ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian teachers, government workers launch indefinite strike in Tamil Nadu

இந்திய ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் தமிழ்நாட்டில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்

By Deepal Jayasekera,
25 January 2019

இந்தியாவில் மற்றுமொரு மிகப்பெரிய தொழிலாள வர்க்க போராட்டம் வெடித்துள்ளது, இதில் 700,000 ஆசிரியர்கள் மற்றும் மாநில அரசாங்க பணியாளர்கள் தென் மாநிலமான தமிழ்நாட்டில், கடந்த செவ்வாய் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒய்வு ஊதிய வெட்டுகளைத் திரும்ப பெறுதல், சம்பள உயர்வு, ஆசிரியர்கள் மற்றும் பால்வாடி (சிறுவர் பராமரிப்பு நிலைய) ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தம் செய்தோர், வலதுசாரி வகுப்புவாத அ.தி.மு.க. தலைமை மாநில அரசாங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை, மிரட்டல்களை மீறி தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டனர். புதன் அன்று, சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை அன்றே வேலைக்கு திரும்ப உத்தரவிட்டது — இது அரசாங்கத்தின் பழிவாங்கலுக்கான இன்னொரு எச்சரிக்கையாகும்.


தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில்

இந்த வேலைநிறுத்தம், பல தசாப்த காலமாக மோசமடைந்து வரும் நிலைமைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக வளர்ந்து வரும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியின் பாகமாகும். மெக்சிக்கோ-அமெரிக்கா எல்லையில் பல ஆயிரக்கணக்கான மத்தாமோரொஸ் (Matamoros) "மக்கில்லாடோரா"  (Maquiladora) தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், லாஸ் ஏஞ்செல்சல்ஸ் ஆசிரியர்கள் போராட்டம் மற்றும் பிரான்சில் மஞ்சள் சீருடை போராட்டமும் இதில் அடங்கும்.

தெற்காசியா முழுவதும் தொழிலாளர்கள் தீர்க்கமான தொழிற்துறை நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த மாதம் ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தில் இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கூலியை இரட்டிப்பாக்க கோரினர் மற்றும் கூலிஉயர்வுக்காக இந்த மாதம் எட்டு நாள் வேலைநிறுத்தத்தில் பங்களாதேஷில் ஆடை துறை தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

சற்று இரண்டு வாரங்கள் முன்பு, இந்தியா முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஜனவரி 8 மற்றும் 9 அன்று பிரதமர் மோடியின் இந்து மேலாதிக்க பா.ஜ.க அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு "சீர்திருத்தம்" மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரண்டனர். கடந்த வருடம், ஓரகடத்தில் (சென்னையின் அருகில்) மூன்று முக்கிய வாகன தொழிசாலையை சேர்ந்த சுமார் 3000 தொழிலாளர்கள் —யமாஹா, ராயல் என்பீல்ட் மற்றும் MSI— இரண்டு மாத கால வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ஆசிரியர்களும் ஏனைய மாநில அரசாங்க ஊழியர்களும் CPS (பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை) திரும்பப்பெற வேண்டும் என்றும் NPS (தேசிய ஓய்வு ஊதிய திட்டத்தை) திணிப்பதை கைவிட வேண்டும் என்றும் விரும்புகின்றனர், இவை அவர்களின் சம்பளத்தை வெட்டுவதுடன் ஓய்வு ஊதிய நிதியை பங்கு சந்தைக்கு அளிக்கின்றன.

பா.ஜ.க தலைமை அரசாங்கத்தால், NPS, அறிமுகப்படுத்தப்பட்டு 2014 இல் திணிக்கப்பட்டது. அன்று முதல் அனைத்து மத்திய மாநில அரசாங்க ஊழியர்களுக்கும் தங்களின் முந்தைய ஒய்வு ஊதிய உரிமை பறிக்கப்பட்டது மேலும் அவர்களது 10 சதவீத சம்பளங்கள் இலாபத்தை மற்றும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கொழுக்க வைக்கும் ஒய்வு ஊதிய நிதிக்கு திருப்பிவிடப்பட்டது.

