ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France's “yellow vest” protests expose Jean-Luc Mélenchon's pro-capitalist populism

பிரான்சின் “மஞ்சள் சீருடை” எதிர்ப்புக்கள் ஜோன்-லூக் மெலோன்சோனின் முதலாளித்துவ ஆதரவு ஜனரஞ்சகவாதத்தை அம்பலப்படுத்துகின்றன

By Alex Lantier
6 December 2018

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிராக வெடித்த பரந்த எதிர்ப்புக்கள், ஐரோப்பிய “இடது”களாக பலதசாப்தங்களாக கடந்து சென்ற ஊழல் மிக்க, மார்க்சிச விரோத குட்டி முதலாளித்துவவாதிகளை விரைவாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

எரிபொருள் வரி மற்றும் ஓய்வூதிய வெட்டு இவற்றுக்கெதிராக, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள் இவற்றின் கட்டுப்பாட்டுக்கு வெளியே, தொழிலாளர்கள், பணிஓய்வுபெற்றோர், மற்றும் சிறு வணிகர்களினால் நடத்தப்பட்ட எதிர்ப்பானது முகநூல் வழி ஒழுங்கமைக்கப்பட்டது. இந்த சக்திகள் “மஞ்சள் சீருடை”யின் எதிர்ப்புக்களிலிருந்து ஒதுங்கி இருந்தது. அதனை அவர்கள் எதிர்பார்க்கவுமில்லை விரும்பவுமில்லை. “மஞ்சள் சீருடைக்கு அவர்களின் எதிர்ப்பானது, ஸ்ராலினிச தொழிற்சங்க தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் “மஞ்சள் சீருடை” உடன் சேர்ந்து நடையிட மறுத்ததில் எடுத்துக்காட்டப்பட்டது. அவர் அவர்களை நவ- பாசிஸ்டுகள் என்று அவதூறு செய்ததன் மூலம் நியாயப்படுத்திக் கொண்டார்.

ஆகையால், அடிபணியா பிரான்ஸ் (LFI) தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் தான் “மஞ்சள் சீருடை” எதிர்ப்பில் கலந்துகொள்வேன் என்று கூறியபொழுது, ஒரு எதிர்ப்பாளர், டுவிட்டரில் பதில் கூறினார்: “நீங்கள் இவ்வியக்கத்தைச் சுரண்ட முயற்சிக்கிறீர்கள் மற்றும் அதைச் சாகடிக்கப்போகிறீர்கள், திரும்பிப் போங்கள் உங்களது சகா மக்ரோனுடன் அரட்டை அடியுங்கள்” என்றார். இந்த வார முடிவில் மெலோன்சோன் அவரது வலைப்பதிவில் “மஞ்சள் சீருடை மக்கள் புரட்சி மீது” என்று தலைப்பிடப்பட்ட அவரது டுவிட்டரில், சோசலிசம் இறந்துவிட்டது மற்றும் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியில் தேவையற்றது என்று பறைசாற்றிக் குறித்தார்.

அவர் எழுதினார்: “நான் மகிழ்வாயிருக்கிறேன். தற்போதைய நிகழ்வுகள் எனது கண்ணோட்டத்தில் மக்களின் சகாப்தம்…. என்ற எனது நூலில் தொகுக்கப்பட்ட மக்கள் புரட்சி என்ற தத்துவத்தில் வகுத்த தத்துவார்த்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்துருவாக்கம், இந்த விடயம் மீதான பாரம்பரிய இடது மற்றும் அதி இடதுகளின் கொள்கையோடு முறிக்கிறது. நூலானது ஒரு புதிய செயல்பாட்டளரை, ‘மக்களை’ முன்வைக்கிறது, மற்றும் “வரலாற்று இயக்கத்தில் பாட்டாளி வர்க்கம் மற்றும் சோசலிச இயக்கம் தவிர்க்க முடியாத இணையாக இருக்கும் என்ற மையத்தன்மையுடன் முறிப்பதை” எடுத்துச்செல்கிறது என்று மெலோன்சோன் மேலும் கூறினார்.

