ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president reinstates sacked prime minister

இலங்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்த பிரதமரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தினார்

By K. Ratnayake 
17 December 2018

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார். சிறிசேன, எழு வாரங்களுக்கு முன்னர் அரசியல் சதிக்கு சமமான ஒரு நடவடிக்கையில், விக்கிரமசிங்கவை அரசியலமைப்புக்கு விரோதமாக பதவி நீக்கம் செய்திருந்தார். விக்ரமசிங்கவுடன் வேலை செய்ய தன்னால் முடியாது, அவரை பிரதமாராக நியமிக்கவே மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த சிறிசேனவுக்கு இது ஒரு பெரும் பின்னடைவாகும்.

கொழும்பு ஊடகங்களின் கூற்றுகளுக்கு மாறாக, விக்கிரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு, அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை. அது, இலங்கை ஆளும் உயரடுக்கிற்குள் நடைபெற்று வரும் மோதலுக்கு ஒரு தற்காலிக நிறுத்தமாகவே இருக்கும்.

அக்டோபர் 26 அன்று விக்கிரமசிங்கவை பதவி நீக்கிய பின்னர், சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமராக நியமித்து, ஒரு புதிய அமைச்சரவையை சத்தியப் பிரமாணம் செய்து வைத்ததோடு அதை ஒரு அரசாங்கமாக அறிவித்தார். இந்த தீர்மானமானது, ஒரு பக்கம் சிறிசேன மற்றும் இராஜபக்ஷ தலைமையிலான, மறுபுறம் விக்ரமசிங்க தலமையிலான, ஆளும் உயரடுக்கின் இரண்டு கன்னைகளுக்கு இடையேயான கசப்பான யுத்தத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.

விக்ரமசிங்கவை பதவி நீக்கிய பின்னர், அடாவடி மூலமும் இலஞ்சம் கொடுத்தும் பாராளுமன்ற பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொள்ள இராஜபக்ஷவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், சிறிசேன நவம்பர் 14 வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். இராஜபக்ஷ பெரும்பான்மையை பெறத் தவறியபோது, சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து புதிய பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார்.

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியன உட்பட அதன் கூட்டாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளித்த உயர் நீதிமன்றத்தால், சிறிசேனவின் ஜனநாயக-விரோத சூழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இராஜபக்ஷவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சிறிசேன நிராகரித்தார். எவ்வாறாயினும், டிசம்பர் 3 அன்று, கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம், இராஜபக்ஷவும் அவரது அமைச்சரவையும் அதிகாரங்களை கையாளுவதற்கு தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தது. இது விளைபயனுடன் நாட்டில் இயங்கும் அரசாங்கம் ஒன்றை இல்லாமல் ஆக்கியது.

ஜனாதிபதி பாராளுமன்றக் கலைத்தமை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று, டிசம்பர் 13 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்தே, விக்ரமசிங்க நேற்று பதவிப் பிரமானம் செய்து வைக்கப்பட்டார். மறுநாள், இராஜபக்ஷவுக்கும் அவரது அமைச்சரவைக்கும் எதிரான மேன் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை இடை நிறுத்துவதற்கு, இன்னொரு உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு நிராகரித்துவிட்டது. அந்த வழக்கின் விசாரணை ஜனவரி நடுப்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விக்ரமசிங்கவுக்கு மீளவும் பதவிப் பிராமானம் செய்து வைத்தமை பற்றி முகத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் பல்வேறு கருத்துக்களை சிறிசேன கூறிவருகின்றார். "பாராளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும்" ஒரு தலைவர் என்ற வகையில், தான் அவ்வாறு செய்ததாக அவர் கூறிக்கொண்டார். பாராளுமன்றத்தைக் கலைப்பது உட்பட அவரது சகல நடவடிக்கைகளும், "நல்லெண்ணங்களை" அடிப்டையாகக் கொண்டதும் "சட்ட வல்லுணர்களின்" ஆலோசனையினதும் பிரதிபலனே என அவர் மேலும் தெரிவித்தார்.

சில ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் குற்றப் பிரேரணை கொண்டுவரப் போவதாக அச்சுறுத்தியமை பற்றி பிரதிபலித்த சிறிசேன, "தான் சிறைக்குப் போவதற்கும் அஞ்சவில்லை" என்று கூறினார். எவ்வாறாயினும், ஐ.தே.க. பிரதி தலைவர் சஜித் பிரேமதாச அரசியல் குற்றப் பிரேரணையை நிராகரித்ததோடு தனது கட்சி அவருடன் கூடி வேலை செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக வஞ்சத் தனமாக காட்டிக் கொண்ட விக்ரமசிங்க, "அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கும் உறுதியாக நின்றவர்களுக்கு" தனது நன்றியை தெரிவித்தார். இலங்கை "இயல்பு நிலைக்கு" திரும்புவதும் "அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதுமே" முதலாவது குறிக்கோளாக இருந்தது, என அவர் மேலும் கூறிக்கொண்டார்.

