ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Third “yellow vest” protest in France defies government crackdown

பிரான்சில் மூன்றாவது "மஞ்சள் சீருடை" போராட்டம் அரசின் ஒடுக்குமுறையை மீறுகிறது

By Anthony Torres
3 December 2018

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் அவரது தொழிலாளர்-விரோத கொள்கைகளுக்குத் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக மஞ்சள் சீருடைகள் அணிந்துள்ள போராட்டக்காரர்கள் சனிக்கிழமை நடத்திய மூன்றாவது போராட்டம், பிரான்ஸ் எங்கிலும் பரவி இருந்தன. பாரீஸ் நகர மையப்பகுதியில், போராட்டக்காரர்கள் முன்னொருபோதும் இல்லாதளவில், மே 1968 க்குப் பிந்தைய மிகவும் வன்முறையான பொலிஸ் ஒடுக்குமுறையை முகங்கொடுத்தனர், அந்த சமயத்தில் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தைத் தூண்டிய மாணவர் ஆர்ப்பாட்டங்கள் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தி இருந்தது.


Arc de Triumph ஐ நோக்கி முன்னேறாது போராட்டக்காரர்களை தடுக்கும் ஒரு பகுதி போலிஸ் பிரிவு

இந்த இயக்கமானது, ஐரோப்பா எங்கிலுமான சமூக சமத்துவமின்மை, வாழ்க்கை செலவுகளின் உயர்வு, சமூக செலவினக் குறைப்பு கொள்கைகள் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு சர்வதேச அரசியல் போராட்டமாக வேகமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போராட்டங்களுக்குப் பின்னர், மாஸ்ட்ரிச்ட், நைஜ்மேகன் (Nijmegen) மற்றும் நெதர்லாந்தின் ஹெக் போராட்டக்காரர்களும் அரசு கொள்கைகளை எதிர்ப்பதற்காக மஞ்சள் சீருடைகளைப் போர்த்திக் கொண்டார்கள். பிரான்சில், பாரீஸ், போர்தோ, ரென், மார்சைய், துலூஸ், டிஜோன், நாந்தேர், நீஸ், ஸ்ராஸ்பேர்க் மற்றும் கோன் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

பங்குபற்றியவர்களைப் பீதியூட்டும் முயற்சியில் தோல்வியடைந்த பிரெஞ்சு பொலிஸ், வன்முறை மற்றும் பாரிய கைது நடவடிக்கைகளைப் பயன்படுத்தினர். பிரான்ஸ் எங்கிலும், அங்கே 412 கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன, பாரீசில் நடந்த 287 நடவடிக்கைகளும் அதில் உள்ளடக்கும், அதில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். சனிக்கிழமையில் இருந்து, 378 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், இதில் 33 வயது முதிராத சிறார்கள் உள்ளடங்குவர். மார்சையில், மாலை வரையில் பொலிஸ் உடனான மோதல்கள் நீடித்தன, அதில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.


மஞ்சள் சீருடை போராட்டக்காரர்கள்

பாரீசில், கலகம் ஒடுக்கும் பொலிஸ் போக்குவரத்தை நிறுத்தியதுடன், அடையாள பரிசோதனைகள் மற்றும் போராட்டக்காரர்களைக் குறிப்பிட்டு தேடுவதில் ஈடுபட்டு, காலை 6 மணியில் இருந்தே பெரும்பான்மையான நகரின் மையப்பகுதி எங்கிலும் மக்களின் போக்குவரத்தை நிறுத்தி இருந்தனர். காலை சுமார் 9 மணியளவில், போராட்டங்கள் தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, கலகம் ஒடுக்கும் பொலிஸ் சரமாரியாக கண்ணீர் புகைக்குண்டுகளை வீசத் தொடங்கியதுடன், சாம்ப்ஸ் எலிசே வீதியின் மேற்கு எல்லையில், வெற்றி நினைவு வளைவைச் (Arc de Triumph) சுற்றிய, Étoile சதுக்கத்தில் போராட்டக்காரர்களைத் தாக்கினர்.

