ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan plantation workers launch indefinite strike for 100 percent pay rise

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 100 சதவிகிதம் சம்பள உயர்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்

By our correspondents 
6 December 2018

புதன்கிழமை, இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் நாளாந்த சம்பளத்தை இரட்டிப்பாக்க கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மற்றும் கொழும்பில் உட்பட அனைத்து தேயிலைத் தோட்ட மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றுகின்றனர்.

நவம்பர் 26 அன்று, தொழிலாளர்கள் அவர்களது நீண்டகால கோரிக்கையான 100 சதவிகித சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்தனர். தீவின் தொழிலாள வர்க்கத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவினரான தோட்டத் தொழிலாளர்கள், தற்போது நாளொன்றுக்கு வெறும் 500 ரூபாய்க்கே (2.80 டாலர்) வேலை செய்கின்றனர்.

போராட்டத்தை தடம்புரளச் செய்யும் முயற்சியில், ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உட்பட தோட்டத் தொழிற்சங்கங்கள், செவ்வாயன்று கம்பனி நிர்வாகங்களுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் முதலாளிகள் அடிப்படை ஊதியத்தை இரட்டிப்பாக்க மறுத்தனர்.

ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயக்கத்துடன் அழைப்பு விடுத்த பின்னரும், இ.தொ.கா. தலைவர்கள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆயினும், பல தோட்டங்களில் மறியல் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.


தொழிற்சாலை மறியலில் தொழிலாளர்கள்

தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) உட்பட போட்டி தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும், அவற்றின் தலைவர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கூறிய போதிலும், அதை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் சேர்ந்துகொண்டனர்.

தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொழிலாளர்களின் இந்த போராட்டம், கசப்பான கன்னை மோதலில் கிழிந்து போயுள்ள மற்றும் பெருகிவரும் சமூக எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள ஆளும் உயரடுக்கின் அரசியல் நெருக்கடியை அதிகப்படுத்திவிடும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்டோபர் 26 அன்று, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்த பதவியில் அமர்த்திய போது, இ.தொ.கா. தலைவர் தொண்டமான் இராஜபக்ஷவின் நிர்வாகத்தில் சேர்ந்துகொண்டார். 1,000 ரூபாவுக்கு தினசரி சம்பளத்தை அதிகரிப்பதாக இராஜபக்ஷ கொடுத்த பொய்யான வாக்குறுதியை மேற்கோளிட்டு, தொண்டமான் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்கள், மலையக பெருந்தோட்டங்களுக்கு சென்றிருந்தனர். தொழிலாளர்கள் அங்கு தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

ஹட்டனில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எபோட்சிலி தோட்டத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றில், தொழிற்சாலைக்கு அருகே சுமார் 70 தொழிலாளர்கள் மறியல் போராட்டம் செய்ததோடு சோ.ச.க. பேச்சாளரின் உரையை உற்சாகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர், தொழிலாளர்களுக்கு அவர்களது கோரிக்கைகளை வென்றெடுக்க ஒரு அனைத்துலக மூலோபாயமும் புதிய அமைப்பும் அவசியம் என விளக்கினர்.

தோட்டக் கம்பனிகள் ஊதியத்தை உயர்த்த தயாராக இல்லை, அதற்கு பதிலாக தொழில்துறையின் நெருக்கடியை சமாளிப்பதற்கும், தொழிலாளர்களை இரக்கமற்ற முறையில் சுரண்டுவதன் மூலம் இலாபங்களைப் பெறுவதற்கும் உற்பத்தித்திறனை கூட்டுவதையே வலியுறுத்துகின்றன, என்று சோ.ச.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


எம். தேவராஜா தொழிலாளர் முன் உரையாற்றுகிறார்

சோ.ச.க. பேச்சாளர் எம். தேவராஜா கூறியதாவது: "ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கம் தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட, இலங்கை தொழிலாளர்களின் சர்வதேச வர்க்க சகோதரர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்."

வேலைத் தளங்களிலும் தோட்டங்களிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை தொழிலாளர்கள் ஸ்தாபிக்க வேண்டும் என தேவராஜா வலியுறுத்தினார். கம்பனிகளின் ஏஜன்டுகளாக செயற்படும் தொழிற்சங்கங்களில் இருந்து இந்த நடவடிக்கை குழுக்கள் முற்றிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும்.

"பெருந்தோட்டங்கள், பெரிய தொழிற்துறைகள், கம்பனிகள் மற்றும் வங்கிகளின் கட்டுப்பாட்டை தொழிலாளர்கள் எடுத்துக்கொண்டு, உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒரு சில பணக்காரர்களின் இலாபங்களுக்காக அல்லாமல், தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் நலன்களுக்காக முன்னெடுக்க வேண்டும்," என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.

"அதன் மூலமே தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கம்பனிகள் தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிராகரித்துள்ளமை, ஒரு அரசியல் போராட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்க முடியும், என்பதைக் காட்டுகிறது."

"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" "சர்வதேச சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!" மற்றும் "தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்காகப் போராடு!" போன்ற சுலோகங்களை தொழிலாளர்கள் கோஷித்தனர். சோ.ச.க. உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்களின் பின்னர், எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவொன்றை அமைக்கத் தீர்மானித்தனர்.


