ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The international significance of the Sri Lankan plantation workers’ strike

இலங்கை தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம்

By Deepal Jayasekera 
17 December 2018

இலங்கையில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற அண்மைய வேலைநிறுத்தம் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு முக்கிய அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளது.

இலங்கையின் தேயிலை மற்றும் இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் தீவின் தொழிலாள வர்க்கத்தின் மிக ஒடுக்கப்பட்ட பகுதியினராவர். பகைமை மற்றும் எதிர்ப்பு அலையானது டிசம்பர் 4 அன்று வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசை (இ.தொ.கா.), நிர்ப்பந்தித்தது. தினசரி ஊதியத்தை ரூபா 500 முதல் 1,000 வரை, அல்லது 5.5 அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்குமாறு தொழிலாளர்கள் கோருகின்றனர்.

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமானது தீவிலும் தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியின் பாகமாகும். மத்திய இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது, எரிபொருள் வரி உயர்வுக்கும் வாழ்க்கைத் தர சீரழிவுக்கும் எதிராக பாரிசிலும் ஏனைய நகரங்களினதும் தெருக்களில் ​​"மஞ்சள் சீருடை" தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்தியாவில், சமீபத்தில் தமிழ்நாட்டில் வாகனத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். கனடாவிலும் அமெரிக்காவிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆசிரியர்கள் முன்னெடுத்த பரந்த வேலைநிறுத்தங்களை தொடர்ந்து, ஆலைகள் மூடப்படுவதாகவும் கிட்டத்தட்ட 15,000 தொழில்கள் அழிக்கப்படவுள்ளதாகவும் ஜெனரல் மோட்டர்ஸ் அறிவித்த பின்னர், வாகனத் தொழிலாளர்கள் மத்தியில் போர்க்குணமிக்க மனநிலை அதிகரித்துவருகிறது.

சர்வதேச அளவில் தொழிலாளர்களின் இந்த விரைவான எழுச்சியானது, அத்தகைய இயக்கத்தை எதிர்பார்த்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) செய்த பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளன.

இருபதாம் நூற்றாண்டில் அடிக்கடி இடம்பெற்றது போலவே, இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சிறிய தீவின் நிகழ்வுகள், உலகெங்கிலும் நடைபெறும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் முன்னோடி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகள், சர்வதேச அளவில் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு நேரடியாக பொருந்துகின்றன.

பிரான்சிலும் அமெரிக்காவிலும் போலவே, இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியிலேயே தலைதூக்கியது. தற்போதைய ஊதியத்தில் உயிர்வாழ முடியாத தொழிலாளர்கள், தொழிற்சங்கங்க தலைமைத்துவத்தை மீறி போராட்டத்துக்கு வந்த நிலைமையிலேயே இ.தொ.கா. வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய எஞ்சியுள்ள தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை எதிர்த்த போதும், ​​அவற்றின் உறுப்பினர்கள் தலைமைத்துவத்தின் உத்தரவை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர்.

தொழிலாளர்கள் அல்லது அரசாங்கத்திற்கு எந்த சலுகையும் கொடுக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிரான ஒரு போர்க்குணமிக்க அரசியல் மற்றும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கம் இ.தொ.கா.வுக்கும் கொஞ்சமும் இருக்கவில்லை. இலங்கை தேயிலைத் தொழிலானது "சர்வதேச போட்டித்தன்மையுடையதாக" இருக்க வேண்டும் என்பதால், ஊதிய உயர்வு கொடுக்க முடியாது எனக் கம்பனிகள் கூறுகின்றன. இந்த உச்ச இலாபம் பெறும் கம்பனிகளின் அழுகுரலையே எதிரொலித்து வந்த இ.தொ.கா., தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு தொழிற்துறை பொலிஸ்காரனாகவே செயல்பட்டு வருகிறது.


எபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த வாக்களித்தனர்

தொழிற்சங்கங்கள் மீது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளரும் பரந்த அளவிலான அவநம்பிக்கை மற்றும் அவமதிப்பும், அடுத்தடுத்த காட்டிக்கொடுப்புக்கள் காரணமாக ஒரு தசாப்தத்திற்கு மேலாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன. எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தின் மத்தியில், ஹட்டனில் உள்ள எபோட்சிலி தோட்டத்தில் தொழிலாளர்கள் ஒரு தைரியமான புதிய அடியை எடுத்து வைத்து, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் வழிகாட்டலின் கீழ், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழு ஒன்றை அமைத்தனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியே சோ.ச.க. ஆகும்.

டிசம்பர் 7 அன்று, தங்கள் சொந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய எபோட்சிலி தொழிலாளர்கள், மூன்று மணி நேரம் ஊர்வலமாக ஹட்டன் நகரத்திற்கு சென்றனர். அவர்கள், நாள் சம்பளம் அல்லாமல் கிட்டத்தட்ட 40,000 ரூபா மாத சம்பளம் கோரியும், சக தொழிலாளர்களை சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுத்து கோஷங்களை முழங்கியதோடு கோரிக்கை அட்டைகளையும் ஏந்திச் சென்றனர். சர்வதேச ரீதியில் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், "இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்!" மற்றும் "ஆலை மூடலுக்கு எதிராக போராடும் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்களை ஆதரி!" என பிரகடனம் செய்தனர்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிசக் கொள்கைகளுக்கும் போராடுவதற்கான அவர்களின் அறைகூவலானது, தீவின் இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகியவற்றுடன் பிணைந்துள்ள இ.தொ.கா. மற்றும் ஏனைய பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கு நேரடி எதிராக நிற்கின்றது.

