ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German army initiates military cooperation with Deutsche Bahn railway company

ஜேர்மன் இராணுவம், ஜேர்மன் இரயில்வே நிறுவனத்துடன் இராணுவ கூட்டுறவு ஒத்துழைப்பை தொடங்குகிறது

By Tino Jacobson 
12 February 2019

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜேர்மன் இராணுவம் மற்றும் ஜேர்மன் இரயில்வேக்கு (Deutsche Bahn - DB) இடையே ஒரு ஒப்பந்தம் அமுலுக்கு வந்திருந்தது, இது பெருமளவில் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எல்லைக்கு இராணுவ உபகரணங்களை கொண்டு செல்வதற்கும், ரஷ்யாவுடன் போருக்கு தயாராவதற்கும் இலக்காகக் கொண்ட பாரிய இராணுவ கட்டியெழுப்பலின் ஒரு பகுதியாக பொருட்கள் கட்டமைப்பு உடன்படிக்கை எனப்படும் இவ் ஒப்பந்தம் காணப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஆரம்பத்தில் டிசம்பர் 31, 2020 வரை இரண்டு ஆண்டுகள் அமுலில் இருக்கும், ஆனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நீடிக்க முடியும்.

இந்த ஆண்டு நேட்டோவின் முன்னணிபடையான “மிகவும் உயர்ந்த தயார்நிலை கூட்டுப்பணி படையை" (VJTF). வழிநடத்துவதற்கான தலைமைப் பொறுப்பை ஜேர்மனி ஏற்றுக்கொண்டது. இந்த அமைப்பு ஏறக்குறைய 5000 துருப்புக்களை உள்ளடக்கியதாகவும், அவர்கள் தேவைப்படும் இடத்திற்கு 48 தொடக்கம் 72 மணித்தியாலத்திற்குள் சென்றடையும் திறன் கொண்டதாகவும் உள்ளது. VJTF என்பது நேட்டோ பதிலடி படை (NATO Response Force) இன் ஒரு பகுதியாகும். NRF என்பது மொத்தம் 40,000 படையினருடன் தரை, ஆகாயம், கடல் மற்றும் சிறப்புப் படைகளின் பிரிவுகள் கொண்ட ஒரு செயற்பாட்டு படையாகும்.

ஆண்டுதோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட போக்குவரத்துக்கள் மூலம் ரஷ்ய எல்லைக்கு இராணுவ உபகரணங்களையும் இராணுவ துருப்புக்ளையும் கொண்டுசெல்லல் நடைபெறும். ஒவ்வொரு போக்குவரத்தும்  ஒரு முழு இரயிலை குறிக்கிறதே தவிர தனிப்பட்ட இரயில் பெட்டிகளை அல்ல. ஜேர்மன் இரயில் மற்றும் இராணுவத்திற்கான ஒப்பந்தத்தம் நடைமுறைக்கு வருகையில், பயணிகளின் பயணத்தை விட இராணுவப் போக்குவரத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

இந்த ஒப்பந்தம் 100 மில்லியன் யூரோக்கள் பெறுமதியானது ஆகும். இந்த மொத்த செலவில் 79 மில்லியன் யூரோக்கள் நிரந்தர செலவுகள் (பணியாளர்கள், மூலப்பொருட்கள் மற்றும் இரயில் பாதைகள்), விரைவான  போக்குவரத்துக்கு 6 மில்லியன் யூரோக்கள் மேலதிகமாகவும் மற்றும் 21 மில்லியன் யூரோக்கள் பயன்படுத்துவதற்கான செலவுகளையும் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 1000 போக்குவரத்துகளுக்கு மேலதிகமாக தேவைப்பட்டால், கூடுதலாக 300 இரயில்கள் மூலம் மேலதிக உபகரணங்களை அனுப்புவதற்கு திட்டமிடப்படும்.

