ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A closer look at American “democracy”

அமெரிக்க "ஜனநாயகம்" மீது ஒரு நெருக்கமான பார்வை

Barry Grey
20 December 2018

அமெரிக்க அரசியலில் "ரஷ்ய தலையீடு" என்று குற்றஞ்சாட்டப்படும் விஷமத்தனமான பிரச்சசாரத்தின் மைய உட்பொருளாக, (ஜனநாயக கட்சி செனட்டர் மார்க் வார்னர் வார்த்தைகளில் கூறுவதானால்) “நமது ஜனநாயகத்திற்குக் குழிபறிப்பதற்கும், மோசடி செய்வதற்கும்" விளாடிமீர் புட்டினால் இது நடத்தி வருவதாக கூறப்படுவது உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உளவுத்துறை முகமைகளால் இட்டுக்கட்டப்பட்டு, ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களால் பரப்பப்படும் கட்டுக்கதைகளின்படி, புட்டினும் அவரது பரிவாரங்களும் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, ஜனநாயகக் கட்சிக்குள் ஊடுருவியதோடு, சமூக பிளவுகள் மற்றும் மக்களிடையேயான துன்பங்களை கிளறிவிட்டிருக்கிறார்கள் என்பதுடன், அவர்கள் "நமது அமைப்புகளை" அழிக்க அப்போதிருந்து செயல்பட்டு வந்துள்ளார்கள்.

கூகுள், பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களது தளர்வான சமூக ஊடக கண்காணிப்பை சாதகமாக பயன்படுத்தி ரஷ்ய உளவு மற்றும் விதி மீறிய கணினி பாதிப்பு உருவாக்கும் மென்பொருட்களை அரசியல் சமூகத்திற்குள் புகுத்தி வருகிறார்கள் என்ற நிலையில், இணையம்தான் அவர்கள் தேர்ந்தெடுத்த போராட்டக் களமாக உள்ளது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க, இத்தகைய நிறுவனங்கள், அரசுடன் இணைந்து செயல்பட்டு, எதிர்ப்பு கண்ணோட்டங்களை —அனைத்திற்கும் மேலாக, இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச கண்ணோட்டங்களை— மவுனமாக்க வேண்டும், “பொய் செய்திகள்" என்று முத்திரை குத்தப்பட்டுள்ள இவை, இணையத்திலிருந்து துரத்தப்பட வேண்டும் என்று அந்த வாதம் நீள்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறப்படும் இது, அமெரிக்க அரசியலமைப்பின் முதல் சட்ட திருத்தத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகிய உண்மையான ஜனநாயகத்திற்கான அடிப்படை நியதிகளை மீறுகிறது என்ற உண்மை குறித்து ஒன்றுமே கூறப்படுவதில்லை.

ஆனால் பெரிதும் ஜம்பமடிக்கப்படுகின்ற இந்த "அமெரிக்க ஜனநாயகம்?” என்ன என்பதை சற்று நெருக்கமாக பார்ப்போம்.

இரு-கட்சி ஏகபோகம்

பல வெவ்வேறு தேசியங்கள், சொந்த மொழிகள், மதங்கள் மற்றும் பிற வகைப்பாடுகளைக் கொண்ட, ஆறு நேர மண்டலங்களாக ஆயிரக்கணக்கான மைல்களில் விரிந்துள்ள, 328 மில்லியன் மக்கள் வாழும் ஒரு பரந்த சிக்கலான நாட்டில், அரசியல் அமைப்புமுறையில் இரண்டு அரசியல் கட்சிகளே முற்றிலுமாக மேலாதிக்கம் செலுத்துகின்றன.

இவ்விரு கட்சிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஆளும் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டு —வெள்ளை மாளிகை, காங்கிரஸ், அரசு அவைகள், இதர பிற— அரசியல் அமைப்புகள் மீதான கட்டுப்பாட்டை இவ்விரு கட்சிகளுக்கு இடையே மாற்றியவாறு ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்விரு பெருவணிக கட்சிகளின் ஏகபோகம் விகிதாசார பிரதிநிதித்துவம் இல்லாததால் கூடுதலாக பலமடைகின்றன, மூன்றாவது கட்சிகளோ அல்லது சுயாதீனமான வேட்பாளர்களோ நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் பெறுவதை இந்த ஏகபோகம் சாத்தியமற்றதாக்கி விடுகிறது.

