ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass shooting in Strasbourg kills 3, wounds 12 before “yellow vest” protest

“மஞ்சள் சீருடை" போராட்டத்திற்கு முன்னதாக, ஸ்ராஸ்பேர்க் பொதுமக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்

By Alex Lantier
13 December 2018

செவ்வாயன்று இரவு ஸ்ராஸ்பேர்க் மக்கள் மீதான இரத்தக்களரியான துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மூன்றாவது ஒருவர் மூளை-சாவுக்கு உள்ளானார் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ஆறு பேர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். இவ்வாறிருக்கையில், இந்த சம்பவத்தின் பிரதிபலிப்போ, 2015 க்குப் பின்னர் இருந்து பிரான்ஸிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான நாடுகளில் நடந்துள்ள, பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்ட தாக்குதல்களின் முற்றிலும் பிற்போக்குத்தனமான இயல்பையே மீண்டும் அடிக்கோடிடுகிறது.

"மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் மக்ரோனுக்கு எதிரான போராட்டங்களைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு, ஜனநாயக உரிமைகளை மிதித்து நசுக்க ஏற்கவே இந்த தாக்குதலை தனக்கு சாதகமாக பற்றிக் கொண்டுள்ளது.

செவ்வாயன்று இரவு ஸ்ராஸ்பேர்க்கில் தெளிவாக என்ன நடந்து என்பதை ஸ்தாபிப்பது மிகவும் காலத்திற்கு முந்திய முடிவாக இருக்கும். ஸ்ராஸ்பேர்க்கைச் சேர்ந்த, வன்முறை குற்றத்திற்காக பலமுறை தண்டனை பெற்றுள்ள 29 வயதான ஷெரிஃப் சேகட் (Chérif Chekatt) என்று பொலிஸால் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய ஒருவர், இதுவரையில் பிடிபடவில்லை. இருப்பினும், அரசியல் ஸ்தாபகமும் மற்றும் ஊடகங்களும், "மஞ்சள் சீருடையாளர்கள்" அவர்களின் போராட்டங்களைக் கைவிட வேண்டும் என்று கோருவதற்கும் மற்றும் இத்தாக்குதல்களில் ஒருவேளை அரசு சம்பந்தப்பட்டிருக்கலாமோ என்று வினவுவோரை சூழ்ச்சி தத்துவவாதிகள் என்று கண்டிக்கவும் ஓர் ஆக்ரோஷமான பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளன.

பரவலாக மக்கள் செல்வாக்கிழந்த மக்ரோனின் கொள்கைக்கு எதிரான போராட்டங்களை நிறுத்துவதற்காக, ஓர் இரத்தக்களரியான படுகொலையையும் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களையும் சாதகமாக்குவதற்கான இந்த முயற்சி, ஜனநாயக விரோதமானதும் நியாயபூர்வமற்றதும் ஆகும். இஸ்லாமிய அரசு (IS) போன்ற ஒரு பயங்கரவாத வலையமைப்பின் ஓர் அனுதாபியாக சேகட் இந்த தாக்குதலை நடத்தி இருந்தார் என்று தெரிய வந்தால், அது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற உள்ளடக்கத்தில் பிரெஞ்சு அரசுக்கும் IS க்கும் இடையே ஸ்தாபிக்கப்பட்ட தொடர்புகளையும் உள்ளடக்கி இருக்கும்.

செவ்வாயன்று இரவு மாலை 8 மணிக்கு சற்று முன்னர் கிடைத்த விபரங்களின்படி, தனிநபர் ஒருவர் ஸ்ராஸ்பேர்க் நகரின் மையத்தில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தவர்களைத் துப்பாக்கியால் சுட்டார். அவர் கடந்து சென்று கொண்டிருந்த பிரஜைகளைப் பிடித்து வைக்க முயன்றதுடன், ஒரு டாக்சி ஓட்டுனரை பிணையாக பிடித்து, அவரைப் பலவந்தப்படுத்தி அண்டைபகுதியான Neudorf க்கு காரை ஓட்டிச் சென்றார். பலமான பொலிஸ் நடவடிக்கைகளால் செவ்வாயன்று இரவு ஒரு கட்டிடத்தில் சிக்கி இருந்த அவர், இருந்தபோதும் தப்பிச் செல்ல முடிந்திருந்தது.