மார்க்சிசம் மீதாக ஜனரஞ்சகவாதத்தின் மேலாதிக்கத்தன்மை என்று மெலோன்சோன் தம்பட்டமடிப்பது அபத்தமாகும். அவர் மேலாதிக்க தத்துவத்தை வைத்திருப்பாரேயானால், தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒடுக்கப்படும் பகுதியினர் மத்தியில் பரந்த எதிர்ப்புக்கள் வெடித்ததால் ஏன் ஆச்சரியத்திற்கு உள்ளானார், ஏன் எதிர்ப்பாளர்கள் இவர் பக்கம் திரும்பி அவரை திமிர் பிடித்த பிழைப்புவாதி என்று கூற வேண்டும்?

உண்மையில், “மஞ்சள் சீருடை” எதிர்ப்புக்கள், மெலோன்சோனின் ஜனரஞ்சகவாதத்தை மட்டும் உறுதிப்படுத்த செய்யவில்லை, மாறாக அதனைத் தகர்த்திருக்கிறது. வரி அதிகரிப்புக்கு எதிரான எதிர்ப்புக்கள்  பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரை மக்ரோனுக்கு, சமூக சமத்துவமின்மைக்கு மற்றும் நிதிய பிரபுத்துவத்திற்கு எதிராக வெடிக்கும் வர்க்கச்சினத்தின்பால் திருப்பியிருக்கிறது. வர்க்கம் என்பது என்றையும் விட இன்று அதிகமாகவே விவாதிக்கப்படுகிறது. கொதிக்கும் கோபமானது பிரான்சிலும் உலகிலும் மேலாதிக்கம் செய்கின்ற ஒட்டுமொத்த சமூக சமத்துவமின்மையின் மீது, முதலாளித்துவ சுரண்டல் மீது மற்றும் ஆளும் வர்க்கத்தின் திமிர்மீது குவிந்து வருகிறது.

ஆயினும் மெலோன்சோன் போன்ற முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதிகள் தசாப்தகாலங்களாக மேலாதிக்கம் செய்து கடந்துபோன “இடது” அரசியல், மார்க்சிசத்தையும் ட்ரொட்ஸ்கிசத்தையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, அனைத்து ஸ்தாபகமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கும் தங்களின் குரோதத்தைக் குறிப்பிடும் பொருட்டு, “மஞ்சள் சீருடை”யை “அரசியல் அற்றதாய்” மற்றும் சலுகைமிக்கதற்கு பதிலாக, “மக்கள்” இயக்கம் என கூறிக்கொள்ள முடிந்தது. மெலோன்சோனின் கருத்துக்கள் அவர் மீது தனிப்பட்ட வகையில் முறையான வகையில் நம்பிக்கையில்லாத எதிர்ப்பாளர்கள் மத்தியில் இவ்வாறு தொடர்ந்து திட்டவட்டமான செல்வாக்கைச் செலுத்தியது.

தொழிலாள வர்க்கத்தால் ஆன சர்வதேச சோசலிசப் புரட்சிக்கு ஒரு மாற்றாக ஒரு தேசிய, மக்களின் புரட்சிக்கான மெலோன்சோனின் முன்மொழிவானது, எவ்வாறாயினும், முதலாளித்துவ நிதிய பிரபுத்துவத்திற்கெதிரான போராட்டத்தின் வளர்ச்சிக்கு ஒரு பிற்போக்குத் தடுப்பு ஆகும். “மஞ்சள் சீருடை” எதிர்ப்புக்கள் ஐரோப்பா முழுவதும் பரவினாலும் பிரான்சில் தொழிலாளர்களில் அதிகரித்துவரும் பகுதியினர் “மஞ்சள் சீருடைக்கு” ஆதரவாக வேலைநிறுத்தம் செய்கையிலும் கூட, அது பிரெஞ்சுத் தொழிலாளர்களை சர்வதேச தொழிலாளர்களிடம் இருந்தும் பிரான்சின் உள்ளே உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் இருந்தும் பிரிக்கிறது.

