ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

February 9 demonstration against auto plant closures in Detroit

The program and strategy to defend jobs

வாகன ஆலைமூடல்களுக்கு எதிராக டெட்ராய்டில் பெப்ரவரி 9 ஆர்ப்பாட்டம்

வேலைகளைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமும் மூலோபாயமும்

Joseph Kishore
1 February 2019

உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழும் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் கூட்டிணைவிற்கான வழிகாட்டிக் குழுவும் பெப்ரவரி 9 இல் மிச்சிகன் டெட்ராய்டில் ஜெனரல் மோட்டார்ஸ் தலைமையகத்திற்கு வெளியே ஓர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

இந்த ஆர்ப்பாட்டம், அமெரிக்கா மற்றும் கனடாவில் ஐந்து ஆலைகளை மூடுவதற்கான GM நிறுவனத்தின் திட்டங்களுக்கு சாமானியத் தொழிலாளர் குழுவினது எதிர்ப்பின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாடாகும், GM நிறுவனத்தின் நடவடிக்கை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் மிச்சகனின் ஹாம்ட்ராம்க்; ஓஹியோவின் லார்ட்ஸ்டவுன்; மற்றும் ஒன்டாரியோவின் ஒசாவா உட்பட இந்த ஆலைகள் அமைந்துள்ள சமூகங்களுக்கும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த ஆர்ப்பாட்டம் அடித்தளத்தில் ஒரு தெளிவான வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்தைக் கொண்டுள்ளது. இது, GM நிறுவனத்திற்கும் அதன் பெருநிறுவன செயலதிகாரிகளுக்கும் முறையீடு செய்வதற்கானது அல்ல, மாறாக முற்றிலும் ஊழல்பீடித்த தனிச்சலுகை கொண்ட செயலதிகாரிகளால் நடத்தப்படும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்கி போராடுவதற்காக, தொழிலாளர்கள் அவர்களின் பலத்தையும் அவர்களின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்த தொழிலாளர்களுக்கான ஓர் அழைப்பாகும்.

இது அனைத்து ஆலைமூடல்களையும் உடனடியாக நிறுத்த கோரும், இரண்டு-அடுக்கு கூலி முறை மற்றும் சலுகை முறையை ஒழிக்கவும், அனைத்து தற்காலிக தொழிலாளர்களையும் முழு-நேர தொழிலாளர்களாக மாற்றுவதற்கும், வேலையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் நியமிக்கவும் கோரும். பெருநிறுவன நிர்வாகத்தின் பணியிட சர்வாதிகாரத்தை எதிர்த்து, இது தொழில்துறை ஜனநாயகத்திற்காக, உற்பத்தியைத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர மற்றும் மாபெரும் வாகனத்துறை நிறுவனங்களைத் தனியார் இலாபத்திற்காக அல்ல, சமூக தேவையின் அடிப்படையில் செயல்படும் பொது நிறுவனங்களாக மாற்றுவதற்காக போராடும்.

இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் அதிகரித்து வரும் வர்க்க போராட்ட நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகிறது. உள்ளார்ந்த கன்னை மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் கிழிந்து போன முதலாளித்துவ உயரடுக்குகள் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டியதன் மூலமாக முன்னொருபோதும் இல்லாதளவில் செல்வவளங்களைக் குவித்து கொண்டு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவற்றின் தாக்குதலில் ஒன்றிணைந்துள்ளன. உலகெங்கிலும், முதலாளித்துவவாதிகள் செல்வவளத்தைத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பணக்காரர்களுக்கு இன்னும் கூடுதலாக மறுபகிர்வு செய்வதற்கான முன்னெடுப்பாக வாகனத் தொழில்துறையின் உலகளாவிய மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளும் வர்க்கத்தின் சமூக-எதிர்ப்புரட்சி அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்நோக்குகின்றது. ஆர்ப்பாட்டம் குறித்த ஆரம்ப அறிவிப்பைத் தொடர்ந்து ஒருசில நாட்களில், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மெக்சிகோவின் மத்தாமோரொஸில் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் தொடர்ச்சியான திடீர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். தொழிலாளர்கள் சுயாதீனமான அமைப்புகளை உருவாக்கி, “தொழிற்சங்கங்களும் நிறுவனமும் தொழிலாள வர்க்கத்தைப் படுகொலை செய்கின்றன,” என்ற பதாகையில் கீழ் அணிவகுத்தனர். வட அமெரிக்க வாகனத்துறையின் உற்பத்தியை மூட அச்சுறுத்துகின்ற இந்த வேலைநிறுத்தம், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ தொழிலாளர்களின் பொதுவான வர்க்க நலன்களை எடுத்துக்காட்டுகின்றது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தொழிலாளர்களின் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தின் சாத்தியக்கூறால் பீதியுற்று, பெறுநிறுவன ஊடகங்களும் தொழிற்சங்கங்களும் முற்றிலுமாக மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம் மீதான செய்திகளை இருட்டடிப்பு செய்தன. உலக சோசலிச வலைத் தளம் மூலமாக போராட்டம் குறித்து அறிந்த அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள், வாகனத்துறை நிறுவனங்களுக்கு எதிராக ஒரு கூட்டு எதிர்ப்புக்கான பலமான ஆதரவுடன் விடையிறுத்தனர். “இந்த போராட்டத்தில் இணைய உலகெங்கிலுமான எங்களின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளால் நாங்கள் நடவடிக்கையில் இறங்க அழைக்கப்பட்டுள்ளோம்,” என்று டொலிடோ ஜீப் உற்பத்தி ஆலையின் ஒரு தொழிலாளர் WSWS இக்குத் தெரிவித்தார்.

