவுகளுக்குப் பின்னரும் ஜனாதிபதிக்கு உதவிக்கரம் நீட்ட" விரும்புவதாகவும் குறிப்பிட்டார். ட்ரம்ப் நிர்வாகத்தின் இரண்டாண்டுகள் நெடுகிலும் அவர்கள் நம்பியவாறே, வெளியுறவு கொள்கை மீது ஓர் உடன்பாட்டைச் செய்து கொள்ள முடியும் என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆளும் வர்க்கத்தின் அடிப்படை திட்டநிரலைச் சிறந்த முறையில் பின்தொடர முடியுமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.

அவர்கள், நீண்டகால தாக்கம் கொண்ட ட்ரம்ப் நடவடிக்கைகள் மற்றும் பிரகடனங்களின் முக்கியத்துவத்தை மூடிமறைக்க வேலை செய்து வருகின்றனர். பிலோசியில் இருந்து பெயரளவில் "சுயாதீனமான" பேர்ணி சாண்டர்ஸ் வரையில் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர், புலம்பெயர்ந்தவர்கள் மீதான பாசிசவாத தாக்குதல் குறித்து எதையும் கூற மறுத்துள்ளனர், பிட்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூடு குறித்து சாண்டர்ஸ் அறிவிக்கையில், “நான் இங்கே உட்கார்ந்து கொண்டு ஜனாதிபதியைக் குறை கூறிக் கொண்டிருக்கப் போவதில்லை,” என்றார்.

2016 இல் "பில்லியனிய வர்க்கத்திற்கு" எதிராக ஓர் "அரசியல் புரட்சியை" வழி நடத்தப் போவதாக வாதிட்ட சாண்டர்ஸ், சமீபத்திய வாரங்களில் வலதுசாரி ஸ்தாபக வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் பொலிஸ்-அரசு நகர்வுகள் குறித்து பேச வேண்டியதில்லை என்ற ஜனநாயகக் கட்சியின் தொனியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பின் உறுப்பினரும் இந்த கோடையில் காங்கிரஸிற்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் இடத்தை ஜெயித்தவருமான அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) ஐ பொறுத்த வரையில், அப்பெண்மணி "குடியமர்வு மற்றும் சுங்க அமலாக்க ஆணையத்தை (ICE) கலைப்பதற்கான" அவரின் முந்தைய அழைப்பைக் கைவிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையில் ஜெயித்தாலும் கூட, அந்த அமைப்பில் அதிகார சமநிலையானது முன்னொருபோதும் இல்லாத எண்ணிக்கையில் உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்திலிருந்து ஈர்க்கப்பட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் கரங்களில் தான் இருக்கும். அவர்கள் செனட்டை வென்றிருந்தால், அவர்களின் திட்டநிரலானது, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் "700 இல் இருந்து 900 மைல்களுக்கு" சுவர் எழுப்பதற்கு அவர் ஆதரவைத் தெரிவித்த ஜோ மன்சின் (மேற்கு வேர்ஜினியா); மற்றும் மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்கு வந்து கொண்டிருக்கும் மத்திய அமெரிக்க புலம்பெயர்ந்தவர்களின் நடைபயணம் மீதான ட்ரம்பின் தாக்குதலை "100 சதவீதம் ஆதரிப்பதாக" தெரிவித்த கிளையர் மெக்காஸ்கில் (மிசோரி) போன்ற தனிநபர்களால் அமைக்கப்பட்டிருக்கும்.

வாய்சவடால் என்னவாக இருந்தாலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை பிரதிநிதிகளின் ஆசனங்கள் எந்தவிதத்தில் ஒதுக்கப்பட்டாலும், அமெரிக்க அரசியலை உந்திச் சென்று கொண்டிருக்கின்ற அடிப்படை காரணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவையாவன:

1. அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய அந்தஸ்தை, உலக போர் உள்ளடங்கலாக, இராணுவப் படையைக் கொண்டு பேணுவதற்கான ஆளும் வர்க்கத்தின் தீர்மானம்:

