ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The global crisis of capitalist rule and the strategy of socialist revolution

முதலாளித்துவ ஆட்சியின் உலகளாவிய நெருக்கடியும், சோசலிச புரட்சியின் மூலோபாயமும்

Joseph Kishore
17 December 2018

1938 இல் எழுதப்பட்டு மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான, முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்பதில் லியோன் ட்ரொட்ஸ்கி, அனைத்து பிரதான முதலாளித்துவ நாடுகளது வர்க்க ஆட்சியின் அரசியல் நெருக்கடியில் வெளிப்படும் இந்த சகாப்தத்தின் குணாம்சத்தை தொகுத்தளித்திருந்தார்.

முதலாளித்துவ வர்க்கத்திற்கு வெளியேறுவதற்கு அதற்கு எந்த வழியும் தெரியாது. அதன் கடைசி துருப்புச்சீட்டான பாசிசவாதத்தை பணயத்தில் வைக்க, ஏற்கனவே நிர்பந்திக்கப்பட்டுள்ள நாடுகளில், அது கண்களை மூடிக் கொண்டு இப்போது பொருளாதார மற்றும் இராணுவ பேரழிவுகளை நோக்கி பாய்ந்தோடுகிறது. வரலாற்றுரீதியில் தனிச்சலுகை கொண்ட நாடுகளில், அதாவது தேசிய செல்வத்திரட்சியை விலையாக கொடுத்து முதலாளித்துவ வர்க்கம் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு இன்னமும் தன்னை ஜனநாயகத்தின் ஆடம்பரத்தில் அனுமதித்துக் கொள்ள முடிந்துள்ள நாடுகளில் (பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இதர பிறவற்றில்), முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சிகள் அனைத்தும் விருப்பத்தை முடமாக்கும் விளிம்பில் ஒரு குழப்ப நிலையில் உள்ளன.

அதிக மாற்றங்களின்றி, இதே பந்தி 2018 ஆண்டின் உலக நிலைமையைக் குறித்த ஒரு விவரிப்புக்கு மிகச் சரியாக வெகு நெருக்கத்தில் வருகிறது.

பிரிட்டனில், பிரதம மந்திரி தெரேசா மே முக்கியமாக ஓர் அரசியல் தனிக்குழுவாக உள்ளார், கடந்த வாரம் தான் அவர் கடுமையாக போராடி அவரின் சொந்த பழமைவாத கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மான வாக்குகளில் இருந்து தப்பிப் பிழைத்தார். பிரிட்டன் வெளியேறுவது மீதான கருத்து வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாம் என்ற முடிவு ஆதரிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் பிரெக்ஸிட் மீதான உள்ளார்ந்த பிளவுகளால் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் அலைக்கழிந்து கொண்டிருக்கிறது. பழமைவாத கட்சிக்குள் அவரின் எதிர்ப்பாளர்களைச் சாந்தப்படுத்தும் வகையில், மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் சில ஏற்பாடுகள் செய்து கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், ஜெர்மி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சியோ அரசாங்கத்தை கூடுதலாக ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கும் மற்றும் மக்கள் எதிர்ப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தவிர்க்க முயன்று வருகிறார்.

