ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France’s mass “yellow vest” protests continue to grow in 2019

பிரான்சின் பாரிய "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் 2019 இல் தொடர்ந்து அதிகரிக்க உள்ளன

By Alex Lantier
14 January 2019

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு பரந்த வெகுஜனங்களின் அடுக்குகளிடையே அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜனவரி 12 சனிக்கிழமை நடந்த பிரெஞ்சு "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் அதிகரித்தன. முந்தைய வாரத்தின் 50,000 பேர்களுடன் ஒப்பிடுகையில், மக்ரோனுக்கு எதிராக தொடர்ச்சியான ஒன்பதாவது வாரயிறுதி பாரிய போராட்டங்களில் 84,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சக ஆதாரநபர்களின் தகவல்கள் குறிப்பிட்டன — இந்த புள்ளிவிபரங்களை உத்தியோகபூர்வ செய்தி குறிப்புகள் குறிப்பிட்டிருந்த போதினும், இது கணிசமானளவுக்குக் குறைமதிப்பீடாகவே பார்க்கப்படுகிறது.

“மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் அணிவகுத்த போது, அடுத்தடுத்து வந்த பிரெஞ்சு அரசாங்கங்களால் வாழ்க்கை தரங்கள் குறைக்கப்பட்டதையும் மற்றும் கல்வி நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டதையும் எதிர்த்து போராடுவதற்காக, சமூக ஊடகங்கள் மூலமாக "சிவப்பு பேனா" குழுக்களில் இணைந்துள்ள ஆசிரியர்களும், “மஞ்சள் சீருடையாளர்களால்" ஈர்க்கப்பட்டு, பிரான்ஸ் எங்கிலுமான பல நகரங்களில் அணிவகுத்து பேரணி நடத்தினர். “மஞ்சள் சீருடையாளர்களுடன்" அணி சேர்ந்து தொழிலாளர்களின் பிரிவுகளும் சமூக கோரிக்கைகளை முன்னெடுக்கின்றன என்ற உண்மை பிரான்சில் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் பலம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. பெருகி வரும் சமூக போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் அதிகரித்து வருகிறது.

பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. பிரான்சின் மையப் பகுதியான பூர்ஜ் (Bourges) என்னும் சிறிய நகரத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு சிறப்பு போராட்டத்திற்கு பொலிஸ் அதிகாரியிடமிருந்து விதிக்கப்பட்ட தடையையும் மீறி, 6,300 க்கும் அதிகமான "மஞ்சள் சீருடையாளர்கள்" அந்நகரின் மையப்பகுதியைச் சுற்றி இருந்த பொலிஸ் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவிய நிலையில், அந்த போராட்டம் நடத்தப்பட்டது. கலகம் ஒடுக்கும் பொலிஸ் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி 18 பேரை கைது செய்தது. “மஞ்சள் சீருடை" இயக்கம் மீதான BFM-TV சேனலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக, “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் அந்த சேனலின் செய்தியாளர்களை நகரிலிருந்து அமைதியான முறையில் வெளியேற்றினார்கள்.


இந்த பதாகை
, “மக்களின் சுய-பாதுகாப்பு" என்று குறிப்பிடுகிறது

பிரான்ஸ் எங்கிலுமான சிறிய நகரங்களில் பொலிஸ் உடனான பாரிய போராட்டங்களும் மோதல்களும் நடந்தன. நீம் (Nîmes) இல், சுமார் 3,000 போராட்டக்காரர்கள் கலகம் ஒடுக்கும் பொலிஸ் உடன் மோதலில் ஈடுபட்டனர், பொலிஸ் ரோமன் வட்டாரம் மற்றும் பொலிஸ் வட்டத்தைச் சுற்றிலும் அடர்த்தியான கண்ணீர் புகை மேகங்களை ஏற்படுத்தியது. ருவானில் அணிதிரண்ட 2,000 க்கும் அதிகமான "மஞ்சள் சீருடையாளர்கள்", அவர்களின் போராட்டத்தில் ஊடுருவ முயன்ற சீருடையில் இல்லாத பொலிஸ்காரர்களை வெளியேற்றினர். கோனில், 4,000 போராட்டக்காரர்கள் அணிதிரண்டு இரயில் நிலையத்தைச் சுற்றிலும் இருந்த பொலிஸ் உடன் மோதலில் ஈடுபட்டு, இரயில் தண்டவாளங்களைச் சேதப்படுத்தி, பாதுகாப்பு படைகள் மீது பொருட்களை வீசினர்.