பெருநிறுவன பணம் வகிக்கும் பாத்திரம்

வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளின் உருவாக்கம் என இந்த ஒட்டுமொத்த அரசியல் நடைமுறையும் பெருநிறுவன பணத்தால் மேலாளுமை செலுத்தப்படுகின்றன. மக்கள்தொகையில் 1 சதவீத —அல்லது 0.01 சதவீத— பெரும் செல்வந்தர்களின் பின்புல ஆதரவு இல்லாமல் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ யாரொருவரும் உயர் பதவிக்கான தீவிர போட்டியில் வந்து விட முடியாது. தேர்தல்கள் மற்றும் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்குவது ஆணவமானதும், வெட்கக்கேடானதும் ஆகும்.

ஜனாதிபதிக்கான தேர்தல்-அல்லாத கடந்த மாதத்தின் இடைக்கால தேர்தல்கள், ஓராண்டு பிரச்சார செலவுகளில் சாதனை படைத்தன, அதாவது 5.2 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன, இது 2014 ஐ விட 35 சதவீதம் அதிகம் என்பதோடு, 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1998 இல் செலவிடப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாகும். வெள்ளமென பாய்ச்சப்படும் இந்த பெரும் தொகைகள், பெருநிறுவனங்கள் மற்றும் பல மில்லியன் மில்லியனர்களின் நன்கொடைகளில் இருந்து வந்தன.

போட்டியிட்டவர்களில் பெரும் பெரும்பான்மையினரில், வெற்றியாளர் ஆணோ அல்லது பெண்ணோ அவரின் போர் பிரச்சார பெட்டக அளவைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டார். பிரதிநிதிகள் சபை போட்டிகளில் 89 சதவீதம் மற்றும் செனட் சபை போட்டிகளில் 84 சதவீதத்தில் மிகப் பெரியளவில் தேர்தலுக்காக செலவிட்டவரே ஜெயித்தார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அவர்களின் குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர்களை விட அதிகமாக செலவிடுவதற்கான அனுகூலங்களைக் கொண்டிருந்தார்கள், இது மக்களின் கட்சி என்று காட்டிக் கொள்வதற்கான அவர்களின் முயற்சி மோசடியானது என்பதை அம்பலப்படுத்துகிறது. பத்திரங்கள் மற்றும் முதலீட்டு தொழில்துறை —அதாவது வோல் ஸ்ட்ரீட்— 46 சதவீதத்திற்கு 52 சதவீதம் என்ற விகிதத்தில் குடியரசுக் கட்சியினரை விட ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக இருந்தது.

வாக்காளர்கள் முகங்கொடுக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளைக் குறித்து பகிரங்கமாகவும் நேர்மையாகவும் விவாதிப்பதற்கான ஒரு களம் என்பதற்கும் தேர்தல்களுக்கும் தொடர்பேதும் இல்லை. புதிய போர்களுக்கான தயாரிப்பு, ஆழ்ந்த சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது கூடுதலான தாக்குதல்கள் ஆகிய நிஜமான பிரச்சினைகளோ, தாக்கும் விளம்பரங்கள் மற்றும் சேற்றை வாரியிறைப்பது ஆகிய மாயபிம்பத்திற்குப் பின்னால் மறைக்கப்படுகின்றன. இந்தாண்டு மொத்த அரசியல் விளம்பர செலவுகள் 6.75 பில்லியன் டாலரை எட்டுமென ஆய்வு நிறுவனமான PQ மீடியா மதிப்பிடுகிறது. கடந்த மாத தேர்தல்களில், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் பதவிக்கான விளம்பரங்களின் எண்ணிக்கை முந்தைய 2014 இடைக்கால தேர்தல்களில் இருந்ததை விட 59 சதவீதம் அதிகரித்திருந்தன.

சட்டமசோதா நிறைவேற்றுவது மற்றும் கொள்கை முடிவெடுப்பது ஆகியவற்றுக்கு பெருநிறுவன கையூட்டுகள் உதவுகின்றன, இது நாசூக்காக தரகு (lobbying) என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுகிறது. 2017 இல் மட்டும், அரசாங்கத்துடன் தரகு வேலை செய்வதற்காக பெருநிறுவனங்ககள் 3 பில்லியன் டாலர் செலவிட்டன.