இந்த மத்திய மூலோபாயம் தான் பல தசாப்தங்களாக அமெரிக்க கொள்கையை ஆக்கிரமித்து வந்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் யேமன் போர்கள் உட்பட பதினேழு ஆண்டுகால "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அந்த ஒட்டுமொத்த நாடுகளையும் சீரழித்துள்ளதுடன், ஒரு மில்லியனுக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டார்கள். ட்ரம்ப் நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" முடிந்துவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்பதோடு, ரஷ்யா அல்லது சீனாவுடன் "வல்லரசு மோதலுக்கு" தயாரிப்பு செய்ய தொடங்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய வாரங்களில், இந்த நிர்வாகம் பனிப்போர் காலத்திய ஒரு முக்கிய அணுஆயுத உடன்படிக்கையான INF உடன்படிக்கையிலிருந்து வெளியேறியதுடன், ரஷ்யாவுக்கு எதிராக முன்கூட்டியே தாக்குதல் தொடங்கவும் அச்சுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், அது நடைமுறையளவில் சீனாவுக்கு எதிரான ஒரு புதிய "பனிப்போரை" அறிவித்தது. எந்தவித மக்கள் விவாதமும் இல்லாமல் இரண்டு கட்சிகளது ஒப்புதலின் அடிப்படையில், இந்த நிர்வாகம் பனிப்போர் முடிந்ததற்குப் பிந்தைய மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைத் தொடங்கி உள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரங்களில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவில்லாத மற்றும் விரிவாக்கப்பட்டு கொண்டே இருக்கின்ற போர்களுக்கு எதிரான எதிர்ப்பு முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை இராணுவப் படைகளைக் கொண்டு பேணுவதற்கான அதன் மூலோபாய நோக்கத்தை ஜனநாயகக் கட்சியினர் முழுமையாக ஆதரிக்கின்றனர். ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்தே, இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளைத் திருப்பி விட்டு வந்துள்ள ஜனநாயகக் கட்சியினர், மத்தியக் கிழக்கு போரில் இருந்தும் மற்றும் ரஷ்யா உடனான மோதலில் இருந்தும் ட்ரம்ப் பின்வாங்கி வருகிறார்கள் என்ற கவலையில் தான் அவர் மீதான அவர்களின் எதிர்ப்பை மையப்படுத்தி உள்ளனர்.

2. திகைப்பூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்கள், இதை எந்த தேர்தலினாலும் மாற்றிவிட முடியாது, இது முதலாளித்துவ அரசின் ஒவ்வொரு அமைப்புக்குள்ளும் பரவியுள்ளது:

2008 நிதியியல் நெருக்கடிக்கு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், சமூக சமத்துவமின்மை வரலாற்று உயரங்களுக்கு உயர்ந்துள்ளது. மூன்று தனிநபர்கள் இப்போது அடிமட்டத்தின் பாதி மக்களை விட அதிகமான செல்வவளத்தைக் கொண்டுள்ளனர், வெறும் மூன்று குடும்பங்கள் ஒருமித்து 348.7 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளது, இது நடுத்தர குடும்ப செல்வவளத்தை விட நான்கு மில்லியன் மடங்குகள் அதிகம். மக்களின் இந்த பரந்த பெரும்பான்மையினர் சமூக நெருக்கடியின் பல்வேறு வெளிப்பாடுகளை — வீழ்ச்சி அடைந்து சம்பளங்கள், அதிகரித்து வரும் மருத்துவச் செலவ்வுகள், அதீத போதை மருந்து பழக்கங்கள் மற்றும் நாசமடைந்து வரும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளனர்.

இத்தகைய நிலைமைகள் ஒபாமா நிர்வாக கொள்கைகளின் விளைபொருளாகும், அது 2008 நிதியியல் உருகுதலைத் தொடர்ந்து வங்கிகளின் பிணையெடுப்பை மேற்பார்வையிட்டு ஆதரித்தது. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரில் இருந்து, ஜனநாயகக் கட்சியினர் பணக்காரர்களுக்கு பாரிய வரி வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துழைத்துள்ளனர், தேர்தல்களின் முடிவு என்னவாக இருந்தாலும் இதை திரும்ப பெறுவதற்கு எந்த உத்தேசமும் இல்லை.

