ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German daily accuses Macron of surrender to “yellow mob”

மக்ரோன் “மஞ்சள் கும்பலிடம்” சரண் அடைவதாக ஜேர்மன் தினசரி குற்றம்சாட்டுகிறது

By Peter Schwarz
13 December 2018

சமூக சலுகைகள் அளிப்பதைக் கொண்டு ”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்ட இயக்கத்தை தணிப்பதற்கு பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முயற்சி செய்வதற்கு ஜேர்மன் வணிக ஊடகங்கள் கண்ணியமற்ற விதத்தில் எதிர்வினையாற்றுகின்றன. திங்களன்று மாலையில் மக்ரோனால் ஒரு தொலைக்காட்சி உரையில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் மிக சொற்பமானவை என்பதுடன் இந்த ஆர்ப்பாட்டங்கள் எதற்கு எதிராக செலுத்தப்பட்டிருக்கின்றனவோ அந்த சமூக சமத்துவமிமையை அகற்றுவதற்கு எதுவொன்றும் செய்யப் போவதில்லை என்ற நிலையிலும், ஊடகங்கள் அவரை “கும்பலிடம்” சரண் அடைவதாகவும் அதன்மூலம் யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன.

“மஞ்சள் கும்பலுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி அளிக்கும் பதிலிறுப்பு, பேர்லினில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தாக வேண்டும்: இமானுவல் மக்ரோன் யூரோவையும் ஐரோப்பாவையும் மீட்பதில் ஒரு பங்காளியாக அல்ல, மாறாக ஒரு ஆபத்தான காரணியாக இருக்கிறார்” என்று Die Welt தினசரியில் Olaf Gersemann கருத்திடுகிறார்.

பொருளாதாரம், நிதி, மற்றும் Real Estate இன் ஆசிரியரான இவருக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. “குறைந்தபட்ச ஊதியத்திலான அதிகரிப்புகள் மிகக் குறைவாக இருப்பதை அல்லது சாத்தியமானால் அதிகரிப்பே இல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு” பதிலாக, இமானுவல் மக்ரோன் தனது ஆயுதங்களைக் கீழே போடுகிறார் என்று அவர் கொதிக்கிறார். பல வாரங்களுக்கு “மஞ்சள் மேலாடை அணிந்தவர்கள் பிரான்சில் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்”. ஆனால், “அளவுக்கு மீறுவதை எதிர்த்து” ”தாக்குதலில் இறங்குவதற்கு” பதிலாக மக்ரோன் சந்தர்ப்பத்தை நழுவ விட்டதோடு, “சிறிய கார்களை எரித்துக் கொண்டிருந்த கும்பலின் முன்னால் மண்டியிட்டதன் மூலம்”, நடந்து முடிந்த கலகங்களை அங்கீகரித்து விட்டிருந்தார்.

“மக்ரோன் பிரான்சின் ஹெகார்ட் ஷ்ரோடர் ஆக இருப்பார்: தேவைப்பட்டால், பொருளாதாரக் கொள்கையின் விடயத்தில் சரியான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக தனது பதவியையும் பணயம் வைக்கத் தயங்க மாட்டார்” என்றே எப்போதும் நம்பப்பட்டு வந்திருக்கிறது என்று Gersemann தொடர்கிறார். (சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜேர்மன் சான்சலரான ஹெகார்ட் ஷ்ரோடர் கடுமையான எதிர்ப்புக்கு எதிராக அவரது சமூக-விரோத 2010 திட்டநிரலை முன் தள்ளியதற்குப் பின்னர் அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்பே 2005 இல் தனது பதவியை இழந்தார்.) ஆனால் இப்போது பிரான்ஸ் “மூன்றாம் வகுப்பிற்கான பாதையில் இத்தாலியின் பின்னால் தடுமாறி நிற்க” அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஜேர்மனியை பொறுத்தவரை, இது பொருளாதாரரீதியாகவும் சரி அரசியல்ரீதியாகவும் சரி, ஒரு மோசமான செய்தியாகும் என்று Die Welt புகாரிடுகிறது. பாரிஸ் பேர்லினின் பக்கம் இருக்கும் வரை, நாணய ஒன்றியம் பணஇடமாற்ற ஒன்றியமாக மாறுவது தவிர்க்கப்பட முடியும். மாறாக பாரிஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினின் பக்கத்தை எடுக்குமானால், பின் இந்தக் கட்டுமானம் கவிழ்கிறது. ஆகவே தான் பேர்லின் இப்போது “நாணய ஒன்றியத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும், ஜேர்மனி ஒரு இத்தாலியை மட்டுமில்லாமல் இரண்டை கையாள வேண்டி வந்தால்” என்ன செய்வது என்ற பிரச்சினையை பேசியாக வேண்டும்.”