செவ்வாயன்று இரவு சந்தேகத்திற்குரியவராக அடையாளம் காணப்பட்டவரின் அடையாளத்தைப் புதனன்று காலை பத்திரிகைகள் உறுதிப்படுத்தின: 29 வயதான சேகட், பாரீஸ் வழக்குதொடுனர் அலுவலகத்தின் தகவல்படி "பொதுவான குற்றங்களுக்காக" பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் 27 முறை தண்டனை பெற்றுள்ளார். பிரெஞ்சு உளவுத்துறை வன்முறை மற்றும் மதவாத தீவிரமயப்படுத்தலுக்காக சந்தேகத்திற்குரியவராக அடையாளம் காணப்பட்டு, அவர் மீது "S” கோப்பு பதிவு செய்த போது, அவர் 2013 இல் இருந்து 2015 வரையில் சிறை தண்டனையில் இருந்தார் என்பதுடன், ஜேர்மனியில் 2015 இல் இருந்து 2017 வரையில் அவர் சிறை தண்டனையில் இருந்தவராவார். அப்போதிருந்து அவர் "மிகத் தீவிரமாக" கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்னரின் உதவியாளர் Laurent Nuñez தெரிவித்தார்.

இருப்பினும் Nuñez புதனன்று காலை France Inter க்குத் தெரிவிக்கையில், நாம் "மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவர் பயங்கரவாத கணக்கீட்டின் அடிப்படையில் தான் செயல்பட்டார் என்பது ஸ்தாபிக்கப்படவில்லை,” என்றார்.

ஆகஸ்ட் மாதம் நடந்த ஆயுத கொள்ளை சம்பவம் மற்றும் கொலை முயற்சி சம்பந்தமாக, அந்த துப்பாக்கிச் சூட்டிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பொலிஸ், செவ்வாயன்று காலை சேகட்டின் வீட்டைச் சோதனையிட்டிருந்தது. உணர்விழக்கச் செய்யும் எறிகுண்டுகள், ஒரு 22 “நீண்ட துப்பாக்கி,” மற்றும் கத்திகளை அவர்கள் கைப்பற்றியதாக செய்திகள் குறிப்பிட்டன. சேகட்டின் வீட்டில் ஒரு எறிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாகவும், மற்றும் துப்பாக்கியால் சுட்டவர் டாக்சி ஓட்டுனரிடம் அவர் வீட்டில் ஒரு எறிகுண்டு இருப்பதாக தெரிவித்தார் என்ற உண்மையின் காரணமாகவும் தான், பொலிஸ் சேகட்டை அந்த தாக்குதலுக்குப் பொறுப்பாக்கி குற்றஞ்சாட்டியது.

Europe1 இல், முன்னாள் பயங்கரவாத-தடுப்புப்பிரிவு நீதிபதி Marc Trévidic கூறுகையில், அவரின் நடவடிக்கை மீதான பொலிஸ் கட்டுப்பாடுகளால் விரக்தியுற்று வெறித்தனமாக அந்த துப்பாக்கிச் சூட்டை ஷெரிஃப் நடத்தி இருக்கலாமென தெரிவித்தார். “அதுவொரு திட்டமிட்ட தாக்குதல் இல்லை, கிறிஸ்துமஸ் சந்தையில் அவர்கள் ஏதோவொன்றை செய்ய விரும்பினார்கள், அவ்வாறில்லை என்றால் அவர்கள் சந்தை திறந்திருக்கும் போதே செய்திருப்பார்களே,” என்றார். “அன்று காலையில் என்ன நடந்ததோ அதைக் கொண்டு பார்க்கையில், அவர் வேட்டையாடப்படுவார் என்பது தெரிந்தே அவர் செய்தார் என்பதைக் கொண்டும் பார்க்கையில், இது பொறியில் சிக்கி விரக்தியுற்ற ஒருவரின் நடவடிக்கையாக உள்ளது. இறப்பதற்காக அவர் அந்த சதுக்கத்தில் தங்கியிருக்கவில்லை, அல்லது ஒருவேளை, வழமையான பயங்கரவாத சந்தேகத்திற்குரியவரை நாம் கையாளவில்லை”