போர்தோவில், 10,000 “மஞ்சள் சீருடையாளர்கள்" போராட்டம் நடத்தினர், நூற்றுக் கணக்கானவர்கள் அன்று அந்தி மாலையில் Pey-Berland சதுக்கத்தில் கலகம் ஒடுக்கும் பொலிஸ் உடன் மோதலில் ஈடுபட்டனர். துலூஸில், கலகம் ஒடுக்கும் பொலிஸ் Capitole சதுக்கத்தை ஆக்கிரமித்திருந்த குறைந்தபட்சம் 5,000 “மஞ்சள் சீருடையாளர்களை" வன்முறையோடு தாக்கியது. லீல்லில், 3,000 “மஞ்சள் சீருடையாளர்களின்" அமைதியான போராட்டம் மக்ரோன் மற்றும் உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனேருக்கு எதிராக, “காஸ்டனேர் சிறைக்குப் போ,” “மக்ரோன் இராஜினாமா செய்" என்று கூச்சலிட்டவாறு, அணிவகுத்து சென்றனர். மார்சைய்யில், La Canebière ஐ ஒட்டி அணிவகுத்த 3,000 போராட்டக்காரர்கள் பழைய துறைமுகத்திற்கு அருகில் கலகம் ஒடுக்கும் பொலிஸ் உடன் மோதலில் இறங்கினர், அதேவேளையில் பொலிஸ் நாந்தேரில் 2,600 போராட்டக்காரர்களுடன் மோதலில் இறங்கியது மற்றும் 15 பேர்களைக் கைது செய்தது.

பாரீசில், குறைந்தபட்சம் 10,000 “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் நான்கு வெவ்வேறு அணிகளாக அணிவகுத்து சென்றதுடன், வெற்றி நினைவு வளைவைச் சுற்றி (Arc de Triomphe) கலகம் ஒடுக்கும் பொலிஸ் உடன் மோதலில் இறங்கினர், அதேவேளையில் "சிவப்பு பேனா" (stylos rouges) ஆசிரியர்களும் தலைநகரில் போராட்டங்கள் நடத்தினர்.

ஆயிரக் கணக்கான "மஞ்சள் சீருடையாளர்கள்" கிழக்கிலிருந்து நகரின் மையப்பகுதியை நோக்கி அணிவகுத்து செல்கையில் பாஸ்டி சதுக்கத்தில் WSWS செய்தியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்கள், “பாரீஸ் எழுக,” என்றும், “மக்ரோன் இராஜினாமா செய்,” என்றும் கூச்சலிட்டதுடன், ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு பெண் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரரை கலகம் ஒடுக்கும் பொலிஸ் தாக்கியதற்காக அந்த பொலிஸை முகத்தில் குத்திய தொழில்ரீதியிலான முன்னாள் குத்துச்சண்டை வீரர் கிற்ஸ்தோப் டெற்றான்ஜே (Christophe Dettinger) கைது செய்யப்பட்டதைக் குறிப்பிடும் வகையில், “கிறிஸ்தோப்பை விடுவி" என்றும் கூச்சலிட்டனர்.


பிலிப்

பொதுச்சேவை தொழிலாளரான பிலிப் WSWS க்குக் கூறினார்: “ஒவ்வொரு வாரமும் போலவே, ஜனாதிபதி வரிவிதிப்பு மீது ஏதாவது செய்ய வேண்டும், சம்பளங்களை உயர்த்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக விடயங்களை முடிவெடுப்பதற்கான உரிமையைப் பெறுவது முக்கியம். நாங்கள் ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்கிறோம், பின்னர் ஐந்தாண்டுகளுக்கு அவர்களுக்குப் பச்சை விளக்கு கிடைத்து விடுகிறது, அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்கிறார்கள், எங்களை வாய்மூடி இருக்கவும் மந்தை ஆடுகளைப் போல நடந்து கொள்ளவும் எங்களுக்குக் கூறுகிறார்கள்.” “சமூக பாதுகாப்பிற்காக 40 ஆண்டுகளாக பணம் செலுத்தியவர்கள் ஒரு மாதத்திற்கு வெறும் 800 யூரோ பெறுவது என்பது சரியில்லை, வீட்டுவசதி நலன்களையும் அவர் வெட்ட இருப்பதாக பின்னர் அவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கத்தில் உள்ளவர்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்று பார்த்தால், அதுவொரு மோசடியாக உள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

“மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் மீதான பொலிஸ் ஒடுக்குமுறையை பிலிப் கண்டித்தார்: “நான் ஆரம்பத்தில் இருந்தே அனைத்து போராட்டங்களிலும் இருந்துள்ளேன், ஒவ்வொரு முறை நாங்கள் செல்லும் போதும் எங்களுக்கு கண்ணீர் புகை குண்டு தான் வழங்கப்படுகின்றன. ... காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை நீங்களே பாருங்கள்!” கையெறி குண்டுகளால் கரங்களை இழந்த அல்லது இரப்பர் தோட்டாக்களால் கண்களை இழந்த "மஞ்சள் சீருடையாளர்களை" நினைவுகூர்ந்து, பிலிப் கூறுகையில், “அந்த வன்முறை முற்றிலும் விகிதாச்சார சமநிலையில் இல்லை. இரப்பர் தோட்டாக்களை இடுப்புக்குக் கீழே தான் சுட வேண்டும். ஆனால் அது கால்களைத் தாக்கவில்லை, மாறாக கண்களைத் தாக்கும் அளவுக்கு உடலை நோக்கி சுடப்பட்டுள்ளது,” என்றார்.

விடயம் இப்போது வெறுமனே பிரான்ஸ் சம்பந்தப்பட்டதில்லை, மாறாக ஆளும் உயரடுக்கிலிருந்து மக்ரோனுக்கான சர்வதேச ஆதரவுக்கு எதிராக இது ஓர் ஐரோப்பிய போராட்டம் என்பதையும் பிலிப் சேர்த்துக் கொண்டார்: “அவர் முதன்முதலில் பதவிக்கு வந்த போது பலரும் மக்ரோன் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். அவர் எல்லா அரசியல் கட்சிகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதாக கூறினார். ஆனால் அவர் எங்களை இன்னும் ஆழமான வறுமைக்குள் தான் மூழ்கடித்துள்ளார். அவர் நிதியியல் துறையில் வேலை செய்தவர் என்பதை தான் ஒருவர் கூற வேண்டியிருக்கும். எந்தவொரு விடயத்திலும், அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தால் வழிநடத்தப்படுகிறார்கள். ஐரோப்பா தான் இப்போதைய பிரச்சினையே,” என்றார்.

ஐரோப்பா எங்கிலுமான வேலை இழப்புகளால் அச்சுறுத்தப்பட்டுள்ள ஃபோர்ட் தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற வேலைநிறுத்தத்திற்கான ஆதரவு குறித்து வினவிய போது, பிலிப் தெரிவித்தார்: “ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பணமில்லாதவர்கள் அனைவரையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஐரோப்பா எங்கிலும் வெளிநாடுகளில் உள்ள 'மஞ்சள் சீருடையாளர்களுடன்' நாங்கள் விவாதித்து வருகிறோம். இதுவொரு ஐரோப்பிய இயக்கமாக அபிவிருத்தி அடையக்கூடுமென நான் நினைக்கிறேன், அது மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்பதுடன், அதில் நிறைய பேர் களம் இறங்குவார்கள். ஆனால் நாங்கள் எட்டு வாரமாக வீதியில் இருக்கிறோம், இருந்தும் எங்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை,” என்றார்.

பாஸ்டி சதுக்கத்திற்கு அருகில் மனு என்பவர் அவர் ஏன் போராடி வருகிறார் என்பதை WSWS க்கு விளக்கினார்: “நாங்கள் நிறைய கட்டணங்கள் செலுத்துகிறோம், மாத இறுதியில் எங்களிடம் ஒன்றும் இருப்பதில்லை. நாம் இம்மாதம் 12 ஆம் நாட்கள் தான் கடந்துள்ளன, நான் வேலையில் இருப்பவன் தான் என்றாலும் ஏற்கனவே என்னிடம் ஒன்றுமில்லை. நான் மட்டும் இப்படி இல்லை, ஒவ்வொருவரும் பிரான்ஸ் முழுவதும் இப்படி தான் உள்ளது,” என்றார்.

தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து வினவியதும், அவற்றை ஆளும் கட்சிகளில் இருந்து வேறுபட்டதாக அவர் பார்க்கவில்லை என்று மனு தெரிவித்தார்: “இல்லை, எவரும் எங்களுக்கு உதவுவதற்கு இல்லை. நாங்கள் தனித்து உள்ளோம். நாங்கள் அனைவரும் வெளியில் வர வேண்டும், அது ஒன்று மட்டுமே செய்ய வேண்டும். நாங்கள் மாதக் கணக்கில் அற்ப சம்பளங்களுக்காக போராடுகிறோம், எங்களுக்கென்றும் எங்கள் குடும்பத்திற்கென்றும் ஒன்றும் கிடைப்பதில்லை. போதும், இனி பொறுக்க முடியாது,” என்றார்.

“மஞ்சள் சீருடை” போராட்டக்காரரும் ஒரு பௌதீகத்துறை மாணவரும் ஆன திபோ (Thibault) குடியரசு சதுக்கத்தில் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடன் உரையாற்றினார். அவர் கூறினார், “நாங்கள் எந்த கொள்கைகளுக்காக வாக்களிக்கவில்லையோ அதே கொள்கைகளை சட்டபூர்வமாக்க எங்களின் வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயக்கத்தை எது தூண்டியது, அடிப்படை பிரச்சினையே, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் சமூக சமத்துவமின்மை பெருகி இருப்பதை நாம் காண்கிறோம். பிரான்சில், இலாப தொகை 23 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்த நிறுவனங்களில் பங்குதாரர்களுக்கு ஆதாயப் பங்கு வழங்கப்பட்டது, மில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, செல்வந்தர்களுக்கான வரி (ISF) நீக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மக்ரோன் அவரது கொள்கைகளை மாற்றிக் கொள்வார் என்பதில் நம்பிக்கையில்லை என்று திபோ வலியுறுத்தினார்: “பொலிஸ் வன்முறை தொடர்ச்சியாக மறைக்கப்படுகின்றன, நிறைய பேர் கடுமையாக காயமடைந்திருக்கிறார்கள், முட்டிகள் பேந்து போயுள்ளன.”


பாரீஸ் நகர மன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் நீர்ப்பீய்ச்சி
பீரங்கி

“மஞ்சள் சீருடையாளர்கள்" போராட்டம் ஒரு வலதுசாரி இயக்கம் என்ற கூற்றுக்களையும் அவர் நிராகரித்தார்: “முடியாட்சியின் கொடிகள் ஏந்திய சிலரை நான் பார்த்திருக்கிறேன். அது இந்த இயக்கத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு சிறிய சிறுபான்மை என்று நினைக்கிறேன், ஏனென்றால் இப்போது வரையில் எங்கள் இயக்கத்தின் கோரிக்கைகள், இன்று தீவிர வலது எதை பாதுகாக்கிறதோ துல்லியமாக அதற்கு எதிர் தரப்பில் உள்ளன. எங்கள் பிரச்சினைகள் புலம்பெயர்ந்தவர்களால் தால் உருவாக்கப்படுகிறது என்று கூற வந்தால், அதை நாங்கள் கேட்க விரும்புவதில்லை.”

WSWS செய்தியாளர்கள் பாரீஸில் "சிவப்பு பேனா" ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததைக் கண்டனர். அரசு செய்தி தொடர்பாளர் பென்ஜமின் கிறிவோவின் அமைச்சக கதவை போராட்டத்தின் போது தாக்கியிருந்த “மஞ்சள் சீருடையாளர்களை" கண்டித்த அவரை அலின் கேலி செய்தார்: “கிறிவோவின் அமைச்சகத்தினர் அவர்களின் உடைக்கப்பட்ட கதவு குறித்து குறைகூறுகையில் எனக்கு சிரிப்பு வருகிறது, ஏனென்றால் எங்கள் பள்ளிக்கூட கதவுகளையும் நாங்கள் அப்படி தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் Drancy [பாரீசின் தொழிலாள வர்க்க புறநகர் பகுதி] இல் இருந்து வருகிறேன்,” “மேலும் எங்கள் பள்ளிகளின் நிலையை நீங்கள் வந்து பார்க்க வேண்டுமென உங்களை அழைக்கிறேன், தளத்தில் ஓட்டைகள், உடைந்த கதவுகளுமாக இருக்கின்றன.”