Handelsblatt இன் முன்னாள் ஆசிரியரான Gabor Steingart ம் இதேபோன்ற பாணியில் வாதிடுகிறார். அவரது காலை உரையில், அவர் மக்ரோனின் “தாராளம்” வருடத்திற்கு 10 பில்லியன் யூரோக்கள் செலவு வைக்கக் கூடியது என்றும், இந்த செலவு “விரைவில் அல்லது கொஞ்சம் தள்ளி ECBக்கு அனுப்பப்படும்... பிராங்பேர்ட்டில் மரியோ திராகி பண அச்சடிப்பைத் தொடங்கியாக வேண்டும்: வாழ்க பற்றாக்குறை !  (Vive le déficit!)” என்றும் குற்றம்சாட்டுகிறார்.

இந்தக் கருத்துக்களின் பின்னால் சர்வாதிகாரத்தின் மொழி அமைந்திருக்கிறது.

எரிபொருள் வரியேற்றத்தால் எரியூட்டப்பட்ட “மஞ்சள் சீருடைகாரர்களின்” ஆர்ப்பாட்டமானது, சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு பரந்த வெகுஜன இயக்கமாக, பிரெஞ்சு மக்களின் மிகப் பெரும்பான்மையினரால் ஆதரவளிக்கப்படுகின்ற ஒரு இயக்கமாக துரிதமாக அபிவிருத்தி கண்டிருக்கிறது. பல தசாப்த கால சமூக வெட்டுக்கள் மற்றும் வருவாயும் செல்வமும் உச்சிக்கு மறுவிநியோகம் செய்யப்பட்டமை ஆகியவற்றுக்குப் பின்னர், இது, தொழிலாள வர்க்கத்திற்குள்ளான கோபத்தின் மற்றும் ஒரு சிறு சிறுபான்மையினர் ஆடம்பரமாக வாழ்கின்ற அதேவேளையில் மாத இறுதியில் பற்றாக்குறையை சமாளிக்கத் திணறுகின்ற மக்களின் மிகப் பரந்த அடுக்குகளுக்குள்ளான கோபத்தின் ஒரு வெளிப்பாடாக ஆகியிருக்கிறது.

முன்னாள் முதலீட்டு வங்கியாளரான இம்மானுவல் மக்ரோன், இந்த நிதிப் பிரபுத்துவத்தின் உருவடிவமாய் இருக்கிறார். அவர் சமூக நல உதவிகளை வெட்டும் தாட்சண்யமின்மையை, அவரது தனிமனித ஆணவம் மட்டுமே மிஞ்ச முடியும். ஆரம்பம் முதலே, அவரது அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை மூர்க்கமாக ஒடுக்கியது. சென்ற வார இறுதியில் மட்டும், பெருமளவு ஆயுதம் தரித்த கிட்டத்தட்ட 90,000 போலிசார் நிலைநிறுத்தப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களின் பெரும் கூட்டங்களின் மீது எச்சரிக்கை தராமல் அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீர் பீரங்கிகளையும் கொண்டு தாக்கினர். உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 1,723 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மிருகத்தனமான வன்முறையைக் கொண்டு இயக்கத்தை மிரட்ட முடியாது என்று தெரிந்த பின்னரே, மக்ரோன் தந்திரோபாய பின்வாங்கலுக்கு முடிவுசெய்தார். அவரது வாக்குறுதிகள், இயக்கத்தை முடக்குவதற்கும், அதனை பிளவுபடுத்துவதற்கும், போலிசை மேலும் ஆயுதபாணியாக்குவதற்கும் அத்துடன் வெகுஜனப் போராட்டங்களால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மற்ற அத்தனை அரசியல்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நெருக்கம் கூட்டுவதற்கும் கால அவகாசத்தைப் பெறுவதற்கான ஒரு வெளிப்பட்ட முயற்சியாகவே இருந்தன.