இப்போதைக்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் அத்தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதலைக் குறித்து கிடைத்துள்ள ஆரம்ப விபரங்கள், பிரெஞ்சு அரசு சம்பந்தப்பட்டிருப்பதற்கான மிக தீவிர கேள்விகளை எழுப்புகிறது. ஜனவரி 2015 இல் சார்லி ஹெப்டோ க்கு எதிரான கௌச்சி சகோதரர்களது தாக்குதல்களில் இருந்து, ஐரோப்பாவில் நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல்களையும் போலவே, துப்பாக்கிச்சூடு நடத்திய இவரும் குற்றவாளியாக கருதப்பட்டு அரசால் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வந்தவராவார். இத்தகைய ஒரு நபர், இதுபோன்றவொரு படுகொலையை ஒழுங்கமைக்க பரந்தளவில் வெடிப்பொருட்களையும் தாக்கும் கத்திகளையும் திரட்ட முடிந்தது என்பதும், அதை செய்து முடித்து பாதுகாப்பு படைகளிடம் இருந்து தப்பிக்கவும் முடிந்தது என்பது விளங்கப்படுத்த முடியாததாக உள்ளது.

உண்மையில் IS அல்லது ஏனைய இஸ்லாமிய படைகள் அல்லது வலையமைப்புகள் மீது அனுதாபம் கொண்டு அதன் காரணமாக சேகட் இந்த தாக்குதலை ஒழுங்கமைத்திருந்தாலும், இதுவும் பிரெஞ்சு அரசின் உயர்மட்ட அதிகாரிகளை உடந்தையாக்கி விடும். Lafarge கட்டுமான நிறுவனம் வெளிப்படுத்தியதைப் போல, சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு முன்னதாக, பிரான்ஸ் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான பிரெஞ்சு நடவடிக்கைகளின் பாகமாக பத்து மில்லியன் கணக்கான யூரோக்களை சிரியாவில் உள்ள Lafarge ஆலை மூலமாக IS வலையமைப்புக்குப் பாய்ச்சி இருந்தது.

எவ்வாறிருப்பினும் இப்போது, என்ன தெளிவாகிறது என்றால், பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் “மஞ்சள் சீருடையாளர்கள்" அவர்களின் போராட்டங்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கோருவதற்காக இத்தாக்குதலைக் கைப்பற்றி வருகிறது. Sud வானொலிக்கு வலதுசாரி குடியரசு கட்சியின் (LR) Damien Abad கூறுகையில், “நமக்கு அமைதிக்கான ஓர் அழைப்பு அவசியப்படுகிறது, பாதுகாப்பை உறுதிப்படுத்த நமது பொலிஸ் படைகளை நாம் பாதுகாக்கவும் வேண்டியிருக்கும் என்பதால் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் ... பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நமது பொலிஸ் படைகள் முழுமையாக அணிதிரட்டப்படவில்லை என்றால் பிரெஞ்சு மக்களால் புரிந்து கொள்ள முடியாது,” என்றார்.

