ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

අධි-සූරාකෑමේ වැටුප් ක‍්‍රමයක් වතු කම්කරුවන් මත පැටවීමට සමිති, සමාගම් සහ ආන්ඩුව එකග වෙයි

தோட்டத் தொழிலாளர்கள் மீது அதி-சுரண்டல் சம்பளத் திட்டத்தை சுமத்த தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் அரசாங்கமும் உடன்படுகின்றன

By Pani Wijesiriwardena 
28 January 2019

கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில், ஆயிரம் ரூபா நாள் சம்பள கோரிக்கையை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, கம்பனிகள் பிரேரித்துள்ள நாள் சம்பளத்தை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு தோட்டத் தொழிற்சங்கங்கள் உட்பட்டுள்ளன.

பிரேரிக்கப்பட்டுள்ள புதிய சம்பள முறைமையின் படி, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளம் 500 ரூபா முதல் 700 ரூபா வரை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதோடு, அந்த அதிகரிப்புக்கு செய்யும் விட்டுக் கொடுப்பாக, இதுவரை அன்றாடம் கொடுத்து வந்த 140 ரூபா உற்பத்தி ஊக்கு விப்பு கொடுப்பனவும் வருகைக்கான 60 ரூபா கொடுப்பனவும் முழுமையாக வெட்டப்பட்டுள்ளன.

இதற்கு மேலாக, தேயிலை விலைக்காக கொடுக்கப்படும் 30 ரூபா மேலதிக கொடுப்பனவு 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு, தினசரி ஊதியம் 750 ரூபாயாக அதிகரிக்கும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இலக்கை விட மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலை கொழுந்துக்குமான கொடுப்பனவு 25 முதல் 40 ரூபா வரை அதிகரிக்கப்படும். இருப்பினும், இந்த இலக்கு தோட்டத்திற்கு தோட்டம் மாற்றமடையும் என்று இந்த முன்மொழிவில் கூறப்படுகிறது.

பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம், திங்களன்று கையெழுத்திடப்பட உள்ளது. அதில் அடங்கியுள்ள நிபந்தனைகள் மற்றும் உடன்பாடுகள் பற்றி தொழிலாளர்களுக்கு முன்வைக்கப்பட்டு, அவை பற்றி அவர்களது விருப்பு வெறுப்புகள் கேட்கப்படவில்லை. தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் சூழ்ச்சி செய்து, தொழிற்சங்கங்கள் ஊடாக தம்மீது சுமத்தப்பட உள்ள இந்த ஒப்பந்தத்தை சகல தோட்டத் தொழிலாளர்களும் முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவையும் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றின.

பெருந்தோட்டத் துறையின் மிகப் பெரிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் ஆறுமுகம் தொண்டமான், இங்கு மிக கொடூரமான பேச்சாளராக இருந்தார். சனிக்கிழமையன்று நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: "நாங்கள் 1,000 ரூபா கேட்டு 855 ரூபாவை பெற்றிருக்கின்றோம். எங்கள் கோரிக்கையில் 250 ரூபா குறைந்துள்ள அதே வேளை, 250 ரூபா அதிகரித்துள்ளது. பேரம் பேசல் என்பது அப்படித்தான். இது நூற்றுக்கு 40 சதவீத அதிகரிப்பு ஆகும். வரலாற்றில் ஒரு நாளும் இவ்வளவு அதிகரிக்கப்படவில்லை."

சம்பள உயர்வு பற்றிய அவரது கதை ஒரு அப்பட்டமான பொய் ஆகும். சம்பளத்தை 200 ரூபா உயர்த்த மட்டுமே கம்பனிகள் உடன்பட்டுள்ளன. விலைக்கான மேலதிக கொடுப்பனவு ரூபா 50 ஆகும். தொண்டமான், தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதிக்கு அனுப்புவதற்காக வெட்டப்படும் 105 ரூபாவையும் வஞ்சத்தனமாக நாள் சம்பளத்துடன் சேர்த்துக்கொண்டு அவரது கணக்கை கூட்டியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் எஸ். ராமநாதன், டெயிலி எப்.டி. பத்திகைக்கு, தாம் “முற்றிலும் திருப்தியடையாவிட்டாலும்” எல்லோராலும் பெறக்கூடிய "சிறந்த தீர்வு" இதுதான், எனக் கூறியுள்ளார்.

கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாத தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியவை, ஏனைய சங்கங்களுடன் சேர்ந்து, தொழிலாளர்களின் சம்பள போராட்டத்தை நாசப்படுத்தவே செயற்பட்டன. இந்த மூன்று தொழிற்சங்கங்களதும் தலைவர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாவர். தொண்டமான் கடந்த அரசாங்கத்தின் அமைச்சராவார்.

தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகம்பரம், மக்கள் விடுதலை முன்னணியின் லங்கா பத்திரிகைக்கு கூறியதாவது: "தொழிலாளர்களுக்கு ஒரு நியாயமான ஊதியம் கிடைப்பது போலவே, தோட்டக் கம்பனிகளுக்கும் இலாபம் கிடைக்க வேண்டும். அவர்கள் இலாபம் பெறாவிட்டால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை கொடுக்க முடியாது..... இப்போது என்றால் 1,000 ரூபா அடிப்படை சம்பளம் கொடுக்க முடியாது. அந்த கோரிக்கையை நியாயமற்றது,"

இலங்கையின் மிக வறிய பகுதியினரான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக எந்தவொரு அக்கறையும் இல்லாத இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு "தேயிலைத் தொழிற்துறையை பாதுகாப்பது" என்பது கம்பனிகளின் இலாபத்தை பாதுகாத்துக் கொடுப்பதை தவிற வேறு ஒன்றும் அல்ல.

அக்டோபர் மாதம் பழைய சம்பள உடன்படிக்கை முடிவடைந்தது முதல், தொழிலாளர் செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவதற்கும் சம்பளப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் தோட்ட முதலாளிகளும் அரசாங்கமும் எடுத்த முயற்சிகளையும் தொழிற்சங்கங்களின் நாசவேலைகளையும் அலட்சியம் செய்தவாறே, ஆயிரம் ரூபா நாள் சம்பளம் கோரி வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள், ஊர்வலங்கள் உட்பட மிகவும் உறுதிப்பாடான மற்றும் போராளிக் குணம்கொண்ட போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களது போராட்டத்துக்கு தோட்ட இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறு வியாபாரிகளது நடைமுறை ஆதரவும் ஏனைய தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களது ஒத்துழைப்பும் கிடைத்தது.

இந்த சூழ்நிலையிலேயே இ.தொ.கா. கடந்த டிசம்பரில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. தொழிலாளர்களின் போர்குணத்தையும் வர்க்க ஒத்துழைப்பையும் உயர்த்துகின்ற போராட்ட நடவடிக்கைகள் எதுவும் இன்றி, தொழிலாளர்களை வீடுகளில் தங்கியிருக்க வைப்பதன் மூலம், அவர்களின் போராளிக் குணத்தை கரைத்து விடுவதே இந்த அழைப்பின் நோக்கமாகும்.

இ.தொ.கா., ஒன்பது நாட்கள் நடந்த அந்த தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொய் வாக்குறுதிக்கு தொழிலாளர்களை கீழ்ப்படுத்தி, கடைசியில் காட்டிக் கொடுத்துது. ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த காட்டிக்கொடுப்புக்கு முழுமையாக தோள்  கொடுத்தன. இருப்பினும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இ.தொ.கா.வின் தீர்மானத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மேலும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தோட்டக் கம்பனிகள் ஆரம்பத்தில் இருந்தே 1000 ரூபா தினசரி சம்பள அதிகரிப்பை எந்த வகையிலும் கொடுக்க முடியாது என்றே கூறிவந்தது. அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்து 600 ரூபாவாக அதிகரித்து, அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து ரூபா 940 தினசரி ஊதிய அதிகரிப்பை கம்பனிகள் முன்மொழிந்தன. அடிப்படை சம்பளத்துக்கு மேலதிகமான 340 ரூபாவானது, சம்பாதிப்பதற்கு கடினமான உற்பத்தி மற்றும் வருகை கொடுப்பனவுகளுடன் பிணைக்கப்பட்டிருந்தது.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்டப் பிரிவு தலைவர் ரொஷான் ராஜதுறை, நீண்ட காலமாக இருந்து வரும் சம்பள முறைமையை முழுமையாக தூக்கியெறிந்துவிட்டு, "வருமானப் பகிர்வு முறைமையை" தோட்டத்துறையில் ஸ்தாபிக்க வேண்டும் என தொடர்ந்தும் கூறி வந்துள்ளார். அதாவது, ஒரு தொழிலாள குடும்பத்துக்கு குறிப்பிட்டளவு தேயிலைச் செடிகள் அடங்கிய காணித் துண்டொன்றை கொடுத்து, அதை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து, தேயிலைக் கொழுந்தில் வரும் வருமானத்தில் கம்பனிக்கு போன செலவுகளை வெட்டிக்கொண்டு, எஞ்சியதை அந்தக் குடும்பத்துக்கு கொடுப்பதே ஆகும். இது பழைய குத்தகை-விவசாய முறைமையை ஒத்ததாகும். அந்தக் காணித் துண்டில் முழு குடும்பமும் உழைத்தாலும், நிச்சயமான இலாபம் கிடைக்காத நிலையில், இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள் அந்தக் காணித் துண்டுகளை திருப்பி ஒப்படைத்துவிட்டனர்.

இத்தகயை சுரண்டலை தீவிரமாக்கும் நிபந்தனைகள் கைச்சாத்திடப்போகும் ஒப்பந்தத்தில் நிச்சயமாக உள்ளடங்கி இருக்கும். தொழிலாளர்களை கம்பனிகளின் தேவைகளுக்கு அடிபணியச் செய்யும் தொழில்துறைப் பொலிசாகவே தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. ஏற்கனவே அவை, போர்க்குணமிக்க தொழிலாளர்களை ஒடுக்கவும் அவர்களை பொலிசுக்கு பிடித்துக் கொடுக்கவும் வேலை செய்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), போராட்டத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அபாயங்களை உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக தெளிவுபடுத்தி, ஒழுக்கமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு தேவையான சம்பளம் மற்றும் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பெறுவதற்கு ஒரு முன்நோக்கையும் வேலைத் திட்டத்தையும் முன்வைத்தது.

