ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Defend the Matamoros workers! For a united fight by US, Canadian and Mexican workers to defend jobs and decent living standards!
March on February 9 to oppose GM job cuts!

வேலைகளையும், கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளையும் பாதுகாக்க அமெரிக்க, கனேடிய மற்றும் மெக்சிக்கன் தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்காக! மத்தாமோரொஸ் தொழிலாளர்களை பாதுகாப்போம்!

GM இன் வேலை வெட்டுக்களை எதிர்த்து பிப்ரவரி 9 இல் அணிவகுப்போம்!

the Steering Committee of the Coalition of Rank-and-File Committees
29 January 2019

மெக்சிக்கோவில் மத்தாமோரொஸ் மக்கில்லாடோரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்து, சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டிணைவிற்கான வழிகாட்டல் குழு (Steering Committee of the Coalition of Rank-and-File Committees) பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாகனத் தொழிலாளர்கள், அமசன் மற்றும் பிற தொழில்துறை தொழிலாளர்களை உள்ளடக்கியதான இவ்வழிகாட்டல் குழு, உலக சோசலிச வலைத் தள வாகனத் தொழிலாளர் செய்தியிதழின் ஆதரவுடன், டெட்ராய்ட்டில் டிசம்பர் 9, 2018 அன்று, ஜெனரல் மோட்டார்ஸ் ஆலை மூடலை எதிர்த்து போராடுவது குறித்து நடத்தப்பட்ட உடனடிக் கூட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த வழிகாட்டல் குழுவும் வாகனத் தொழிலாளர் செய்தி இதழும், வேலை வெட்டுக்கள், ஊதியம் மற்றும் அனுகூலமான சலுகைகளுக்காக போராடுவதற்கு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ எங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த டெட்ராய்ட்டில் GM தலைமையகத்தில் பிப்ரவரி 9 அன்று ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

* * *

சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டிணைவிற்கான வழிகாட்டல் குழு, டெக்சாஸ், பிரௌன்ஸ்வில் இல் இருந்து அமெரிக்க எல்லை எங்கிலும், மெக்சிக்கோ, மத்தாமோரொஸ் மக்கில்லாடோரா ஆலைத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வட அமெரிக்கா முழுவதிலுமான அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

இரண்டு தசாப்தங்களாக வட அமெரிக்காவில் மெக்சிக்கன் தொழிலாளர்கள் பெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்மூலம், தொழிலாள வர்க்கம் மிகப்பெரிய சமூக சக்தியைக் கொண்டுள்ளதை அவர்கள் உலகிற்கு நினைவூட்டி வருகிறார்கள். அமெரிக்காவிலும் கனடாவிலும் எழுபதாயிரம் தொழிலாளர்கள், கிட்டத்தட்ட 45 தொழிற்சாலைகளில், பெரும்பாலும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலைகளில், ஒட்டுமொத்த உற்பத்தியையும் முடக்கியுள்ளனர், அத்துடன், ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்த செய்துள்ளனர் அல்லது மந்தமாக்கியுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தை பெருநிறுவன ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துள்ளன. இரு வாரங்களுக்கு முன்னர், மத்தாமோரொஸ் தொழிலாளர்கள் தங்களது பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததோடு, வேலைநிறுத்தக் குழு ஒன்றை அமைக்க பிரதிநிதிகளை தேர்வு செய்ய மாபெரும் கூட்டங்களையும் நடத்தினர். தொடர்ந்து இந்தக் குழு, தொழிலாளர்களை பிற ஆலைகளைப் பார்வையிடுவதோடு, கொத்தடிமை நிலைமைகளை எதிர்க்கும் மற்றும் 20 சதவிகித ஊதிய உயர்வு, 1,700 டாலர் மேலதிக கொடுப்பனவை வழங்கிட கோரிக்கை விடுக்கும் தங்களது போராட்டத்தில் அவர்களையும் இணையுமாறு அழைப்புவிடுக்கின்றது.

