ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Strikes and demonstrations shake France

வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பிரான்ஸை உலுக்குகின்றன

By Alex Lantier
1 December 2018

“மஞ்சள் சீருடை" இயக்கத்துடன் பொருந்தியவாறு, அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் மாணவர் ஆர்ப்பாட்டங்களின் அலை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கத்தை உலுக்கி வருகிறது.

மஞ்சள் சீருடை போராட்டக்காரர்கள் நேற்று பிரான்சிலும் பெல்ஜியத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதேவேளையில், பிரான்சில் உயர்நிலைப் பள்ளிகளின் ஆயிரக் கணக்கான மாணவர்களும் பள்ளிக் கட்டிடங்களை முடக்கினர். மருத்துவமனைகள், இரயில்வே, மற்றும் பெட்ரோல் மற்றும் அணுசக்தி தொழில்துறைகளில் சமீபத்திய நாட்களில் பல்வேறு வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. இன்று சாம்ப்ஸ்-எலிசே வீதியில் இரண்டாவது சனிக்கிழமை போராட்டங்களுக்கு முன்னதாக, அணிதிரள்வுகள் தீவிரமடைந்து வருகின்றன என்பதோடு, அரசு பீதியில் இருப்பது முன்பினும் அதிகமாக கண்கூடாகவே வெளிப்படுகிறது.

புரூசெல்ஸில், சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய நூற்றுக் கணக்கான மஞ்சள் சீருடையாளர்கள், வலதுசாரி பிரதம மந்திரி சார்லஸ் மிக்கெல் இராஜினாமா செய்ய வேண்டுமென கோரினர். “நாங்கள் மக்கள், சார்லஸ் மிஷேல், நீங்கள் ஒழிந்தீர்கள்,” என்றவர்கள் முழக்கமிட்டனர். நீர்பீய்ச்சிகளைக் கொண்டு பொலிஸ் கூட்டத்தைக் கலைக்க நகர்ந்ததும், மோதல்கள் வெடித்தன அதில் இரண்டு பொலிஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. மாலை சுமார் 5 மணி வாக்கில், புரூசெல்ஸ் நகரசபை தலைவர் பிலிப் கிளோஸ் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடைவிதித்ததோடு, நகர மையத்தில் ஒவ்வொரு போராட்டக்காரரையும் கைது செய்ய அச்சுறுத்தினார். 74 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 12 பொலிஸ் காயமடைந்ததாகவும் ஆரம்ப செய்திகள் தெரிவித்தன.

பிரான்சில், அரசாங்கத்தின் பல்கலைக்கழக சீர்திருத்தங்களை எதிர்த்தும் மற்றும் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டு வருவதை எதிர்த்தும் மற்றும் மஞ்சள் சீருடையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் சுமார் 50 பள்ளிக் கட்டிடங்களை முற்றுகையிட்டனர். தேசிய உயர்நிலை பள்ளி மாணவர் சங்க தலைவர் Louis Broyard கூறினார், “இது பாரீஸ் ஆர்ப்பாட்டம் இல்லை; இது இமானுவல் மக்ரோனின் அரசியலால் கைவிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் கிராமப்புற உயர்நிலை பள்ளிகளில் நடக்கும் கிளர்ச்சி. இன்று முற்றுகையிடப்பட்ட பள்ளிகள், ஏறத்தாழ இந்த வகையான ஆர்ப்பாட்டத்திற்காக அணித்திரட்டப்பட்டவை இல்லை,” என்றார்.

அதே நேரத்தில், மார்சைய் நகரசபை பணியாளர்கள் மற்றும் La Mède இல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்களாலும், லியோன் மற்றும் மன்ஸ் பொது போக்குவரத்துத்துறையில், Flamanville இல் அணுசக்தி ஆலையில், Poitou உருக்காலைகளில், மற்றும் பல மருத்துவமனைகளிலும் பல்வேறு வேலைநிறுத்தங்கள் நடந்தன அல்லது நடந்து வருகின்றன.