2019 ஆம் ஆண்டில், 9700 இராணுவத்தினர், 150 கனரக இராணுவ வாகனங்கள், 3,300 நாற்சக்கர வாகனங்கள், 1,500 டிரெய்லர்கள் மற்றும் 1,370 கொள்கலன்களை கிழக்கிற்கு கொண்டு செல்லும் திட்டங்களும் உள்ளன. 2020 இல், பால்டிக் நாடுகளுக்கு ஐந்து நாட்களுக்குள் இராணுவ பொருட்கள் அனுப்பப்படும். லோயர் சாக்சோனியில் உள்ள பேர்கன் நகரிலும், நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள டொய்ட்ன் நகரத்திலும் இருந்து இரயில்களில் பொருட்கள் ஏற்றப்படுவதுடன் போலந்து எல்லையிலுள்ள செஸ்டோகாய் என்ற லித்துவேனிய நகரத்திற்கு தினமும் ஒரு இரயில் புறப்படும். இந்த பாதை ஜேர்மன் எல்லை நகரான பிராங்பேர்ட்-ஓடரை கடந்து செக் குடியரசில் உள்ள குனோவிஸ் வழியாக செல்கிறது.

ஜேர்மனிய இராணுவத்தின் புதிய கோட்பாடு ஏப்ரல் 2018 இல் பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்டது. ஜேர்மனியின் புவியியல் நிலை காரணமாக "ஐரோப்பாவின் இதயத்தில் ஒரு மூலோபாய மையமாகவும், ஐரோப்பிய கூட்டுப் பாதுகாப்பில் முக்கிய அங்கமாகவும்" இருப்பதாக விவரிக்கப்படுகின்றது. "நேட்டோ கூட்டணியினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் செயல்படும் தன்மை" என்பது “ஜேர்மனி அவற்றின் விருந்தினர் நாடாக இருந்து அதன் கடமைகளை நிறைவேற்றுவதிலும், கூட்டு நாடுகளின் பிராந்தியங்களுக்கும் பின்தங்கிய பகுதிகளுக்கும் ஒரு இடைப்போக்குவரத்து நாடாக படைகளை அனுப்புவதிலும் தங்கியுள்ளது.

"விருந்தினர் நாட்டு ஆதரவு" என்பது தனது நாட்டில் ஒரு நட்பு அல்லது கூட்டினது ஆயுதப்படையை ஆதரிக்க அனைத்து பொது மற்றும் இராணுவ முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த "சவால்கள்" கடந்த ஜூன் மாதம் உல்ம் நகரில் நிறுவப்பட்ட நேட்டோ கூட்டு உதவியளிக்கும் கட்டளையகம் (JSEC) மூலம் தீர்க்கப்பட்டு வருகின்றன, இது ஐரோப்பாவில் மின்னலடித்தாக்குதல் (blitzkrieg) போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

யுத்தத்தின் போது, ஐரோப்பா முழுவதும் துருப்புக்கள் மற்றும் பொருட்களின் பயன்பாட்டை ஒருங்கிணைப்பது, மற்றும் முன்நோக்கித் திட்டங்களை மையப்படுத்தல் மற்றும் நடவடிக்கை பகுதிக்கு மூலப்பொருட்களை கொண்டுவருவதற்கும் JSEC, பொறுப்பானது.  கட்டளை மையம், அமைதிக் காலங்களில் 100 பேரையும், போர் நேரங்களில் 500 பேரையும் பயன்படுத்துகிறது. கட்டளை மையம் முழுமையாக தயாராகுதல் 2021 ஆம் ஆண்டில் அடையப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள இராணுவத் துறையில் இன்னொரு முக்கியமான விடயம் "இராணுவ நகர்வு" ஆகும். இதற்காக வரவிருக்கும் ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவு திட்டங்களில் ஆறரை பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படவுள்ளது. இது போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த அதாவது சாலைகள் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தப்படல், புதிய இரயில் வண்டிகளை வாங்குதல் போன்றவை மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அதிகாரத்துவ கட்டமைப்புகளை சமாளிக்கவும், அதற்கேற்ப மாற்றவும் பயன்படுத்தப்படுகிறது. கட்டமைப்பு ஒப்பந்தம் இரயில் போக்குவரத்தில் எந்த பிராந்திய கட்டுப்பாடுகளையும் திணிக்கவில்லை. கூடுதலாக, மற்ற ஆயுதப் படைகளான நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், அல்லது ஐக்கிய நாடுகள் போன்றவையும் இவ் உள்கட்டமைப்பைப் பயன்படுத்த முடியும்.

