ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The global slowdown: US trade war comes home

உலகளாவிய வளர்ச்சிக் குறைவு: அமெரிக்க வர்த்தக போர் உள்நாட்டிற்கு வருகிறது

Andre Damon
4 January 2019

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகளைக் கடுமையாக்குவதைக் குறிக்கும் வார்த்தையான "பிணைப்பு துண்டிப்பு” (decoupling) என்பது, ஒரு கருத்துரையாளரை மேற்கோளிட்டு கூறுவதானால், “வாஷிங்டனின் உரையாடலாக" ஆகியுள்ளது. இவ்விரு நாடுகளும், ஒரு "புதிய பனிப்போராக" பரவலாக வர்ணிக்கப்படுகின்ற ஒன்றில் சிக்கி உள்ளன, இதில், முன்னாள் நிதித்துறை செயலர் ஹன்க் பௌல்சன் வார்த்தைகளில் கூறுவதானால், பசிபிக்கில் ஓர் "இரும்புத்திரை" கீழிறக்கப்பட்டுள்ளது.

“சீனாவுடனான பரந்த ஈடுபாட்டுக்கு ஆதரவாக இருகட்சிகளது கருத்தொருமைப்பாடு" என்று வாஷிங்டன் போஸ்ட் எதைக் குறிப்பிட்டதோ அதன் இடத்தில், பாதுகாப்புவாதம் மற்றும் இராணுவ மோதல் அதிகரித்து வருவதற்கு மத்தியில், உலகின் இவ்விரு மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே நிலவும் மிகப் பல பொருளாதார உறவுகளை சீர்குலைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தினது கொள்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை ஸ்தாபகத்தின் கணிசமான பிரிவுகள் ஆதரித்து வருகின்றன.

ஆனால் வியாழக்கிழமை சம்பவங்கள், 21 ஆம் நூற்றாண்டு பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில் அதுபோன்றவொரு "பிணைப்பு துண்டிப்பு" என்னவாக இருக்கும் என்பதற்கு ஓர் அறிகுறியை வழங்கியுள்ளன. ஜேர்மனி, சீனா மற்றும் ஜப்பான் சந்தைகளின் வீழ்ச்சி, பண்டங்களின் விலைகளில் இடைவிடாத சரிவு, நுகர்வோர் செலவுகள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள், வாகனத்துறை மற்றும் பிற தொழில்துறைகளில் அதிகரித்து வரும் வேலைநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகளாவிய வளர்ச்சிக் குறைவு (slowdown) அமெரிக்காவுக்குப் பரவி வருவதாக அஞ்சுகிறது.

16 ஆண்டுகளில் முதல்முறையாக, உலகின் மிகவும் இலாபகரமான நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், சீனாவில் ஆழமடைந்து வரும் பொருளாதார மந்தநிலையைக் குறிப்பிட்டும் மற்றும் அதற்காக அமெரிக்க வர்த்தக போரைக் காரணங்காட்டியும், வரவிருக்கும் ஆண்டுக்கான அதன் விற்பனை உத்தேச கணிப்புகளை வெட்ட நிர்பந்திக்கப்பட்டது.

அந்த அறிவிப்பு டோவ் சந்தையில் 660 புள்ளிகள் விற்பனைச் சரிவைத் தூண்டியது. அமெரிக்க சந்தைகள் 1930 களுக்குப் பின்னர் டிசம்பரில் மிக மோசமாக முடிவடைந்த பின்னர், அவை, ஒரு புதிய வர்த்தக ஆண்டின் இந்த இரண்டு நாட்களில், டாட்.காம் குமிழியின் பொறிவுக்குப் பிந்தைய, அவற்றின் மிக மோசமான தொடக்கத்தைக் கொண்டிருந்தன.

ஆப்பிள் தலைமை செயலதிகாரி டிம் குக் எழுதினார், “வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய சந்தைகளில் நாங்கள் சில சவால்களை எதிர்நோக்கினோம் என்றாலும், குறிப்பாக மிகப் பெரிய சீனாவில், பொருளாதார வேகக்குறைவின் இந்த அளவை நாங்கள் எதிர்நோக்கவில்லை.” அவர் தொடர்ந்து குறிப்பிட்டார், “சீனாவில் பொருளாதார சூழல் அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களால் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.”

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மேற்கோளிட்ட ஒரு வர்த்தகர் இன்னும் நேரடியாக குறிப்பிட்டார்: “அதன் அனைத்து அம்சங்களும் இன்னும் நேரடியாக அமெரிக்காவில் இடம் பிடிக்க வந்து கொண்டிருக்கின்றன... இங்கே வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டுள்ளது, நிகழ்ந்து வருகிறது.”

