ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Millions of Indian workers hold two-day general strike against Modi government

மோடி அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களின் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம்

By our correspondents
9 January 2019

தொழிலாள வர்க்கத்தின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் பெருவணிகத் தாக்குதலுக்கு எதிராகப் போராடுவதை முன்னிட்டு, இந்தியா எங்கிலுமாக 180 மில்லியனுக்கு (18 கோடிக்கு) அதிகமான தொழிலாளர்கள் இரண்டு-நாள் பொது வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாநில அரசாங்கங்கள் விடுத்த அச்சுறுத்தல்களான பணிநீக்கம் மற்றும் சம்பள வெட்டு போன்றவற்றை தகர்த்தெறிந்து தேசியளவிலான இந்த வெளிநடப்பில் தம்மை இணைந்து கொண்டுள்ளனர்.

இன்றும் தொடர்வதான இந்த மாபெரும் வேலைநிறுத்தம், மோடியின் இந்து மோலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கம் குறித்த, மற்றும் வேலைகள், வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அதன் அதிகரித்துவரும் தாக்குதல் குறித்த வெகுஜன எதிர்ப்பின் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாகும்.

மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராட, தாங்கள் தயாராக இருப்பதை ஏற்கனவே மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நிரூபித்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களும், அவற்றைக் கட்டுப்படுத்தும் கட்சிகளும், பரவலான தொழிலாளர் அதிருப்தி மற்றும் கோபத்தை, வரவிருக்கும் ஏப்ரல்-மே தேசியத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கு திசைதிருப்பும் முனைப்புடனேயே இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது CPI, மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் முறையே இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions - CITU) மற்றும் அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress-AITUC) ஆகியவை இந்த வேலைநிறுத்தத்தில் ஒரு முக்கிய பங்காற்றின.


கொல்கத்தாவில்
சணல் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்டம்

இந்த வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைப்பதில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Indian National Trade Union Congress-INTUC) மற்றும் வலதுசாரி தமிழ் வகுப்புவாத கட்சியான திமுக (Dravida Munnetra Kazhagam-DMK) உடன் இணைந்த தொழிலாளர் முன்னேற்ற முன்னணி (Labour Progressive Front-LPF) ஆகியவற்றுடன் CITU உம் AITUC யும் இணைந்து கொண்டன.

இந்த முதலாளித்துவக் கட்சிகளுக்கு “இடது” மற்றும் “தொழிலாளர்-சார்பு” சான்றுகளை வழங்கிய ஸ்ராலினிசவாதிகள், மோடியின் பொருளாதார நடவடிக்கைகளுடன் எந்தவித வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அமெரிக்கா உடனான இந்தியாவின் நெருங்கிய இராணுவ-மூலோபாய பங்காளித்தனத்திற்கும் அவர்கள் உறுதுணையாக உள்ளனர்.

வங்கிகள், காப்பீடு, போக்குவரத்து, தபால், அங்கன்வாடி (குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்), சுரங்கங்கள் மற்றும் பல்வேறு அரசாங்க அலுவலகங்கள் என முக்கிய பொருளாதார துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றைய வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டனர்.

செய்தி அறிக்கைகளின் படி, வடக்கில் ஹரியானா மற்றும் பஞ்சாப், வடகிழக்கில் அசாம், மேகாலயா மற்றும் மணிப்பூர், கிழக்கில் மேற்குவங்கம், பீஹார், ஒடிஸா மற்றும் ஜாகர்ஹந்த், தெற்கில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா, மேற்கில் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மற்றும் கோவா, மற்றும் மத்திய இந்தியாவில் சத்தீஸ்கர் உட்பட, நாடு முழுவதிலுமாக மாநிலங்களில் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இவ்வேலைநிறுத்தம், கேரளா, மேற்குவங்கம், அசாம், கர்நாடகா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளையும், அணிவகுப்புகளையும் மற்றும், சாலை மற்றும் ரயில் மறியல்களையும் ஒழுங்கமைத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் இந்த வேலைநிறுத்தம் பகுதியளவாகவே அனுசரிக்கப்பட்டது என்றாலும், அம்மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் முழு அடைப்பு போராட்டமாக இருந்தது.