தொழிற்சங்கங்களின் கம்பனி சார்பு மற்றும் அரசாங்க சார்பு பொறிவைப்புகளை தகர்த்துக்கொண்டு, அவற்றில் இருந்து விலகி, சுயாதீனமாக போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு, தொழிலாளர்களின் வாக்குகளில் தேர்வு செய்துகொள்ளப்படும் நடவடிக்கை குழுக்களை தோட்டங்கள் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் கட்டியெழுப்பிக்கொண்டு, தங்களைப் போலவே தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்த போராட்டத்தை மேம்படுத்துவதற்கு தொழிலாளர்கள் திரும்ப வேண்டும், என சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கின்றது.

உலக அளவில் போராட்டத்திற்கு வந்து கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பிக்கொள்வதும், அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, தோட்டக் கம்பனிகள் மற்றும் பெரும் வர்த்தக தொழிற்துறைகளையும் தொழிலாள வர்க்க ஆட்சியின் கீழ் தேசியமயப்படுத்துகின்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடாமல், முலாளித்துவம் தொடுக்கின்ற தாக்குதல்களில் இருந்து வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேறு வழி கிடையாது.

சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து, ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தின் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவொன்றை கட்டியெழுப்பிக்கொண்டு முன்நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்போது எல்லாத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும். (எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழுவின் தீர்மானம் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

நடவடிக்கை குழுவைக் கட்டியெழுப்பிக்கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் பெரும் அவசியத்தையே தொழிற்சங்கங்கள் இப்போது செய்துள்ள காட்டிக்கொடுப்பு வலியுறுத்துகிறது.

***

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு எதிராக எபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழு கீழ் வரும் பிரேரணையை 27 ஜனவரி 2019 அன்று நிறைவேற்றியது.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளம் 1,000 ரூபா வரை 500 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை கைவிட்டு, அடிப்படை சம்பளத்தை 700 ரூபா வரை 200 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கும் யோசனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து உடன்பட்டிருப்பதை, எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழு கடுமைமாக கண்டனம் செய்கின்றது. இது நாம் நீண்ட நாட்களாக முன்னெடுத்த போராட்டத்தை காட்டிக் கொடுப்பதாகும்.

தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடப் போகும் ஒப்பந்தத்தில் என்ன அடங்கியிருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன் தொழிற்சங்க தலைமைத்துவம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலமே அது தயாரிக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்காமலே இரகசியமாக தயாரிக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்தில் கம்பனி தீர்மானிக்கும் சம்பளத்தின் அடிப்படையில், வேலை பளுவை அதிகரிக்கும் திட்டம் உள்ளடக்கப்படும். கடந்த காலத்தில் தொழிற்சங்கங்களால் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் நடந்ததும் இதுவே ஆகும். தொழிலாளர்களின் கடந்த கால போராட்டங்கள் மூலம் வென்றெடுத்த மட்டுப்படுத்தப்பட்ட சமூக சலுகைகளைக் கூட இல்லாமல் ஆக்கி, உற்பத்தி திறன் அடிப்படையிலான குத்தகை-விவசாய முறைமைக்கு சமமான முறைமைக்கு தோட்டத் தொழிலாளர்களை அடிபணியச் செய்யும் திட்டமொன்றை அமுல்படுத்த தோட்டக் கம்பனிகள் தயாராகின்றன.

எபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழு, இந்த கூட்டு ஒப்பந்தத்தை நிராகரித்து நாகரீகமான ஊதியத்தையும் வாழ்க்கை நிலைமைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சகல தோட்டங்களிலும் எங்களது சகோதர தொழிலாளர்களிடம் கோருகின்றது.

தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகள் அல்ல, மாறாக அவை தோட்ட முதலாளிமாரின் இலாப அவசியங்களுக்காக முன்நிற்கின்ற அமைப்புகள் என்பது தொழிற்சங்கங்களால் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நடவடிக்கை குழு, வாழ்வதற்கு பொருத்தமான ஊதியம், சிறந்த வீடு, இலவச சுகாதார சேவை மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்விக்கான போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

தோட்ட கம்பனிகளும் ஆட்சியாளர்களும் முதலாளித்துவ அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அத்தகைய போராட்டத்துக்கு எதிராக அரச ஒடுக்குமுறை உட்பட முழு பலத்தையும் பயன்படுத்தும். அதனால், இந்த நடவடிக்கை குழு முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்கு தலையீட்டிற்கு எதிராக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரும் மாற்று அரசியல் வேலைத் திட்டம் ஒன்றைப் பற்றி கலந்துரையாட வேண்டும் என நாம் முன்மொழிகின்றோம்.

சோசலிச வேலைத்திட்டத்தின் மூலம் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழு நம்புகின்றது. அத்தகைய போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கையில் ஏனைய தொழிலாளர்களைப் போலவே சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் ஒத்துழைப்பை வென்றெடுக்க முடியும்.