ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Great powers commemorate First World War, and plan the next one

பெரும் சக்திகள் முதலாம் உலகப் போரை நினைவுகூர்வதுடன், அடுத்த உலகப் போருக்கு திட்டமிடுகின்றன

Andre Damon
13 November 2018

முதலாம் உலகப் போரின் உத்தியோகபூர்வ முடிவை நினைவுகூர்வதற்காக சென்ற வார இறுதியில் உலகின் பெரும் சக்திகளது தலைவர்கள் பிரான்சில் ஒன்றுகூடினர். ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் சோக முகம் காட்டி, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டதோடு, 16 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்டதொரு போரின் “பயங்கரம்” மற்றும் ”துன்பியலை” குறித்து புலம்பும் உரைகளை வழங்கினர்.

ஆயினும் அவர்கள் அனைவருமே ஒரு புதியதும் மரணகரமானதுமான ஒரு உலக இராணுவ மோதலுக்கு செயலூக்கத்துடனான தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கின்றனர் என்ற உண்மையை “துன்பியல்” மற்றும் “தற்கொலை” குறித்த அவர்களது பேச்சுக்களால் மறைத்து விட முடியவில்லை.

ட்ரம்ப், வழக்கம் போல, இரத்தக்களரி மீதான தனது விருப்பத்தை மறைப்பதற்கான எந்த அவசியத்தையும் உணரவில்லை. பாரிசுக்கு சற்று வெளியில் அமைந்திருக்கும் Suresnes அமெரிக்க கல்லறையில் அவர் ஆற்றிய உரை ஒரு வம்பிழுக்கும் ஆவேசமாக இருந்தது. ட்ரம்ப் “போரின் அலையை திருப்புவதற்கு நரகத்துடன் போராடிய” “மகத்தான போர்வீரர்களை” பாராட்டினார், அத்துடன் அச்சமுற்றிருந்த ஜேர்மன் சிப்பாய்களால் “Devil Dogs” என்று குறிப்பிடப்பட்ட “ஆக்ரோஷமான” அமெரிக்க மரைன் வீரர்களையும் போற்றினார்.

மேர்க்கெல் மற்றும் மக்ரோன் போலல்லாமல், அமெரிக்க ஜனாதிபதி, தளபதிகளின் அறியாமையாலோ அல்லது அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பேராசையாலோ மில்லியன் கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதில் விளைந்த ஒரு அழிவுகரமான தவறாக முதலாம் உலகப் போர் இருந்தது என்ற மூன்றாம் பேரரசின் (Third Reich) வீழ்ச்சிக்குப் பின்னர் உலகம் முழுவதிலும் பரவலாக ஒப்புக்கொள்ளப்படுவதாய் இருக்கும் சிந்தனைக்கு இம்மியளவும் இடமளிக்கவில்லை. ட்ரம்ப்பின் வார்த்தைகளில் அது, ”அமைதி”யை கொண்டுவருவதற்கும் “நாகரிக”த்தை பாதுகாப்பதற்குமான ஒரு ”புனித”மான போராட்டமாக இருந்தது.

மக்ரோன் மற்றும் மேர்க்கெலின் உரைகளும் நேர்மையின்மையின் ஒரு அழுக்கான படலத்தால் மூடப்பட்டிருந்த இதே இரத்தக்களரி மனோநிலைகளையே வெளிப்படுத்தின. மக்ரோன் “தேசியவாத”த்தின் மீதான ஒரு கண்டனமாக தனது உரையின் பாணியை அமைத்துக் கொண்டார்; மேர்கெல், “தேசியவாத அகந்தையாலும் இராணுவ ஆணவத்தினாலும்” “அர்த்தமற்ற இரத்தப்பாய்வு” உருவாக்கப்படுவதால் போரை “இரக்கமற்ற யுத்தங்களின் ஒரு மறைவான மற்றும் வழிதெரியா சிக்கலான இடம்” என்று புலம்பினார்.