கனகசபை

42 ஆண்டுகளாக தோட்டத்தில் வேலை செய்த கனகசபை, 57, உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறியதாவது: "தொழிற்சங்க அதிகாரிகள் வெளி உலகத்தை எங்களுக்கு காட்டுவதில்லை. அவர்கள் ஏனைய தொழிலாளர்களுடனான ஒத்துழைப்பை தடுப்பதோடு, எமது பிரச்சினைகளின் மூல காரணத்தை நாங்கள் அறிந்துகொள்வதையும் தடுக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாத் தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டும். தொழிலாளர்கள் ஒன்றுபட்டால், அவர்கள் தங்கள் உரிமைகளை வெல்ல முடியும்."


சிவபாக்கியம்

30 ஆண்டுகளாக தோட்டத்தில் வேலை செய்த சிவபாக்கியம், "நாங்கள் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை கேட்கவில்லை. எங்கள் குடும்பம் சாப்பிடுவதற்கு பிள்ளைகள் படிப்பதற்கும் 1,000 ரூபா தினசரி ஊதியம் கேட்கிறோம்,” என கூறினார். “பிள்ளைகள் ஆரோக்கியமாக இல்லாததால் வைட்டமின்கள் கொடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். அன்றாட உணவிற்கு போதுமான அளவு சம்பாதிப்பதே கடினமாக இருக்கும்போது எவ்வாறு வைட்டமின்களை எப்படி வாங்குவது? ஏனைய தோட்டங்களுக்கும் சென்று தொழிலாளர்களை ஒழுங்கமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.”

கண்டிக்கு அருகிலுள்ள ஹந்தன தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களை விமர்சித்தனர்.

நாவரத்ன தெரிவித்ததாவது: "நாம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினை, நமக்கு தலைமை இல்லாததே. எந்த தொழிற்சங்கத்திலும் நாம் நம்பிக்கை வைக்கவில்லை. தோட்டத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அத்தகைய இயக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம்."


குமாரசுவாமி

குமாரசுவாமி, அதே தோட்டத்திலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளி ஆவார். "கம்பனி உரிமையாளர்கள் பல தோட்டங்களை மூடி இப்போது அவற்றை ஹோட்டல்கள் மற்றும் பிற தொழில்களின் பக்கம் திரும்புகின்றனர். கோடீஸ்வர வர்த்தகர்கள் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கின்ற அதே வேளை, தோட்டத் தொழிலாளர்கள் வாழ ஒரு வீட்டைக் கட்ட சிறிய காணித் துண்டுக்காக [25 சதுர மீட்டர்களுக்கு] கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர்,” என அவர் விளக்கினார்.

"எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க நாங்கள் அறிந்த ஒரே அமைப்புகள் தொழிற்சங்கங்கள்தான். ஆனால் இப்போது நான் அதை நம்பவில்லை. சரியான வேலைததிட்டத்தை வழங்கும் ஒரு இயக்கத்தை தொழிலாளர்கள் கண்டிப்பாக ஆதரிப்பர்."

இந்த சம்பளப் ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட்டது. தொழிலாளர்கள் முதலாளிகளின் வருவாய்-பகிர்வு முறைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கம்பனிகள் வலியுறுத்துகின்றன. அந்த முறைமையின் கீழ், தொழிலாளர்களுக்கு வேலை செய்வதற்காக சுமார் 1,000 தேயிலைச் செடிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் குத்தகை விவசாயிகளாக மாற்றப்பட உள்ளனர். முழு குடும்பங்களும் ஒதுக்கப்பட்ட நிலங்களில் உழைக்க வேண்டும்.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட தோட்டங்களில், இந்த முறைமை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ளதால், தொழிலாளர்கள் அந்தக் கம்பனிகளுக்கே தேசியலைக் காணிகளை திரும்ப ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர். ஏனைய தோட்டங்களில், தொழிலாளர்களின் எதிர்ப்பின் காரணமாக, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ளது.

இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் தொண்டமான் உறுப்பினராகியது எடுத்துக் காட்டுவது போல், கம்பனிகள் மற்றும் அரசாங்கங்களின் முகவர்களாகவே தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.

தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர்களான முறையே ப. திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர், முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர். அரசாங்கங்கள் வந்து போகும் நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் சலுகைகளை பெறவும் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்கவும் தங்களுடைய விசுவாசத்தையும் மாற்றி வருகின்றன.

தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ வர்க்கத்தின் போட்டிக் கன்னைகளான, சிறிசேன மற்றும் இராஜபக்ஷ தலைமையிலான கன்னை மற்றும் விக்ரமசிங்கவின் கன்னையில் ஏதாவது ஒருபக்கம் அணி சேர்ந்து நிற்கின்றன. சிறிசேன மற்றும் இராஜபக்ஷவை தொண்டமான் ஆதரிக்கிறார். ஏனைய தொழிற்சங்கங்கள் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றன.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் எழுச்சிக்கு முங்கொடுத்துள்ள இந்த கன்னைகள், அவர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு தயாராகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி பேச்சாளர்கள் வலியுறுத்தியவாறு, அனைத்துலக சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டமே ஒரே மாற்றீடு ஆகும். இதன் அர்த்தம் சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கு அதில் இணைந்துகொள்வதே ஆகும்.