இந்த ஏழு அம்ச கோரிக்கைகள் உள்ளடக்கியவை, 21 மாத சம்பள பாக்கியை வழங்கல், பகுதி நேர மற்றும் பால்வாடி ஆசிரியைகளுக்கு நிரந்தர பணி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஆகியன ஆகும். நிரந்தரமற்ற தொழிலாளர்கள் தொடர்ந்து அதிகமாக சுரண்டப்பட்டு வருகின்றனர், "ஒப்பந்தம்" “பகுதி நேரம்" மற்றும் "பயிற்சி" போன்ற பிரிவுகளின் கீழ் பொது மற்றும் தனியார் துறைகளில் வறுமை நிலை கூலிகளை திணிக்க மற்றும் தொழிலாள வர்கத்தை இவ்வாறு பிரிக்கின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் மாநிலம் முழுவதும் பல பள்ளிகளை மூடியுள்ளது. மற்ற அரசாங்க துறைகளில் இருக்கும் ஊழியர்கள் வரி, சுகாதாரம், கிராம முன்னேற்றம் மற்றும் விவசாயம் போன்றவர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர்.


மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர்

பெரும் திரளான கைதுகளையும் மீறி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோர், தலைநகரம் சென்னை மற்றும் இதர முக்கிய நகரங்களான மதுரை, கோவை, விருதுநகர், இராமநாதபுரம், சிவங்கங்கை, தேனி, வேலூர் மற்றும் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தனர்.

ஆனால், தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போர்குணத்தால் இந்த நடவடிக்கைக்கு தள்ளப்பட்ட தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்க அணிதிரட்டலை எதிர்க்கின்றன. (JACTTO மற்றும் GEO) தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, அ.தி.மு.க அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுப்பதன் மூலம் அதன் கொள்கைகளை திரும்ப பெற வைக்க முடியும் என்று கோருகின்றன.

தொழிலாளர்கள் எதிர்கொள்வது அதன் நேரெதிர் - அது அரசாங்கத்தின் ஒடுக்குமுறை ஆகும். திங்களன்று, காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் ஒரு நாள் முன்பு, அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேலைநிறுத்தம் செய்வோரின் கூலியை வெட்டுதல் மற்றும் அனைத்து விடுப்புகளையும், மருத்துவ காரணம் தவிர்த்து, இரத்து செய்து உத்தரவிட்டார். அரசு கல்வித்துறை, கருங்காலிகளை வேலைக்கு வைத்து, தற்காலிக வேலைக்கு, வெறும் 7500 ரூபாய் ($106) மாத சம்பளத்துக்கு அவர்களை வைக்க முயற்சி எடுத்துள்ளது.

முந்தைய அ.தி.மு.க மாநில அரசாங்கம், 2003 இல் வேலைநிறுத்தம் செய்த அரசாங்க ஊழியர்கள் மீது, கொடூரமான தாக்குதல் நடத்தியது, பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் கசப்பான அனுபவங்கள் பெற்றுள்ளனர். தொழிலாளர்கள் திரும்ப திரும்ப CPSக்கு எதிராக போராட முன் வந்துள்ளனர். உதாரணமாக, பிப்ரவரி 2016 இல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர், ஆனால் TNGEA, 68 தொழிற்சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பு, எந்த கோரிக்கையும் நிறைவேறாமல் பத்து நாட்களில் அதனை முடிவுக்கு கொண்டு வந்தது.

தொழிற்சங்கங்கள் தங்கள் காட்டிக்கொடுப்பை தேர்தல் மற்றும் பள்ளி பரீட்சைக்கான அரசாங்க ஊழியர்களின் கடமைகளை காரணம் காட்டி நியாயப்படுத்தின, மேலும் அரசாங்கம், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து சிந்திக்க நேரம் கொடுப்போம் என்றும் கூறின. JACTTO இந்த வேலை நிறுத்தத்தில், பங்கு பெற மறுத்தது, 2016 இல் வரவிருக்கும் மாநில அரசாங்கம் தனது வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்று கூறியது.

மத்தியில் மற்றும் மாநில அளவில் இரண்டிலும் வந்த அடுத்தடுத்த அரசாங்கங்கள் தொடர்ந்து சமூக தீங்கு விளைவிக்கும் "பொருளாதார-சீர்திருத்தங்களை" தொடர்ந்தன, 2008 நிதி நிலைமுறிவிலிருந்து தொடங்கி ஆழம் அடைந்து வரும் இந்திய மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது ஏற்றுவதன் மூலம் இதை தொடர்ந்தன.