“மக்ரோன் இராஜினாமா செய்" என்ற போராட்டக்காரர்களின் கோஷம், பொலிஸால் அவர்கள் தாக்கப்பட்ட சாம்ப்ஸ்-எலிசே வீதிக்கு பக்கவாட்டு வீதிகள் வரையில் பரவின. அவர்கள் தடையரண்களைக் கட்ட முயன்றபோது, கலகம் ஒடுக்கும் பொலிஸ் சரமாரியாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், அத்துடன் ஸ்தம்பிக்க செய்யும் கையெறி குண்டுகள், ரப்பர் தோட்டங்கள் மற்றும் நீர் பீய்ச்சிகளைக் கொண்டு தாக்கியும் விடையிறுத்தது.

விரைவில் மோதல்கள் அந்நகரம் எங்கிலும் வெடித்தன. கார்களும், ஒரு LCL வங்கி கிளை, பங்குச் சந்தை மற்றும் Jeu de Paume அருங்காட்சியகம் ஆகியவை எரிக்கப்பட்டதுடன், Tuileries பூங்காவின் உலோக கதவுகள் நாசமாக்கப்பட்டன. சமூக ஊடகங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்ட காணொளிகள், சிலர் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காட்டின. இவர்கள் பெரும்பாலும் அனேகமாக சீருடை அணியாத பொலிஸ்காரர்களே ஆத்திரமூட்டுபவர்களாக செயல்பட்டிருக்கலாம். அவர்கள் மஞ்சள் சீருடை அணிந்திருந்தனர் என்பதோடு, ஆடம்பர கார்கள் அல்லது கடைகளைத் தாக்கினர், பின்னர் பொலிஸ் உடன் மென்மையாக சமாதானமாக பேசியவாறு விலகிச் சென்றனர்.

பாரீசில் WSWS செய்தியாளர்கள், மக்ரோனை எதிர்ப்பதற்காக பாரீசின் தொலைதூர புறநகர் பகுதிகள் மற்றும் மாகாணங்களில் இருந்து வந்திருந்த "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களுடன் பேசினர். பியர் கூறினார், “இந்த இயக்கம் தொடங்கியதில் இருந்தே நான் போராடி வருகிறேன், ஆனால் பாரீசில் அல்ல, ஏனென்றால் நான் Saône படுகையில் Vesoul உள்ளேன். நான் இங்கே மக்ரோனுக்கு எதிரான மற்றும் அவரின் புதிய வரிகளுக்கு எதிரான போராட்டத்தில் உள்ளேன், நாங்கள் அமைதியான முறையில் போராட முயன்றாலும் கலகம் ஒடுக்கும் பொலிஸ் எங்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசுகிறது. அவர்கள் தான் எங்களை முதலில் தாக்குகிறார்கள். இது சரியல்ல,” என்றார்.

மக்ரோன் பொலிஸ் வன்முறையில் தஞ்சமடைந்திருப்பது அவரின் சொந்த திவால்நிலைமையைக் காட்டுவதாக ஆண்டனியும் மரீனும் தெரிவித்தனர்: “மக்கள் மீது தொடர்ந்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசும் நிலையை ஒருவர் எட்டும் போது, அல்லது பிரச்சினையைத் தீர்க்க வேறு வழி தெரியாமல் பொலிஸைக் கொண்டு சுற்றி வளைக்கும் நிலையை ஒருவர் எட்டும் போது, அவர் முழுதுமாக தோல்வியடைந்துவிட்டார் என்பது தான் இதன் அர்த்தமாகிறது. அவர் முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்து விட்டார் ... நாங்கள் இன்னும் அதிகமாக போராடுகையில், இன்னும் மோசமானது நடத்தப்படுகிறது,” என்றனர்.

“மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டக்காரர்களிடையே அதிவலது கட்சிகள் கலந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து அப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு மின் தொழில் வல்லுனர் கூறுகையில், “தனிப்பட்டரீதியில் நான் அவர்களில் யாரையும் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் முயன்றாலும் கூட, அவர்கள் வெற்றி பெற முடியாது என்றே நான் நினைக்கிறேன், ஏனென்றால் இங்கே இருக்கும் மக்கள், நாங்கள், சோர்ந்து போய் பலவீனமாகும் அளவுக்கு [பிரான்சின் நவ-பாசிசவாத கட்சியான] தேசிய முன்னணியை எப்போதும் சமாளித்து வந்துள்ளோம்,” என்றார்.

நவ-பாசிசவாத ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு எதிராக மக்ரோனின் தேர்தல் வெற்றியைக் குறித்து அவர் குறிப்பிடுகையில், நவ-பாசிசவாதிகளின் முக்கியத்துவமானது "சான்றாக இரண்டாம் கட்ட தேர்தல்களின் போது, நாங்கள் எப்போதுமே யாருக்கு வாக்களிக்க விரும்பவில்லையோ அவருக்கே கூட வாக்களிக்க நிர்பந்திக்கப்படுகிறோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.


குடியரசும் ஒழிக திருடர்களும் ஒழிக

ஆம்புலன்ஸ் ஒட்டுனர் ஒருவர் கூறினார், “வாழ்க்கை செலவுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன, ஆனால், '200 யூரோவிற்கு  குறைவாக சாம்ப்ஸ் எலிசே இல் நான் இரவு உணவு உண்பதில்லை' என்று கூறும் நமது நாடாளுமன்ற உறுப்பினரைப் போல ... சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். எனக்கு ஆலோசனை வழங்குபவர்களின் சம்பளங்களை இரட்டிப்பாக்குகின்றேன், ஏனென்றால் மாதத்திற்கு வெறும் 5,000 யூரோவில் அவர்களால் வாழ முடியாது. அப்படியானால், அவர்கள் மாதத்திற்கு அந்த 5,000 யூரோவை எனக்கு கொடுக்க வேண்டும், ஏனென்றால் அந்தளவு பணத்தைக் கொண்டு நான் ஒரு அரசரைப் போல வாழ முடியும்,” என்றார்.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் ஒரு முயற்சியில் மற்றும் "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் சிலர் இணைவதைத் தடுக்கும் ஒரு முயற்சியில் ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (General Confederation of Labor – CGT) தனித்தனி ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்ததைக் குறித்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பின்வருமாறு கூறினார்: “தொழிற்சங்கங்கள் வீணாகிப் போனவை, அவை எதற்கும் பிரயோஜனமில்லை. அரசு சார்பாக செயல்பட அவற்றுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது, அவை தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதில்லை. ... அவை அரசாங்கத்தின் சேவகர்கள், அவை அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறுகின்றன. அதனால் தான் நான் எந்த தொழிற்சங்கத்திலும் உறுப்பினராக இல்லை,” என்றார்.

ஒரு முன்னாள் சிப்பாய் WSWS க்கு கூறுகையில், அவர் போர்களை எதிர்ப்பதாகவும், அடிப்படை சமூக செலவுகளை வெட்டுவதன் மூலமாக அவற்றுக்கு நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்: “சிரியாவில் என்ன நடந்ததோ அதுவொரு மாபெரும் துயரம், அதுபோலவே ஐவரி கோஸ்டில் நடந்ததும் தான். அது வளைகுடா போரைப் போன்றது அதில் நான் சண்டையிட்டேன், முக்கியமாக அனைத்துமே அந்த நாடுகளின் செல்வவளத்தைக் கொள்ளையடிப்பது சம்பந்தப்பட்ட ஒரே விடயமாகும். பின்னர் அது சில நாடுகளில் சுன்னி மக்கள் மற்றும் ஷியைட் மக்களுக்கு இடையே மதவாத போர்களைத் தூண்டிவிடுகிறது ... ஆனால் அதுபோன்ற மதங்களுக்கு இடையிலான மோதல்கள் இருக்கின்றன என்றால், முடிவாக அது பல ஆண்டுகளாக அந்த நாடுகளைக் காலனிப்படுத்தி இருந்த ஐரோப்பிய நாடுகளின் தவறு தான்,” என்றார்.

