ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK workers, young people defend Yellow Vest protests in France: “I only wish that we could do it here as well!”

பிரிட்டன் தொழிலாளர்களும், இளைஞர்களும் பிரான்சில் மஞ்சள் சீருடை போராட்டங்களைப் பாதுகாக்கின்றனர்: “இங்கே நாங்களும் அதை செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம்!”

By our reporters
11 December 2018

இலண்டனில் வசிக்கும் உள்ளாட்சித்துறை தொழிலாளரான இப்ராஹிம், லாட்புரோக் குளோவ் சுரங்கப்பாதை இரயில் நிலையத்தில் WSWS செய்தியாளர்களுடன் உரையாற்றினார். பிரான்ஸ் போராட்டங்களைச் செய்திகளில் பார்த்திருந்த அவர், "கைகளில் விலங்கிடப்பட்டு பலவந்தமாக தரையில் மண்டியிட செய்யப்பட்டிருந்த பள்ளி மாணவர்களை நோக்கிய பொலிஸ் நடவடிக்கையால் அதிர்ந்து போனதாக தெரிவித்தார்.

“இந்த பிள்ளைகளில் பலரும் மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இணைந்திருந்தனர் ஏனென்றால் அவர்களின் பெற்றோர்கள் சிரமங்களையும் போராட்டங்களையும் அனுபவித்து வருவதுடன், இவர்கள் அதனூடாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளுக்குத் தொழிலாள வர்க்கத்தைக் குறித்து எந்த கவலையும் இல்லை. பிரிட்டன் வெளியேறுவது மீதான உடன்படிக்கையைப் பாருங்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

“உலகெங்கிலுமான தொழிலாளர்களின் ஒற்றுமையை ஐக்கியப்படுத்துவதே முன்னிருக்கும் ஒரே வழி. இறுதியில், உழைக்கும் மக்கள் தான் ஒவ்வொன்றையும் உருவாக்குகிறார்கள், சமூகத்தை செயற்படச்செய்கின்றார்கள்,” என்றார்.

கிரென்ஃபெல் கோபுரத்திற்கு வெகு அருகாமையில் தான் லாட்புரோக் குளோவ் உள்ளது, அங்கே ஜூன் 2017 இல் ஒரு தீவிபத்தில் 72 பேர் உயிரிழந்தார்கள். இப்ராஹிம் தெரிவித்தார், “எந்த அரசியல் கட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்பது விடயமே இல்லை, அவர்கள் அனைவருமே சமூக வீட்டுவசதிகளை நாசமாக்கி வருகிறார்கள். கிரென்ஃபெல் தீவிபத்து சம்பவம் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆடம்பர அலங்காரங்கள் மற்றும் இலாபத்தில் தான் அவர்கள் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள்,” என்றார்.

Cammell Laird இல் "241 வேலைத்தலங்களை நீக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக சமீபத்தில் வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்த கப்பல்கட்டும் துறை தொழிலாளர்கள் வசிக்கும் இடமான, இங்கிலாந்தின் மிக வறிய பகுதிகளில் ஒன்றான வடமேற்கில் உள்ள Birkenhead தொகுதியின் கடைக்காரர்களிடம் WSWS செய்தியாளர்கள் உரையாடினர்.

Cammell Laird இல் முன்னர் பணியாற்றி வந்த மிக் முஸ்டியை உயர்த்தி வணக்கத்துடன் பின்வருமாறு கூறினார், “பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கிறோம். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதில் நான் உடன்படுகிறேன், இங்கே நாங்களும் அதை செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம்!” என்றார்.

பிரெஞ்சு போராட்டங்களைக் குறித்து குடும்பத் தலைவியான மரியிடம் கருத்து கேட்ட போது, “எதிர்த்து நிற்கும் எவரொருவரும் ஆதரிக்கப்பட வேண்டும். ஒரு புரட்சி அவசியப்படுகிறது. பிரான்சில் மக்கள் ஒன்றுபட்டு வர வேண்டும். முதலாளிகள் பணம் சுருட்டிக் கொண்டு, அவர்களின் பணியாளர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. இந்த அமைப்புமுறை தோல்வியடைந்து வருகிறது,” என்றார்.