விக்கிரமசிங்க இன்று ஒரு புதிய அமைச்சரவையைத் தேர்ந்தெடுத்து, அதன் பட்டியலை ஜனாதிபதியிடம் கையளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) 103 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளதுடன், பெரும்பான்மைக்காக இன்னும் 10 பேர் தேவைப்படுகின்றனர்.

செய்திகளின் படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் (SLMC) ஒரு "தேசிய அரசாங்கத்தை" அமைத்து, அமைச்சரவையை விரிவுபடுத்துவதற்காக விக்ரமசிங்க திரைக்குப் பின்னால் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார். அரசியலமைப்பின் படி, தனி-கட்சி அரசாங்கமானது 30 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிக்க தகுதி உடையது. ஐ.தே.க., சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) உறுப்பினர்களிடம் இருந்தும் ஆதரவு கோருகிறது.

கடந்த இரு மாதங்களாக, தனது நடவடிக்கைகள் நாட்டையும் ஜனநாயகத்தினையும் "பாதுகாப்பதாக" மேற்கொள்ளப்பட்டவை என சிறிசேன கூறிக்கொண்டதைப் போலவே, விக்கிரமசிங்கவின் ஜனநாயக தோரணையும் போலினயானதாகும்.

சிறிசேனவின் தலைகீழ் மாற்றமானது, சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கான பிரதிபலிப்பாகும். விக்ரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என, குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் இந்தியாவும் நெருக்கி வந்தன. அதேவேளை அதிகரித்துவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களையிட்டும் சிறிசேன பீதியடைந்துள்ளார்.

சிறிசேன மற்றும் விக்ரமசிங்க தலமையிலான ஐக்கிய அரசாங்கம் என்று அழைக்கப்படுவதன் கீழ், கடந்த மூன்று வருடங்களாக கட்டியெழுப்பப்பட்ட இராணுவ மற்றும் அரசியல் உறவுகள், ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டதனால் கீழறுக்கப்படும் என்பதே வாஷிங்டனின் பிரதான கவலையாக இருந்தது.

பெய்ஜிங் உடனான இராஜபக்ஷவின் நெருக்கமான உறவுகளுக்கு எதிராக, வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, 2015 இல் சிறிசேன பதவிக்கு வந்தார். இராஜபக்ஷ ஒரு சர்வாதிகாரி என்று கூறி அவரை 2015 தேர்தலின் போது ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கு, சிறிசேனவிற்கு விக்ரமசிங்க உதவினார். விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

சிறிசேன மற்றும் விக்ரமசிங்கவும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் தீவிரமடைந்து வரும் மோதலின் வழிக்கு உடனடியாக திருப்பினர். இலங்கையின் புதிய "ஐக்கிய" அரசாங்கம், பிணையெடுப்பு கடன்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி ஏற்கனவே சிக்கன நடவடிக்கைகளை சுமத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, கொழும்பில் நடந்த கசப்பான கன்னை மோதல்களில், வாஷிங்டனானது விக்ரமசிங்கவுக்கே ஆதரவளித்த்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகளின் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் அறிவித்தது. இராஜக்ஷவும் மேற்கத்தைய இராஜதந்திரிகளை கொழும்பில் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக தனது கட்சித் தலைவர்களை அனுப்பி ஒரு வீண் முயற்சியை மேற்கொண்டார்.

சிறிசேனவும், சர்வதேச பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளானார். "அரசியல் நிச்சயமறற தன்மை" தீர்க்கப்படும்வரை சர்வதேச நாணய நிதியம் தனது கடனின் இறுதி தவணைகளை நிறுத்தியது; அமெரிக்கா தனது மிலேனியம் உதவித் திட்டத்தை ஒத்திவைத்தது; ஜப்பான் அதன் உதவி மற்றும் முதலீட்டு திட்டங்களை தாமதப்படுத்துவதாக அறிவித்தது.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரான றொபேட் ஒ பிளேக், வாஷிங்டனின் எதிர்ப்பினை இராஜபக்ஷவுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், கொழும்பினைத் தளமாக கொண்ட டெய்லி மிரர் பத்திரிகைக்கு அண்மையில் எழுதியிருந்தார். “தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை தீர்க்கவும், இந்தோ-பசுபிக் பிராந்தியப் போட்டியில் ஒரு தலைவராகவும் வெற்றியாளராகவும் இலங்கை இருத்துவதற்கும், அவர் (இராஜபக்ஷ) பதவியில் இருந்து விலக வேண்டும், என பிளேக் எழுதினார்.

"இந்தோ-பசுபிக் பெரும் போட்டி" என்று அழைக்கப்படுவதை சதாரண ஆங்கிலத்தில் கூறினால், சீனாவை இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ வழிமுறைகள் உட்பட அனைத்தை வழிகளிலும் கட்டுப்படுத்தும் வாஷிங்டனின் முயற்சிகளைக் குறிக்கும்.

