ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s state of emergency
A step towards presidential dictatorship

ட்ரம்பின் அவசரகால நிலை

ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு படி

Patrick Martin
16 February 2019

தெற்கு அமெரிக்க எல்லையில் ஜனாதிபதி ட்ரம்பின் தேசிய அவசரகால நிலை பிரகடனம் அமெரிக்காவில் அரசியலமைப்பு விதிகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடி தாக்குதலாகும். பொது நிதிகளை எவ்வாறு செலவிடுவது என்பதை முடிவெடுப்பதற்காக காங்கிரஸின் அரசியலமைப்பு தனியுரிமைகளை ஒரு ஜனாதிபதி கைப்பற்ற முனைந்திருப்பது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.

வெள்ளியன்று மதியம் வெள்ளை மாளிகை வெளியிட்ட அந்த பிரகடனத்தில் உள்ளவாறு அந்த வரிகள், ட்ரம்ப் பிரதானமாக அமெரிக்க இராணுவத்தைக் கொண்டும் மற்றும் பென்டகனின் பரந்த வளங்களைப் பயன்படுத்தியும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டி ஒரு சுவர் எழுப்ப முயன்று வருகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த எல்லை "குற்றவாளிகளுக்கும், கொள்ளைக் கும்பலின் உறுப்பினர்களுக்கும், போதை மருந்து கடத்துபவர்களுக்கும் பிரதான முகப்பு வாசலாக" இருப்பதால் அது "தேசிய பாதுகாப்பு நலன்களை அச்சறுத்துகிறது" என்று எல்லையை ஒட்டிய நிலைமையை விவரித்த பின்னர், அந்த பிரகடனம் அறிவிக்கிறது: “தற்போதைய அவசர நிலைமையினது ஈர்ப்பாற்றலின் காரணமாக, இந்த நெருக்கடியைத் தீர்க்க ஆயுதப்படைகளுக்குக் கூடுதல் ஒத்துழைப்பு வழங்க அவசியப்படுகிறது.”

இந்த பிரகடனம் 1953 ஆம் ஆண்டு சட்டத்தின் பாகமாக அமெரிக்க சாசனம் 10 இன் 12302 ஆம் பிரிவைப் பயன்படுத்துகிறது, அது இராணுவ காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஒரு மில்லியன் இராணுவத்தினரை 24 மாத காலத்திற்கு அணிதிரட்ட பாதுகாப்புத்துறை செயலரை அனுமதிக்கிறது. காத்திருப்போர் பட்டியல் இராணுவத்தினரை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்துவதற்காக அணிதிரட்ட பயன்படுத்தப்பட்டுள்ள இந்த பிரிவு, ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷால் 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் பயன்படுத்தப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்களையும் அகதிகளையும் அமெரிக்காவை அச்சுறுத்தும் "ஊடுருவல்காரர்களாக" சித்தரித்து, அமெரிக்க-மெக்சிகோ எல்லையை பிரதான இராணுவ போர்க்களமாக கையாள முயல்கிறார்.

சாசனம் 10 இன் பிரிவு 2808 ஐயும் ட்ரம்ப் கையிலெடுக்கிறார், இது இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பென்டகனை அனுமதிக்கிறது. இது முன்னதாக சண்டை நடவடிக்கைகளின் போது இராணுவத்திற்கு அவசியமான முகாம்கள், படையரண்கள், விமான நிறுத்துமிடங்கள், சாலைகள், போர்-கைதிகளுக்கான முகாம்கள் மற்றும் ஏனைய ஆலைகளைக் கட்டமைப்பதற்கானது என்று புரிந்து கொள்ளப்பட்டு வந்தது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டிய சுவரும் இது போன்ற இராணுவ அவசியத்திற்காக என்று கையாளப்பட உள்ளது.

ட்ரம்பிடமிருந்து பென்டகன் தலைவருக்கான உரிய உத்தரவு, இந்த விடயத்தில் தற்காலிக பதவி வகித்து வரும் பாதுகாப்புத்துறை செயலர் பாட்ரிக் ஷானஹனுக்குரிய உத்தரவு, "செயலர் ... ஏற்புடையதென்று தீர்மானித்தால் "தயாராக இருக்கும் இராணுவ அங்கத்தவர்கள் அல்லது பல பிரிவுகளைச் செயல்பாட்டுக்குரிய வேலையில் ஈடுபடுத்திக் கொள்ள" அவருக்கு அனுமதி வழங்குகிறது. பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செயலர்களும் "அனைத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க ... இவ்விடத்தில் அதிகாரிகளின் உபயோகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அல்லது ஆதரவைப் பெற அனுமதிப்பதற்கு, அவசியமானால், எல்லை நிலங்கள் மீதான நீதி பரிபாலனங்களை மாற்றுவது மற்றும் ஏற்றுக் கொள்வது உள்ளடங்கலாக" அதில் கூடுதலாக உத்தரவிடப்பட்டுள்ளன.