அதன் குறிக்கோள் தோன்றி வரும் இயக்கத்தை முதலாளித்துவத்தோடும் பிரெஞ்சு அரசோடும் கட்டிப் போடுவதாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பகுதியான Parti de l'égalité socialiste ஆனது, தொழிலாள வர்க்கத்திற்குள் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது. அத்தகைய அமைப்புக்கள் தொழிற்சங்கங்களிடமிருந்து சுயாதீனமானதாக இருக்க வேண்டும், அதிகரித்த வேலைநிறுத்த நடவடிக்கையை ஒன்றாய் ஈர்க்க முடியும் மற்றும் போலீஸ் கொடுமையிலிருந்தும் நீதியற்ற போலீஸ் தடுப்புக்காவலில் இருந்தும் எதிர்ப்பாளர்களையும் தொழிலாள வர்க்க அண்டை அயலவரையும் பாதுகாக்க முடியும். இந்தக் குழுக்கள் அரசியல் அதிகாரம் தொழிலாளர்களுக்கு மாற்றுப்படுவதற்கான ஒரு சர்வதேச இயக்கத்தின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை வடிவமைக்க முடியும்.

மெலோன்சோனின் வார்த்தைஜால வித்தையானது, புரட்சியிலிருந்து நிதிய பிரபுத்துவம், போலீஸ் மற்றும் தற்போதைய முதலாளித்துவ அரசைக் காப்பதற்கு நோக்கங்கொண்டது. அவர் அறிவித்தார், “எனது படைப்பு அத்தகைய (ஜனரஞ்சகவாத) இயக்கத்தின் தாக்குதலின் கீழ் எப்படி அரசு அதிகாரம் விழும் என்று சொல்லவில்லை. குறிப்பாக, எனது கண்ணோட்டத்தில், விளைவானது அமைதியானதாகவும் ஜனநாயகபூர்வமானதாகவும் இருந்தாக வேண்டும். அதாவது, அனைத்துவகைகளிலும், ஒரு நெருக்கடிக்கான அமைப்பு ரீதியான தீர்மானத்தை காணும் விடயமாகும்.” அவர் தொடர்கிறார், “எமது முதற் கடமை நிலவும் ஜனநாயக வழிமுறைகளைப் பயன்படுத்துவதாகும்… எடுத்துக்காட்டாக, அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒரு விடயத்தை: புதிய தேர்தல்களைக் கோரும் ஒரு கண்டனத் தீர்மானம் ஆகும்.”

தேசிய சட்டசபைக்கு புதிய தேர்தல்களுக்கான இந்தக் கோரிக்கையுடன், அது சொல்லியாக வேண்டியது, மெலோன்சோன் கடந்த ஆண்டு அவர் முன்மொழிந்த மூலோபாயம்: மக்ரோனின் பிரதமர் ஆகுதல் என்பதில் இன்னொரு முயற்சி எடுப்பதாகும். இது மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்களுக்கு —அவர்களின் ஒரு முக்கியமான முழக்கம் “மக்ரோனே இராஜினாமாச் செய்” என இருக்க— முகத்தில் கொடுக்கும் அறையாகும், ஏனெனில் அது மக்ரோனை அதிகாரத்தில் விட்டுவைப்பதாகும்.

சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் கசப்பான அனுபவம் இந்த முன்னோக்கு ஒரு முட்டுச் சந்து என கோடிட்டுக்காட்டுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் ட்ரொட்கிசத்துடனுமான அதன் தேசியவாத முறிவுக்குப் பின்னர் பியர் லம்பேரின் Organisation communiste internationalist (OCI) இலிருந்த, முன்னாள் 1968 இன் மாணவ தீவிரப் போக்கினரான மெலோன்சோன், கிரீசில் சிரிசாவின் மற்றும் ஸ்பெயினில் பொடேமோசின் பிரெஞ்சுக் கூட்டாளியாக விளங்கிய பெரு வணிக சோசலிஸ்ட் கட்சியான (PS) இல் நீண்டகாலத்திற்கு செனெட்டராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.

