ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan plantation workers oppose company-union attempts to impose sell-out

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் விற்றுத்தள்ளும் முயற்சிகளை எதிர்க்கின்றனர்

By our reporters 
8 January 2019

இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில், தமது அன்றாட ஊதியத்தை இரட்டிப்பாக்குவதற்கான பிரச்சாரத்தை முடக்கும் நோக்கில் ஒரு சம்பள உடன்படிக்கையை திணிப்பதற்காக பிரதான கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு வளர்ச்சியடைகின்றது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான வடிவேல் சுரேஷ், தொழிற்சங்கங்கள் ஜனவரி 16 அன்று பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் (EFC) மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் அரசாங்கமும் இதில் பங்கேற்கவுள்ளது.

பெருந்தோட்டத் தொழில்துறையின் இராஜாங்க அமைச்சராக அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருக்கும் சுரேஷ், இந்த பேச்சுவார்த்தைகள் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி (JPTUC) ஆகிய ஏனைய இரண்டு தொழிற்சங்க குழுக்களும் இந்த சந்திப்பில் பங்கெடுக்கின்றன.

தோட்டத் தொழிற்சங்கங்கள், சம்பளத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்க்கு அதிகாரிப்பதற்கான கோரிக்கைக்கு குழிபறிப்பதற்கான தமது விருப்பத்தை  ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளன. கடந்த மூன்று மாதங்களாக இளைஞர்கள், தோட்டப்புற ஆசிரியர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரதும் ஆதரவுடன் தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களையும் போராட்டங்களையும் ஒடுக்குவதற்கு தொழிற்சங்கங்கள் முயன்று வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊதிய விவகாரத்தை தீர்த்து வைக்க உறுதியளித்துள்ளதாக கூறி, டிசம்பர் மாதத்தில் சுமார் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை இ.தொ.கா. முடிவுக்கு கொண்டு வந்தது.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜதுரை, "பூகோள தேயிலை விலை சரிவிற்கு மத்தியில்" தொழிலாளர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய முடியாது என்று சமீபத்தில் வலியுறுத்தினார். இலங்கை முதலாளிமார் சம்மேளனமானது சிறுதொகை வருகை மற்றும் ஊக்க கொடுப்பனவுகளுடன் சேர்த்து 20 சதவிகித ஊதிய உயர்வை முன்வைத்துள்ளது. இருப்பினும், அநேகமான தொழிலாளர்களால் இந்த கொடுப்பனவுகளுக்கான வேலை இலக்குகளை எட்ட முடியாது.

இலங்கை முதலாளிமார் சம்மேளனம் ஊதிய முறையை அகற்றி, வருவாய் பகிர்வு திட்டம் என அழைக்கப்படுவதை பதிலீடு செய்யவும் முயற்சிக்கின்றது. இது ஒவ்வொரு தொழிலாளரையும் ஒரு நிலப்பகுதிக்கு பொறுப்பாக்கி, அவர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றும். நிறுவனத்தின் செலவுகள் மற்றும் இலாபங்கள் கழிக்கப்பட்ட பின்னர், தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேயிலை நிலத்தின் வருவாயின் ஒரு பகுதியை மட்டுமே அவர்கள் பெறுவர்.

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நிலைமைகளை அபகரிப்பதற்கான தமது கோரிக்கைகளை எட்டும் வகையிலேயே எந்தவொரு சம்பள ஒப்பந்தமும் அமைய வேண்டும் என்று கம்பனிகள் தெளிவுபடுத்தியுள்ளன. இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க, சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "அனைத்து தரப்பினராலும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை சம்மேளனத்துக்கு இருப்பதாக" கூறினார்.

"தொழிலாளர்கள் தங்கள் நிலைப்பாட்டை நெகிழ்வாக்கிக்கொண்டு, அடிப்படை ஊதியத்தில் ஒரு உடன்பாட்டை அடைவதற்கு இணங்கியுள்ளதோடு, கம்பனிகள் வழங்கியுள்ள சலுகைகளை கருத்தில் கொண்டு ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள ஆர்வம் காட்டியுள்ள நிலையில்”, நீண்டகாலமாக இழுபட்டுவரும் போராட்டத்துக்கு ஒரு சாதகமான நிலைமை தென்படுகின்றது,” என அந்த கட்டுரை மேலும் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் "தங்கள் நிலைப்பாட்டை நெகிழ்வாக்கிக்கொள்வது" பற்றி ஒப்சேவர் குறிப்பிடுவது, கபடத்தனமானதாகும். உண்மையில், பரந்த எதிர்ப்பின் மத்தியிலும் தொழிற்சங்கங்களே ஒரு விற்றுத்தள்ளும் உடன்பாட்டுக்கு முனைகின்றன.