கேரளாவில், பொது மற்றும் தனியார் போக்குவரத்து மாநில போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது என்பதுடன், மூன்றுச்சக்கர வாகனங்களும் ஏனைய டாக்ஸி சேவைகளும் எஞ்சிய போக்குவரத்தையும் நிறுத்தின. மேலும், வங்கிகள், காப்பீடு, வரி, சுங்க மற்றும் தனி வரித்துறை அலுவலகங்கள், அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகம் மற்றும் தபால் சேவைகள் உட்பட மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசுக்கு சொந்தமான துறைகளும் கூட தீவிரமாக பாதிப்படைந்தன.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், 32,000 க்கு அதிகமான மும்பை பொது போக்குவரத்து தொழிலாளர்கள் உயர் ஊதியம் மற்றும் நல்ல வேலை நிலைமைகளுக்கு கோரிக்கை விடுத்து அதே நாளில் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியிருந்தனர். அதே வேளையில், பிஜேபி தலைமையிலான மாநில அரசாங்கம், கடுமையான அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (Essential Services Maintenance Act) பயன்படுத்தி நகரின் 27 பேருந்து பணிமனைகளில் எந்தவொரு பேருந்தும் ஓடாமல் நிறுத்தி வைக்கப்படக் கூடாது என்று உத்தரவிட்டு அதற்கு எதிர்வினையாற்றியது.

விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலையில் ஒட்டுமொத்த ஒப்பந்தத் தொழிலாளர்களும் பாதியளவிலான நிரந்தர தொழிலாளர்களும் தேசியளவிலான வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டனர். விசாகபட்டினம், தென் இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய தொழில்துறை மையமாகும்.

இந்த தொழில்துறை நடவடிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த பங்கேற்பு எஃகு தொழிற்சாலை நிர்வாகத்தின் பணிநீக்க அச்சுறுத்தல்களை தகர்த்தெறிவதாக இருந்தது. இந்தியாவில் பொது மற்றும் தனியார் துறைகளில் குறைவூதிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் பயன்பாடு பரவலாக இருக்கிறது என்பதுடன், இலாபங்களை முடுக்கிவிடவும், ஊதியங்களையும் நிலைமைகளையும் குறைக்கவும் மற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக பிளவுபடுத்தவும் அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.


தமிழ்நாட்டில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள்

வகுப்புவாத அஇஅதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam-AIADMK) தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கமும், திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்குவங்க அரசாங்கமும், இந்த பொது வேலைநிறுத்தத்தில் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பார்களேயானால் அவர்கள் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளன.

பிஜேபி தலைமையிலான கோவா அரசாங்கம், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (Essential Services Maintenance Act) பயன்படுத்தி மாநிலத்தில் அனைத்து போக்குவரத்து சேவைகளிலும் வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்திருந்தது. அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான கர்நாடக அரசாங்கம் அம்மாநிலத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது.

CITU உம் AITUC யும், மோடி அரசாங்கத்தின் மீதான தமது வழமையான வாய்வீச்சு கண்டனங்களை விடுத்தபோதிலும், இந்த அமைப்புக்கள் யாவும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் அணிதிரள்வுக்கும் விரோதமானவையாகவே உள்ளன. அதேபோல, ஸ்ராலினிச தொழிற்சங்க கூட்டமைப்புக்களும் கூட, பிஜேபி தலைமையிலான மத்திய அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை நாடுவதற்காக இந்த பொது வேலைநிறுத்தத்தை பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கின்றன.

