ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ex-1968 student leader Cohn-Bendit denounces French “yellow vest” protests

முன்னாள்-1968 இயக்க மாணவர் தலைவர் கோன்-பென்டிட் பிரெஞ்சு "மஞ்சள் சீருடையாளர்" போராட்டங்களைக் கண்டிக்கிறார்

By Alex Lantier
14 December 2018

“மஞ்சள் சீருடை" போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்பு வெடிப்பதானது, "இடது" என்று நீண்ட காலமாக பொய்யாக கூறி வந்தவர்களின் தொழிலாளர்கள் மீதான வெறித்தனமான விரோதத்தை அம்பலப்படுத்துகிறது. இந்த சக்திகள் "மஞ்சள் சீருடையாளர்கள்" இடையே மேலோங்கியுள்ள சமூக சமத்துவம் மற்றும் சர்வதேசவாதத்திற்கான அழைப்புகளுக்கு விரோதமாக உள்ளன. குறிப்பாக பிரான்சில் மே 1968 மாணவர் போராட்டங்களில் முன்னணி பிரமுகராக இருந்த டேனியல் கோன்-பென்டிட், "மஞ்சள் சீருடையாளர்கள்" பணக்காரர்களுக்கான வரி வெட்டுகளை எதிர்ப்பதைக் கண்டித்தும், அவர்களை பாசிசவாதிகள் என்று அவதூறு செய்தும் விடையிறுத்துள்ளார்.

உத்தியோகபூர்வ "இடது" அரசியலில் இப்போதும் சற்று கூடுதலாகவே பாத்திரம் வகித்து வரும் 1960 களின் நடுத்தர வர்க்க இளைஞர்களது ஒட்டுமொத்த அடுக்கின் தீவிர வலதுசாரி பரிணாமத்தை கோன்-பென்டிட் இன் எண்ணுக்கணக்கற்ற அரசியல் மோசடி எடுத்துக்காட்டுகிறது. 1968 இல் மாணவர் சங்கங்களது சூழ்ச்சியின் இதயதானமாக இருந்து, அவற்றை ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் பசுமைக் கட்சி அரசியலில் ஒரு மைய பாத்திரம் வகிப்பதில் கொண்டு சென்று முடமாக்கிய கோன்-பென்டிட், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தனிப்பட்ட நண்பராகி உள்ளார்.

ஜேர்மனியின் taz நாளிதழின் ஒரு சமீபத்திய பேட்டியில் "மஞ்சள் சீருடை" போராட்டம் குறித்து கேட்கப்பட்ட போது, கோன்-பென்டிட் இவ்வாறு கூறினார்: “அது நீண்டகாலமாக அபிவிருத்தி அடைந்துள்ள சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு கிளர்ச்சி,” என்றார். ஆகவே அந்த இயக்கம் ஒரு நல்ல விடயமா என்று வினவியதும், அவர் இவ்வாறு பதிலளித்தார்: “இல்லை, நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை,” என்றார்.

கோன்-பென்டிட் பட்டவர்த்தனமாக சமூக சமத்துவமின்மையைப் பாதுகாக்கிறார். அவர் taz பத்திரிகையில், அந்த இயக்கத்தின் நன்கறியப்பட்ட இரண்டு கோரிக்கைகளை, அதாவது தொழிலாளர்களை பாரபட்சமாக தாக்கும் படிப்படியான வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இரத்து செய்த பணக்காரர்கள் மீதான வரியை (ISF) மீண்டும் விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளைத் தாக்குகிறார். பெருந்திரளான மக்கள் போராட்டங்களின் காரணமாக எரிபொருள் வரியைத் திரும்ப பெறுவதென்ற மக்ரோனின் முடிவானது, “ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு" என்றும், அதை பின்வாங்க வேண்டுமென்றும் அவர் அறிவித்தார்: “சுற்றுச்சூழல் இயக்கமும் சுற்றுச்சூழல் அமைச்சரும் வரவிருக்கும் ஆண்டில் சுற்றுச்சூழல்-வரியை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் சமூக சமநிலையை உருவாக்க வேண்டும்,” என்றார்.