இது, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் முழுமையாக இராணுவமயப்படுத்துவம் அளவுக்குப் பென்டகனுக்கு பரந்த விரிவான அதிகாரத்தை வழங்குவதற்கு ஒப்பானதாகும்.

தேசிய அவசரகால நிலை பிரகடனமானது மொத்தம் 136 மாவட்ட சட்ட அதிகாரங்களைக் கையிலெடுக்க ஜனாதிபதியை அனுமதிக்கிறது, அவற்றில் வெறும் 13 இக்கு மட்டுமே காங்கிரஸின் கூடுதல் நடவடிக்கை அவசியப்படுகிறது, அதாவது எந்தவொரு காங்கிரஸ் உள்ளீடும் இல்லாமலேயே நிர்வாக பிரிவுக்கு 123 அதிகாரங்கள் இருக்கும். இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை நெறிப்படுத்தும் எல்லா சட்டங்களையும் நீக்குதல் முதற்கொண்டு அவசரகால சேவைக்கு ஓய்வூபெற்ற இராணுவ அதிகாரிகளை அழைக்க அனுமதிப்பது வரையில் இந்த அதிகாரங்கள் விரிந்துள்ளன.

இந்த உத்தரவு Posse Comitatus சட்டத்தை வெளிப்படையாக மீறுவதாக உள்ளது, இச்சட்டம் அமெரிக்காவின் எல்லைகளுக்குள் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து அமெரிக்க இராணுவத்தைத் தடுக்கிறது. இந்த சட்டவிரோதத்தன்மையை மூடிமறைக்க, ட்ரம்பின் உத்தரவு இராணுவத்தை "தெற்கு எல்லையில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மற்றும் உதவ" செயல்படுத்துவதாக விவரிக்கிறது.

மிகவும் அடிப்படையிலேயே, ட்ரம்பின் உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பை நேரடியாக எதிர்க்கிறது. அரசியலமைப்பு சாசனம் I, பிரிவு 9, ஷரத்து 7 இன் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிடுகிறது: “சட்டப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மீறி, நிதி கருவூலத்திலிருந்து பணம் ஒதுக்கப்படக்கூடாது ...” இந்த வாசகம், சட்டமன்றம் "நிதியாதார அதிகாரத்தைப்" பெற்றுள்ளது என்பதையும், (நிதிக் கருவூலத்தை உள்ளடக்கிய) நிர்வாக பிரிவானது காங்கிரஸ் அதிகாரம் வழங்கினால் மட்டுமே பணத்தைச் செலவிடலாம் என்பதையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரிய வைக்க அர்த்தப்படுத்துவதாக உள்ளது.

சமீபத்தில் 2014 இல், காங்கிரஸில் இடம் பெற்றிருந்த குடியரசுக் கட்சியினர், காங்கிரஸ் சபைக்குப் பொருந்தாத "செலவு-குறைப்பு தொகைகளைப் பகிர்ந்து கொள்ளும்" (cost-sharing reduction payments) வடிவில், ஒபாமாகேர் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, ஒபாமா நிர்வாகத்தை வழக்கில் இழுத்தார்கள். காங்கிரஸ் அப்போது ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போதினும், அது தெளிவாக அந்த தொகைகளை அனுமதிக்க உத்தேசித்திருந்தது, அந்த சட்டமசோதாவில் எழுதப்பட்டிருந்த வாசகங்களில் உண்மையில் இந்த வழிவகை எழுதப்பட்டிருக்கவில்லை. பெடரல் நீதிமன்றங்கள் குடியரசு கட்சியினரது சட்ட வழக்கை நிலைநிறுத்திதுடன், அந்த தொகைகளை நிறுத்தியது.

குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவரான ஓர்கனின் பிரதிநிதி கிரெக் வால்டன் அந்நேரத்தில் அறிவிக்கையில், “பிரதானமாக அங்கே அதிகாரப் பகிர்வு உள்ளது, அரசியலமைப்பு அதிகாரிகள் அதாவது காங்கிரஸே பணத்திற்குப் பொறுப்பானது,” என்றார். இன்றோ, காங்கிரஸ் சபையில் உள்ள பெரும்பாலான குடியரசு கட்சியினர் அதிகாரப் பகிர்வை வெளிப்படையாக எதிர்த்து ட்ரம்பின் நடவடிக்கையை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் ட்ரம்பின் தேசிய நெருக்கடி நிலை பிரகடனத்தை "சட்டத்திற்குப் புறம்பானதாக" அழைத்தார்கள். பிரதிநிதிகள் சபையின் பேச்சாளர் நான்சி பிலோசி மற்றும் செனட் சபை சிறுபான்மை தலைவர் சக் ஸ்கூமரும் ஒரு கூட்டு அறிக்கையில் அறிவித்தார்கள்: “ஜனாதிபதியின் நடவடிக்கைகள், நம் ஸ்தாபகர்கள் அரசியலமைப்பில் உள்பொதிந்த காங்கிரஸின் பிரத்யேக நிதியாதார அதிகாரத்தைத் தெளிவாக மீறுகிறது.”