வாக்குச்சீட்டில் வேறு கட்சிகள் இடம் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள்

வாக்குச்சீட்டில் இடம்பெறும் அந்தஸ்தைப் பெறுவதற்கு விளக்கமில்லாத, நியாயமற்ற மற்றும் ஜனநாயக-விரோத அவசியப்பாடுகளின் ஒரு கலவை, இதுவும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் மேலாதிக்கத்திற்கு சவால் விடுவதிலிருந்து மூன்றாம் கட்சிகளைத் தடுக்கிறது. பதிவு செய்வதற்கான கட்டணம் மற்றும் பல மாநிலங்களில் வேட்புமனு தாக்கலுக்கு அவசியப்படும் பத்தாயிரக் கணக்கானவர்களின் கையெழுத்து ஆகியவையும் அதில் உள்ளடங்கும். இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே ஆதரவைக் காணக்கூடிய சோசலிச இடதுசாரி வேட்பாளர்களின் மனுக்கள் வழமையாக ஜனநாயக கட்சி அதிகாரிகளால் சவால் விடுக்கப்படுகின்றன.

ஊடகங்கள் மூன்றாம் கட்சி வேட்பாளர்களை இருட்டடிப்பு செய்கின்றன

பெருநிறுவன ஊடகங்கள் திட்டமிட்டு மூன்றாம் கட்சி மற்றும் சுயாதீன வேட்பாளர்களின் பிரச்சாரங்களை, குறிப்பாக இடதுசாரி மற்றும் சோசலிச வேட்பாளர்களின் பிரச்சாரங்களை இருட்டடிப்பு செய்கின்றன. பெரும் பணக்காரர்கள் அல்லது செல்வந்தர்களின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்கள் விதிவிலக்கு பெறுகிறார்கள்.

மூன்றாம் கட்சி வேட்பாளர்கள், தேசிய தொலைக்காட்சி வேட்பாளர் விவாதங்களில் பொதுவாக தவிர்க்கப்படுகிறார்கள்.

கடந்த மாத தேர்தலில், மிச்சிகனின் 12 ஆம் காங்கிரஸ் மாவட்டத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் நைல்ஸ் நிமூத் அவரின் சோசலிச வேலைதிட்டத்திற்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து பரந்த ஆதரவை வென்ற போதினும், நடைமுறையளவில் எந்த செய்தி ஊடகத்திலும் அதுபற்றி குறிப்பிடப்படவில்லை.

வாக்களிப்பதில் கட்டுப்பாடுகள்

வெள்ளை மாளிகையை மக்கள் வாக்குகளில் தோற்றவரிடம், அதாவது ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வசம் ஒப்படைப்பதற்காக அப்போது உச்ச நீதிமன்றம் புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்தி வைத்து, 2000 ஆம் ஆண்டு களவாடப்பட்ட தேர்தலுக்குப் பின்னர் இருந்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாக்களிப்பு உரிமை மீதான தாக்குதல்கள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் அல்லது ஊடகங்களிடம் இருந்து நடைமுறையளவில் எந்த எதிர்ப்பும் எழவில்லை.

முப்பத்தி மூன்று மாநிலங்கள் வாக்காளர் அடையாள சட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளன, இது மக்கள்தொகையில் 6 சதவீதத்தினரை வாக்களிப்பதில் இருந்து தடுத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. மாநிலங்கள் முன்கூட்டி வாக்களிப்பதை மற்றும் வாக்களிக்க தவறியவர்கள் மீண்டும் வாக்களிப்பதை நிராகரித்துள்ளதுடன், தொழிலாள வர்க்க அண்டைப்பகுதி தொகுதிகளில் வாக்களிப்பை நிறுத்தி விடுகின்றன. தண்டனை பெற்றவர்களின் தண்டனை காலம் முடிந்த பின்னரும் கூட, பல மாநிலங்கள் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு ஆயுள்கால தடை விதித்துள்ளன. 2013 இல், உச்சி நீதிமன்றம் 1965 வாக்குரிமை சட்டத்தின் அமலாக்க இயங்குமுறைகளை அகற்றியது, அதற்கு ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எந்த நிஜமான எதிர்ப்பும் வரவில்லை. வேலை நாட்களில் தேர்தல்கள் நடத்தும் ஒரு சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாக உள்ளது, இது தொழிலாளர்கள் வாக்களிப்பதை மிகவும் சிரமமாக்குகிறது.