ஜனநாயகக் கட்சியினர் வோல் ஸ்ட்ரீட்டின் ஓர் அரசியல் கூட்டணியை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்குக் கூடுதலாக, குறிப்பாக #MeToo பிரச்சாரம் மூலமாக இனம் மற்றும் பாலின அரசியலை ஊக்குவிப்பதே அவர்களின் மத்திய ஒருமுனைப்பாக இருந்துள்ளது. இதன் நோக்கம், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதும் அதேவேளையில் அதிகாரம், பணம் மற்றும் தனிச்சலுகைகளுக்காக போட்டியிட்டு வருகின்ற உயர்மட்ட 10 சதவீதத்தினருக்குள் கன்னைகளின் நலன்களை முன்னெடுப்பதும் ஆகும்.

3. ஜனநாயக ஆட்சி வடிவத்திற்கான நெருக்கடியும், எதேச்சதிகாரத்தை நோக்கி திரும்புவதும்:

அமெரிக்க ஜனநாயகத்தின் இந்த நெருக்கடி, ட்ரம்ப் நிர்வாகம் இதன் ஓர் அதீத வெளிப்பாடாக உள்ள நிலையில், அமெரிக்க சமூகத்தின் பிரபுத்துவ குணாம்சத்துடன் அணிசேர்ந்த அரசியல் வடிவங்களை வெளிப்படுத்துகிறது.

ட்ரம்ப் ஓர் எதேச்சதிகார இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான அவரின் மூலோபாயத்தைப் பின்தொடர்ந்து வருகின்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியினரும் ஒருபோலவே, ஆனால் வேறு விதத்தில், ஜனநாயக உரிமைகளை அழிப்பதை ஆதரிக்கின்றனர். "போலி செய்திகளை" எதிர்ப்பதற்காக மற்றும் "அதிருப்தியின்மையை விதைக்கும்" அமைப்புகளைத் தடுப்பதற்காக என்ற மூடிமறைப்பின் கீழ் சமூக ஊடக நிறுவனங்கள் இணையத்தைத் தணிக்கை செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் மீது அவர்கள் ஒருங்குவிந்துள்ளனர். ட்ரம்ப் உடனான அவர்களின் மோதல் போக்கில், அவர்கள் சித்திரவதை மற்றும் உள்நாட்டு உளவுபார்ப்புக்கு பொறுப்பான முன்னாள் சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னென் போன்ற ஜனநாயக உரிமைகளின் எதிரிகளைப் பாராட்டி உள்ளனர்.

ட்ரம்ப், அவரே ஜனநாயக ஆட்சி வடிவங்களின் ஒரு நீடித்த சீரழிவின் விளைவாக உள்ளார். 1998 இல் கிளிண்டன் மீதான குற்றவிசாரணை, 2000 ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்டமை, 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடங்கப்பட்டமை, இவற்றுடன் சேர்ந்து உள்நாட்டு உளவுபார்ப்பிற்காக பாரிய எந்திரத்தை அமைத்தமை, அமெரிக்க பிரஜைகள் மீதான டிரோன் படுகொலை உள்ளடங்கலாக ஒபாமா நிர்வாகத்தின் டிரோன் படுகொலைகள் ஆகியவை இந்த நிகழ்ச்சிபோக்கின் முக்கிய கட்டங்களாக இருந்தன.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மூலோபாயம்

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல், உலகளாவிய மோதலின் விரிவாக்கம், ஜனநாயக உரிமைகளின் அழிப்பு என மனிதயினம் முகங்கொடுக்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் அனைத்துக்குமான ஒரு தீர்வு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்பு மற்றும் தலையீட்டைச் சார்ந்துள்ளது. ஒரு முன்னோக்கிய பாதையை காங்கிரஸில் ஆசனங்களை மறுஒழுங்கமைப்பதன் மூலமாக, மற்றும் ஆளும் வர்க்கத்திற்குள் நடக்கும் பாசாங்குத்தனமான சண்டைகள் மூலமாக காண முடியாது, மாறாக எதிரெதிர் சமூக வர்க்கங்களுக்கு இடையிலான ஒரு பகிரங்க போராட்டத்தின் மூலமாகவே காண முடியும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், பாசிசவாதம் மற்றும் அதிவலதின் வளர்ச்சியை உருவாக்கி கொண்டிருக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடி, உத்தியோகபூர்வ அரசியல் வாழ்விலிருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையின் பரந்த பெருந்திரளான தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகரித்து வரும் எதிர்ப்பு மற்றும் தடைகளையும் உருவாக்கி கொண்டிருக்கிறது. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு, “அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்" என்ற அதன் ஜூன் 13, 2017 அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டது:

