ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mobilize the working class against Macron!

மக்ரோனுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!

Alex Lantier
5 December 2018

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக பல வார கால “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரெஞ்சு அரசாங்கமானது தொழிலாளர்களைக் குறிவைத்தான அதன் எரிபொருள் வரியேற்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது, “வரிவிதிப்பு மற்றும் பொதுச் செலவினம் குறித்த ஒரு விவாதத்தை” நடத்துவதற்கும் அது வாக்குறுதியளித்தது.

அரசாங்கம் பொதுமக்களின் கஷ்டங்களுக்கு   கவனம் செலுத்துகின்றது என்ற மக்ரோன் மற்றும் பிரதமர் எட்வார்ட் பிலிப்பின் கூற்றுக்கள் உதவாக்கரவானவையாகும். பிரெஞ்சு மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்கு ஏற்ப பிரெஞ்சு சமூகத்தை மறுகட்டுமானம் செய்ய உறுதிபூண்டிருக்கும் மக்ரோன், தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் பாதையில் இருக்கிறார்.

மாறாக, அவரது அரசாங்கத்தின் தந்திரோபாயப் பின்வாங்கலானது இராணுவ மற்றும் போலிஸ் கணிப்பீடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. நிதிப் பிரபுத்துவத்திற்கும் முதலாளித்துவச் சுரண்டலுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் கோபமானது அரசு-ஆதரவுடைய தொழிற்சங்கப் பாதைகளுக்கு முற்றிலும் வெளியில் வெடித்துக் கொண்டிருப்பதில் அது திகைப்புற்றுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை பாரிய அளவில் கைது செய்தமையும், கண்ணீர் புகை தாக்குதல்களும், அடிஉதைகளும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தி விட முடியவில்லை.

மறுஒழுங்கமைத்தலுக்கும், தேவைப்பட்டால் ஒரு அவசரகால நிலையை மீண்டும் திணிப்பதன் மூலமாகவும் ஏனைய போலிஸ்-அரசு நடவடிக்கைகளின் மூலமாகவும் கூட தொழிலாளர்களது சமூக உரிமைகள் மீதான தாக்குதலின் ஒரு அடுத்த அலையை தயாரிப்பு செய்வதற்கும் காலஅவகாசம் பெறுவதற்காக மக்ரோன் அரசாங்கம் முனைந்து கொண்டிருக்கிறது.

ஆளும் உயரடுக்கின் ஆரம்பகட்ட குழப்பம் தொழிலாளர்களின் வெற்றியை உறுதிசெய்து விடுவதில்லை என்பதையே நீண்ட வரலாற்று அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. சென்ற சனிக்கிழமையன்று சாம்ப்ஸ் எலிஸே வீதி மாடிகளில் குறிபார்த்து சுடும் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை குறிவைத்தபடி போலிஸால் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, அத்துடன் சென்ற மாதத்தில் மக்ரோன் நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியான பிலிப் பெத்தானை ஒரு போர் நாயகர் என்று பாராட்டியது ஆகிய பல எச்சரிக்கைகள் இருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்துச் செல்வதைக் கொண்டு மிரட்சியடைந்துள்ள முதலாளித்துவ வர்க்கம் தாட்சண்யமற்ற நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

மக்ரோன் தாக்குதல்களின் ஒரு புதிய சுற்றுக்குத் தயாரிப்பு செய்கின்ற வேளையில், தொழிலாளர்களும் அவர்களது சொந்த தயாரிப்புகளைச் செய்தாக வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள், அத்துடன் மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட ஒழுங்கமைந்த தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துச் செல்லும் பிரிவுகள் ஆர்ப்பாட்டங்களில் ஏற்கனவே இணைந்து வருகின்றன.

போராட்டத்தை பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த பிரிவுகளுக்கு விரிவுபடுத்துவதே இன்றியமையாத பிரச்சினையாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) தொழிலாள வர்க்கத்தில் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க அழைப்பு விடுக்கிறது.

தொழிலாளர்கள் தமது சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடத்தும் போராட்டத்தில், பல தசாப்தங்களாக அவர்களது ஒவ்வொரு முயற்சியையும் காட்டிக் கொடுத்து வந்திருக்கும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டவையாக இந்த குழுக்கள் இருந்தாக வேண்டும். தொழிலாளர்கள் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு வழி பெருநிறுவன, அரசாங்க-ஆதரவு தொழிற்சங்கங்களில் இருந்து அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் சுயாதீனப்பட்ட புதிய போராட்ட அமைப்புகள் மட்டுமேயாகும்.

இந்தக் குழுக்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது வெவ்வேறு பிரிவுகளை ஒன்றாகக் கொண்டுவந்து, போராட்டங்களைத் தனிமைப்படுத்தி கலையச் செய்வதற்கு செய்யப்படுகின்ற உத்தியோகபூர்வ முயற்சிகளை எதிர்த்து நிற்கும், அத்துடன் மக்ரோனுக்கு எதிரான இயக்கத்தின் முக்கியமான  கடமைகளுக்கு கவனம்செலுத்தும். கங்காரு நீதிமன்றங்களால் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டக்காரர்களையும் தொழிலாள வர்க்கப் பகுதிகளையும் போலிஸ் கொடுமையில் இருந்து பாதுகாப்பது, அத்துடன் மக்ரோனின் சிக்கன நடவடிக்கைத் திட்டநிரல் மற்றும் கட்டாய இராணுவச் சேர்ப்பின் மீள்வருகை ஆகியவற்றுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை இந்தக் கடமைகளில் இடம்பெற்றிருக்கும்.