“ஜனாதிபதி சட்டத்திற்கு மேலானவர் கிடையாது,” பெலோசி மற்றும் சூமர் தொடர்ந்தனர். “அரசியலமைப்பை ஜனாதிபதி சின்னாபின்னமாக்குவதைக் காங்கிரஸ் அனுமதிக்க முடியாது.”

ஆனால் துல்லியமாக இது தான் நடக்க உள்ளது. பிரதிநிதிகள் சபை ஒப்புதல் மறுக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றக்கூடும், பின்னர் அதன் மீது 18 நாட்களுக்குள் செனட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். குடியரசுக் கட்சி செனட்டர்களில் அரை டஜன் செனட்டர்கள் அத்தீர்மானத்தை ஆதரித்தாலும் கூட, ட்ரம்ப் பின்னர் அதன் மீது வீட்டோ அதிகாரம் பயன்படுத்தலாம், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினர் அனேகமாக மிகக் குறைவாகவே வீட்டோ அதிகாரத்தை நீக்க விரும்பக்கூடும்.

பெலோசியும் சரி சூமரும் சரி, அல்லது வேறெந்த முன்னணி காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரும் சரி, ட்ரம்பின் நடவடிக்கை குற்றஞ்சுமத்தக்க துஷ்பிரயோகம் என்றோ, அல்லது அமெரிக்க அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் செய்து கொண்ட அவரின் பதவிப்பிரமாணத்தின் அப்பட்டமான மீறல் என்பதால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றோ கூறவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் சட்டவழக்குகளை அறிவுறுத்தி உள்ளனர், அமெரிக்க நீதித்துறையில் ட்ரம்பாலேயே நியமிக்கப்பட்ட இரண்டு நீதியரசர்கள் உள்ளடங்கலாக அதன் ஐந்து-உறுப்பினர் அதிதீவிர வலது பெரும்பான்மையுடன் இருக்கின்ற நிலையில், இறுதியில் அது அமெரிக்க நீதித்துறையின் முடிவுக்குச் செல்கிறது.

வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவரது சுற்றி வளைத்த பேச்சின் போது, உச்சநீதிமன்றத்தில் அவரே ஜெயிக்கக்கூடும் என்பதை ட்ரம்ப் பெருமையாக குறிப்பிட்டார், தேசிய நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த கையெழுத்திட்டிருப்பதை அக்கூட்டத்தில் தான் அவர் அறிவித்தார். எல்லை சுவரை எதிர்ப்பவர்களை ஏளனப்படுத்திய அவர், அவர்கள் மாவட்ட நீதிமன்றங்களிலும் முறையீட்டு நீதிமன்றங்களிலும் அனுகூலமான தீர்ப்புகளைப் பெறக்கூடும் என்றாலும், முஸ்லீம் பயணியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது மீதான அவரின் தடை சம்பந்தமான சட்ட வழக்கில் நடந்ததைப் போல, அத்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் மாற்றப்படும் என்று கணித்தார்.

ட்ரம்ப் சட்டமாக கையெழுத்திட ஒப்புக் கொண்டுள்ள ஒட்டுமொத்த பெடரல் நிதி ஒதுக்கீட்டு சட்டமசோதாவுக்குள் உள்ளடக்கப்பட்ட, எல்லைச் சுவர் புதுப்பித்தல் மற்றும் கட்டமைப்பதற்கு 1.375 பில்லியன் டாலரை ஏற்றுக் கொள்வதென்ற ஜனநாயக கட்சியினரின் முடிவு, ட்ரம்பின் சட்ட நிலைப்பாட்டைப் பலப்படுத்துகிறது. காங்கிரஸ் ஏற்கனவே சுவர் கட்டமைக்க ஒப்புக் கொண்டுள்ளது என்றும், அதை எவ்வளவு வேகத்தில் செய்வது என்பதில் தான் உடன்பாடின்மை நிலவுகிறது என்றும், “தேசிய பாதுகாப்பு" பிரச்சினை மீது "முப்படைகளின் தலைமை தளபதியின்" தீர்ப்புக்கு நீதிமன்றங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அவரின் வழக்கறிஞர்கள் வாதிடுவார்கள்.