கோலென், இவர் பேரன் ஒருவர் கப்பல்கட்டும் துறையில் தொழில் பயிலுநராக இருக்கிறார், இவர் கூறுகையில், “பிரெஞ்சு போராட்டக்காரர்களுக்கு எனது சேதி, கைவிட்டு விடாதீர்கள் என்பது தான். நீங்கள் மிகவும் தைரியசாலிகள், அரசாங்கத்தின் இராணுவ பலத்திற்கு எதிராக எழுந்து நில்லுங்கள். அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒடுக்குமுறையைப் பிரயோகித்து, துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். நம் இளைஞர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டு வருகிறார்கள்—அறிவே பலம். நமது இளைஞர்கள், முதியவர்கள், நலிந்தவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் நோயாளிகளை அவர்கள் பட்டினியில் கிடத்தி வருகிறார்கள்.”

சுய-தொழிலில் ஈடுபட்டுள்ள பௌல் கூறுகையில், “ஒவ்வொரு நாட்டிலும், வாழ்வின் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு தொழிலாளருக்கும் நான் எனது ஆதரவை வழங்க விரும்புவேன். முடிவில் இந்த அரசாங்கங்கள் தான் அவர்களைக் கொள்ளையடிக்க முயன்று வருகின்றன,” என்றார்.

ரோமானியாவிலிருந்து வந்து அருகிலுள்ள Vauxhall வாகன ஆலையில் பணியாற்றிய டான், பின்னர் வேலை நீக்கப்பட்டுள்ளார். Cammell Laird தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கிய அதே நாளில், நூற்றுக் கணக்கானவர்களைக் வேலைநீக்கம் செய்வதற்கான திட்டங்களை எதிர்த்து போராட Vauxhall தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பிரெஞ்சு போராட்டக்காரர்கள் குறித்து கூறுகையில், “அந்த தொழிலாளர்களுக்காக நான் மனம் வருந்துகிறேன், நாங்களும் அதே நிலைமையில் தான் வாழ்கிறோம், ஆனால் வேறு நாட்டில் வாழ்கிறோம். நாங்களும் அதே சூழ்நிலையில் தான் நிற்க போகிறோம்,” என்றார்.


சூ

சூ பிரெஞ்சு போராட்டங்களை ஆதரித்து கூறினார், “ஒவ்வொருவரும் போராட்டத்தில் இறங்க போகிறார்கள். இங்கே வீடற்றவர்களைப் பாருங்கள், இதை அனுமதிக்கக் கூடாது.”

கெய்லெ கூறினார், “இவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்று நான் நினைப்பதில்லை, ஒவ்வொருவரும் அவரவரின் வேலைகளில் தக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் என்ன இனமாக இருந்தாலும் சரி, நீங்கள் என்ன நிறமாக இருந்தாலும் சரி, நமக்கு எல்லோருக்குமே உணவூட்டவேண்டிய வாய் இருக்கிறது.”

மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்திற்கு வெளியே, மாணவர்களும் பல்கலைக்கழக தொழிலாளர்களும் பிரெஞ்சு போராட்டக்காரர்களுக்கு அவர்களின் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

லியோன் கூறினார், “நான் ஒருபோதும் ஒரு முன்னாள் வங்கியாளர் [பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல்] மக்ரோன் பக்கம் நின்றதில்லை. பிரான்ஸ் மக்கள் இந்த போராட்டத்தை அவர்களின் சொந்தக் கரங்களில் எடுத்துள்ளார்கள். இங்கே நாங்கள் பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிராக 200,000 பேர் வீதிகளில் நிற்கிறோம். அரசாங்கத்தை மக்கள் இதற்கு பொறுப்பாக்கவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? பாரீஸ் நகர இளைஞர்கள் மிகவும் கடுமையாக நடத்தப்படுவதாக நான் நினைக்கிறேன்.

“பிரான்சில், கிரீஸில் வலதுசாரி வெகுஜனவாதம் வலுத்து வருகிறது என்பது வெட்கக்கேடானது—இது எல்லாம் [முன்னாள் தொழிற்கட்சி பிரதம மந்திரி டோனி] பிளேயரிடம் இருந்து உருவாகியது. ஒரு சர்வதேச சோசலிச கட்சி என்ற கருத்துரு, சோசலிஸ்டுகளின் ஓர் இராணுவம், போராட்டத்திற்கு எரியூட்ட முயலுகின்ற ஒவ்வொருவருக்கும் பலன் அளிப்பதாக இருக்குமென நான் நினைக்கிறேன்.”