ஹங்கேரியில் 13,000 வாகனத்துறை தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம், இந்தியாவின் தமிழ்நாட்டில் நூறாயிரக் கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அரசு பணியாளர்களின் வேலைநிறுத்தம், சூடான் மற்றும் ஜிம்பாப்வேயில் தொழிலாளர்களின் பாரிய போராட்டங்கள் உட்பட, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் தொடர்ச்சியான மிகப் பெரிய போராட்டங்களை 2019 இன் இந்த முதல் மாதம் கண்டுள்ளது. பிரான்சில், பொதுக் கல்வியின் சகிக்கவியலா நிலைக்கு எதிராக ஆசிரியர்களின் "சிவப்பு பேனா" போராட்டங்கள் “மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்தன.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸின் 33,000 ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து ஆசிரியர் அமைதியின்மையின் புதிய அலை ஒன்று பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. கலிபோர்னியா ஆக்லாந்தில் வேலைநிறுத்தத்தை அங்கீகரிக்கும் வாக்கெடுப்பு இன்று நிறைவடையும், அங்கே ஆசிரியர்கள் அந்நகரின் அரசு பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கை மூடுவதற்கான திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக திடீர் மருத்துவ விடுப்புகளில் ஈடுபட்டுள்ளனர். கொலொராடோவின் டென்வெரில் ஆசிரியர்கள் ஒரு கால் நூற்றாண்டில் முதல் முறையாக வேலைநிறுத்த நடவடிக்கையை அங்கீகரித்துள்ளனர், அதேவேளையில் வேர்ஜினீயா ஆசிரியர்கள் திங்களன்று மாநில தலைநகரில் ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த பெப்ரவரி 9 ஆர்ப்பாட்டமானது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்பு இல்லாது, வேலைகளை பாதுகாக்க முடியாது என்ற புரிதலின் அடிப்படையில் உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வழிகாட்டிக் குழுவின் அறிக்கை அறிவிப்பதை போல, அமெரிக்காவில் ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர் சங்கமும் (UAW) மற்றும் கனடாவில் யூனிஃபொர் சங்கமும் "வருமானம் பெறுபவர்களில் உயர்மட்ட 3 சதவீதத்தினரில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகளால் கட்டுப்படுத்தப்படும் வணிங்களாகும் — மலிவு உழைப்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிற்துறை பொலிஸ் படை” ஆகும்.

வேலைகளை அழிப்பதிலும் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நிலைமைகளைத் தாக்குவதிலும் தசாப்தங்களாக வாகனத்துறை நிறுவனங்களுடன் கூடி ஒத்துழைத்து வந்துள்ள UAW மற்றும் யூனிஃபொர் சங்கங்கள் இந்த ஆலைமூடல்களைத் தடுக்க ஒன்றும் செய்வதாக இல்லை. உலகளாவிய வாகனத்துறை வேலைகள் அழிக்கப்பட்டு வருகையில், தொழிற்சங்கங்களோ ஒரு வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒரேயொரு ஆர்ப்பாட்டத்தைக் கூட ஒழுங்கமைக்கவில்லை.