ட்ரம்பின் பத்திரிகையாளர் கூட்டம் பெரிதும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு எதிரான பாசிசவாத ஆரவார உரைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களை அமெரிக்காவுக்குள் போதை மருந்துகள், குற்றம் மற்றும் பயங்கரவாதத்தைக் கொண்டு வரும் எதிர்விரோத படையெடுப்பு சக்தியாக சித்தரித்தார். ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தலான குறிப்பில், போதைப்பொருள் கடத்துவதற்காக பிடிக்கப்பட்ட கைதிகளை சீனா வழமையாக மரண தண்டனைக்கு உட்படுத்துவதைப் போன்ற மூர்க்கமான அணுகுமுறைகள் தான், அதன் போதைப்பொருள் பிரச்சினையைத் "தீர்க்க" அனுமதிக்கிறது அத்தகைய அணுகுமுறைகளை அறிவுறுத்தி, சீன ஸ்ராலினிச சர்வாதிகாரத்தின் போதைப்பொருள் ஒழிப்பு கொள்கைகளைப் புகழ்ந்துரைத்தார். ட்ரம்பின் நெருக்கடி நிலை பிரகடனம், குடியேற்றப் பிரிவு அதிகார வட்டாரத்தில் இதுபோன்றவொரு "இறுதி தீர்வை" நோக்கிய ஒரு படியாக உள்ளது.

இதுபோன்ற பேச்சை இதற்கு முன்னர் ஒரு அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து ஒருபோதும் கேட்டிருக்க முடியாது. இது மற்றொரு ட்ரம்ப் அபிமானி பிலிப்பைன் ஜனாதிபதி டுரேற்றயினது நடவடிக்கைக்கு நெருக்கமாக வருகிறது, அவரின் போலிஸ் கொலைப்படைகள் தொழிலாள வர்க்க சேரிகளில் வசிக்கும் ஆயிரக் கணக்கானோரை "போதை மருந்து விற்பனர்கள்" என்று கூறி படுகொலை செய்துள்ளது.

இதுபோன்ற கருத்துக்கள் ரோஸ் பூங்காவிலிருந்து வெளியிடப்படுகையில், அமெரிக்கா சர்வாதிகாரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பது ஐயத்திற்கிடமின்றி உள்ளது. இந்த அபாயத்தின் தீவிரத்தன்மை மற்றும் அவசரத்தன்மைக்கும், ஜனநாயக கட்சியினர் மற்றும் ஊடகங்களது மனநிறைவான விடையிறுப்புக்கும் இடையே ஒரு பிரமாண்டமான இடைவெளி உள்ளது.

ட்ரம்ப் உடனான அவர்களின் கன்னைவாத மோதல்களில் இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளைப் பெருமைப்படுத்துவதற்காக சளைக்காது செயலாற்றி உள்ள ஜனநாயகக் கட்சியினர், வெள்ளை மாளிகை உடனான அவர்களின் தந்திரோபாய கருத்து வேறுபாடுகளை விட ட்ரம்பின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அணிதிரள்வையும் தடுப்பதைக் குறித்து மிகவும் அதிகமாக கவலைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் என்ன நடந்து வருகிறதோ அது ஒரு சர்வதேச நிகழ்வுபோக்கின் பாகமாகும். முதலாளித்துவத்தின் உலகளாவிய பொருளாதார நெருக்கடியினது தாக்கத்தின் கீழ், மற்றும் அமெரிக்கா முன்னிலையில் இருக்க பிரதான சக்திகளுக்கு இடையே அதிகரித்தளவிலான பொறுப்பற்ற வன்முறையின் கீழ், ஜனநாயக ஆட்சி வடிவங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. அனைத்திற்கும் மேலாக, பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மை கேள்விப்பட்டிராத விகிதாச்சாரங்களில் ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் அதிகரித்து வரும் சமூக பதட்டங்களால் தீவிரப்படுத்தப்படுகிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், உழைக்கும் மக்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள—அமெரிக்காவில் ஜனநாயக கட்சி உட்பட—முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் எந்த பிரிவையும் எதிர்நோக்க முடியாது. இந்த பணிக்கு, உலகெங்கிலும் விரிவடைந்து வரும் வேலைநிறுத்த போராட்டங்களின் அலையில், முளைவிட்டு வரும் வடிவத்தில், ஏற்கனவே வெளிப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களின் இந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்யவும் மற்றும் அதை அரசியல்ரீதியில் ஒரு சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்திற்கான நனவுப்பூர்வமாக போராட்டமாக ஆக்கவும் சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) போராடி வருகின்றன.