ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan workers must oppose the witch-hunt of militant plantation workers

இலங்கை தொழிலாளர்கள் போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதை எதிர்க்க வேண்டும்

By M. Thevarajah 
16 January 2019

இலங்கையில் பெருந்தோட்ட நிர்வாகிகள், சம்பள உயர்வு போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் செயற்பாட்டாளர்களை, அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவுடன் பழிவாங்கி வருகின்றனர்.

ஜனவரி 10 அன்று, ஹட்டனுக்கு அருகில் எபோட்சிலி தோட்டத்தின் உதவி முகாமையாளர், தோட்டத்தில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் தலைவரான பி. சுந்தரலிங்கத்தை அச்சுறுத்தினார். கடந்த மாதம் நாடு பூராவும் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய காரணத்தால், என்ஃபீல்ட் தோட்டத்தில் எஸ். பாலசுப்ரமணியம் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அவருக்கும் இன்னும் பல தொழிலாளர்களுக்கும் எதிராக பொலிஸ் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதை தொடர்ந்தே, சுந்தரலிங்கம் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

டிசம்பர் மாதம், பெருந்தோட்ட ஆசிரியர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் ஆதரவுடன் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் நாளாந்த ஊதியத்தை 500 முதல் 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஒன்பது நாட்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பள விவகாரத்தை தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார் எனக் கூறி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டது. தோட்டத் தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கைகளை கட்டுப்படுத்தவும் கடுமையாக போராடி வென்ற வேலை நிலைமைகளை அழிக்கவும் பல தசாப்தங்களாக பெருந்தோட்ட நிர்வாகங்களுடன் ஒத்துழைத்துள்ளன.

கடந்த வாரம், ஜனவரி 10 சம்பள நாளன்று, எபோட்சிலி தோட்ட உதவி முகாமையாளர், சுமார் 200 தொழிலாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாக சுந்தரலிங்கத்தை அச்சுறுத்தினார். "நீங்கள் குழுவொன்றை உருவாக்கி தோட்டத்தில் பிரிச்சினைகளை ஏற்படுத்துகின்றீர்கள், நான் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்", என அவர் கூறினார்.

இந்த உதவி முகாமையாளர், தோட்டத்தில் தொழிலாளர் நடவடிக்கைக் குழு ஸ்தாபிக்கப்பட்டமை பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையை தனது ஸ்மார்ட் ஃபோனில் எடுத்துக் காட்டினார். அதில், குழுவின் ஸ்தாபக கூட்டத்தில் சுந்தரலிங்கம் உரையாற்றும் ஒரு படம் அடங்கியிருந்தது.

ஹட்டன் நகரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எபோட்சிலி தோட்டத்தில் சுமார் 700 தொழிலாளர்கள் உள்ளனர். இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை போலவே, எபோட்சிலி தோட்டத்திலும் அதிகளவில் தற்காலிக தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபா அல்லது ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 30 ரூபா கொடுக்கப்படுகிறது.

டிசம்பர் வேலைநிறுத்தத்தின் போது, சோசலிச சமத்துவக் கட்சியின் வழிகாட்டுதலிலேயே அபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

எபோட்சிலி தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்களது சொந்த கமிட்டியை அமைக்க எடுத்த முடிவு, ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையாகும். அதன் மூலம் மட்டுமே அவர்கள் தமது வேலை நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை பாதுகாக்கவும் மேம்படுத்துவும் முடியும். ஒரு கொள்கை ரீதியான மற்றும் தைரியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாலேயே சுந்தரலிங்கம் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

அதே எபோட்சிலி தோட்ட உதவி முகாமையாளர், இதற்கு முன்னர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு பேட்டி அளித்த ஒரு பெண் தொழிலாளியை அச்சுறுத்தி இருந்தார். தோட்டத்தில் கடுமையான வேலை நிலைமைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் அரசியல் காட்டிக் கொடுப்புக்களை பற்றி அந்த தொழிலாளி விளக்கி இருந்தார்.

டிசம்பர் 13 அன்று தோட்ட நிர்வாகம் பாலசுப்ரமணியத்தை வேலை நீக்கம் செய்தது. அவர், டிக்கோயாவில் என்ஃபீல்ட் தோட்டத்தின் சென் எலியாஸ் பிரிவில் வேலை செய்வதோடு அவர் இ.தொ.கா.வின் தோட்டத் தலைவராவார்.