“பலரும் ISF பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்று அறிவுப்பூர்வமாக நினைப்பதாகவே நான் கருதுகிறேன்,” என்று கூறி, கோன்-பென்டிட் செல்வந்தர்கள் மீதான வரி நீக்கப்பட்டதன் மீது அவர் ஆதரவைத் தெளிவுபடுத்துகிறார். உண்மையில், அது சுமார் 5 பில்லியன் யூரோவைக் கொண்டு வந்தது—இந்த தொகையானது, சாதனையை முறிக்கும் அளவில் கடந்த ஆண்டு பேர்னார்டு அர்னால்டின் பைகளில் சேர்ந்த 22 பில்லியன் யூரோ போன்ற, பெரும் பணக்காரர்களால் பைகளில் குவித்துக் கொள்ளப்பட்ட மிகப் பெரியளவிலான பணத்தை விட ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் மிகவும் குறைவாகும். ஆனால் ISF ஐ நீக்கியமை தெளிவாக சமூக சமத்துவமின்மையை அதிகரித்துள்ளதுடன், தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலை உள்ளடக்கியுள்ளது.

ஆனால் செல்வந்தர்களின் தனிச்சலுகைகள் மற்றும் செல்வத்தைப் பாதுகாக்கும் அவர் அரசியலின் அடித்தளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த விருப்பமின்றி, அதற்கு பதிலாக கோஹ்ன்-பென்டிட் ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் மோசடியான சொல்லாடலை ஜோடிக்கிறார்—அதாவது தொழிலாளர்களால் முன்நிறுத்தப்படும் பாசிசவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதே அவர் அரசியலின் நோக்கம் என்கிறார். இந்த அடித்தளத்தில், அவரின் நண்பர் மக்ரோனால் பிரான்சில் திணிக்கப்பட்ட பாசிசவாத, பொலிஸ் அரசு கொள்கைகளுடன் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

“நாஜிகள் யூத பிரஜைகளின் ஆடைகளில் அணியசெய்த டேவிட் நட்சத்திரம் மஞ்சளில் நிறத்திலிருந்தது,” என்று மஞ்சள் ஆடை அணிய மறுப்பதை நியாயப்படுத்துவதற்காக கூறிய அவர் பின்வருதையும் சேர்த்துக் கொண்டார்: “பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு இயக்கத்தின் தலைச்சிறந்த போராளியும் தீவிர விவசாயியும் ஆன ஜோஸே போவே கூறுகையில் மஞ்சள் சீருடை இயக்கத்தின் பெரும் பகுதி Front national இல் இருந்து வருகிறது என்கிறார், அதாவது அதிவலதுசாரிகளின் களஞ்சியத்திலிருந்து வருகிறது, ஆகவே அவர்களுடன் சேர்ந்து எதையும் செய்ய அவர் விரும்பவில்லை."

கோன்-பென்டிட் பின்னர் 1933 இற்கு முன்னர் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றியதைப் போல அதிவலது அதிகாரத்திற்கு வருவதற்கு வழி வகுத்து கொடுப்பதாக "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" இடதுசாரிகளின் ஆதரவை கண்டிக்கிறார்: “இடது எப்போதும் செய்வதைப் போலவே தவறு செய்து கொண்டிருக்கிறது: அதாவது, அதன் விடுதலை என மனதுக்கு இதமளிக்கும் கிளர்ச்சிகளை பற்றி சிந்திக்கின்றது. ஜேர்மனியில் இடது, அனைத்திற்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சி, ஜேர்மனியில் வறுமைக்கு எதிராக போராட்டங்கள் பரவிய போது, வேர்சாய் உடன்படிக்கைக்குப் பின்னர், சோவியத்-பாணியிலான சமூக உறவுகள் ஏற்படுவதற்கான காலம் வரும் என்று கருதியது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் விடயங்கள் வேறு விதமாக தலைகீழாக ஆனது, நமக்கே தெரியும்” என்றார்.

கோன்-பென்டிட் வழங்கிய வாதங்கள் வெளிப்படையான மோசடி மற்றும் ஆத்திரமூட்டலாகும். பிரான்சில் ஒரு பாசிசவாத பொலிஸ் அரசைக் கட்டமைத்து வருவது தொழிலாளர்கள் அல்ல மாறாக, கோஹ்ன்-பென்டிட் ஆதரிக்கும் மக்ரோன் தான் அதை செய்து வருகிறார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமைதியான போராட்டங்களாக தொடங்கிய போராட்டங்கள் மீது நடத்தப்பட்ட மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறைகளை எதிர்த்து, “மஞ்சள் சீருடையாளர்கள்" வாராவாரம் வீதிகளில் இறங்குகிறார்கள்.