பிரான்சில், வங்கியாளராக இருந்து ஜனாதிபதி ஆன இமானுவல் மக்ரோன் செல்வாக்கு விகிதத்தில் கடந்த ஆண்டை விட 27 சதவீதம் சரிந்து, 20 சதவீதத்திற்கு சற்று அதிகமான செல்வாக்கு விகிதத்துடன் வலம் வருவதுடன், அனேகமாக அந்த ஒட்டுமொத்த நாட்டிலும் மிகவும் கடிந்து கொள்ளப்படும் ஒரு நபராக இருக்கிறார். அங்கே "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு மிகப் பெரியளவிலான மக்கள் ஆதரவு உள்ளது, இதற்கு மக்ரோன் இந்த வாரயிறுதிலும் பாரிய கைது நடவடிக்கைகள் மேற்கொண்டதன் மூலமாகவும் மற்றும் பிரெஞ்சு நகரங்களின் வீதிகளில் பத்தாயிரக் கணக்கான கலகம் ஒடுக்கும் பொலிசாரை இறக்கி விட்டும் விடையிறுத்தார். ஜேர்மனியில், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், 2021 வரையில் சான்சிலராக இருக்க விரும்புகிறார் என்றாலும் கூட, 18 ஆண்டுகளாக தலைமை பதவி வகித்து வந்த கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சி (SPD) ஆகியவற்றின் மகா கூட்டணி அரசாங்கத்தின் கீழ், ஜேர்மன் ஆளும் வர்க்கம் பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) உத்தியோகபூர்வ எதிர்கட்சியாகயும், அந்நாட்டில் ஒரு செல்வாக்கான அரசியல் சக்தியாகவும் ஆக்கி, அதிவலதை ஆதரித்து வளர்த்துள்ளது. மேர்க்கெல் தலைமையின் கீழ், ஜேர்மனி ஐரோப்பாவிலேயே மிகவும் சமநிலையற்ற நாடாக அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில், ஆளும் வர்க்கம் ஆக்ரோஷமான வல்லரசு மோதலுக்கான ஓர் இராணுவ திட்டநிரலை மீட்டுயிர்ப்பித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில், ஆளும் தாராளவாத-தேசிய கூட்டணி அரசாங்கம் ஓர் நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அங்கே ஆகஸ்டில் பிரதம மந்திரி மால்க்கம் ரேர்ன்புல்லை பதவியிலிருந்து கீழிறக்கி, வெறும் ஒரு தசாப்தத்தில் ஏழாவது பிரதம மந்திரியாக ஸ்காட் மோரீசனைப் பிரதியீடு செய்த அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து, தாராளவாத கட்சிக்குள் உட்கட்சி போர் நிலவுகிறது.

அடுத்து இலங்கை, இது கடந்த ஏழு வாரங்களில் அசாதாரண அரசியல் சம்பவங்களின் திருப்பங்களைக் கண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆல் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க சட்டவிரோதமாக நீக்கப்பட்டமை, அந்த இடத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச நியமனம், நாடாளுமன்ற கலைப்பு, அந்த கலைப்பு அரசியலமைப்புக்கு விரோதமானதென அறிவிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மற்றும் நேற்று, மீண்டும் சிறிசேன ஆல் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் அதில் உள்ளடங்கி இருந்தன. பழைய நிலைக்கு திரும்பிய இந்த திருப்பம் அரசியல் நெருக்கடியின் முடிவைக் குறிக்கிறது என்ற முடிவுக்கு யாரும் வர மாட்டார்கள், சிறிசேன, முன்னர் அவர் பதவி நீக்கிய பிரதம மந்திரியின் பதவி பிரமாணத்திற்குப் பின்னர் வெகு விரைவில், அவரை ஊழல்வாதி என்றும் தேசத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்றும் கண்டனம் செய்தார்.

ஆனால் மிகவும் ஆழமான அரசியல் நெருக்கடி, உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் நிலவுகிறது. ட்ரம்ப் நிர்வாகம் அதிகரித்தளவில் சுற்றி வளைக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜெனரல் ஜோன் கெல்லியின் பதவியில் ஒரு புதிய இராணுவத் தலைமை தளபதியைப் பிரதியீடு செய்ய கடந்த வாரத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கிறது. ட்ரம்ப் அவரின் தனிப்பட்ட நிறுவனங்கள், அவரின் அறக்கட்டளை மற்றும் அவரின் விழா ஏற்பாட்டுக் குழு மீது பல தொடர்ச்சியான மக்கள் உரிமை சார்ந்த குற்றகர விசாரணைகளை முகங்கொடுத்துள்ளது. இந்த ஜனாதிபதியின் பிரத்யேக முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கோஹன் க்குக் கடந்த வாரம் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன், 2016 தேர்தலின் போது தேர்தல் பிரச்சார நிதி விதிமுறைகளை மீறியதில் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் உடந்தையாக இருந்தார் என்ற கோஹனின் வாதங்களை National Enquirer இன் தாய் நிறுவனமும் மற்றும் அதன் தலைமை நிர்வாகியும் ஆதரித்துள்ளனர்.