2009 இல் ஒபாமா நிர்வாகத்தின் வாகனத்துறை மறுசீரமைப்பின் பாகமாக புதிய நியமனங்களுக்கான கூலிகளைப் பாதியாக குறைத்தல், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் வருமான பாதுகாப்பை முடிவுக்குக் கொண்டு வருதல், ஓய்வூதியதாரர்களுக்கு பல் மற்றும் கண் மருத்துவச் செலவுகளை நீக்குதல் ஆகியவற்றில் விட்டுக்கொடுப்புகளைப் பெற UAW தொழிற்சங்கம் முண்டியடித்ததைக் காட்டும் ஒரு அனுதாபகரமான காணொளியை இந்த வாரம் UAW வெளியிட்டது. “நாங்கள் உங்களிடம் முதலீடு செய்தோம்,” “இப்போது எங்களிடம் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய நேரமிது,” என்று GM நிறுவனத்திடம் UAW மன்றாடுகிறது. “எங்களுக்கு உதவுங்கள்" என்று ஜிஎம் நிறுவனத்திடம் UAW நிர்வாகிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள், செயலிழந்தநிலையைப் பரப்புவதற்காக அல்லாமல் வேறெந்த நோக்கத்திற்கும் சேவையாற உத்தேசிக்கப்பட்டவை அல்ல.

உண்மையில், வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகரிப்பதற்கான உறுதியான ஆர்வத்துடன் UAW அந்நிறுவனத்தின் பிரதான பங்குதாரர்களாக மாறியதன் மூலமாக "GM இல் முதலீடு" செய்திருந்தது, இதை அவர்கள் ஜிஎம் நிறுவனம் மற்றும் ஏனைய பிரதான வாகனத்துறை நிறுவனங்களின் பாரிய எதிர்ப்பிற்கு இடையே தொடர்ச்சியான விட்டுக்கொடுப்புகளுக்கான ஒப்பந்தங்கள் மூலமாக செய்துள்ளனர். UAW அதற்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தைச் செய்வதற்குப் பிரதிபலனாக நேரடியான பணமளிப்புகள் மூலமாக, பெருநிறுவன நிர்வாகிகள் "UAW இல் முதலீடு செய்திருந்தனர்" என்ற உண்மையைக் கடந்தாண்டு வெடித்த ஊழல் மோசடி அம்பலப்படுத்தியது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில், ஒருங்கிணைந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரியர் சங்கம் (UTLA) மற்றும் அதன் தாய் அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் தேசிய கல்வி அமைப்புக்கான அமெரிக்க கூட்டமைப்பு ஆகியவை மிகவும் அப்பட்டமாக சாத்தியமானளவுக்கு ஜனநாயகமற்ற விதத்தில் போராட்டத்தை நிறுத்துவதற்காக ஓர் அழுகிய உடன்படிக்கையைக் கடந்த மாதம் முன்நகர்த்தி இருந்தன. ஆறு நாட்கள் மறியல் போராட்டங்களுக்குப் பின்னர், பள்ளி ஆணையத்துடன் மற்றும் ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளுடன் UTLA மூடிய கதவுகளுக்குப் பின்னால் எட்டிய அழுகிய உடன்படிக்கை மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, அதை மீளாய்வு செய்ய ஆசிரியர்களுக்கு வெறும் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே வழங்கியது.

பிரான்சில் மஞ்சள் சீருடை போராட்டங்கள் மற்றும் மெக்சிகோ வேலைநிறுத்தம் இரண்டிலும், போராட்டத்தின் நீடித்த தன்மையானது தொழிலாளர்கள் அவற்றை தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைத்துள்ளனர் என்ற உண்மையிலிருந்து வருகிறது.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் போராட்டங்களின் புறநிலையான தூண்டுதல், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஓர் அரசியல்ரீதியான பொது வேலைநிறுத்தத்தை நோக்கி செல்கிறது. இது, தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று கூறியக்கொண்டு நேரடியாக தொழிலாளர்களுக்கு எதிரானவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தனிச்சலுகை கொண்ட நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியவாத மற்றும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்களை மோதலுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும், வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியை ஒரு புரட்சிகர சோசலிச அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன் இணைத்து, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும் அதன் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்யும். இந்த பெப்ரவரி 9 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் மற்றும் உங்களின் ஆதரவு சேதிகளை அனுப்புமாறும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.