ஆயினும், மக்ரோனின் உரை, அதன் உள்ளடக்கத்தில், “மாபெரும் போரானது” அத்தனையையும் தேசிய ஐக்கியம் வியாபித்த அத்துடன் தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக சமூக மற்றும் வர்க்கப் பிளவுகள் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு தருணமாய் இருந்தது, என்பதான ஜேர்மன்-பிரெஞ்சு பாசிச இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பெரும் பொய்யை கொண்டாடுவதாக இருந்தது. போராடியவர்களை பொறுத்தவரை, “பிரான்ஸ் உலகின் மிக அழகான அத்தனையையும் அடையாளப்படுத்தியிருந்தது” என்றார் மக்ரோன். பதுங்குகுழிகளில் இருந்த சிப்பாய்கள் “ஒற்றை பிரான்சை… வெகுஜன மற்றும் முதலாளித்துவ பிரான்சை” உருவாக்கிய “நமது குடும்பத்தினர், நாம் இன்று சார்ந்திருக்கும் குடும்பத்தினராய்” இருந்தனர்.

இந்த வசனமானது, ஒரு சில நாட்களுக்கு முன்பாக, பத்தாயிரக்கணக்கான யூதர்கள் மற்றும் பாசிச-எதிர்ப்பாளர்களை மரணமேடைக்கு அனுப்பிய விச்சி பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியான பிலிப் பெத்தானை ஒரு “மாபெரும் படைவீரர்” என்று மக்ரோன் அறிவித்ததுடன் முற்றிலுமாய் பொருந்திப் போவதாய் இருக்கிறது.

மேர்க்கெலின் பங்கிற்கு, முதலாம் உலகப் போரின் “பயங்கரங்களை” அவர் முன்கொண்டுவந்தமை ஒரு பெரும் சக்தியாக ஆவதன் மூலம் ஜேர்மனி அதன் “தனிமைப்படலை” முடிவுக்குக் கொண்டுவர விடுக்கப்படும் விண்ணப்பங்களுடன் பிணைந்ததாய் இருந்தது. சான்சலர் அறிவித்தார்: “தனிமைப்படல்வாதமானது நம்மை என்ன வகையான அழிவுக்குக் கொண்டுசெல்லும் என்பதை முதலாம் உலகப் போர் நமக்குக் காட்டியது. ஒதுங்கி நிற்பது 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தீர்வாக இல்லாதபோது, இன்று அது எப்படி தீர்வாக இருக்க முடியும்?”

என்ன ஒரு அபத்தமான பொய். போர் ஜேர்மனியின் “தனிமைப்படல்வாத”த்தினால் உண்டாகவில்லை, மாறாக ஜேர்மனியின் “சூரியனில் இடம்” என்று இரண்டாம் வில்ஹெல்ம் அழைத்த ஒன்றை —உலக அரங்கில் முந்திச் சென்றிருந்த போட்டியாளர்களின் இழப்பில் காலனிகளை உடைமையாகக் கொள்வது— அடைவதற்கு கைய்சரும் சான்சலரும் கொண்டிருந்த ஆசையின் காரணத்தால் உண்டானது என்பதை ஆரம்பநிலை வரலாற்றுப் பாடப்புத்தகம் ஒவ்வொன்றும் தெளிவாக்குகிறது.

ஜேர்மன் உலக அதிகாரத்தை அடைவதற்காகத்தான் மேர்க்கெலின் முன்னோரான Theobald von Bethmann-Hollweg, 1914 இல், “ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான அடித்தளங்களை அமைப்பதே” தனது ஆட்சியின் இலக்கு என்று கூறினார்.

மிகச் சிறிய மாற்றங்களுடன், இதுவே கூட்டாட்சி குடியரசின் சான்சலர் பதவியை ஆட்டுவிக்கும் மனோநிலைகளாக இருக்கிறது என்பதை அதன் முன்னணி சிந்தனாவாதிகள் வெளிப்படுத்துகிறார்கள். ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹேர்ஃபிரைட் முங்க்லரின் வார்த்தைகளில் சொல்வதானால், ஜேர்மனி, ஐரோப்பாவின் “கண்காணிப்பாளராக” வேண்டும், கண்டத்தின் மீது “தீர்க்கமான அரசியல் மற்றும் பொருளாதார தலைமை”யை செலுத்த வேண்டும்.