அலெக்ஸ் மற்றும் லியோன் (வலது)

சமூகவியல் மாணவரான 20 வயது நிரம்பிய ருக்கியா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை அதிர்ச்சியூட்டுவதாக தெரிவித்தார். “மக்களை இன்னும் எத்தனை காலத்திற்கு அவர்கள் மவுனமாக வைத்திருக்க விரும்புகிறார்கள்? பிரான்சில் போராட்டக்காரர்களைக் கையாள்வதில் பொலிஸ் மிகவும் ஈவிரக்கமின்றி உள்ளது, போராடுவது ஜனநாயகத்தின் சட்டப்பூர்வ வெளிப்பாடாகும். போராடுவது, பிரஜைகளாக அவர்களின் உரிமை.

“போராட்டக்காரர்களுக்குள் தீவிரவாதிகள் என்றழைக்கப்படுபவர்கள் ஊடுருவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால், போராட்டங்களின் அடிப்படை காரணத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கு பெரிதும் அதுவொரு சாக்குபோக்காக தெரிகிறது. அதிக வரி சுமத்தக்கூடாதவர்கள் மீது அதிக வரி சுமத்தப்பட்டு வருகிறது.”

உலக சோசலிச வலைத்தளம் முன்னெடுத்த சுதந்திர எல்லை கொள்கையுடன் ருக்கியா உடன்பட்டார், “நான் கலே சென்றிருந்தேன். அங்கே அகதிகளுடன் பேசுவது அறிவூட்டலாக இருந்தது, ஆனால் மன வருத்தமாக இருந்தது. அவர்கள் ஒரு எங்காவது ஒரு பாதுகாப்பான இடத்தை அடைவதற்கான எதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!”

பிரான்சில் மக்கள் ஏன் வீதிகளில் இறங்குகிறார்கள் என்று அவர் கருதியதை பல்கலைக்கழக உணவுவிடுதி சேவகர் ஜோன் WSWS க்குத் தெரிவித்தார். “புரட்சி என்பது ஒரு அபிவிருத்தியாகும் ஏனென்றால் மக்களால் இதற்கு மேல் எதையும் தாங்கிக் கொண்டிருக்க முடியாதுள்ளது. இந்த அமைப்புமுறை செயல்பட்டு வரும் விதத்தால் மக்கள் சோர்வடைந்து விட்டார்கள். அவர்கள், மிகவும் சௌகரியமாக இருக்கும் அரசியல்வாதிகளின் மூளைகளுக்குச் சவால் விடுக்கிறார்கள். ஒரு சிறிய சதவீதத்தினரே ஆதாயமடைகிறார்கள், அங்கே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பிளவு அதிகரித்து வருகிறது.

“இதை நாம் ஜனநாயகம் என்கிறோம், ஆனால் மேற்கில் நீங்கள் ஜனநாயகத்தைப் பார்க்கையில் அங்கே இடைவெளிகள் உள்ளன. [பிரான்சில்] அவர்கள் வரிகளை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் மக்களிடமும் ஆலோசிக்கப்படுவதில்லை. விடயங்கள் விரைவாக மாறி வருகின்றன. ஐரோப்பாவில் அங்கே ஒரு பொலிஸ் அரசு ஏற்படக்கூடும்.”

மைக்கெல், ஷெஃப்பீல்டின் இரயில்வேயில் துப்புரவு பணியாளராக உள்ளார். அவர் கூறினார், “மஞ்சள் சீருடையாளர்களும் மற்றவர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கி இருப்பதை நான் தொலைக்காட்சியில் கண்டேன். மக்ரோன் ஒவ்வொன்றையும் தனியார்மயப்படுத்த முயன்று வருகிறார். அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இல்லை. மக்ரோன் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே, ஒவ்வொருவரும் போராடுகிறார்கள் ஏனென்றால் அவர் பணக்கார வர்க்கத்திற்காக வேலை செய்கிறார். அவர் உழைப்பவர்களுக்காக இல்லை, உழைப்பவர்களோ ஏழைகளாக வாழ்கிறார்கள்.