அவர் இதையும் சேர்த்துக் கொண்டார், “கல்வித்துறையில் எங்களின் சம்பளங்கள் சுமார் 20 ஆண்டுகளாக உறைந்து போயுள்ளன. பல ஆண்டுகளாக எங்களின் நிஜமான சம்பளங்களில் சுமார் 20 சதவீதத்தை நாங்கள் இழந்துள்ளோம். நீங்கள் பணியில் சேரும் போது இப்போது நீங்கள் மாதத்திற்கு 1,350 யூரோக்களுடன் தொடங்குகிறீர்கள், அதுவும் நீங்கள் ஓர் ஒப்பந்த தொழிலாளர் என்றால் இதையும் விட குறைவாக இருக்கும், இவர்களுக்கு கோடை காலங்களில் சம்பளங்கள் வழங்கப்படுவதில்லை ... நாங்கள் கல்வித்துறையில் தனியார் துறை தொழிலாளர் உறவுகளைக் கண்டு வருகிறோம்.”

WSWS க்கு மெலனி கூறினார், “பணம் எங்கே இருக்கிறதோ அங்கிருந்து அதை பறிமுதல் செய்ய வேண்டும்.” அவர் தொடர்ந்து கூறினார், “எங்கள் பள்ளிகளில் வெகு குறைவான ஆதாரவளங்களே உள்ளன, நாங்கள் எங்களின் கைக்காசைச் செலவிடுகிறோம். என் குழந்தையின் நிறைய பொம்மைகளை நான் பள்ளிக்குக் கொண்டு வருகிறேன். நாங்கள் பேனாக்கள், உபயோக பொருட்கள், காலண்டர்கள், காகிதங்கள், இன்க் ஆகியவற்றை எங்களின் சொந்த செலவில் வாங்குகிறோம். நாங்கள் பெற்றோர்களை நகலெடுத்துக் கொள்ளுமாறு கேட்க வேண்டியிருக்கிறது.” அவர் இதையும் சேர்த்துக் கொண்டார், “இந்த 'மஞ்சள் சீருடையாளர்கள்' ஏதாவது செய்ய எங்களை ஊக்குவித்திருக்கிறார்கள்.”

ஊடகங்களில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை விமர்சிப்பதைக் கண்டனம் செய்த அப்பெண்மணி கூறுகையில், “நாங்கள் தனிச்சலுகை பெற்றிருப்பவர்களும் இல்லை, நாங்கள் சோம்பேறிகளும் கிடையாது. ... எங்களின் ஆரம்ப சம்பளங்கள் 1,400 யூரோவுக்கும் குறைவாகும்,” என்றார். “தொடக்கப் பள்ளியில் படிக்கும் போதிருந்தே நான் ஆசிரியையாக ஆக விரும்பினேன். எனக்கு ஓர் அருமையாக ஆசிரியர் கிடைத்திருந்தார் ... மாணவர்கள் மீதான அவரின் அர்ப்பணிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. அப்போதிருந்து நான் ஆசிரியப்பணி செய்ய விரும்பினேன் என்பது எனக்குத் தெரியும், குறைபாடுகளில் குழந்தைகளுக்கு உதவி அவர்களை நான் சிறந்த குடிமக்களாக ஆக்க உதவ விரும்பினேன்,” என்றார்.

இதை அவர் ஒரு சர்வதேச பிரச்சினையாக பார்ப்பதாக தெரிவித்தார்: “அமெரிக்காவிலும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருவதை நான் பார்க்கிறேன். அது அவசியமானது தான், இது சர்வதேச ரீதியாக நடத்தப்பட வேண்டும், ஏனென்றால் இது பிரான்ஸில் மட்டும் இவ்வாறு இல்லை. அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலும் இதே போல்த்தான் இருக்கிறது, மற்ற விடயங்களோடு ஒப்பிடுகையில் கல்வி புறக்கணிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அது நிறுத்தியாகப்பட வேண்டும், அவர்களின் போராட்டங்களுக்கும் எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.