இருந்தும் ஜேர்மன் வணிக ஊடகங்கள் மக்ரோன் சரணடைந்து விட்டதாக குற்றம் சாட்டுகின்றன என்றால், யூரோவின் —வேறெவரையும் விட ஜேர்மன் மூலதனம் தான் இதில் அதிக ஆதாயமடைகிறது, அத்துடன் ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் தனது சிக்கன நடவடிக்கைக் கொள்கையை உத்தரவிடுவதற்கும் இதனைப் பயன்படுத்துகிறது— ஸ்திரத்தன்மை குறித்த கவலையினால் அல்ல. பிரதானமாக பிரான்சிலான ஆர்ப்பாட்டங்கள் ஜேர்மனிக்கும் பரவிவிடும் என்ற அச்சத்தாலேயே அது அவ்வாறு செய்கிறது.

மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்த சமூக முரண்பாடுகளுக்கு எதிராக கலகம் செய்கிறார்களோ, அவை இதே வடிவத்தில் ஜேர்மனி உள்ளிட உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறது. தேக்கமடையும் ஊதியங்கள், அதிகரிக்கும் இலாபங்கள், மற்றும் 2010 திட்டநிரலின் பின்விளைவுகள் ஆகியவை ஜேர்மனியை ஐரோப்பாவின் மிகவும் சமத்துவம்குறைந்த நாடாக ஆக்கியிருக்கின்றன. மேற்பரப்பின் கீழ் அது கொதித்துக் கொண்டிருக்கிறது. குறைந்த ஊதியங்கள், பெருகும் அழுத்தம் மற்றும் ஏற்கவியலாத வேலை நிலைமைகள் ஆகியவை மருத்துவமனைகள், அஞ்சல் சேவை, சில்லறை வணிகம் மற்றும் இன்ன பிற துறைகளில் வேலை செய்வதை சகிக்கமுடியாததாக செய்திருக்கின்றன. இந்த திங்கட்கிழமையன்று தான் ஒரு பாரிய வேலைநிறுத்தம் ஜேர்மன் இரயில்வேயை பல மணி நேரங்களுக்கு முடக்கி விட்டது. Bayer, Ford, Opel, VW மற்றும் பல பிற பெரும் நிறுவனங்களில், நூறாயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.

அதேநேரத்தில், ஆளும் வர்க்கமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடிக்கும் அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்களுக்கும் வல்லரசு அரசியல் மற்றும் இராணுவவாதத்தைக்கொண்டு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விஞ்ஞானியான ஹேர்ஃபிரட் முங்க்லர் ஜேர்மனி ஐரோப்பாவின் ஒரே பெரும்வல்லரசாக ஆக வேண்டும் என்று ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். “'பணமளிப்பவராக’ இருப்பவர் மட்டுமே காலப்போக்கில் ‘வேலைவாங்குபவரின்’ கடினமான பாத்திரத்தை ஏற்க விருப்பமாக இருப்பார், என்று “மையத்தில் அதிகாரம்” என்ற தனது புத்தகத்தில் அவர் எழுதினார். இது இப்போது ஆளும் உயரடுக்கினரிடையே ஏகமனதான கருத்தாக இருக்கிறது.