தோட்ட நிர்வாகத்தின் புகாரை தொடர்ந்து, டிசம்பர் 5 அன்று தோட்டத் தொழிற்சாலை வாயிலை பூட்டியதாகவும் தேயிலை கொழுந்துகளை ஏற்றிவந்த வாகனங்கள் நுழைவதைத் தடுத்ததாகவும் பாலசுப்ரமணியம் மற்றும் கிருஷ்ணன், பத்மநாதன், சுப்பிரமணியம் ஆகிய மேலும் மூன்று தொழிலாளர்களுக்கும் எதிராக பொலிசார் குற்றம் சாட்டினர்.

சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் நின்றிருந்த காரணத்தால், அதே தோட்டத்தைச் சேர்ந்த இ.தொ.கா. பிரதிநிதிகளான -அருணல்யா, கிலேரா, சிவசாமி ஆகிய இன்னும் மூன்று தொழிலாளர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஹட்டனில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமிமலையில், கவரவில தோட்டத்தின் நிர்வாகமும், பல தொழிலாள செயற்பாட்டாளர்களை வேட்டையாட முயன்ற போதிலும் சக ஊழியர்களின் எதிர்ப்பால் பின்வாங்கியது.

இந்த தாக்குதல்கள் தனியான அல்லது தற்செயலானவை அல்ல, மாறாக அரசாங்கம், பொலிஸ் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தவும், அவர்களின் ஊதியக் கோரிக்கைகளை நசுக்கவும், தோட்ட நிர்வாகத்தால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இ.தொ.கா. தலைமைத்துவமானது என்ஃபீல்ட் தோட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட தோட்டத் தலைவர்களையும் தொழிலாளர்களையும் நீதிமன்றத்தில் பாதுகாப்பதாக அறிவித்துள்ளது, ஆனால், சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை தோற்கடிக்க எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டது.

ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்த தொழிலாளர்கள் மீதான நிர்வாகத்தின் தாக்குதல்களையிட்டு முற்றிலும் மெளனமாக உள்ளன. பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கும் எந்தவொரு அழைப்பும், பெருந்தோட்டங்கள் முழுவதும் பரந்த ஆதரவை வென்று தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினராலும் அங்கீகரிக்கப்படும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

ப. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, மானோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவை உள்ளடங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆரம்பத்தில் இ.தொ.கா. உறுப்பினர்கள் டிசம்பரில் முன்னெடுத்த வேலைநிறுத்தத்தை எதிர்த்தனர். இந்த தொழிற்சங்கங்களின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அவற்றின் தலைமையை மீறி தேசிய வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்டனர்.

திகாம்பரம், ராதாகிருஷ்ணன், கணேசன் ஆகிய அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ளனர். முந்தைய ஆட்சியில் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஒரு அமைச்சராக இருந்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய விவகாரத்தை ஜனாதிபதி சிறிசேன ''தீர்த்து வைப்பார்'' என்ற போலியான கூற்றுகள் ஒரு பக்கம் இருக்க, முதலாளிமாரும் அரசாங்கமும் ஆயிரம் ரூபாய் அடிப்படை தினசரி ஊதிய கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இது தோட்டத் தொழில் துறையை சரித்துவிடும் என அவை கூறிக்கொள்கின்றன. அரசாங்கம் பிரச்சினையைத் தீர்க்க மூன்று ஆண்டு ஊதிய சூத்திரத்தை முன்வைத்துள்ளது -இதன்படி முதல் ஆண்டில் 125 ரூபாய் அதிகரிப்பும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தலா 25 ரூபாய் அதிகரிப்பும் வழங்கப்படும்.

இந்த முன்மொழிவை "நிராகரிக்கின்ற” அதேவேளை, தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட எஜமான்களுடன் விரைவில் ஒரு விற்றுத் தள்ளும் ஒப்பந்தத்துக்காக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தம் ஏற்கனவே வெறுக்கப்பட்ட வருமானப் பகிர்வு திட்டத்தை அறிமுகப்படுத்துவதையும் உள்ளடக்கியுள்ளது போல் தெரிகிறது. இந்த முறையின் கீழ், தற்போதைய ஊதிய முறை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சமூக உரிமைகளை இல்லாதொழிக்கப்பட்டு தொழிலாளர்கள் குத்தகை விவசாயிகளாக மாற்றப்படுவர்.

போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினருக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். சுந்தரலிங்கத்திற்கு எதிரான நிர்வாக அச்சுறுத்தல்களை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். வேலை நீக்கப்பட்டுள்ள பாலசுப்பிரமணியத்தை மீண்டும் முழுமையாக நிபந்தனையின்றி வேலையில் அமர்த்துவதோடு, அனைத்து என் ஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பொலிஸ் குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறும் கோர வேண்டும்.