ஜேர்மன் இரயில்வே உடனான உள்கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கான போலிக்காரணத்தின் கீழ் பால்டிக் நாடுகளில் ஜேர்மன் இராணுவ தலையீடு அதன் அதிகரித்த நோக்கமாக அணு ஆயுத சக்தியான ரஷ்யாவுடன் போருக்காக தயாராவதைக் கருதுகிறது. நோர்வேயில் கடந்த இலையுதிர் காலத்தில் நடத்தப்பட்ட Trident Juncture எனும் நேட்டோ பயிற்சியே பனிப்போர் முடிவுக்கு வந்ததில் இருந்து நடாத்தப்பட்ட மிகப்பெரிய பயிற்சியாக இருந்தது. ஜேர்மன் இராணுவம் 10,000 இராணுவத்தினர் மற்றும் 4,000 வாகனங்களுடன் பயிற்சியில் கலந்து கொண்டது.

ஜேர்மன் இராணுவ கோட்பாடு ஜேர்மன் பெரும் இராணுவ மோதல்களுக்கு தயாராகி வருவதை தெளிவுபடுத்துகிறது. இது ஏனைய விடயங்களுடன், மிகப்பெரிய நடவடிக்கைகளுக்காக "திடீர்த் தாக்குதல், பின்தொடர்ந்து அனுப்புவதற்கான தகமைகள் திட்டமிட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. ஒரு கலப்பு மோதலில் தனது முற்றான விளைவுகளுடனும், அதனது அனைத்து பரிமாணங்களிலும், ஒரு கூட்டு பன்நாட்டு ஆயுதப்படைகளுடனும் மற்றும் அனைத்து வகையான நடவடிக்கையிலும் செயற்படக்கூடியதாக இருக்கவேண்டும் மிகப்பெரிய, உக்கிர, நடவடிக்கைகளின் ஆரம்பத்தில், உடனடியாக கிடைக்கக்கூடிய இராணுவம் மற்றும் உபகரணங்கள் அவசியம். இராணுவம் மற்றும் உபகரணங்களை மீளப்புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்." என அக்கோட்பாடு குறிப்பிடுகின்றது.

இந்த ஒப்பந்தம், கடந்த காலத்திலிருந்த ஒரு இருண்ட காலத்தை நினைவூட்டுகிறது. இந்த உள்ளடக்கத்திலேயே நோக்கப்பட வேண்டும். 1942 இல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான தாக்குதலின் போது ஜேர்மன் றைய்ஸ்பானின் (Reichsbahn) பிரச்சார முழக்கங்களில் ஒன்று "சக்கரங்கள் வெற்றியை நோக்கி திருப்பப்பட வேண்டும்!". இரயில் வலைப்பின்னல் மற்றும் றைய்ஸ்பானின் "சிறப்பு இரயில் திட்டம்"  இல்லாமல், சோவியத் யூனியனுக்கு எதிரான அழிவுகரமான யுத்தம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட பின்னர் மில்லியன் கணக்கான தொழில்துறை கொலைகள் என்பன இடம்பெற்றிருக்காது. அந்த நேரத்தில், றைய்ஸ்பான் நேரடியாக போக்குவரத்து அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இன்று மத்திய அரசாங்கத்தின் 100 சதவீத கட்டுப்பாட்டில் ஜேர்மன் இரயில்வே உள்ளது. இது ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு அதிகளவில் அடிபணிய செய்யப்பட்டுள்ளது.