நேற்று பிரான்ஸ் எங்கிலும் இருந்து பாரீசுக்குப் பயணித்த பல ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், உயிராபத்தான துப்பாக்கிகள் மற்றும் கலகம் ஒடுக்கும் துணைக்கருவிகள் ஏந்திய பொலிஸார், அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்பட தயாராக, முற்றுகையிடப்பட்ட ஒரு நாட்டைப் போல தலைநகரைச் சோதனை இட்டு கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

“அதிதீவிர இடது" மற்றும் "அதிதீவிர வலதுடன்" திருட்டுத்தனமாக கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு பொலிஸ் மீது தாக்குதல்கள் நடத்துவதை மஞ்சள் சீருடையாளர்கள் வேறுபடுத்திக் காட்ட விரும்புகின்ற நிலையில், அவர்களை ஒடுக்குவதற்கான உத்தியோகபூர்வ நியாயப்பாடு முற்றிலும் ஓர் ஆத்திரமூட்டலாக உள்ளது. ஐரோப்பா எங்கிலும் தசாப்த காலமாக நடத்தப்பட்ட சமூக செலவினக் குறைப்பு மற்றும் இராணுவவாதத்திற்கு தொழிலாளர்களின் எதிர்ப்புப்புயலால், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பிற்போக்குத்தனமான அரசாங்கங்களின் அடித்தளங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன.

அவரின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் "சோம்பேறிகள்" என்றும், ஒரு பிரெஞ்சு தொழிலாளி ஒரு வேலையைத் தேட அல்லது வேறு பிறவற்றுக்காக "சாலையைக் கடக்க" வேண்டும் என்றும் தெரிவித்த வங்கியாளர்-ஜனாதிபதி மக்ரோனின் அவமரியாதைகளைத் தொழிலாளர்கள் பகிரங்கமாக கண்டிப்பதாக பிரெஞ்சு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளில் மேற்கோளிடப்படுகிறது.

மஞ்சள் சீருடையாளர்கள் அவர்களின் நுகர்வு சக்தி உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும், பெரும் பணக்காரர்களால் தொழிலாளர்கள் சூறையாடப்படுவதும் சமூக சேவைகள் மீதான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டுமென கோரி வருவதுடன், ஓர் ஐரோப்பிய இராணுவத்திற்கான அரசின் முன்மொழிவுகளை நிராகரிக்கின்றனர் மற்றும் மக்ரோனின் இராஜினாமாவை கோருகின்றனர். இது அவர்களுக்கு பெருவாரியமான மக்கள் ஆதரவை வென்று கொடுத்துள்ளது.

அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களின்படி, பிரெஞ்சு மக்களில் 84 சதவீதத்தினர் அவர்கள் "மஞ்சள் சீருடையாளர்களின்" கோபத்தைப் புரிந்து கொள்வதாக கூறுகின்றனர், மக்ரோன் அவர்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்து கேட்கவில்லை என்று 81 சதவீதத்தினர் நம்புகின்றனர், 75 சதவீதத்தினர் அவர்களை ஆதரிக்கின்றனர். BFM-TV இல், நிகழ்ச்சி தொகுப்பாளர் Thierry Arnaud, அந்த புள்ளிவிபரங்கள் "சீர்குலைந்தவை" என்று குறிப்பிட்டார்; RTL இன் Alain Duhamel “அரசாங்கம் மக்கள் கருத்து மீதான மோதலில் தோற்றுவிட்டதாக,” கவலை வெளியிட்டார்.