நவ-பாசிசவாத செய்தி தொடர்பாளர் Sébastien Chenu, “வீதிகளிலும் சதுக்கங்களிலும் பிரெஞ்சு மக்கள்" இருந்தால், அது "சிரமமாக" இருக்கும் என்று எச்சரித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஒரு பயங்கரவாத மனிதவேட்டையோடு நாம் ஓர் அவசரகால நிலைமைக்குள் சென்றால், அது மிகவும் பதட்டமாக இருக்கும், விடயங்களை ஒன்றோடொன்று ஒன்றுகலப்பது சரியாக இருக்காதென நான் நினைக்கிறேன் ... இப்போது பயங்கரவாத அச்சுறுத்தல் தான் அதிதீவிரமாக பகிரங்கமாக மாறிக் கொண்டிருக்கிறது, அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது,” என்றார்.

மக்ரோனுக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் தொடங்கியதில் இருந்தே அவசரகால நெருக்கடி நிலைக்குத் திரும்ப வேண்டுமென்ற அழைப்புகள் உள்ளன என்பதோடு, அவசியமானால் 2015 மற்றும் 2017 க்கு இடையே அரசாங்கம் திணித்த அவசரகால நெருக்கடி நிலைக்கு மீண்டும் திரும்புவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக காஸ்ட்னர் சுட்டிக் காட்டியுள்ளார். மீண்டும் இது அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காலவரையின்றி நீக்கவும் மற்றும் சமூக போராட்டத்திற்குத் தடைவிதிக்கவும் மற்றும் ஒடுக்கவும் பரந்த அதிகாரங்களை வழங்க அரசாங்கத்தை அனுமதிக்கும்.

அதேநேரத்தில், இத்தாக்குதல் குறித்து "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் "சூழ்ச்சி தத்துவங்களை" வெளியிடுவதாக கண்டிக்கும் சரமாரியான குற்றச்சாட்டுக்களையும் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதலின் நோக்கத்தைப் புரிந்து கொள்வது சிரமமில்லை. இது போராட்டக்காரர்கள் அனுபவித்து வருகின்ற பெருவாரியான மக்கள் ஆதரவைப் பலவீனப்படுத்துவதற்கும் மற்றும் மக்ரோனுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்பினும் அதிக மூர்க்கமாக ஒடுக்குவதற்கு வழி வகுப்பதற்குமான ஒரு முயற்சியாகும்.

சில பேஸ்புக் குழுக்களின் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களில் 55 சதவீதத்தினர், ஸ்ராஸ்பேர்க் தாக்குதல் அவர்களுக்கு எதிராக அரசால் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டதாக நம்புகின்றனர் என்பதை இணைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஒருவர் எழுதினார்: “ஸ்ராஸ்பேர்க்கில் நேற்று நடந்த தாக்குதல் ஓர் ஆத்திரமூட்டல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? போராடுவதில் இருந்து நம்மை தடுப்பதற்குக் குறைந்தபட்சம் மக்ரோனுக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்திருக்கும். எனக்குப் புரியவில்லை, அந்த நபர் கிறிஸ்துமஸ் சந்தைக்குச் சென்று பலரைக் கொன்றார் ஆனால் அங்கே ஒரேயொரு பொலிஸ்காரர் கூட இல்லையா? அதுவொரு சதித்திட்டம்.” இதுபோன்ற கருத்துக்கள், ஊடங்களால், முடிவின்றி பழிசுமத்துவதற்காக கைப்பற்றப்படுகின்றன.

ஸ்ராஸ்பேர்க்கில் என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை என்றாலும், இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கான அரசியல் பொறுப்பும் மற்றும் அவசரகால நிலைக்கான அரசியல் செயல்பாடுகளும் தெளிவாக உள்ளன. சிரியாவில் ஏகாதிபத்திய போரானது, பயங்கரவாத வலையமைப்புகளைப் பெருக்கி உள்ளன, இவை தான் தொழிலாள வர்க்கத்தின் உள்நாட்டு சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பைப் பிரதான இலக்காக கொண்ட, ஜனநாயக உரிமைகள் மீதான பரந்தளவிலான தாக்குதல்களுக்கு சாக்குபோக்குகளாக சேவையாற்றின.