தொடர்ச்சியான அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலைமை, ஒரு புதிய வரவு-செலவுத் திட்டம் உட்பட அரசாங்கப் பணிகளை முடக்கும், மற்றும் அண்மைய மாதங்களில் சமூக மற்றும் ஜனநயாக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் எழுச்சியை துரிதப்படுத்தும் என்றும் இலங்கை ஆளும் வர்க்கம் பீதியடைந்துவிட்டது.

பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் இந்தப் எதிர்ப்பு பிரதிபலித்தது. இதில் சிறிசேனவின் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க.வும், இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தோல்வி கண்டன. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான "ஐக்கிய" அரசாங்கத்தின் தாக்குதலுக்கு, விக்கிரமசிங்க மீது குற்றஞ்சாட்டுவதன் மூலம் சிறிசேன தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றார்.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக இருப்பதை காட்டிக் கொள்ளும் சிறிசேன மற்றும் இராஜபக்ஷவின் ஜனநாயக தோரணைகள், மறுபக்கம் விக்கிரமசிங்கவின் பாசாங்குகளும், முற்றிலும் போலித்தனமானவை. இரு கன்னைகளும் கொடூரமான எதேச்சதிகார ஆட்சியின் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன. எவ்வாறு சிறப்பாக முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்துவது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் தலை தூக்கும் வெகுஜன எதிர்ப்பை நசுக்குவது எப்படி என்பது பற்றியே அவர்களின் கசப்பான மோதல்கள் உள்ளன.

இப்போது பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள விக்ரமசிங்க, மக்களுடைய சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை உக்கிரமாக்குவதற்கு கன்னை மோதலால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொள்வார்.

எனினும், எதுவும் தீர்க்கப்படவில்லை. சனிக்கிழமையன்று இராஜபக்ஷ பிரதம மந்திரியாக உத்தியோகபூர்வமாக தனது இராஜிநாமாவை அறிவித்ததோடு பொதுத் தேர்தலுக்கு ஆதரவளிக்காமைக்காக உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கினார்.

"நாங்கள் இப்போது தேர்தல்களை சந்திக்காமல் தவிர்ப்பதற்காக பல்வேறு குழப்பங்களில் ஈடுபட்டுள்ள ஒரு அரசியல் கட்சிகளின் குழுவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டிருக்கிறோம். மக்களை அணிதிரட்டி நாட்டிற்கு எதிரான சக்திகளை மண்டியிட வைப்போம்" என்று அவர் எச்சரித்தார்.

தமிழர் விரோத இனவாத பிரச்சாரத்தை அவர் உக்கிரமாக்குவார் என்பதை இராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். "தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஐ.தே.க.வை பணையக் கைதியாக பிடித்துக்கொண்டுள்ளதுடன் கூட்டமைப்பின் நோக்கங்களை ஐ.தே.க. கடைபிடிக்க வேண்டும்" என்று அறிவித்து அவர் ஐ.தே.க.விற்கு எதிராக குற்றம் சாட்டினார். தமிழ் கூட்டமைப்பானது சிறிசேனவின் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளுக்கு எதிராக விக்ரமசிங்கவை ஆதரித்தது.

அக்டோபர் மாதம் வெடித்த அரசியல் நெருக்கடி, இலங்கை முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவினதும் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. "ஜனநாயகத்தை பாதுகாப்பது" பற்றிய வெற்று வாய்ச்சவடாலுக்குப் பின்னால் இருப்பது, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்கள் பற்றிய ஆளும் உயரடுக்கின் பீதியே ஆகும்.

இப்போது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும் எதிர்கொள்ளும் அரசியல் அபாயங்கள் குறைந்துவிடவில்லை, மாறாக தீவிரமடைந்துள்ளன. ஆளும் உயரடுக்கு அதன் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள இடமளித்து விட்டு, தொழிலாள வர்க்கத்தால் ஒதுங்கி நிற்க முடியாது. சோசலிச சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் தனது சொந்த வர்க்க நலன்களுக்காக ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரண்டு தலையீடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தோட்டத்திலும், வேலைத் தளத்திலும், அயல் பிரதேசங்களிலும் உள்ள தொழிலாளர்கள், எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்களை பின்பற்ற வேண்டும். எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இருந்து சுயாதீனமாக, ஒரு நடவடிக்கை குழுவை ஸ்தாபித்துள்ளதோடு, சோசலிச சமத்துவக் கட்சியை (சோ.ச.க.) நோக்கித் திரும்பியுள்ளனர். சோசலிச அரசியலை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டம் அவசியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான புரட்சிகரத் தலைமைத்துவமாக சோசலிச சமத்துவக் கட்சியையும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பையும் கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.