பி. சுந்தரலிங்கம்

தொழிலாளர்களின் உண்மையான உணர்வுகள் நேற்று நடந்த எபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழுவின் கூட்டத்தில் வெளிப்பட்டன. அதன் தலைவர் பி. சுந்தரலிங்கம், "நமது குழுவானது எமது கோரிக்கைகளுக்கு எதிரான எந்தவொரு உடன்பாட்டையும் எதிர்க்கும்" என அறிவித்தார்.

தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனான எந்தவொரு விற்றுத்தள்ளும் உடன்படிக்கைக்கும் எதிராக சகல தோட்டத் தொழிலாளர்களும் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்தவும், 100 சதவிகித சம்பள அதிகரிப்புக்கான போராட்டத்தை தொடரவும் அழைப்பு விடுக்கும் என சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவுடன், கடந்த மாதம் எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் பெரும் நிறுவனங்களின் சார்பில் ஒரு பொலிஸ் படையாக செயல்பட்டு வரும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான அமைப்புகளை ஸ்தாபிக்க வேண்டும் என சோ.ச.க. தோட்டத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. முன்னோக்கி செல்வதற்கு, அத்தகைய குழுக்கள் சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு அரசியல் போராட்டத்திற்கு திரும்ப வேண்டும் என சோ.ச.க. விளக்குகின்றது.

நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு தொழிலாளியான எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: "உலக சோசலிச வலைத் தளத்தை வாசித்ததன் மூலமே, தோட்டத் தொழிற்சங்கங்கள் இரகசியமாக வருவாய் பகிர்வு முறையை கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக கம்பனிகளுடன் வேலை செய்து வருகின்றன என்பதை நாங்கள் அறிந்தோம். தொழிற்சங்கங்கள் எங்களுக்கு எதையும் சொல்லவில்லை. அவர்கள் எங்கள் சம்பள போராட்டத்தை காட்டிக் கொடுக்கின்றனர்."

அத்தகைய திட்டம் அவருடைய தோட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தொழிலாளர்கள் "நிறைய சிக்கல்களை சந்தித்தனர்" என்று கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். "எங்கள் முழு குடும்பமும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஓய்வு கிடையாது. நாம் சுத்தீகரிப்பது, கவாத்து வெட்டுவது மற்றும் கொழுந்து பறிப்பது உட்பட அனைத்தையும் செய்ய வேண்டும். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நிர்வாகத்தால் கொடுக்கப்படும். அதற்கான செலவு எங்கள் வருவாயிலிருந்து கழிக்கப்படும். எனவே எங்கள் வருவாய் குறைந்துவிட்டது. அதனால் அனைத்து தொழிலாளர்களும் முந்தைய முறைக்கே திரும்ப முடிவு செய்தனர்," என அவர் விளக்கினார்.

மொன்டிஃபெயர் பிரிவில் ராமையா ரவி கூறியதாவது: "நான் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினராக இருக்கிறேன், ஆனால் தொழிற்சங்கம் எங்களுக்கு எதுவும் சொல்லவில்லை. அதன் தலைவர் வி. ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உண்மையில் என்ன நடக்கிறது என்று அவரிடம் கேட்பேன். தொழிலாளர்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை அவர்கள் அமுல்படுத்தினால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் ஹட்டனுக்கு அருகிலுள்ள பன்மூர் தோட்டத்திற்கு சென்றனர். அங்கு தொழிலாளர்களுக்கு மிக அடிப்படை வசதிகள் கூட இல்லை. தோட்டத்திற்குச் செல்லும் பாதை முழுமையாக பாழடைந்திருக்கிறது. தனியார் பஸ் சேவைகள் மட்டுமே போக்குவரத்துக்கு உள்ளன. தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய 100 சதவிகித ஊதிய அதிகரிப்பு தேவை, என்று தொழிலாளர்கள் விளக்கினர்.