மக்ரோனின் நெருக்கடி அரசாங்கத்திற்குள் நிலவும் மோதல்கள் குறித்து இப்போது ஊடகங்களில் பகிரங்கமாக பேசப்பட்டு வருகிறது. வரி உயர்வையும் அவரின் இதர சமூக செலவின குறைப்பு திட்டத்தையும் முன்னெடுக்க அவர் தீர்மானகரமாக இருப்பதாகவும் செவ்வாயன்று மக்ரோன் அறிவித்தார். “நான் விட்டுக்கொடுத்தேன் என்றால், நான் பின்வாங்குகிறேன் என்று கூறப்படும்,” என்று நெருக்கடியின் அளவை மென்மையாக குறைத்துக் காட்டுவதற்கு முன்னதாக அவர் தெரிவித்தார். “ஒருவர் சீர்திருத்தத்தை எட்டுவதற்காக, அரசியல் செல்வாக்கை இழப்பது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை,” என்றார்.

பிலிப் புதனன்று பின்வருவதையும் சேர்த்தார்: “ஆனால், ஜனவரி 1 முதல் வரிகள் உயரும். ஜனாதிபதி அதை கூறிவிட்டார், நாங்கள் வரம்பு நிர்ணயித்து விட்டோம், நாங்கள் அந்த வரம்பில் நிலைத்து நிற்க இருக்கிறோம்... ஒருவர் கருதுவதைப் போல, நாங்கள் அதில் பின்வாங்கப் போவதில்லை.” இது, 1995 இல் இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்ட, மக்கள் செல்வாக்கிழந்த பிரதம மந்திரியும் சமூக வெட்டுக்களை நடத்தியவருமான அலன் யூப்பே, “இவரை விட எவ்வளவோ பரவாயில்லை,” என்று ஒரு வலதுசாரி நிர்வாகியிடமிருந்து மனந்தளர்ந்த கருத்தைக் கொண்டு வந்தது.

நேற்று, கவலைகள் இன்னும் கூடுதல் மட்டத்திற்கு அதிகரித்தன. மக்ரோனின் முன்னாள் கூட்டாளியும் MoDem நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியுமான Francois Bayrou பகிரங்கமாக ஜனாதிபதியை தாக்கி அறிவிக்கையில், “ஒரு குறிப்பிட்ட புள்ளியில், உங்களால் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்ய முடியாது,” ஆனால் இதை எவ்வாறு செய்வது என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே அரசாங்கம் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்றார்.

மஞ்சள் சீருடையாளர்களின் அணிதிரள்வானது ஐரோப்பா எங்கிலும் சமூக செலவினக் குறைப்பு மற்றும் இராணுவவாதத்திற்கான அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை எதிர்நிறுத்தும் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தில் முதல் கட்டமாகும். தொழிலாளர்களுக்கும் நிதிய பிரபுத்துவத்திற்கும் இடையிலான ஒரு வர்க்க மோதல் மேலெழுந்து வருகிறது. அதுவொரு விட்டுக்கொடுப்பற்ற அரசியல் போராட்டமாக இருக்கும். அதுபோன்றவொரு மோதலைத் தொடுக்க, தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக போராடும் அவர்களின் சொந்த அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பால் (CGT) மே 1968 பொது வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், தொழிலாளர்களின் போராட்டத்தின் குரல்வளையை நெரிப்பதற்காக அந்த இயக்கத்தின் மீது கட்டுப்பாட்டை எடுக்க தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி-முதலாளித்துவ கட்சிகளது முயற்சிகளை எதிர்க்கும் போராட்டத்தில் தொழிலாளர்கள் நுழைந்து வருகிறார்கள் மிக முக்கியமானதாகும்.