ஜனாதிபதி சிறிசேன, அக்டோபர் 26 அன்று, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்திய பின்னர் கொழும்பில் உக்கிரமாகிய அரசியல் நெருக்கடியின் மத்தியிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் இடம்பெற்றது. பல வாரங்களாக தொடர்ந்த கன்னை மோதல்களால் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற உழுத்துப் போன திரை மேலும் அவமதிப்புக்கு உள்ளாகிய நிலையில், தீவில் தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் இயக்கம் பற்றிய அச்சம் காரணமாக, நேற்று விக்கிரமசிங்க மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்க காரணியாகும். (பார்க்க: பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி சிறிசேன எடுத்த முடிவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது).

அதே அச்சம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், டிசம்பர் 12 அன்று வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ள இ.தொ.கா.வை நிர்ப்பந்தித்தது. சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி வாக்குறுதி கொடுத்துள்ளதாக இ.தொ.கா. அறிவித்தது. இந்த மோசமான மற்றும் சிடுமூஞ்சித்தனமான காட்டிக்கொடுப்பு, பெருந்தோட்ட மாவட்டங்கள் முழுதும் தொழிலாளர்களின் கோபமான போராட்டங்களை தூண்டிவிட்டது. வேலை நிறுத்தம் முடித்துக்கொள்ளப்பட்டாலும், எதிர்ப்பை வெளிப்படுத்தி இரண்டு நாட்களுக்குப் பின்னரே தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்.

தோட்டத் தொழிலாளர்கள் போராடுவதற்கான உறுதிப்பாட்டை போதுமானளவு நிரூபித்துள்ளனர். பற்றாக்குறையாக இருப்பது உறுதிப்பாடு அல்ல, மாறாக, போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அமைப்பு வழிவகைகளும், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்க கட்சிகளின் பொய்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்கும் அவை பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிராகப் போராடுவதற்கான அரசியல் முன்நோக்குமே ஆகும். வேறுவிதமாகக் கூறினால், சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். வாழ்வின் மிக அடிப்படை தேவைகளை கூட பாதுகாக்க வேறு வழி இல்லை. தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் கோருவது நாளொன்றுக்கு 5.60 டாலர் ஆகும்.

எபோட்சிலி தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் பக்கம் திரும்பி, சுயாதீனமான நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்கியதன் அரசியல் முக்கியத்துவம் இதுவே ஆகும். தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் மத்தியில், அமெரிக்காவின் வாகனத் தொழிலாளர்கள் டிசம்பர் 9 அன்று டெட்ராயிட்டில் ஒரு அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு உலக சோசலிச வலைத் தள வாகன தொழிலாளர் செய்தி இதழ் மற்றும் அமெரிக்க சோ.ச.க.வும் அழைப்பு விடுத்திருந்தன. அவர்கள் ஆலை மூடல்கள், பணிநீக்கங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஏனைய தாக்குதல்களுக்கும் எதிராகப் போராட, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, அடிமட்ட தொழிலாளர்களின் தொழிற்சாலை கமிட்டிகளையும் அதேபோல் பரந்த செயற் குழுவையும் ஸ்தாபிக்க ஏகமனதாக தீர்மானித்தனர்.

இரண்டு அபிவிருத்திகளும் புரட்சிகர அரசியலுக்கும் அமைப்புமுறை வடிவங்களுக்கும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கிற்கும் தொழிலாளர்கள் திரும்பத் தொடங்கியுள்ளதை சமிக்ஞை செய்கின்றன. இந்த முக்கியமான முன்முயற்சிகள், இலங்கையிலும், அமெரிக்காவிலும், பிரான்சிலும் மற்றும் உலகம் முழுவதிலும் அபிவிருத்தி செய்யப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (PES), தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு, "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

டெட்ரொயிட் கூட்டத்தில், ஒரு கார் தொழிலாளி, அடிமட்ட தொழிலாளர்கள் குழுக்களுக்கு “ஒரு தொடர்புக் கருவியாக, ஒரு குரலாக மற்றும் தனித்துவமான கல்வியாளராக உலக சோசலிச வலைத் தளத்தைப் பயன்படுத்த அனுமதி கிடைக்குமா?" சோசலிச சமத்துவக் கட்சி தலைமைத்துவத்தை வழங்குமா? அப்போது நாம் ஒரு மூலோபாய மட்டத்தில் செயல்பட முடியும்," என கேட்டார். “ஆம்” என அழுத்திக் கூறுவதே பதிலாக இருக்க முடியும்.

புரட்சிகர தலைமையின் தீர்க்கமான பாத்திரத்தையும், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிப் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்காக உலக சோசலிச வலைத் தளத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசர அவசியத்தையுமே இந்த கேள்விகளும் பதில்களும் முன்நிறுத்துகின்றன.

முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் பதில், வர்த்தக போர், கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார வடிவ ஆட்சிக்கு திருப்புவதுமே ஆகும். இதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பதில், ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதே ஆகும். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான தலைமைத்துவமாக, ஏற்கனவே இருக்கும் இடங்களிலும் புதிய இடங்களிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்து அதைக் கட்டியெழுப்ப வேண்டும் என தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.