வேலாயுதத்தின் மனைவி

வேலாயுதம், ஓய்வுபெற்ற 72 வயதான தொழிலாளி கூறியதாவது: "குடிப்பதற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாய் நீர் விநியோகம் கிடைக்கும். அருகில் இருக்கும் ஏரியிலிருந்து எங்கள் மற்ற தேவைகளுக்கு தண்ணீர் எடுக்கின்றோம். சரியான சுகாதார வசதி இல்லை.

"எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர், எல்லோரும் திருமணம் முடித்துவிட்டனர். என் மனைவி முனியம்மாவுக்கு 70 வயது. எங்களது பிள்ளைகளால் எங்களுக்கு சாப்பாடு கொடுப்பது கடினமாக இருப்பதால், அவர் மீண்டும் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அவர் ஒரு தற்காலிக தொழிலாளியாக இருப்பதால், ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 30 ரூபாய் கொடுக்கிறார்கள், வேறு எந்த சம்பளமும் கிடையாது."

கடந்த காலத்தில், பன்மூர் தோட்டத் தொழிலாளர்கள் அருகிலுள்ள எபோட்சிலி தோட்டத்தில் மருந்துகள் பெற முடியும், மேலும் ஒவ்வொரு மாதமும் ஒரு இலவச தேயிலைத் தூள் பொதி வழங்கப்பட்டது. இப்போது இரண்டுமே இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மருந்து பெறுவதற்காக, பன்மூர் தொழிலாளர்கள் இப்போது டிக்கோயா மருத்துவமனைக்கு பல கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். மூன்று சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டால் பல நூறு ரூபாய் செலவாகும். இதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.


வேலாயுதம்

தோட்டத்திலுள்ள ஒரு இளம் பெண் அனுஷா, உயர்தர கல்விக்கு உயிரியல்-தொழில்நுட்பத்தைப் படிக்க நினைத்திருந்ததாக கூறினார். அதற்குப் பதிலாக, நோர்வுட்டுக்கு பாடசாலை அனுப்புவதற்கு பெற்றோருக்கு வசதி இல்லாததால், அவர் கலைத் துறையில் படிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டார். அவரது தாயார் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருப்பதோடு அவரது பாட்டி ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளி ஆவார்.

அனுஷாவின் தாய், தனது மாத சம்பளம் 15,000 ரூபா என்று கூறினார். அவரது கணவர் மூச்சக்கர வண்டி ஓட்டுகிறார். "எங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எங்கள் வருமானம் வாழ்வதற்கும் கல்விக்காக செலவிடவும் போதுமானதாக இல்லை," என்று அவர் கூறினார். "எந்த மருந்தும் வாங்குவதற்கு, 600 ரூபாய் செலுத்த வேண்டும். நாங்கள் பெரிய பொருளாதார சிக்கல்களுடன் வாழ்கிறோம். எனது ஓய்வு பெற்ற தாய் தற்போது தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றார்."

டிக்கோயாவிலுள்ள என்ஃபீல்ட் தோட்டத்தின் சென் எலியாஸ் பிரிவில், இ.தொ.கா. தோட்டத் தலைவரான எஸ். பாலசுப்பிரமணியம், கடந்த மாத வேலைநிறுத்தத்தின் போது ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தமைக்காக இன்னும் பல தொழிலாளர்களுடன் சேர்த்து பழிவாங்கப்பட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியம், தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு தடையாக இருந்ததாக நிர்வாகத்தால் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக பொலிசார் சுமத்தவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார். இ.தொ.கா. தலைவர்கள் இந்த தொழிலாளர்களை கைவிட்டதன் மூலம், அவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு வசதி செய்துள்ளனர்.

பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது சக ஊழியர்கள் பலர், கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான “இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் கொடுத்து வாங்கும் உடன்படிக்கையை கலந்துரையாடுகின்றன" என்ற கட்டுரையை வாசித்தனர். "நாங்கள் அத்தகைய ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம். எங்கள் ஊதியத்தை அதிகரிப்பதற்கே நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தோம், ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை, ஏனென்றால் எல்லா தொழிற்சங்கங்களும் எங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டன. இப்போது தொழிலாளர்களை பயமுறுத்துவதற்காக எங்களை வேட்டையாடுகின்றனர். நீங்கள் கூறுவது போல், தொழிற்சங்கங்கள் எங்கள் உரிமைகளுக்காக போராடவில்லை." அவர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.