இக்கட்சிகளின் பதிவுக் குறிப்பு, மெலோன்சோன் முன்தள்ளும் ஜனரஞ்சகவாத முன்னோக்கு தொழிலாளர்களுக்கு ஒரு பொறிக்கிடங்கு ஆகும். நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர், சிரிசா பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அவரது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியற்கு, மத்திய கிழக்கில் போருக்கு உடந்தையாக இருந்தமைக்கு, கிரேக்கத் தடுப்புக்காவல் முகாம்களில் சிக்கிக் கொண்ட அகதிகள் மிருகத்தனமாக களையெடுக்கப்பட்டு திகைப்பூட்டும் நிலையில் இருந்ததற்கு இழிபுகழ் பெற்றார். பொடேமோஸைப் பொறுத்தவரை சிப்ராஸ் கிரீசில் தேசிய மட்டத்தில் அமல்படுத்திய அதே பிற்போக்குக் கொள்கைகளைத்தான் அது ஸ்பெயினில் பிராந்திய அளவில் பின்பற்றுகிறது.

உயரும் வரிகள், குறைந்த வாங்கும் சக்தி மற்றும் ஐரோப்பிய இராணுவத்திற்காக நிதிதிரட்ட வடிவமைக்கப்பட்ட மக்ரோன் வரிகளுக்கு “மஞ்சள் சீருடை” எதிர்ப்பு இருக்கையில், பிரான்சில் அத்தகைய ஒரு அரசாங்கத்தையே முன்மொழிதல் என்பது அந்த இயக்கத்திற்கு மெலோன்சோன் காட்டும் குரோதத்தின் ஒரு தவறிழைக்காத அறிகுறி ஆகும். “மஞ்சள் சீருடையால்” எழுப்பப்படும் பரந்த அளவில் உணரப்பட்டுவரும் கோரிக்கைகளை முன்னெடுக்க தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே வழி அரசு அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு முயல்வதாகும்.

அத்தகைய போராட்டத்திற்கு, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சோசலிச மற்றும் ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது. மெலோன்சோனும் அவரது கூட்டாளிகளதும் பதிவுச் சான்றானது அவர்கள் சோசலிஸ்ட்டுகள் அல்ல, மாறாக மெலோன்சோன் போன்ற பிற்போக்கு ஜனரஞ்சகவாதிகள் தொழிலாளர்களுக்கு குரோதமான ஊழல் செயல்பாட்டாளர்கள் என்று தெளிவுபடுத்துகிறது. நிலவும் சமூகம் மற்றும் அரசியல் ஒழுங்கைக் காப்பதில் ஜனரஞ்சகவாதத்தை முன்னிலைப்படுத்தும் அதேவேளை, அவரது எரிச்சலூட்டும் கட்டுரை “சோசலிசம்” மற்றும் இடது” என்பவற்றுக்கு ஒரு அவப்பெயரை வழங்குவதற்கு பயன்படுத்தும் நோக்கங்கொண்டது.

மாட்டினேசுக்கு சற்றும் குறையாமல் மெலோன்சோனும் “மஞ்சள் சீருடை” எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் நனவுபூர்வமாக குரோதமாக இருக்கிறார். மாற்றீடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த மூலோபாயம் எதிர்ப்பாளர்களுக்கு சாத்தியமான சில சலுகைகளை வழங்கத் தேவையிருக்கும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் அவர் புதிய தேர்தல்களுக்காக வாதிடுகிறார்.

அவர் எழுதுகிறார்: “நெருக்கடிக்கு சாத்தியமான தீர்வுகள் என்ற கேள்வியை ஆய்கையில்”, அவர் மேலும் எழுதுகிறார், “அவற்றிற்கு  மூன்று தீர்வு உள்ளதை ஒருவர் பார்க்கலாம். முதலாவதாக, அங்கு சீரழிந்துபோதல் மற்றும் இயக்கம் கலைந்துசெல்லல் உள்ளது. அது ஆபத்தானது மற்றும் ஏற்கனவே மிக வெளிப்படையானதாக உள்ளது. இரண்டாவதாக, பாராளுமன்றக் கலைப்பும் வாக்களித்தலும். இது ஜனநாயக ரீதியான தர்க்கமாகும். எதிர்ப்பாளர்களும் சரி அல்லது அரசாங்கமும் சரி மற்றும் அதன் பாராளுமன்றப் பெரும்பான்மையும் சரி கைவிட விரும்பாதிருக்கையில், ஜனநாயகம் தீர்மானிக்க வேண்டும். இறுதியாக, மூன்றாவது, அந்த இயக்கத்திடம் விட்டுவிடல். இது மிக எளிதானதாக இருக்கும், ஆதலால் நாட்கள் செல்லச்செல்ல, எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளின் அளவு மிகப் பரந்த அளவினதாக மாறி உள்ளது என்பதை ஒருவர் ஒப்புக்கொண்டாக வேண்டும். எனவே உண்மையில் வாக்களிப்பது சிறந்த தேர்வாக இருக்கும், அல்லது எந்தவிதத்திலும் மிக அமைதியானதாகும்.”