“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் பெல்ஜியம், பல்கேரியா மற்றும் நெதர்லாந்துக்கு பரவுகின்ற நேரத்தில், இத்தகைய குழுக்கள், பிரான்சில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் ஆகிய அவர்களது நெருங்கிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை எதிர்நோக்கவும் ஒழுங்கமைக்கவும் அனுமதிக்கும். பிரான்சில் நடந்து வரும் அபிவிருத்திகளை முன்தள்ளிக் கொண்டிருப்பவை அடிப்படையாக தேசிய நிலைமைகள் அல்ல, மாறாக சர்வதேச நிலைமைகள் ஆகும்; இவை ஒவ்வொரு புள்ளியிலும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கான அவசியத்தை மேலுயர்த்திக் கொண்டிருக்கின்றன.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஊடகங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அவர்களது குட்டி-முதலாளித்துவ அரசியல் கூட்டாளிகள் ஆகிய அனைத்தும் ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கங்களது தளைகளுக்குள் கட்டுப்படுத்தி வைத்து விடுவதற்கும், அதன்மூலமாக அவற்றை முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்வதற்குமாய் முனைந்து கொண்டிருக்கின்றன.

Le Monde அதன் தலையங்கத்தில், மக்ரோனின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஒரு “திருப்புமுனை”யின் அபாயம் இருப்பதாக எச்சரித்ததோடு, “இதுமாதிரியான சமூக மோதல்களை கட்டுப்படுத்துவதற்கு இன்றியமையாதவையான” தொழிற்சங்கங்கங்களை பலவீனப்படுத்துவதாக கூறி அவரை விமர்சித்தது. பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) தொழிற்சங்கம் “பேச்சுவார்த்தைகளை திறப்பதற்காக”வும், “ஒரு அத்தியாவசிய சுற்றுச்சூழல் உருமாற்றம்” என அது பாராட்டிய வரிகளைப் பராமரிப்பதற்காகவும் பிலிப்பை பாராட்டியது.

“இடது” என கூறிக்கொள்ளும் உத்தியோகபூர்வ கட்சிகள், மக்ரோன் அரசாங்கத்தைக் கீழிறக்க தொழிலாள வர்க்கம் நடத்துகின்ற ஒரு போராட்டத்தை நிராகரிப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன. ஜோன் லூக் மெலோன்சோன் “புதிய தேர்தலுக்கு” -மக்ரோனின் பிரதமராக சேவை செய்ய தான் முன்வந்ததை அடைகின்ற நம்பிக்கையில் என்பது கண்கூடு- அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கிறார்.

பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) Révolution permanente வலைத் தளம், “மஞ்சள் சீருடை” போராட்டங்கள் ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) சங்கத்துடன் ஒன்றுபடுவதற்கு அழைப்புவிடுக்கிறது. அதன் தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரிக்க மறுத்ததோடு, அவர்களை மறைமுகமாக நவ-பாசிஸ்டுகளாக குறிப்பிட்டார்.

PES க்கு வெளியே, இடது என்று கூறிக்கொள்ளும் எந்தவொரு அரசியல் போக்கும் கூட மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தை விரிவு செய்வதற்காக போராடவில்லை. மாறாக, கட்டுப்படுத்தும் இடத்தில் தொழிற்சங்கங்களை மறுபடியும் அமரவைக்க முனைவதன் மூலமாக, அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமான விதத்திலான ஒரு உடன்பாட்டை பொறியமைவு செய்வதற்காகவே அவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

போராட்டத்தை தணிப்பதற்கான இத்தகைய அத்தனை முயற்சிகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். மாறாக, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமான மிகப் பரந்த அழைப்புவிடுவதன் மூலமாகவும், அத்துடன் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா முழுமையிலும் ஒவ்வொரு வேலையிடத்திலும், பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்திலும் போராட்டத்தைக் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலமாகவும் இந்தப் போராட்டம் விரிவு செய்யப்பட்டாக வேண்டும்.

மக்ரோனுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை நடத்தவிருக்கும் அமைப்புகளது அபிவிருத்தியானது ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு அரசியல் தலைமையை அபிவிருத்தி செய்வதுடன் இணைக்கப்பட வேண்டும். தவிர்க்கவியலாத வண்ணம், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் இப்போது அபிவிருத்தி கண்டுவரும் போராட்டமானது வெறும் ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு தனி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமல்ல, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான போராட்டமாகும்.

இந்த முன்னோக்கு வேலையிடங்களிலும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் சமூக ஊடகங்களிலும் விரிவான முறையில் விவாதிக்கப்படுவதற்கு PES அழைப்பு விடுக்கிறது. இந்தப் போராட்டத்தில் பங்குபெற விரும்புவோர் PES ஐ தொடர்பு கொள்வதற்கும் அதில் இணைவதற்கும் அது ஊக்கப்படுத்துகிறது.