செல்வந்தர்களின், செல்வந்தர்களால், செல்வந்தர்களுக்கான அரசாங்கம்

இவ்விரு பெருநிறுவன கட்சிகளும் ஒரு சமூக எதிர்புரட்சியை மேற்பார்வை செய்துள்ளன, இது மலைப்பூட்டும் அளவிற்கு சமூக சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. இந்த நடைமுறைக்கு இணைந்த வகையில், சமூகத்தின் செல்வந்த தட்டுக்களது கட்டுமானம் அதிகரித்தளவில் அரசியல் ஆட்சி வடிவத்தில் பகிரங்கமான வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. பெருந்திரளான மக்கள் மீதான உளவுபார்ப்பு, காலவரையற்ற கைது நடவடிக்கை, பொலிஸை இராணுவமயமாக்குதல், வேலையிடங்களில் கெஸ்டாபோ பாணியிலான சோதனைகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள், அரசியல் விவகாரங்களில் இராணுவம் அதிகரித்த மேலாளுமை செய்தல், இணைய தணிக்கை என ஒரு பொலிஸ் அரசு உள்கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் சேர்ந்து, அரசு உயரதிகாரிகள் அதிகரித்தளவில் பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மக்கள்தொகையின் வெறும் 1 சதவீதத்தினரான, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் மில்லியனர்கள் ஆவர். கடந்த மூன்று தசாப்தங்களாக அனைத்து ஜனாதிபதிகளும்—ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், பில் கிளிண்டன், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா—பல கோடி மில்லியனராக உள்நுழைந்தார்கள் அல்லது அவர்களின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் பணத்தைக் குவித்து பின்னர் பல கோடி மில்லியனர்களாக ஆனார்கள். பல கோடி பில்லியனிய ரியல் எஸ்டேட் ஊக வணிகரும் ஏமாற்று பேர்வழியுமான டொனால்ட் ட்ரம்ப் என்ற தனிநபரில், நிதியியல் செல்வந்த தட்டு நேரடியாக வெள்ளை மாளிகையில் இடத்தை ஏற்றுள்ளது.

அரசும் புரட்சியும் படைப்பில் விளாடிமீர் லெனின் இவ்வாறு எழுதினார்: “மத்தியகாலத்துடன் ஒப்பிடுகையில் முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு பிரமாண்ட வரலாற்று வளர்ச்சி தான் என்றாலும் கூட, ஏழைகளைப் பொறுத்த வரையில், அது எப்போதுமே செல்வந்தர்களுக்கான ஒரு சொர்க்கமாவும் குறுகிய, மட்டுப்படுத்தப்பட்ட, மோசடியான, பாசாங்குத்தனமானதாகவும், சுரண்டப்படுபவர்களுக்கான ஓர் ஏமாற்று வலைப்பொறியாகவும் இருக்கிறது, முதலாளித்துவத்தின் கீழ் அது அவ்வாறு தான் இருக்கும்.”

தொழிலாள வர்க்கம் பெருநிறுவன முதலாளிமார்கள் மற்றும் அவர்களது அரசு எந்திரங்களால் சுரண்டப்பட்டு, ஒடுக்கப்படும் வர்க்கமாக இருக்கும் வரையில், முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான ஒரு நூற்றாண்டுக்கும் அதிக கால போராட்டத்தின் போக்கில் அது பெற்ற ஜனநாயக வெற்றிகளைப் பாதுகாப்பதிலும் சரி அல்லது உண்மையான ஜனநாயகத்தை எட்டுவதிலும் சரி அது வெற்றி அடைய முடியாது. இப்போதைய இந்த அரசை தூக்கியெறிந்து, தொழிலாள வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக, முதலாளித்துவவாதிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து சமூக சமத்துவத்திற்கான ஒரு சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காக, தொழிலாளர்களின் போராட்டத்திற்கான அங்கங்களை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே, செல்வந்தர்களின் போலி ஜனநாயகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயகத்தை ஸ்தாபிக்க முடியும்.