வல்லரசு அரசியல், இராணுவவாதம் மற்றும் செல்வந்தர்களுக்கு சாதகமான செல்வ மறுவிநியோகம் ஆகியவை ஜனநாயகத்துடன் இணக்கமற்றவையாகும். Die Welt இன் கருத்து இதனை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது. ஒரு ஜனாதிபதி அல்லது சான்சலர் பெரும்பான்மை மக்களின் ஜனநாயக விருப்பத்திற்குத் தலைவணங்கக் கூடாது, மாறாக அந்த பெரும்பான்மையை எதிர்க்க வேண்டும் என்றும், அத்துடன் தேவைப்பட்டால், “பொருளாதாரக் கொள்கையின் விடயத்தில் சரியான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக” தனது பதவியையும் பணயமாக்க வேண்டும் என்றும் அது கோருகிறது. “பொருளாதாரக் கொள்கையின் விடயத்தில் சரியான நடவடிக்கை” எது என்பது வங்கிகளின் பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்படுகிறது; அது பங்குச் சந்தையால் தீர்மானிக்கப்படுகிறதே அன்றி சமூகத்தின் தேவைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை.

ஒரு சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகள் ஏற்கனவே எத்தனை தூரத்திற்கு முன்னேறியுள்ளன என்பதை புதிய சர்வாதிபத்திய போலிஸ் சட்டங்களில் இருந்தும், ஒரு மிகப்பெரும் கண்காணிப்பு எந்திரத்தின் விரிவாக்கத்தில் இருந்தும், இரகசிய சேவைக்கும் அதி-வலது தீவிரவாதிகளுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகளில் இருந்தும், அத்துடன் AfDயுடன் ஊடகங்களும் நாடாளுமன்றத்தில் உள்ள மற்ற அத்தனை கட்சிகளும் எப்படி குலாவுகின்றன என்பதில் இருந்தும் கண்டுகொள்ள முடியும். இந்த அதி-வலது கட்சி வெறும் 12.6 சதவீத வாக்குகளையே பெற்றிருந்த போதிலும், அதுவே இப்போது அரசாங்கத்தின் அகதிக் கொள்கைக்கும் இன்னும் பல துறைகளுக்கும் தொனி உருவாக்கித் தருவதாக உள்ளது.

செல்வந்தர்களது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டமானது தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரளவுக்கு ”இடது” கட்சிகளுக்கு —இவை அரசு மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்வதோடு கீழிருந்தான எந்த அச்சுறுத்தலில் இருந்தும் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கின்றன— வெளியிலும் அவற்றில் இருந்து சுயாதீனப்பட்டும் மட்டுமே நடத்தப்பட முடியும் என்பதையே பிரான்சிலான ஆர்ப்பாட்டங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

இந்தப் போராட்டம் வெற்றிக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டுமானால் அதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியமாகும். தொழிலாள வர்க்கம் தன்னை யாரும் பிளவுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது, சர்வதேசரீதியாக அது ஐக்கியப்பட வேண்டும். போராட்டங்களை ஒழுங்கமைக்க அது தன் சொந்த சுயாதீனமான அமைப்புகளை, நடவடிக்கை கமிட்டிகளை கட்டியெழுப்ப வேண்டும். நிதிப் பிரபுத்துவத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் பொருளாதாரத்தை உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கும் ஒரு தொழிலாளர்’ அரசாங்கத்திற்காகவும் ஒரு ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காகவும் அது போராட வேண்டும்.

இதுவே சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பிரிவுகளது வேலைத்திட்டமாகும். WSWS வாசகர்கள் எங்களைத் தொடர்பு கொள்வதற்கும், இந்த வேலைத்திட்டத்தை விவாதிப்பதற்கும், SGP ஐ கட்டியெழுப்புவதில் பங்கேற்பதற்கும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.