CITU இன் ஒரு அறிக்கை, மோடி அரசாங்கம், “முத்தரப்புவாதத்தை கீழறுத்துவிட்டது,” எனவும், “மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தொழிலாளர் மாநாட்டை (ILC) (முத்தரப்பு அமைப்பு)” அது நடத்தவில்லை என்றும் குறை கூறியது. AITUC யும் இதையே எதிரொலித்தது, அத்துடன் அதன் பொதுச் செயலர் அமர்ஜீத் கவுர், மோடி மற்றும் அவரது பிஜேபி இன் பங்கிற்கு “தொழிற்சங்கங்களை சென்றடைய வைக்கும்” “எந்தவித முயற்சியும் அங்கு இல்லை” என்று புலம்பினார். சிபிஎம் ஆளும் கேரளாவில், தொழிற்சங்கங்கள், சுற்றுலாத் துறை பிரிவில் நிகழும் எந்தவொரு நிறுத்திவைப்பும் நிதி ரீதியான இழப்புக்களுக்கான சாத்தியத்தை விளைவிக்கும் எனக் குறிப்பிட்டு, இந்த வேலைநிறுத்தத்தில் இருந்து சுற்றுலாத் தொழிலாளர்களுக்கு மட்டும் விலக்களித்திருந்தது.

CITU, மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியிடமும் நேற்றைய வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக விண்ணப்பம் செய்திருந்தது. CITU இன் மேற்குவங்க குழு தலைவர் சுபாஷ் முகர்ஜி, வலதுசாரி, கம்யூனிச எதிர்ப்பு முதலமைச்சரை வலியுறுத்தி, அவர், “முன்மொழியப்பட்ட பொது வேலைநிறுத்தத்திற்கு சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், ஜெஸ்ஸாப், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், டன்லப் போன்ற மூடிய நிறுவனங்களைத் திறப்பது மற்றும் கொல்கத்தா மற்றும் ஹால்தியா துறைமுகங்களைப் புதுப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்குமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று எழுதினார்.

பானர்ஜி, இவ்வேலைநிறுத்தத்தைக் கண்டித்து அனைத்து மாநில அரசாங்க ஊழியர்களையும் அதில் பங்கேற்க விடாமல் தடுத்த நிலையில், ஸ்ராலினிசவாதிகள் அவரிடம் இந்த கோழைத்தனமான கோரிக்கையை விடுத்தனர். உண்மையில், மேற்குவங்கத்தில் சிபிஎம் தலைமையிலான முந்தைய இடது முன்னணி அரசாங்கங்கள் “திறந்த சந்தை” சீர்திருத்தங்களை இரக்கமற்ற வகையில் திணித்தமை தான், 2011 இல் பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள், கொல்கத்தா மற்றும் சென்னையில் வேலைநிறுத்தக்காரர்களிடம் இவ்வேலைநிறுத்தம் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) பகுப்பாய்வின் வங்காள மற்றும் தமிழ் மொழி பதிப்புக்களை விநியோகித்ததுடன், மோடி அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்துப் போராட ஒரு சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கின் தேவை இருப்பது பற்றியும் விவாதித்தனர்.

ரமேஷ் குமார்

ரமேஷ் குமார், 55 வயதானவர், சென்னையில், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) பணிபுரியும் இவர், “மோடி அரசாங்கத்தின் ஆட்சி பயங்கரமானதாக உள்ளது என்பதுடன், அதனால் ஏழை மக்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், காங்கிரஸ் கட்சியும் சரி பிஜேபி யும் சரி எல்லாம் ஒன்று தான்” என்றும் WSWS இடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை “பரிசீலிக்கும்” என்பதான சில நப்பாசைகளை ஸ்ராலினிசவாதிகள் ஊக்குவித்து வருவதை குமார் வெளிப்படுத்தினார். இருப்பினும், காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிசவாதிகளின் வரலாற்றுப் பதிவுகள், மற்றும் தொழிலாளர்களின் அரசாங்கம் மற்றும் சோசலிசக் கொள்கைகளின் தேவை பற்றிய விவாதத்திற்குப் பின்னர், அவர் மேலும் இவ்வாறு தெரிவித்தார்: “தொழிலாளர்களின் அரசாங்கம் அனைவருக்குமான சிறந்த பொருளாதார நிலைமைகளை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