அதுபோன்ற முயற்சிகளுக்கு முன்னுதாரணங்களைக் கொண்டுள்ள அவநம்பிக்கைக்குரிய தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராடுவது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிரமமல்ல. CGT இன் தலைவர் பிரிப் மார்ட்டினேஸ் முன்னதாக மஞ்சள் சீருடையாளர்களைக் குற்றஞ்சாட்டி, அவர்களுடன் இணைவது சாத்தியமில்லை என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென CGT பாரீசில் நாளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) ஆர்ப்பாட்டங்களைத் தொழிற்சங்கங்களுக்கு அடிபணிய செய்ய முனைந்து வருகிறது. “பல ஆண்டுகளாக ஒன்றுதிரண்டு வந்துள்ள சமூக கோபம் இப்போது மிகவும் தெளிவான மற்றும் தீவிரமான வெளிப்பாட்டைக் காட்டுவதாக தெரிகிறது. நாம் 'மஞ்சள் சீருடை' இயக்கங்களையும் தொழிற்சங்கத்தையும் ஒன்றிணைப்போமாக” என்று NPA இன் முன்னாள்-ஜனாதிபதி வேட்பாளர் பிலிப் புட்டு ட்வீட் செய்தார். சுருக்கமாக கூறுவதானல், மக்ரோனின் தொழிலாளர் சட்டத்தையும், தேசிய இரயில்வே வலையமைப்பை மக்ரோன் தனியார்மயமாக்குவதையும் ஆதரித்த மற்றும் தற்போது இராணுவ சேவைகளை மீண்டும் கொண்டு வருவதன் மீதும் மற்றும் ஓய்வூதியங்களை வெட்டுவதன் மீதும் அவருடன் பேரம்பேசி வருகின்ற அதே அமைப்புகளுடன் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் பிணைத்து வைக்க அவர் விரும்புகிறார்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டாளியும் அடிபணியா பிரான்சின் (La France Insoumise) தலைவருமான ஜோன்-லூக் மெலென்சோனின் பாதையும் அதே திசையில் உள்ளது. அவர் செல்வந்தர்களுக்கான வரியை மீண்டும் கொண்டு வர மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றாலும், வரியை நிறுத்துவது "ஒரு வெடி உலையை பற்ற வைக்கிறதே" என்ற காரணத்தினால் மட்டுமே இதற்கு அழைப்புவிடுக்கிறார். அதிக "சமூக நீதி" மூலமாக "பொது ஒழுங்கை" மீள்ஸ்தாபிதம் செய்யுமாறு மக்ரோனுக்கு வேண்டுகோள் விடுக்கும் மெலொன்சோன், மக்ரோனின் பிரதம மந்திரியாக ஆவதற்கான அவரின் கடந்த ஆண்டு வலியுறுத்தை மீண்டும் முன்நகர்த்தி வருகிறார் என்பதோடு, தேசிய நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல்களுக்கு முன்மொழிந்தார்.

இத்தகைய முன்மொழிவுகள் தொழிலாளர்களிடையே நியாயமான கோபத்தைத் தூண்டியது. சனிக்கிழமை பாரீசில் மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கெடுப்பது குறித்து மெலொன்சோன் அறிவித்த போது, ட்விட்டர் பயனர்கள் பின்வருமாறு பதிலளித்தனர்: “வீட்டிலேயே தங்கியிருங்கள்,” “மரீன் லு பென் செய்வதைப் போல தான் நீங்கள் செய்கிறீர்கள், இயக்கத்தை சிறப்பாக அழிப்பதற்காக அதன் மீது கட்டுப்பாட்டை எடுக்க முயல்கிறீர்கள்... உங்கள் நண்பர் மக்ரோனுடன் விவாதிக்க செல்லுங்கள்.”

தொழிலாளர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீனமான இந்த அமைப்புகளை உடைப்பதற்காக NPA, மெலொன்சோன் மற்றும் ஏனையவர்களது முயற்சிக்கு எதிராக அவற்றைப் பாதுகாக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடும். இந்த போராட்டத்தில் ஜெயிப்பதற்கு தொழிலாளர்களுக்கு இருக்கும் ஒரே வழி, நிதியியல் உயரடுக்கைப் பறிமுதல் செய்வதற்காக பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைமாற்றுவதை நோக்கமாக கொண்ட ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்க போராடுவதாகும் என்பதை அது எடுத்துரைக்கும்.