சென்ற வாரத்தில், ஆயிரக்கணக்கான வேலைநிறுத்தக்காரர்கள் அமெரிக்க எல்லையை நோக்கி அணிவகுத்துச் சென்று, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள தொழிலாளர்களை “விழித்தெழவும்”, ஒரு பொதுவான போராட்டத்தில் இணையவும் அழைப்புவிடுத்தனர். நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். பெருநிறுவனங்கள் பூகோள அளவில் செயல்படுகின்றன, ஆகையினால் நமது போராட்டமும் பூகோள அளவில் ஐக்கியப்பட்டதாக இருக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் சக்தி என்பது நமது சர்வதேச அளவிலான ஐக்கியத்தை சார்ந்திருக்கிறது. அதாவது, எந்தவொரு நாட்டின் தொழிலாளர்களும், உலகளவிலான தொழிலாளர்களின் கூட்டணியுடன் மட்டும் தான் அவர்களது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பதாகும்.

அமெரிக்கா மற்றும் கனடாவில், பெருநிறுவனங்களின் கருவிகளாக செயல்படும் தொழிற்சங்கங்களால் வாகனத்துறை தொழிலாளர்களும் கூட பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் தான், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான மற்றும் ஜனநாயகரீதியில் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படக்கூடிய சாமானிய தொழிலாளர் குழுக்களை (rank-and-file committees) அமைப்பதற்கு நாங்கள் போராடி வருகிறோம். மேலும், அமெரிக்காவிலும் கனடாவிலும் ஐந்து ஆலைகள் மூடப்பட்டு, 15,000 வேலைகள் நீக்கப்பட்டதை எதிர்த்துப் போராட ஜெனரல் மோட்டார்ஸ் (GM) தலைமையகத்தில் பிப்ரவரி 9 அன்று ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நாங்கள் நடத்த இருக்கிறோம்.

கனடாவிலுள்ள ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் (United Auto Workers) மற்றும் யுனிஃபோர் (Unifor) போன்ற தொழிற்சங்க அமைப்புக்கள், வாகன முதலாளிகளோ அல்லது பெரும் வங்கிகளோ எங்களது எதிரிகள் இல்லை, மாறாக மெக்சிக்கோ, சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் எங்களது எதிரிகளாக உள்ளனர் என்று நீண்டகாலமாக எங்களிடம் கூறியுள்ளன. இந்த பொய்யை நாங்கள் நிராகரிக்கிறோம். உயர்ந்தபட்ச இலாபங்களைத் தேடி எந்த இடத்திற்கும் உற்பத்தித் தளத்தை மாற்றியமைக்கக்கூடிய நாடுகடந்த பெருநிறுவனங்களின் இதேபோன்ற தாக்குதல்களை உலகளவில் அனைத்து தொழிலாளர்களும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.

மெக்சிக்கோவில் மக்கில்லாடோரா தொழிலாளர்கள் எடுத்துள்ள இந்த துணிகரமான நிலைப்பாடு அனைத்து தொழிலாளர்களையும் பலப்படுத்துகிறது. தென்னிந்தியாவில் நூறாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பொதுத்துறை ஊழியர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தம் மற்றும் பிரான்சில் மஞ்சள் சீருடையாளர்கள் போராட்டங்கள் எனத் தொடங்கி, அமசன் மற்றும் UPS தொழிலாளர்களிடையே வளர்ந்துவரும் எதிர்ப்பு மற்றும், லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வெர் மற்றும் வேர்ஜீனியா போன்ற பகுதிகளில் கல்வியாளர்கள் நடத்திவரும் வெளிநடப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் என்பன வரையிலுமாக, சிக்கன நடவடிக்கை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக உலகம் முழுவதிலும் எழுச்சிபெற்றுவரும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒரு பாகமாக இதுவும் உள்ளது.

அதனால்தான், அனைத்து தொழிலாளர்களுக்காக வேலைகளையும் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் உரிமையை பாதுகாக்க ஒரு சர்வதேச அளவிலான எதிர் தாக்குதலுக்கு தயாரிப்பு செய்ய போராடும் நமது மெக்சிக்கன் சகோதர சகோதரிகளுடன் மிக நெருக்கமான பிணைப்புக்களை உருவாக்கிக் கொள்ளும்படி அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

பிப்ரவரி 9 அன்று எங்களுடைய போராட்டத்தில் இணையுங்கள்!