மாநில போக்குவரத்து தொழிலாளி ஒருவர், கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஒழுங்கமைத்த இந்த வேலைநிறுத்தத்தை விமர்சித்தார். தமிழ்நாட்டில் எதிர்கட்சியான திமுக முன்னர் பிஜேபி உடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டி, தற்போது “ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி” ஆக காங்கிரசுடன் திமுக கூட்டு சேர்வதை கண்டித்தார். ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக போராடுவது குறித்த தேவையை அவர் வரவேற்றதுடன், “இது பற்றி எவரும் பேசவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

சத்யசீலன்

சத்யசீலன், ஊபர் கார் ஓட்டுநரும், CITU வின் முன்னாள் உறுப்பினருமான இவர், அனைத்து தொழிற்சங்கங்களையும் கண்டனம் செய்தார். “CITU அதன் அலுவலக உதவியாளர்களை மட்டும் தான் கவனித்து வந்தது, அடிமட்ட ஊழியர்களின் குறைகள் குறித்து அதிக கவனத்தை அது செலுத்தவில்லை.

“தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக இல்லை. ஊபர் மற்றும் ஓலா கார் ஓட்டுநர்களை பொலிசார் துன்புறுத்திய போது, எங்களது பாதுகாப்பிற்காக தொழிற்சங்கங்கள் முன்வரவில்லை என்பதால் CITU ஐ விட்டு வெளியேற நான் முடிவு செய்தேன். இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத பல தொழிலாளர்கள் உள்ளனர், ஏனென்றால், முக்கியமாக தொழிற்சங்கங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் கூறும் சர்வதேச அளவிலான கட்சி மற்றும் உங்களது வலைத் தளத்தை நான் விரும்புகிறேன், மேலும் உங்களது வலைத் தளத்தை பார்ப்பேன்.”

ஒரு அங்கன்வாடி (குழந்தை பாதுகாப்பு) பணியாளர் இவ்வாறு கூறினார்: “நான் ஒரு ஆசிரியையாக இந்த சேவையில் 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனது மாத ஊதியம் 12,500 ரூபாயாகும் (178 அமெரிக்க டாலர்), ஆனால் 12 ஆண்டுகள் வரை அனுபவமிக்க ஒரு உதவியாளர் மாத ஊதியமாக 7,000 ரூபாயை (100 டாலர்) மட்டுமே பெறுகிறார். அங்கன்வாடி ஊதியம் ஆரம்பத்தில் வெறும் 2,500 ரூபாயாக இருந்தது, என்றாலும் எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பான அரசாங்க வேலையைப் பெறுவதற்கு நோக்கம் கொண்டே நான் இந்த வேலையை தேர்ந்தெடுத்தேன்.”


சாந்தனு மொண்டல்

கொல்கத்தாவில், அஞ்சல் துறை ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பில் உறுப்பினராகவுள்ள சாந்தனு மொண்டல் பின்வருமாறு தெரிவித்தார்: “2004 ம் ஆண்டு அவசர சட்ட நடைமுறையின் விளைவாக, பொதுத்துறை தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தை இழந்தவர்கள் ஆயினர். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் அமல்படுத்தவில்லை. எனவே, ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாத ஊதியமாக 18,000 ரூபாய் (257 டாலர்) வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். தபால் துறையில் பல ஒப்பந்த மற்றும் தினசரி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்ற நிலையில், அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வெறும் 41.75 ரூபாய் என்ற அற்ப அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது.”

அலஹாபாத் வங்கி ஊழியர்கள் சங்க உறுப்பினரான சுகோமல் ஷாத், “யார் ஆட்சிக்கு வந்தாலும், முந்தைய, அடுத்தடுத்த அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட எங்களது அனைத்து கோரிக்கைகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எதிர்காலம் நிச்சயமற்றது என்றாலும், எங்களது கோரிக்கைகள் நியாயமானவை” என்று கூறினார்.