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கம் அதிகரித்து வரும் "மஞ்சள் சீருடை" இயக்கம் குறித்து பீதியடைந்துள்ளது, அது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட வேலைநிறுத்தம் செய்து வருகின்ற தொழிலாளர்கள், அத்துடன் மாணவர்களிடையே ஆதரவைப் பெற்றுள்ளது. அரை நூற்றாண்டுக்கு முன்னர், அப்போது சோர்போனில் பொலிஸ் நடத்திய ஒடுக்குமுறை ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகப் பெரிய வேலைநிறுத்தத்தைத் தூண்டிய நிலையில், அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் குறித்து அஞ்சுகிறார்கள். அர்த்தமற்ற வார்த்தைஜாலங்களைக் கொண்டு போராட்டக்காரர்களை இழிவார்ந்த முறையில் வெற்றி கொள்ள முயற்சிக்கின்ற அதேவேளையில், அவர்கள் அடக்குமுறைக்குத் திட்டமிட்டு வருவதாகவும் பெருமைபீற்றிக் கொள்கிறார்கள்.


கண்ணீர் புகைகுண்டுகளின் மத்தியில் போராட்டக்காரர்கள்

சனிக்கிழமை பல அமைச்சர்களும் அவசரகால சட்டத்தை மீண்டும் திணிக்க அழைப்புவிடுத்த பின்னர், நேற்று மக்ரோனின் மந்திரிசபை மற்றும் "சம்பந்தப்பட்ட சேவைகளின்" ஓர் அவசரகால கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். “வரவிருக்கும் நாட்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ... அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது" குறித்து விவாதிக்க மக்ரோன் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.

நவ-பாசிசவாத தேசிய பேரணியின் (RN) மரீன் லு பென்னிடம் இருந்து வந்த ஒரு கோரிக்கைக்கு ஏற்ப, பிரான்சின் அனைத்து நாடாளுமன்ற கட்சிகளையும் சந்திக்குமாறு பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்புக்கும் அவர் அழைப்புவிடுத்தார். “இந்த தேசிய பேரணியில் முதலாவதாக இருந்த எதிர்கட்சிகளின் தலைவர்களை வரவேற்கும் அளவிற்கு நிலைமையை மிகவும் மோசமடைய செய்யவிட்டது யார்" என்று மக்ரோனிடம் அப்பெண்மணி கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் "பல்வேறு மக்கள் தொடர்பு பிரச்சினைகளை மிக மோசமாக கையாண்டு" உள்ளது என்பதை அவர் "புறநிலைரீதியாக" ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனெர் தெரிவித்தார். “அனைத்தும் சரியாக நடந்து வருகின்றன, ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நான் உங்களுக்கு கூற வேண்டுமென விரும்புகிறீர்களா? அது முட்டாள்தனமாக இருக்கும், அனைத்துக்கும் மேலாக நான் உங்களிடம் பொய் கூற விரும்பவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

நிதியியில் பிரபுத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் அவசரகால நிலைக்கு தயாரிப்பு செய்து வருகின்ற, நேரடியாக தொழிலாள வர்க்கத்தின் சமூக கோபத்தை இலக்கில் வைத்துள்ள ஒரு பொலிஸ் அரசின் தந்திரங்களுக்கு தொழிலாளர்கள் எள்ளளவும் மதிப்பளிக்கக் கூடாது. பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலுமான பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு வெடிப்பார்ந்த சக்தியுடன் மேலெழுந்து வருகிறது. பிரான்ஸ் எங்கிலும் தொழிலாளர்களை அணித்திரட்டுவதும் மற்றும் அரசு அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்காக ஒரு சோசலிச சர்வதேசியவாத இயக்கத்தை அபிவிருத்தி செய்வதுமே முன்னிருக்கும் ஒரே பாதையாகும்.