“நிறம் அல்லது பாலினம் என்னவாக இருந்தாலும், தொழிலாள வர்க்கம் ஒன்று தான். அவர்கள் தங்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியுள்ளது. அவர்களின் மூத்த பாட்டனார்கள் அத்தகைய உரிமைகளுக்காக போராடினார்கள், இப்போது மக்ரோன் அவை அனைத்தையும் துடைத்தொழிக்க வந்துள்ளார். இது நியாயமல்ல. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அது அவர்களுக்குக் கிடைக்கும் வரையில் அவர்கள் தொடர வேண்டும்,” என்றார்.

தேசிய மருத்துவச் சேவையின் சேவைகளில் இருந்தும், உள்ளாட்சி அரசாங்கங்கள் மற்றும் கல்வித்துறையின் தனியார்மயமாக்கல் மற்றும் வேலைகள் வெளிநாடுகளுக்கு வெளியேற்றப்பட்டதாலும் ஆதாயமடைந்துள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனமான Capita நிறுவனத்தில் டோம் ஓய்வூதியதாரர்களுக்கான நிர்வாகியாக பணியாற்றுகிறார். அவர் கூறினார், “பிரான்சில் சமூக மனக்குறைகளுக்கும் மற்றும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கும் நான் ஆதரவாளன். மக்ரோன் பணக்காரர்களின் ஜனாதிபதி என்பதில் நான் உடன்படுகிறேன். அவர் மற்றொரு டோனி பிளேயர் போன்றவர்.

“மஞ்சள் சீருடையாளர்கள் குறித்து நான் கட்டுரைகளை வாசித்தேன், ஆனால் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் வன்முறை மீது ஒரு சுயாதீனமான முன்னோக்கு உங்களுக்குக் கிடைக்காது. அது ஆளும் உயரடுக்கின் முன்னோக்கினால் மூடிமறைக்கப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன். மாணவர்களும் சாதாரண மக்களும் எதை கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களால் பார்க்க முடியாது.

“2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் இருந்து ஒவ்வொரு இடத்திலும் சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்ததுடன் சேர்ந்து, அங்கே குறிப்பாக ஐரோப்பா எங்கிலும் சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.”

சர்வதேச அளவில் அதிவலதுசாரிகள் எழுச்சியடைவது குறித்து அவர் கூறினார், “இது முதலாளித்துவ ஆரோக்கியத்தின் ஓர் அளவீடாக நான் பார்க்கிறேன். இது ஐரோப்பா எங்கிலும் நடந்து வருகிறது, இங்கே இங்கிலாந்திலும் நடந்து வருகிறது. இது என்ன சாமானிய மக்களுக்காகவா செயல்படுகிறது?”

பிராட்ஃபோர்டில் WSWS செய்தியாளர்கள் அப்துல் உடன் பேசினார்கள், இவர் கென்யாவிலிருந்து வந்து சமையலாளராக பணியாற்றுகிறார். “இந்த போராட்டங்கள் நல்லதென நான் நினைக்கிறேன். இது எரிபொருள் சம்பந்தமானது, தொழிலாள வர்க்கம் வாழ்க்கை வாழ்வதற்காக வேலை செய்தாக வேண்டும். நான் லீட்ஸ் இல் வேலை செய்கிறேன். எனக்கு ஒரு மணி நேரத்திற்கு 7.20 பவுண்டு கிடைக்கிறது. அதில் நான் 2 பவுண்டை பயண எரிபொருளுக்காக செலவிட வேண்டுமானால், அதன் அர்த்தம், என்னால் வாழ முடியாது. அதன் அர்த்தம், நான் வீதியில் படுத்துறங்க வேண்டியிருக்கும்.

“எனது உறவினர் பெல்ஜியத்தில் வேலை செய்கிறார். அங்கேயும் எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது உழைக்கும் மக்களைப் பாதிக்கிறது. பிரான்சில், பெல்ஜியத்தில், நெதர்லாந்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இங்கேயும் நடக்கும். பிரிட்டனில் நிலைமை நல்ல நிலையில் இல்லை.”

அவர் நிறைவாக கூறினார், “நான் செல்வதற்கு முன்னால் கூறுவது—நான் சோசலிசத்தை விரும்புகிறேன்.”