மனோபாவம் மாறிவரும் வேகம் மலைப்பூட்டுகிறது. “பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் 2019 இல் இரண்டு வட்டி விகித உயர்வுகளைக் குறித்து சூசகமாக சுட்டிக் காட்டி வெறும் இரண்டு வாரங்களில், இப்போது முதலீட்டாளர்களில் பாதி பேர் மத்திய வங்கி இந்தாண்டு வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர், இது ஒரு நாளைக்கு முன்னர் இருந்ததை விட சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது,” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது.

ஆப்பிள் நிறுவன எச்சரிக்கைகள் வெளியான அதே தினம், அமெரிக்காவிற்கான ISM உற்பத்தி குறியீடு ஆலை நடவடிக்கையில், 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பிந்தைய அதன் மிகப்பெரிய ஒரு மாதகால வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

உலகளாவிய அமைப்புகளால் பரந்தளவில் முன்கணிக்கப்பட்டவாறு அமெரிக்க வளர்ச்சி பல ஆண்டுகளின் போக்கில் படிப்படியாக வெறுமனே வளர்ச்சிக் குறைவை மட்டும் காணப் போவதில்லை, மாறாக ஒரு கூர்மையான மற்றும் ஆழ்ந்த மந்தநிலைமைக்குள் சீனா மற்றும் பிற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளைப் பின்தொடரக் கூடும் என்ற எச்சரிக்கைகளை இந்த புள்ளிவிபரங்கள் தூண்டிவிட்டுள்ளன. சர்வதேச அளவில் இருக்கக்கூடிய மற்றும் வர்த்தகப் போரால் தீவிரப்படக் கூடிய அதுபோன்றவொரு மந்தநிலைமை, 2008 பொறிவின் அளவுக்கோ அல்லது அதை விட பெரிதாகவோ ஓர் உலகளாவிய நிதியியல் நெருக்கடியைத் தூண்டிவிடும்.

இது ஏனென்றால் 2008 நெருக்கடிக்கான அடிப்படை காரணங்கள் எதுவுமே தீர்க்கப்பட்டிருக்கவில்லை. வங்கிகளது இருப்புநிலைக் கணக்கில் உள்ள ஓட்டைகள், பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டமை மற்றும் மிகக் குறைந்த வட்டிவிகிதங்களைக் கொண்டு வெறுமனே மத்திய வங்கிகளால் பாய்ச்சப்பட்ட பணத்தால் அடைக்கப்பட்டன. 2008 க்குப் பிந்தைய பொருளாதார "மீட்சிக்கு" உலகளாவிய கடன் விரிவாக்கத்தைக் கொண்டு நிதி வழங்கப்பட்டது, இது, கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, எப்போதும் இல்லாத உயரத்திற்கு 184 ட்ரில்லியன் டாலரை எட்டியது.

இதற்கிடையே, மலேசியாவின் 1MDB ஊழல் போன்ற சம்பவங்களில் கோல்ட்மன் சாச்ஸ் போன்ற உலகளாவிய நிதிய அமைப்புகள் பில்லியன் கணக்கான டாலர்களைக் கொள்ளையடிக்க உதவுவதற்காக நூறு மில்லியன் கணக்கிலான டாலர்களைக் கட்டணமாக பெற்றிருந்த நிலையில், இத்தகைய சம்பவங்கள் 2008 நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்ற மிகப்பெரியளவிலான மோசடி வகைகள் இன்னமும் வியாபித்து இருக்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் 2008 நெருக்கடியில் பிரதான பொருளாதாரங்கள் வர்த்தகப் போரைத் தவிர்க்க ஒத்துழைப்பதாக சூளுரைத்தன, அதுபோலன்றி இப்போது, அமெரிக்கா சீனாவுக்கு எதிராக மட்டுமல்ல, அதன் ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகள் உட்பட டஜன் கணக்கான பிற நாடுகளுக்கு எதிராக வர்த்தகப் போர் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. 1930 களைப் போல, இத்தகைய வர்த்தக மோதல்கள் ஓர் உலகளாவிய பின்னடைவின் அளவை பெரியளவில் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறைக் கொண்டுள்ளன.