CPS போன்ற மிகப்பெரும் "சீர்திருத்த" நடவடிக்கைகள் உலகம் முழுவதும் IMF (சர்வதேச நாணய நிதியம்) இன் ஆணையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை எதிர்வரும் பொது தேர்தலில் ஆளும் மோடி அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் திரும்ப பெறப்பட மாட்டாது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் - இந்திய ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய கட்சி- மற்றும் பிராந்திய முதலாளித்துவ கட்சிகளான தி.மு.க. மற்றும் தமிழ்நாட்டில் தற்போது ஆளும் அதன் எதிரி கட்சியான அ.தி.மு.கவும் வணிகசார்பு நடவடிக்கைகளை சமமாக நிறைவேற்ற காத்து கிடக்கின்றனர்.

இந்த தாக்குதல்களை, மெக்சிக்கோ, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் உலகம் முழுவதும் தோற்கடிக்க ஒரே ஒரு மூலோபாயம், தொழிலாள வர்க்கத்தை பிற்போக்கு முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக சுயாதீனமாக அரசியல் அணிதிரட்டல் செய்வது மற்றும் சர்வதேச வர்க்க போராட்டத்தின் அடிப்படையில் தான் உள்ளது.

இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச கட்சிகளான CPM மற்றும் CPI எழுந்து வரும் தொழிலாளர்களின் போராட்டத்தை காங்கிரஸின் பின்னோ அல்லது பிராந்திய முதலாளித்துவ கட்சிகளின் பின்னோ திருப்பி விட முயற்சிக்கின்றன (ஏதேனும் ஒரு முதலாளித்துவ அரசாங்கம்) எதிர்வரும் தேர்தலில் வகுப்புவாத பா.ஜ.கவை தோற்கடிப்போம் என்ற போர்வையில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது.

இதே ஸ்ராலினிச கட்சிகள் 2011 இல் அ.தி.மு.கவுடன் தமிழக தேர்தலில் கூட்டணி வைத்தன, 2003 இல் பெரும் திரளாக அரசு ஊழியர்களை அவர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்த பின்பும் இது நடந்தது.

உலக சோசலிச வலைத் தளம் ஜனவரி 12 அன்று இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தின் அரசியல் முக்கியத்துவம் குறித்து வெளியிட்ட முன்னோக்கில் கூறியவாறு, "அனைத்து கட்சிகளும் இந்திய முதலாளித்துவத்தின் உந்துதலான இந்தியாவை பூகோள மூலதனத்துக்கு மலிவு விலை கூலி தளமாக அமைக்க முக்கிய பங்கு வகுத்துள்ளன. 1991 மற்றும் 2008க்கு இடையில் CPM மற்றும் CPI, காங்கிரஸ் தலைமையில் தொடர் அரசாங்கங்களை தக்க வைத்தன, இந்த அரசாங்கம் புதிய பொருளாதார கொள்கைகளை மற்றும் வாஷிங்டன் உடனான நெருக்கத்தை முன்னெடுப்பதில் தலைமை வகித்துள்ளது."

இந்திய தொழிலாளர்கள், இலங்கையில் அபபோட்ஸ்லேக் தேயிலை பெருந்தோட்ட தொழிலாளர்களின் உதாரணத்தை பின்பற்றவேண்டும், அவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ், பல தசாப்த கொடூர சுரண்டலை உத்திரவாதம் செய்த தொழிற்சங்கங்களுக்கு எதிராக, நடவடிக்கை குழுக்களை நிறுவியுள்ளனர். அமெரிக்காவில், வாகனத் தொழிலாளர்களும் ஆலை மூடல் மற்றும் ஆயிரக்கணக்கான வேலையிழப்புகளுக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

அது போன்ற பணியிட சாமானிய தொழிலாளர்களின் குழுக்கள், இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மற்றும் பூகோள முதலாளித்துவ உற்பத்திமுறை மூலமாக அவர்களுடன் நெருக்கமாக இணைந்துள்ள உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் சேர்ந்து தொழிலாள வர்க்க எதிர்தாக்குதலை தொடுக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, தொழிலாளர்களின் ஆட்சிக்கான போராட்டத்தை முன்னெடுக்க, இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர கட்சி தேவை, அது சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்தில் தங்கி இருக்க வேண்டும், உலக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து மூலோபாய படிப்பினைகளையும் உட்கொண்டிருக்க வேண்டும். அத்தகைய கட்சி தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவாகும்.

ஆசிரியரின் மேலதிக பரிந்துரைகள்

வேலைநிறுத்தம் செய்யும் தமிழ்நாடு ஆசிரியர்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களை கண்டனம் செய்கின்றனர்

[25 January 2019]

இந்தியாவின் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தின் அரசியல் முக்கியத்துவம் [PDF]

[12 January 2019]