நாஜி ஒத்துழைப்புவாத சர்வாதிகார பிலிப் பெத்தனை மக்ரோன் புகழ்ந்துரைத்த பின்னர், அவர் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை நீக்கும் அவசரகால நிலையை மீண்டும் கொண்டு வர அச்சுறுத்தி வருவதுடன், மக்கள் செல்வாக்கிழந்த மக்ரோனின் சமூக செலவினக் குறைப்பு மற்றும் போர் கொள்கைகளுக்கு எதிர்ப்பை நசுக்குவதற்காக பெருந்திரளான மக்களை அது கைது செய்து வருகிறது.

“மஞ்சள் சீருடையாளர்கள்" போராட்டங்கள் பாசிசவாத தன்மையுடையது என்ற கோன்-பென்டிட் இன் வாதம் ஓர் அவதூறாகும். பிரெஞ்சு நவ-பாசிசவாதிகள் மக்ரோனுக்கு எதிரான போராட்டங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான அல்லது அதை சாதகமாக்கிக் கொள்வதற்கான அவர்களின் ஆரம்ப முயற்சிகளை விரைவாக கைவிட்டனர், ஏனென்றால் அவை முன்பினும் அதிகமாக தொழிலாள வர்க்க, சமத்துவவாத மற்றும் சர்வதேசியவாத குணாம்சத்தை ஏற்றன. அதிக சமூக சமத்துவத்தையும், நிதியியல் செல்வந்த தட்டுக்களின் தனிச்சலுகைகளையும் முடிவுக்குக் கொண்டு வர கோரும் தொழிலாளர்கள் தான் "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் பிரதானமாக பெருவாரியாக முன்னிலையில் உள்ளனர். 20 ஆம் நூற்றாண்டைப் போலவே, இந்த பாசிசவாத சக்திகள், நிதியியல் செல்வந்த தட்டுக்களின் தனிச்சலுகைகளை ஈவிரக்கமின்றி பாதுகாப்பதற்கு முனைந்துள்ளன.

“மஞ்சள் சீருடையாளர்கள்" மீதான கோன்-பென்டிட் இன் வலதுசாரி கண்டனங்கள், அனைத்திற்கும் மேலாக, இளைஞராக இருந்த போது அவர் ஏற்றிருந்த அரசியலுடன் முறித்துக் கொண்டதன் வெளிப்பாடல்ல, மாறாக மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தால் ஈர்க்கப்பட்டிருந்த 1968 மாணவர் இயக்கத்தின் தலைமை அவற்றை கைவிட்டதன் அரசியல் வெளிப்பாடாகும். இந்த சக்திகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தசாப்தங்களாக மேற்கொண்ட அரசியல் குற்றங்களின் முன்வரலாறு, மார்க்சிசத்தின் அல்லது சோசலிசத்தின் விளைபொருள் அல்ல, மாறாக அதை தனிச்சலுகை கொண்ட, குட்டி-முதலாளித்துவ வர்க்க மார்க்சிச-விரோத அடுக்கு நிராகரிக்கப்பட்டதன் விளைவாகும்.

அவரின் மூத்த சகோதரர் காப்ரியேல், சோவியத் ஒன்றியத்தை ஒரு முதலாளித்துவ சமூகமாக தவறாக கூறி வந்த, 1948 இல் நான்காம் அகிலத்துடன் முறித்துக் கொண்ட Socialisme ou Barbarie, குட்டி-முதலாளித்துவ மற்றும் தேசியவாத Lutte ouvrière (LO) குழு இரண்டையும் சந்தித்திருந்தார். LO க்கு முன்னோடி அமைப்புகள் ஒரு தேசியவாத முன்னோக்கை ஏற்று, நான்காம் அகிலத்துடன் இணைய மறுத்திருந்தன. கோன்-பென்டிட் காப்ரியேலினால் மட்டும் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கவில்லை, மாறாக Situationist சர்வதேச குழு மீது Socialisme ou Barbarie கொண்டிருக்கும் செல்வாக்கினாலும் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றார். அதில் அவர் ஒரு உறுப்பினராவார்.

இத்தகைய குழுக்கள் மார்க்சிசம் மற்றும் முதலாளித்துவம் இரண்டுக்கும் ஓர் அரசியல் மாற்றீட்டை வழங்குவதாக காட்டும் பாசாங்குத்தனங்கள் மோசடியானவை. குறிப்பாக இது மே 1968 பொது வேலைநிறுத்தத்தின் வரலாற்றிலிருந்து தெளிவாக முன்வருகிறது, அப்போது கோன்-பென்டிட் ஒரு புரட்சியை விரும்பவில்லை, மாறாக முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்கான ஓர் ஏற்பாட்டையும், பாரீஸ் பொலிஸ் உயரதிகாரியான Maurice Grimaud (மொரிஸ் கிரிமோ) இனையும் ஆதரித்தார். அதற்குப் பின்னர் Grimaud இது குறித்து நினைவுகூர்ந்தார்:

மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களுடன் சேர்ந்து 200,000 க்கும் அதிகமானவர்களின் மிக பிரமாண்டமான கிளர்ச்சி உண்டாக்கத்தக்க மே 13 பேரணியின் போது, அந்த அணிவகுப்பாளர்கள் Denfert-Rochereau சதுக்கத்தை வந்தடைந்ததும், கடுமையான போக்கினர் எலிசே ஜனாதிபதி மாளிகையை நோக்கி அணிவகுக்க முன்மொழிந்தனர். … அந்த தருணத்தில், புத்திசாலித்தனமாக கோன்-பென்டிட் என்ன சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விவாதிக்க, நாம் Champ de Mars பூங்கா நோக்கி செல்வோம் என்று முன்மொழிந்தார். இவ்விதத்தில் அவர் பலமுறை செயல்பட்டார். ஆகவே, கோன்-பென்டிட் ஒவ்வொன்றையும் உடைக்க முயலும் ஒருவித மனிதர் கிடையாது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் முதல்முறையாக பிரசுரிக்கப்பட்ட அவரின் Forget 68 நூலில் கோஹ்ன்-பென்டிட் மே 1968 ஐ நினைவுகூர்ந்து, 1968 இல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முயலும் மார்க்சிஸ்ட் போக்கை அவர் பின்தொடரவில்லை என்று வலியுறுத்தினார். அதற்கு பதிலாக, இன்றைய வாழ்கை முறை அரசியலுக்கு ஒரு முன்னோடியாக, அவர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான கட்டுப்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள விரும்பினார். “அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று வருகின்ற புரட்சியாளர்களைப் போலன்றி,” அவர் எழுதினார், “1968 இல் அதிருப்தியுள்ள நாங்கள் எங்களின் சொந்த வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க விரும்பினோம்.” அங்கே வேறெந்த சாத்தியமான கொள்கை எதுவும் இல்லை என்றவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.

“ஒரு பொது வேலைநிறுத்தம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி செல்லும் என்று நினைப்பது என்னவொரு பிழை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “ஜனநாயக, தேர்தல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு" எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் ஓர் அரசியல் இயக்கம் "சர்வாதிபத்தியத்திற்கு ஓர் உவமையாக" இருக்கும் என்றவர் வலியுறுத்தினார். சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சியின் குற்றங்கள் சர்வதேசியவாத சோசலிச புரட்சியை ஸ்ராலினிச அதிகாரத்துவம் நிராகரித்தததால் ஏற்பட்டவை என்ற ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை கோன்-பென்டிட் நிராகரித்ததார். அதற்கு பதிலாக அவர், இந்த குற்றங்கள், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு புரட்சிகர போராட்டத்திலும் உள்ளார்ந்த பகுதியாக இருக்கும் என்ற முடிவை வழங்கினார்.

இன்று "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" கோன்-பென்டிட் இன் வெறித்தனமான விரோதம், 50 ஆண்டுகளுக்குப் பின்னர், தெளிவாக அத்தகைய பிற்போக்குத்தனமான, மார்க்சிச-விரோத கருத்துக்களின் எதிரொலியாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக, ஓர் அரை நூற்றாண்டுக்குப் பின்னர், முதலாளித்துவ நெருக்கடியானது 1968 இல் போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சியின் போது இருந்ததை விட கணக்கிடவியலாத அளவில் கூடுதலாக முன்னேறிய நிலையில் உள்ளது. 1968 வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் அரசு மற்றும் தொழிற்சங்கங்களும் உடன்பட்ட சீர்திருத்தங்களும் மற்றும் அனைவருக்கும் சீர்திருத்தங்களும் வழங்கப்பட்ட நிலையில், 1968 ஐ போலன்றி, இங்கே வர்க்க போராட்டத்திற்கு எந்த சீர்திருத்தவாத தீர்வும் இருக்காது.

அதற்கு பதிலாக மக்ரோன், கோன்-பென்டிட் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்புக்கு எதிராக பிரெஞ்சு பொலிஸ் அரசின் முழு பலத்தை அணித்திரட்டி வருகிறார். இன்று கோஹ்ன்-பென்டிட் இன் கருத்துக்கள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மக்ரோனின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை விரைவுபடுத்துவதற்கான மக்ரோனின் முயற்சிகளை மூடிமறைக்கும் பிரச்சாரம் என்பதை தவிர வேறொன்றும் இல்லை.