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், நெருக்கடியின் புறநிலை நிலைமைகள் மற்றும் பாரிய சமூக நனவின் தீவிரப்பாடு ஆகிய இரண்டினது இடைத்தொடர்பும் வர்க்க போராட்ட வெடிப்பில் வெளிப்பாட்டைக் காணும். வர்க்கப் போராட்டமானது பல தசாப்தங்களாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும், ஜனநாயகக் கட்சியாலும் மற்றும் அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களை முன்னெடுக்கின்ற வசதியான பிரிவுகளாலும் ஒடுக்கப்பட்ட நிலையானது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆளும் உயரடுக்கின் சமூக எதிர்புரட்சி அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சியை எதிர்கொள்ள உள்ளது. வேலையிடங்களிலும், சமூகங்களிலும் மற்றும் ஒட்டுமொத்த நகரங்களிலும் சமூக எதிர்ப்பின் பல்வேறு வேறுபட்ட வடிவங்களும் முன்னெப்போதினும் தனித்துவமான தொழிலாள வர்க்க அடையாளத்தையும், முதலாளித்துவ-எதிர்ப்பு நோக்குநிலையையும் சோசலிசத் தன்மையையும் பெறவிருக்கின்றன. தனித்தனியான வேலையிடங்கள் மற்றும் சமூகங்களில் நடக்கும் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளது ஐக்கியப்பட்ட போராட்டமாக உருமாறும்.

இந்த அறிக்கை எழுதப்பட்டதற்குப் பின்னர் இருந்து, வசந்த காலத்தில் அமெரிக்க ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலை, Teamsters சங்கத்தின் ஆதரவுடன் ஒரு விட்டுக்கொப்புகளின் ஒப்பந்தத்திற்கு UPS தொழிலாளர்களின் பாரிய எதிர்ப்பு, உருக்கு ஆலை தொழிலாளர்கள், தபால்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஏனைய பிரிவுகளது மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை அங்கீகரித்தமை உட்பட, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்க போராட்டங்கள் அதிகரித்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலும் கோபமும் அமைதியின்மையும் அதிகரித்து வருகிறது.

சாமானிய தொழிலாளர்களின் வேலையிடக் குழுக்கள், ஆலைக் குழுக்கள் மற்றும் அண்டைஅயலார்களின் குழுக்கள் உள்ளடங்கலாக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாள வர்க்க போராட்டத்தின் புதிய அமைப்புகளைக் கட்டமைப்பதன் மூலமாக இந்த போராட்டங்கள் ஐக்கியப்படுத்தப்பட்டு விரிக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அபிவிருத்தி அடைந்து வரும் புறநிலை இயக்கத்தை ஆயுதபாணியாக்கும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2018 தேர்தல்களில், அது மிச்சிகனின் 12வது காங்கிரஸ் பகுதியிலும் அதற்கு அங்காலும் தொழிலாளர்களுக்குள் ஒரு சோசலிஸ்ட் வேலைத்திட்டத்தைக் கொண்டு வர அங்கே நைல்ஸ் நிமூத்தை நிறுத்தி உள்ளது.

மனிதயினத்தின் எதிர்காலம், இப்போதைய இந்த சமூக அமைப்புமுறையை மற்றும் அதன் அரசியல் அமைப்புகளைத் தூக்கியெறிவதையும், சமத்துவம் மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் பொருளாதார வாழ்வின் ஜனநாயக மறுஒழுங்கமைப்பைச் செய்வதையும் சார்ந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் படுமோசமான காட்டுமிராண்டித்தன வடிவங்களுக்குத் திரும்புவதே சர்வதேச சோசலிச புரட்சியின் மாற்றீடாக இருக்கும்.

நாளை என்ன நடந்தாலும், அடிப்படை பணி அதே தான்: அதாவது, சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதன் சகோதரத்துவ கட்சிகள் மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணைந்து அவற்றைக் கட்டியமைப்பதாகும்.