ரைன் நதியின் மறு பகுதியில், ஆளும் வர்க்கங்களின் மனோநிலைகள் அதேஅளவுக்கு போர்க்காலத்தைப் போன்றதாகவே இருக்கின்றன. மக்ரோனின் உரைக்கு சில நாட்களின் பின்னர், பிரான்சின் நிதி அமைச்சரான புரூனோ லு மேர், அமெரிக்காவுடனும் சீனாவுடனும் பொருளாதாரரீதியாகவும் இராணுவரீதியாகவும் போட்டியிடும் விதத்தில் ஒரு “ஐரோப்பிய சாம்ராஜ்யம்” உருவாக்கப்பட அழைப்பு விடுத்தார். ஐரோப்பாவின் மக்கள், இரண்டு உலகப் போர்களின் பயங்கரங்களை மனதில் கொண்டு, சாம்ராஜ்யம் குறித்த இத்தகைய பேச்சுகளை “ஈர்ப்பற்றதாக காண்பர்... நாளைய உலகில், எல்லாமே அதிகாரம் குறித்ததாக இருக்கப் போகிறது. ஐரோப்பா இனியும் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு கூச்சப்பட்டுக் கொண்டு இருக்க முடியாது.”

லு மேர் இவ்வாறு நிறைவுசெய்தார், “டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் பாதையில் குறுக்கிடுவதற்கு துணிச்சல் தேவையாயிருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். ஐரோப்பாவின் மக்கள் நிறைய பிதற்றல்களைக் கேட்டாகி விட்டது.”

தலைமை என்பது “தாராளவாதத்தினால் அல்ல மாறாக அதிகாரத்தினால்” “உரைகளால்” அல்ல மாறாய் “இரத்தம் மற்றும் இரும்பினால்” தீர்மானிக்கப்படும் என்ற ஜேர்மன் சான்சலர் பிஸ்மார்க் சொன்னதை திட்டமிட்டு நனவுடன் திரும்பக் கூறுவதாக இது இருக்கிறது.

இத்தகைய இராணுவவாத, மற்றும் அடிப்படையில் பாசிசவாத, மனோநிலைகள், வார்த்தைகளில் மட்டுமல்ல, மாறாய் நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகத்தின் மீதான அவரது தாக்குதலுக்கு பெரும்பாலும் ஒரு ஒப்புதல்-முத்திரை போல செயல்படும் ஜனநாயகக் கட்சி, எதிர்ப்பின் ஆதரவுடன், பனிப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் இராணுவப் பெருக்கத்தில் இறங்கியிருக்கிறது, ரஷ்யாவுடன் மத்திய-தூர அணு சக்தி (INF) உடன்படிக்கையில் இருந்து அது பின்வாங்கி வருவதோடு அமெரிக்காவின் அணு ஆயுத வல்லமையை பாரிய அளவில் விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறது. அவர் அமெரிக்க மண்ணில் 15,000 துருப்புகளை நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறார், அரசியல்சட்ட திருத்தங்களை நிர்வாக உத்தரவுகளின் மூலமாக தலைகீழாக்குவதற்கு உரிமை கொண்டுள்ளதை திட்டவட்டம் செய்திருக்கிறார், அத்துடன் பத்தாயிரக்கணக்கில் அடைக்கும் திறன்கொண்ட தடுப்புமுகாம்களை கட்டத் தொடங்கியிருக்கிறார்.

தனது நாட்டின் சொந்த அசுரத்தனமான இராணுவ மீள் ஆயுதமயமாக்கத்தை பின்பற்றிக் கொண்டிருக்கும் மக்ரோன், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டிபோடத்தக்க ஒரு “ஐரோப்பிய இராணுவ”த்தை, தனது அரசாங்கம் முன்னோடியாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்-விரோத சிக்கன நடவடிக்கைக் கொள்கைளூடாக நிதியளிக்கப்பட்டு, உருவாக்குவதற்கு நெருக்கி வருகிறார்.

மேர்க்கெல் இராணுவ மறுஆயுதமயமாக்கத்திற்கும் வெளிநாடுகளில் அதிகாரத்தை செலுத்துவதற்கும் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாபெரும் கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை வகித்துக் கொண்டிருக்கிறார். அவரும், உதவியற்ற அகதிகளைப் பிடித்து வைப்பதற்கான குவிப்பு முகாம்கள் கட்டப்படுவதை மேற்பார்வை செய்கிறார். சமீபத்தில் நீக்கப்பட்ட நாட்டின் உளவு அமைப்பின் தலைவரான ஹான்ஸ்-ஜோர்க் மாஸன் -இவர் யூதர்களையும் வெளிநாட்டினரையும் தாக்கிய நவ-நாஜி கலகக்காரர்களை பாதுகாத்தவர்- உதாரணமாய் விளங்குகின்ற இரகசிய-பாசிஸ்டுகளின் ஒரு உறைவிடமாக அவரது அரசாங்கம் இருக்கிறது.

நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்றுடன் (AfD) ஒத்துழைத்து வேலைசெய்து, மாஸன், சோசலிச சமத்துவக் கட்சி உள்ளிட முதலாளித்துவத்தை எதிர்க்கின்றவர்களை “இடது-சாரி தீவிரவாதிகள்” எனக்கூறி கண்காணிப்பின் கீழ் வைக்கும் ஒரு அறிக்கையை தயாரித்தார். ஜேர்மன் இராணுவ/உளவு எந்திரத்தின் மீதான சமீபத்திய அம்பலப்படுத்தலில், கிட்டத்தட்ட 200 இராணுவ நபர்கள் இடது-சாரி அரசியல்வாதிகளை சுற்றிவளைத்துக் கொல்வதற்கு திட்டம் தீட்டியிருந்த ஒரு பாரிய சதியை இராணுவத்தின் உள்முக விசாரணைகள் வெளிக்கொணர்ந்திருப்பதாக செய்தி வாரயிதழான Focus Magazine தெரிவித்தது.

பெரும் சக்திகளது தரப்பில் இருந்து இராணுவ மோதலை நோக்கிய இன்றைய முனைப்பானது இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்ற முதலாளித்துவத்தின் அதே அடிப்படை முரண்பாடுகளான உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிப் போன தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானதும், மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்கள் தனியார்மயமாய் இருப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளில் தங்கியிருக்கிறது.

இந்த பெரிய ஏகாதிபத்திய நாடுகள் ஒவ்வொன்றிற்குள்ளும் உள்நாட்டில் அரசியல் மற்றும் சமூகப் பதட்டங்கள் தீவிரப்பட்டுச் செல்வதினாலும் இது எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்ரோன், ட்ரம்ப் மற்றும் மேர்க்கெலின் அரசாங்கங்கள் அனைத்துமே ஒரு ஊழலடைந்த நிதிய ஒருசிலவர் ஆட்சியடுக்கின் நேரடி சாதனங்களாக பரவலாக வெறுக்கப்படுகின்றன. இந்த அரசாங்கங்கள் தமது எதிரிகளுக்கு எதிராக போலிஸ்-அரசு ஒடுக்குமுறையை பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல, தமது இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு ஒரு ஆதரவுத்தளத்தை உருவாக்கவும் தொழிலாள வர்க்கத்தின் பெருகும் போராட்டங்களுக்கு எதிரான அதிர்ச்சித் துருப்புகளாக பயன்படுத்துவதற்கும் அதி-வலது சக்திகளை ஊக்குவிப்பதற்கான சாக்கையும் போரில் காண்கின்றன.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரான டேவிட் நோர்த் வாதிட்டு வந்திருப்பதைப் போல, நாம் “முடிவடையாத இருபதாம் நூற்றாண்டில்” வாழ்கிறோம். சென்ற நூற்றாண்டை பயமுறுத்திய அத்தனை பேய்களும் நம்முடைய காலத்திற்கு திரும்பி வருகின்றன. இது மனிதகுலம் எதிர்நோக்கும் கடமைகள் அன்றுபோல் மாறாமல் அவ்வாறே இருக்கின்றன என்பதே இதன் பொருளாகும். முதலாம் உலகப் போரின் குருதிகொட்டல் ரஷ்யாவிலும் ஜேர்மனியிலுமாய் இரண்டு புரட்சிகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த இரண்டு புரட்சிகளுமே கழுத்து நெரிக்கப்பட்டன. ஜேர்மனியில், இது பிரெடரிக் ஏபேர்ட்டின் Freikorps துப்பாக்கிக்குண்டுகள் மூலமாக மிகத் துரிதமாக செய்யப்பட்டது. ரஷ்யாவில் இது, சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதில் முடிந்த ஸ்ராலினிசத்தின் வெற்றியால் மெதுவாக நடந்தது. அந்தப் புரட்சிகளின் தோல்வி தான் உலகப் போர் மீண்டும் திரும்பும் அபாயத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.

அன்றும் சரி இன்றும் சரி உலகப் போருக்கு நேரெதிராக நிற்பது சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாள வர்க்கமாகும். இந்த பரந்த மற்றும் சக்திவாய்ந்த சமூக சக்தி மீதான அச்சம்தான் முதலாளித்துவத்தை போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி விரட்டுகிறது, ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் திரும்புவதை எதிர்க்க இந்த சமூக சக்தியே அணிதிரட்டப்பட்டாக வேண்டும்.