மெலோன்சோனின் LFI கட்சி போலீஸ் சங்கங்களின் பரந்த பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது, அவர்களில் சிலர் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தலையிட இராணுவத்தை இப்போது அழைக்கின்றனர். முடிவுரையாக உரைப்பது: “இவை அனைத்திலிருந்தும் நான் ஒரே ஒரு குறிக்கோளை ஞாபகப்படுத்துவேன்: நெருக்கடியிலிருந்து சிறந்த ஒரு சாத்தியமான வெளியேறும் வழியைக் கண்டறிய எல்லோரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.”

இந்த நெருக்கடியில் மெலோன்சோன் அவருக்கே நிர்ணயித்துக்கொள்ளும் முதன்மைப் பணியானது ஒரு ஆழமான மரண நெருக்கடியின் மத்தியில் இருக்கும் மக்ரோனின் அரசாங்கத்தை மீட்பதும் பாதுகாப்பதும் ஆகும். எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு “ஆணைகளுக்குக் கீழ்ப்படிய பாதுகாப்புப் படைகள் மறுப்பின்” அதன் சாத்தியக்கூறு பற்றி வாசகரை அவர் எச்சரிக்கிறார். அவர் மேலும் கூறுகிறார்: “அத்தகைய வலுவற்றநிலை எங்கிருந்தும் வரவில்லைதான். அதுதான் இப்போது விடயமாகும். பணம் வழங்கப்படாத ஆயிரக் கணக்கான மணிநேர கூடுதல்நேரம் (உழைப்பு), மற்ற பாதுகாப்பு முகவாண்மைகளில் பல இருப்பதுபோல, போலீசில் 100க்கும் மேற்பட்ட தற்கொலைகள், இன்னும் சில நாட்களில் பதட்டமான தொழிற்சங்கத் தேர்தல்கள் என எங்கும் நிலைமை வெடிக்கும் தன்மையானதாக இருக்கிறது.”

எதிர்வரும் சனிக்கிழமை “மஞ்சள் சீருடை” எதிர்ப்புக்கு எதிராக மேலும் மூர்க்கமாக போலீஸ்வேலை செய்ய அழைப்புவிடும் போலீஸ் தொழிற்சங்கத்தின் அழைப்பை எதிரொலிக்கும் விதமாக, “மஞ்சள் சீருடையின் சனிக்கிழமை எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கான போலீஸ் ஏற்பாடுகள் நீண்டகாலப் போக்கில் தாக்குப்பிடிக்கத் தக்கதல்ல” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கூற்றுக்கள் மெலோன்சோன் போன்ற போலி இடது சக்திகளின் பிற்போக்குப் பாத்திரம் மீதான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவினதும் (PES) சோசலிச சமத்துவக் கட்சியினதும் எச்சரிக்கைகளை நிரூபணம் செய்கின்றன. சமூக கோபத்தின் எழுச்சிக்கு எதிராக முதலாளித்துவ அரசைக் காக்கும் இந்தப் பாதுகாவலர்கள் பரந்த வெகுஜனங்களின் நிலைப்பாட்டில், அடையாளபூர்வமாக மட்டுமல்ல, எழுத்து அளவிலும் கூட தடுப்பரண்களின் மறு பக்கத்தில் நிற்கிறார்கள்.