ஜனநாயக கட்சி அதிகரித்தளவில் ட்ரம்ப்புக்கு எதிராக அதன் மாளிகை ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சிகளில் ஆக்ரோஷமாக இருந்தாலும், அது மக்கள் கோபத்தைத் தூண்டிவிடக் கூடிய எதையும் செய்ய மரண பயத்துடன் அஞ்சி நிற்கிறது. ஆளும் உயரடுக்கின் செல்வாக்கான பிரிவுகள், அதிகரித்து வரும் சமூக அமைதியின்மையைக் கையாள்வது மற்றும் வல்லரசு மோதல் உட்பட அதன் முன்னால் இருக்கும் பணிகளை முன்னெச்சரிக்கையுடன் கவனத்தில் கொண்டுள்ளதுடன், ட்ரம்ப் நிர்வாகத்தைச் சவாலுக்கு ஈடு கொடுக்கவியலாத ஓர் அரசாங்கமாக பார்க்கிறது. “நம்மில் ஒவ்வொருவரும் அவரின் விதிமுறைகளின் அலைக்கழிப்புகளினூடாக நீந்திக் கொண்டிருக்கிறோம்,” என்று ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் பிராங்க் புரூனி புலம்பினார், “உண்மை மீதான அவர் தாக்குதலால் நிலையற்றுள்ளோம், அடுத்த என்ன நடக்குமென மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம், அது ட்ரம்புக்கு ஏற்படுத்துகின்ற விளைவுகளை விட இன்னும் பெரியளவில் நீண்டகால விளைவை நமக்கு ஏற்படுத்துமென்பது நமக்கு தெரிகிறது.”

எவ்வாறிருப்பினும் ட்ரம்பின் ஸ்திரமின்மை அல்லது அரசியலமைப்பின் நெருக்கடி எது குறித்து மிகவும் அஞ்சப்படுகிறதோ—அதாவது, தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டை—ஊக்குவிக்கக்கூடும். ஜனநாயக கட்சியினர், ஒருபுறம், பதவிநீக்க குற்றவிசாரணைகள் (impeachment) குறித்த அச்சுறுத்தல்களுக்கும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமான கொள்கையை ஏற்க வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள், மறுபுறம் படிப்படியாக அதிகரித்து வரும் அவரின் இராணுவவாத திட்டநிரலை நடைமுறைப்படுத்துவதில் அவர்களுடன் சேர்ந்து செயல்பட ட்ரம்புக்குப் பரிதாபகரமாக முறையீடுகள் செய்து வருகிறார்கள்.

மேலே கூறிய பட்டியலில் இன்னும் பல நாடுகளைச் சேர்க்கலாம் என்கின்ற நிலையில், உலகெங்கிலுமான அரசியல் நெருக்கடியானது ஆழ்ந்த புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தேசிய தனித்துவங்கள் என்னவாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் அமைப்புகளின் ஸ்திரமின்மையானது உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரே நெருக்கடியால் உந்தப்பட்டுள்ளது.

2008 நிதியியல் பொறிவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின்னர், அங்கே புதிய பொருளாதார நெருக்கடிக்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. சீன பொருளாதாரம் கூர்மையாக மெதுவாகி வருகிறது, ஐரோப்பா மந்தநிலையில் உள்ளது, அமெரிக்கா அடுத்த ஆண்டு ஒரு பின்னடைவுக்கான சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறது. ஆளும் வர்க்கம், குறிப்பாக அமெரிக்க ஆளும் வர்க்கம், பொருளாதார தேசியவாதம் மற்றும் வர்த்தகப் போர் கொள்கைகளை ஏற்று வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த பொருளாதார முட்டுச்சந்தில் இருந்து வெளியேறுவதற்கு எந்த வழியும் வழங்காது என்பதோடு, அவை உலக போருக்கு அச்சுறுத்தும் புவிசார் அரசியல் மோதல்களை எரியூட்டுகின்றன.