“வல்லரசு போட்டியின்” வளர்ச்சியும், ஏற்பட்டு வரும் வர்த்தக மற்றும் இராணுவ மோதல்களும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனதிலிருந்து உதிப்பவை அல்ல. மாறாக, அவை முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத அடிப்படை முரண்பாடுகளின் வற்புறுத்தலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன: அதாவது பூகோளமயப்பட்ட உற்பத்தி மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கு இடையிலான மோதலைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அதனால் தான், முன்னொருபோதும் இல்லாத உலகளவிலான பொருளாதார வாழ்வின் ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு இடையிலும், உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்குகள், தேசியவாத வர்த்தக கொள்கைகள்யும் இராணுவ மீள்ஆயுதமயப்படுத்தலையும் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவுக்கு சில மாதங்களுக்குப் பின்னர், WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் எழுதுகையில், பின்வருமாறு அவதானித்தார்: “வரலாற்றுரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நெருக்கடியின் மிகவும் இன்றியமையா அம்சம் என்னவென்றால், அது பாதிக்கப்பட்ட நாட்டின் (நாடுகளின்) பிரதான வர்க்க சக்திகள் இந்த நெருக்கடிக்கு சம்பந்தமாக ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டை உருவாக்கவும் ஏற்கவும் நிர்பந்திக்கபடுகின்ற ஒரு சூழலுக்கு இட்டுச் செல்கிறது.”

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்குகள், 2008 நிதியியல் பொறிவின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் முயற்சியைக் கொண்டு அதற்கு விடையிறுத்தன. வங்கி பிணையெடுப்புகள், நெறிமுறை தளர்வுகள் மற்றும் வரி வெட்டுக்களின் விளைவாக, நிதியியல் செல்வந்த தட்டுகளின் முதலீடுகள் முழுமையாக வழங்கப்பட்டன, பின்னர் இரட்டிப்பாக்கப்பட்டன, பின்னர் மும்மடங்கு ஆக்கப்பட்டன. இதற்கிடையே, தொழிலாள வர்க்கமோ ஒரு தசாப்தமாக கூலிகளில் தேக்கத்தையும் வீழ்ச்சியையும் முகங்கொடுத்தது, அமெரிக்க வாகனத்துறையில் ஒபாமா நிர்வாகமும் அதன் தொழிற்சங்க பங்காளிகளும் நடத்திய மறுசீரமைப்பின் பாகமாக, அத்துறையில் குறைவூதிய உற்பத்தியின் விரிவாக்கம் தாக்குதலுக்கு முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒரு புதிய உலகளாவிய பின்னடைவு வெடிக்கையில், ஆளும் உயரடுக்கு—நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் அது பின்பற்றிய ஈவிரக்கமற்ற சமூக செலவுக் குறைப்பு கொள்கையைத் தீவிரப்படுத்திய—அதே கையேட்டின் அடிப்படையில் தான் செயல்படும்.

ஆனால் கடந்த தசாப்தம் வீணாக போய்விடவில்லை. 2018 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலையையும், சரக்கு வினியோகம் மற்றும் வழங்கல் தொழிலாளர்கள், விமானச் சேவை விமானிகள், வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தையும் மற்றும் நடைமுறையளவில் ஒவ்வொரு கண்டத்திலும் மற்ற துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும், ஈரானில் இருந்து இலத்தீன் அமெரிக்கா வரையில் தொழிலாளர்களின் வெடிப்பார்ந்த போராட்டங்களையும் கண்டது. அந்த ஆண்டு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, பிரான்சில் சமூக செலவு குறைப்புக்கு எதிரான பாரிய போராட்டங்களின் வெடிப்பு, மற்றும் அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதற்கான நகர்வுகளுடன் நிறைவடைந்தது.

ஆளும் உயரடுக்குகள், வர்க்க போர் மற்றும் "வல்லரசு மோதல்" குறித்த அவற்றின் சட்டபூர்வ அங்கீகரிப்புடனும் மற்றும் 1930 களின் பாசிசவாத மரபியத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கான அவற்றின் முயற்சிகளுடனும், அந்த தசாப்தத்தைக் குணாம்சப்படுத்திய அனைத்து பயங்கரங்களையும் மீண்டும் கொண்டு வருவதற்குப் பாதை அமைத்து வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர இயக்கம் மட்டுமே இந்த புதைகுழியிலிருந்து வெளியே வருவதற்கு மனிதயினத்திற்கு ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குகிறது. ஆளும் உயரடுக்கின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு முன்னால், உலகெங்கிலுமான தொழிலாளர்கள் முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கி வீசி ஒரு சமாதானமான மற்றும் செல்வ செழிப்பான சோசலிச எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சர்வதேசவாத சோசலிசத்தின் பாதையின் கீழ் போராட்டத்திற்குள் நுழைய வேண்டும்.