ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Striking Tamil Nadu teachers and government employees defy state repression

இந்தியா: வேலைநிறுத்தம் செய்யும் தமிழ்நாடு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அரசு அடக்குமுறையை சவால் செய்கின்றனர் 

By Arun Kumar
28 January 2019

தமிழ்நாட்டில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் ஏனைய அரசு பொதுத்துறை ஊழியர்களும் ஜனவரி 22-ம் தேதி தொடங்கியதான வெளிநடப்பு, காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டமாக இன்றளவிலும் தொடர்கிறது. இதனால், தென்னிந்திய மாநிலம் முழுவதிலுமாக 70 சதவிகித ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கண்ணியமான ஓய்வூதியங்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசாங்கத்துடன் நடத்தப்படும் ஒரு நீண்டகால மோதலாக உள்ளது.

இது குறித்து, வலதுசாரி வகுப்புவாத அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam – AIADMK) தலைமையிலான மாநில அரசாங்கம், மூத்த தொழிற்சங்க அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தக்காரர்களை கைது செய்தும், இன்றே வேலைக்கு திரும்பாத வேலைநிறுத்தக்காரர் எவரையும் பணிநீக்கம் செய்ய போவதாகவோ அல்லது கட்டாய இடமாற்றம் செய்ய போவதாகவோ அச்சுறுத்தியும் பதிலிறுத்துள்ளது. 2003ல், ஓய்வூதிய வெட்டுக்கள், மற்றும் ஏனைய நலன்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் குறித்து வேலைநிறுத்தம் செய்த கிட்டத்தட்ட 200,000 ஆசிரியர்களை மாநில அரசாங்கம் பணிநீக்கம் செய்தது.

ஊடக அறிக்கைகளின் படி, 450 க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு, சட்டவிரோதமாக அணிதிரளுதல், பொதுமக்களுக்கு தொந்தரவளித்தல் மற்றும் ஏனைய போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்கள் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்கின்றனர். மேலும், தொழில்துறை நடவடிக்கையை கட்டுப்படுத்தும் தமிழ்நாடு ஆசிரியர்கள் அமைப்புக்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் அமைப்புக்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (Joint Action Council of Tamil Nadu Teachers’ Organisations and Government Employees’ Organisations-JACTTO-GEO) பதினான்கு மூத்த அதிகாரிகளும் கூட பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


ஜனவரி 24 அன்று போராட்டம் செய்யும் தமிழ்நாடு ஆசிரியர்கள்

பங்குசந்தைக்காக பட்டியலிடப்பட்டு ஊழியர்களின் ஊதியங்களில் இருந்து தொகையை பிடித்தம் செய்வதான, பிற்போக்குத்தன 2014 பங்களிப்பு ஓயுவூதியத் திட்டம் (CPS) குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாநில அரசாங்க ஊழியர்கள் இடையே வளர்ந்துவரும் எதிர்ப்பிற்கு பதிலிறுக்கும் விதமாகவே JACTTO-GEO அமைப்பு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

போராட்டக்காரர்கள், முந்தைய, அரசாங்க நிதியளிப்பிலான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த விரும்புவதுடன், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வின்படி, 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்கிடவும் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் அவர்களது சக ஊழியர்களுக்கு ஈடாக சமளவு ஊதியம் வழங்கிடவும், ஆசிரியர்கள் மற்றும் பால்வாடி (சிறுவர் பராமரிப்பு நிலைய) ஊழியர்களை நிரந்தரமாக்கிடவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆசிரியர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற மெட்ராஸ் உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசாங்கம் கிட்டத்தட்ட 1,000 ஆசிரியர்களுக்கு எச்சரிக்கைக் குறிப்புக்களை விடுத்துள்ளது. மேலும், இன்று பணிக்கு திரும்பும் எந்தவொரு ஆசிரியரும், எந்தவொரு எதிர்கால வேலைநிறுத்தத்திலும் பங்கேற்கமாட்டார் எனவும், எந்தவித ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாகமாட்டார் எனவும் உறுதியளிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோரப்படுவார் என்றும் அறியப்படுகிறது.

வேலைநிறுத்த முறிப்பாளர்களாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் மாநில அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த முறிப்பாளர்களுக்கு மாத ஊதியமாக 7,500 ரூபாய் (105 அமெரிக்க டாலர்) வழங்கப்படவுள்ளதாக கல்வித் துறை ஆரம்பத்தில் தெரிவித்தது என்றாலும், அதற்கு மிகக் குறைந்த ஆதரவே இருந்த நிலையில், வெள்ளியன்று அது 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

மீன்வளத் துறை மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சனியன்று அளித்த ஒரு 11 பக்க ஊடக அறிக்கையில், போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையை ஒரேயடியாக நிராகரித்தார். “கடுமையான நிதி பற்றாக்குறை காரணமாகவே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் கைவிட்டது… என்பதுடன், புதிய திட்டத்தை மீளப் பெறும் சாத்தியமும் இல்லை என்பதையும் அரசாங்கம் முடிவு செய்துவிட்டது” என்றும் அவர் அறிவித்தார்.

வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக, ஏழை மற்றும் பிற நலன்களைப் பெறுபவர்களை திருப்பும் ஒரு இழிவான முயற்சியாக, ஒட்டுமொத்த நிதியில் 70 சதவிகிதத்தை ஊதியங்கள், ஓய்வூதியங்கள், நிர்வாக நலன்கள் என மாநில அரசாங்கம் செலவு செய்யும் நிலையில், வெறும் 29 சதவிகித நிதி மட்டுமே மக்கள் நலத் திட்டங்களுக்காக எஞ்சுகிறது என்று அவர் கூறினார். போராட்டக்காரர்களின் “நியாயமற்ற” கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால், மாநில அரசாங்கம் அதிகளவு கடன் பெற நேரிடும் என்பதுடன், அதுவே வரிகளின் அதிகரிப்புக்கும் இட்டுச் செல்லும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

இந்த கூற்றுக்களுக்கு நேர்மாறாக, AIADMK அரசாங்கமும், அதன் சக மாநில அரசாங்கங்களும், மற்றும் இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான மத்திய அரசாங்கத்தையும் போல, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பெருவணிக முதலீட்டாளர்களுக்கு பல மில்லியன் டாலர் வரி சலுகைகளையும், பிற சலுகைகளையும் வழங்குகிறது. இத்தகைய “ஊக்குவிப்புக்கள்” மீதான செலவினங்கள், சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக, மற்றும் அரசாங்க நிதியளிப்பிலான ஓய்வூதியங்கள் மற்றும் கடுமையாக போராடிப் பெற்ற சமூக நலன்களை அழிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் மீது திணிக்கப்படுகிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எழுச்சியின் ஒரு பாகமாக இருக்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் உரிமைகள் மீதான அதிகரித்துவரும் அரசாங்கத்தின் தாக்குதல்களை மாற்றியமைக்க உறுதிபூண்டுள்ளனர். இருப்பினும், அவர்களது போராட்டம், தொழில்துறை நடவடிக்கையை தனிமைபடுத்தியுள்ள மற்றும், மேலும் கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன்படுத்தி அதை நிறுத்தி மற்றும் அதனை விற்கும் ஒரு ஒப்பந்தத்திற்கு பேரம் பேசவும் முனையும் தொழிற்சங்கங்களின் கைகளில் தான் இன்னமும் தங்கியுள்ளது.

இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளையும் அணிதிரட்டுவதை JACTTO-GEO தலைமை எதிர்ப்பதுடன், ஆற்றொணாநிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே முன்நிற்கிறது. இந்திய ஆளும் உயரடுக்கின் பாரம்பரிய கட்சியும் எதிர்கட்சியுமான காங்கிரஸூடன் இணைந்து, இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் DMK போன்ற பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் என அனைத்துமே, இந்திய முதலாளித்துவத்தையும், அதன் இலாப நோக்கம் கொண்ட தேவைகளையும் பாதுகாக்கின்றன.

தமிழ்நாடு ஆசிரியர்களும் மாநில அரசாங்க ஊழியர்களும், மெக்சிகோ-அமெரிக்க எல்லையில், ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்களை நேரடியாக எதிர்த்து, நல்ல ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் பெற சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் 70,000 மத்தாமோரொஸ் “மக்கில்லாடோரா” வாகன தொழிலாளர்களை உதாரணமாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர்களும் அரசாங்க ஊழியர்களும் தங்களது போராட்டத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டுமானால், தொழிற்சங்கங்களிடம் இருந்து அரசியல் மற்றும் அமைப்பு ரீதியிலான முறிவை ஏற்படுத்திக் கொண்டு, சுயாதீனமான சாமானிய ஊழியர்களின் நடவடிக்கை குழுக்களை அமைத்து, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டம் குறித்து பரந்தளவிலான தொழிலாளர்களின் அணிதிரள்விற்காக அவர்கள் போராட வேண்டும்.

தங்களது ஊதியத்தை இருமடங்காக உயர்த்தக் கோரி இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சென்ற ஆண்டு நடத்திய ஒன்பது நாள் வேலைநிறுத்தம், மற்றும் ஊதிய உயர்வுக்காக பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் இந்த மாதம் நடத்திய எட்டு நாள் வேலைநிறுத்தம், மேலும் மற்றொரு 150 மில்லியன் இந்திய தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் என அனைத்தும் தெற்காசிய தொழிலாளர்களின் போராட வேண்டும் என்ற தீர்மானத்தை நிரூபிக்கின்றன. இந்த போராட்டங்கள் அனைத்தையும் தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்தமையானது, அத்தகைய முதலீட்டாளர் சார்பு அமைப்புக்களிடம் இருந்து தொழிலாளர்கள் தங்களை முறித்துக்கொள்ள வேண்டிய தேவையை தெளிவுபடுத்திக் காட்டுகின்றது.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான புதிய தாக்குதலுக்கு சமிக்கை காட்டும் தமிழ்நாடு பணி நீக்கங்கள் [PDF]

[3 September 2003]

இந்தியாவின் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தின் அரசியல் முக்கியத்துவம் [PDF]

[12 January 2019]