அனைத்திற்கும் மேலாக, சமூக சமத்துவமின்மையும், பெருந்திரளான மக்களிடையே அதிருப்தி மற்றும் அதிகரித்தளவில் பகிரங்கமான வர்க்க போராட்டமும் வளர்ந்து வருகிறது. ஆளும் வர்க்கம் சம்பவங்களின் தவிர்க்கவியலாத பேரலையை நிறுத்துவதற்காக, சமூக எதிர்ப்பு நோக்கி முன்பினும் அதிகமாக அப்பட்டமாக திருப்பிவிடப்பட்ட இணைய தணிக்கை, அல்லது பாசிசவாத அதிதீவிர தேசியவாத இயக்கங்களை ஊக்குவிப்பது உட்பட ஒடுக்குமுறை மற்றும் வன்முறைக்கான வழிவகைகள் என ஏதேதோ வழிவகைகளைப் பயன்படுத்தி வருகிறது. பரந்த போர்களுக்காக மீள்ஆயுதமேந்துவது மற்றும் தயாரிப்புகள் செய்வதற்கான வெறித்தனமான முனைவானது, எல்லாவற்றிற்கும் மேலாக, மிகப் பெரியளவில் உள்நாட்டு சமூக பதட்டங்களை வெளிநாடுகள் மீது திருப்பி விடுவதற்கான விருப்பத்தால் உந்தப்பட்டுள்ளது.

உலகெங்கிலுமான தொழிலாள வர்க்க போராட்டத்தின் முக்கிய வெளிப்பாடுகளைக் கண்டுள்ள இந்தாண்டு, பிரான்சில் மஞ்சள் சீருடை போராட்டங்கள், இலங்கையில் நூறாயிரக் கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பத்தாயிரக் கணக்கான ஆசிரியர்களின் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் சமூக கோபத்தின் ஏனைய வெளிப்பாடுகளுடன் முடியவிருக்கிறது.

தொழிலாளர்களின் போராட்டங்கள், இப்போதைய அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை எதிர்த்து அபிவிருத்தி அடைந்து வருகின்றன. பிரான்சில் நடப்பது அதுபோன்றவொரு விடயம் தான், அங்கே மஞ்சள் சீருடை போராட்டங்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே சமூக ஊடகங்கள் மூலமாக அபிவிருத்தி அடைந்தன. இலங்கையில், தொழிலாளர்கள் இறுதியில் வெள்ளியன்று வேலைநிறுத்தத்தைக் கைவிடுதவற்கு முன்னதாக, சிலோன் தொழிலாளர்கள் காங்கிரஸின் கடந்த வார "வேலைக்குத் திரும்புவோம்" உத்தரவை போராட்டங்களைக் கொண்டும் மற்றும் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்ததன் மூலமாகவும் வரவேற்றனர்.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், போராட்டத்திற்கான மற்றும் அரசியல் தலைமைக்கான அதன் சொந்த அமைப்புகளை அபிவிருத்தி செய்வதே முக்கிய கேள்வியாகும். அது ஆளும் வர்க்கத்தின் ஏதோவொரு கன்னையின் பின்னால் திருப்பி விடப்படுவதற்கு தன்னை அனுமதிக்க முடியாது. அது அதன் சொந்த கரங்களில் அரசியல் அதிகாரத்தை ஏற்க வேண்டும்.

கடந்த வாரத்தில் முக்கிய முன்னேற்றங்கள் இருந்தன, அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்க பிரிவுகளின் சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கான வழிகாட்டும் குழு ஸ்தாபிக்கப்பட்டது மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்க மற்றும் ஒழுங்கமைக்க ஒரு நடவடிக்கை குழு ஸ்தாபிக்கப்பட்டது. இவ்விரு விடயங்களுமே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்க போராட்டத்திற்கான சுயாதீன அமைப்புகளாக உருவாக்கப்பட்டன.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தில், ட்ரொட்ஸ்கி முந்தைய காலக்கட்டத்தின் நிலைமைகள் மற்றும் அரசியல் அனுபவங்களில் இருந்து "மனிதயினத்தின் வரலாற்று நெருக்கடியானது புரட்சிகர தலைமையின் நெருக்கடியாக சுருங்கி உள்ளது,” என்று முடிவு செய்தார். இன்று அது அவ்வாறு தான் உள்ளது. முதலாளித்துவ ஆட்சியின் உலகளாவிய நெருக்கடிக்கு விடையிறுப்பதில், தொழிலாள வர்க்கம் உலக சோசலிச புரட்சிக்கான அதன் சொந்த மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த உலக இயக்கத்தின் தலைமை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவாகும்.