ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Villagers of Keppapulavu near Mullaithivu resume protest returning military seized lands

இலங்கை: கேப்பாபுலவு கிராமத்தவர்கள் இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர்

Subash Somachandran and S. Jayanth
2 February 2019

ஜனவரி 26 அன்று, யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராமத்தவர்கள், இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அங்கு விமானப்படை முகாம் அமைந்துள்ளது. கடந்த 22 மாதங்களாக முகாமுக்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்களுக்கு நம்பிக்கை ஊட்டி போராட்டத்தை நிறுத்த வைப்பதற்காக, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் கே. தனபாலசிங்கம், ஜனவரி 25ம் திகதிக்கு முன்னர் ஒரு “தீர்வு” தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

போராட்டம் ஆரம்பித்தவுடன், முகாமைச் சுற்றி நூற்றுக்கணக்கான பொலிசார் நிறுத்தப்பட்டனர். கலகம் அடக்கும் பொலிசார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். முட்கம்பி வேலைகளும் அமைக்கப்பட்டன. மக்களை பயமுறுத்துவதற்காக இராணுவம் ஒரு கவச வாகனத்தையும் அங்கு நிறுத்தியிருந்தது. தமது காணிகளைப் பெறுவதில் குறியாக இருந்த கோபமடைந்திருந்த மக்கள், தாங்கள் வலுக்கட்டாயமாக காணிகளுக்குள் நுழைவோம் என ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

கேப்பாப்புலவில் இருந்து வெளியேற்றப்பட்ட 138 குடும்பங்களின் 482 ஏக்கர் காணிகளை விமானப்படை ஆக்கிரமித்துள்ளது. 2017 இல், 133 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு கைம்மாறாக, இராணுவம் அரசாங்கத்திடம் இருந்து 148 மில்லியன் ரூபாய்களை அறவிட்டிருந்தது. இராணுவம் சொந்தமாக முடிவெடுக்கும் ஒரு ஒடுக்குமுறை நிறுவனமாக எதேச்சதிகாரமாக செயலாற்றுகிறது.

“எங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, நாங்கள் பிச்சையெடுக்கும் நிலையில் இருக்கும்போது, தேங்காய் உட்பட எங்களின் அனைத்து வருமானங்களையும் இராணுவம் எடுத்துக்கொள்கின்றது. நாங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும்போது, எமது வீடுகளில் இராணுவம் குடியிருக்கின்றது,” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த மக்கள் கடந்த 26 வருடகால இனவாத யுத்த்தினால் பேரழிவுக்கு முகம்கொடுத்த இலட்சக்கணக்கான மக்களில் ஒரு பகுதியினராவர்

ராமியன்குளத்தில் கைப்பற்றப்பட்ட தங்களின் நிலங்களை விடுவிக்குமாறு கோரி, ஜனவரி 4, வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் இன்னொரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இராணுவம் தங்களின் நிலங்களில் பயிர் செய்து, அதன் சொந்த கடைகளில் வைத்து அவற்றை நில உரிமையாளர்களுக்கே விற்பனை செய்வதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இராணுவம் கைப்பற்றிக்கொண்டுள்ள நிலங்களை விடுவிப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அரசாங்கம் மற்றும் ஊடகங்களினதும் பரந்த பிரச்சாரத்தின் பின்னணியிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. கடந்த வருடம் முடிவடைவதற்கு முன்னர் சகல நிலங்களும் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற சிறிசேனவின் பிரசித்திபெற்ற அறிவிப்பு, மக்களை ஏமாற்றும் வித்தை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த நிலத்தை, எந்த நேரத்தில் விடுவிப்பது மற்றும் அதன் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் காணிகளை திருப்பி ஒப்படைப்பதற்கு நஷ்டஈடு கேட்பதா என்பதையெல்லாம் இராணுவமே தீர்மானிக்கின்றது.

தமிழ் பொதுமக்களுக்கு பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தி, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை இராணுவம் வென்ற மே 18, 2009 முதல், இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் 84,523.84 ஏக்கர் நிலப்பரப்புகளை பயன்படுத்தி வந்ததாக கொழும்புபேஜ் (colombopage.com) இராணுவ புள்ளிவிவரங்களை மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது. மேலும், 25 நவம்பர் 2018 வரை, 69,754.59 ஏக்கர் அரச மற்றும் தனியார் நிலங்களை "தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்காத வகையில்" இராணுவம் விடுவித்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இந்த தரவுகளை சரிபார்க்க வழி இல்லை. இருப்பினும், இந்த புள்ளிவிபரங்கள் இந்த மாகாணங்களில் உள்ள சாதாரண வெகுஜனங்களின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பெரும் பேரழிவைக் காட்டும் அளவாகும். பெரும் குண்டுத் தாக்குதல்களால் அல்லது கனமாக ஆயுதம் ஏந்திய படையினர் நிலம் மற்றும் வீடுகளை ஆக்கிரமித்துக்கொண்டதன் மூலம் இந்தப் பிரதேசங்களை விட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

ஆயுதப் படைகள் நன்கொடைகளை வழங்குவதாக அல்லது தியாகங்களை செய்வதாக மோசடியாக சித்தரிக்கும் வகையில், இந்த நிலங்களை ஒப்படைப்பதற்காக விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரிக்கும் விமர்சனத்தை திசைதிருப்புவதும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் இராணுவ தாக்குதல்களின் போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை மூடி மறைப்பதும், அதே வேளை, இராணுவத்திற்கு ஒரு மனிதாபிமான முகத்தை வழங்குவதும் இதன் குறிக்கோளாகும்.

தையிட்டி கிராமத்தில் மீளக் குடியேறியுள்ள ஒரு குடும்பத்தின் வாழுமிடம்

யாழ்ப்பாணத்தில் பலாலி பிரதேசத்தில் தையிட்டி கிராமம் உட்பட சில காணிகள் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டன. பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இழிநிலையிலான அகதி முகாம்களிலும் அல்லது உறவினர்களுடன் வசிக்கின்றன.

தனது குடும்பம் 1990ல் தப்பி ஓடியதற்கு சற்று முன்னதாக ஒரு வீட்டை கட்டியதாகவும் அது இப்போது தரைமட்டமாக்கப்பட்டு புதர்கள் மூடியிருப்பதாகவும் டி. ரஞ்சனாதேவி விளக்கினார். "இறுதி யுத்தத்தின் போது எனது இரண்டு மகன்கள் காணாமல் போயுள்ளனர். நாங்கள் அகதி முகாம்களில் பல தசாப்தங்களாக பெரும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்தோம். ஒவ்வொரு பருவ மழையின் போதும் வெள்ள நீர் முகாமுக்குள் நுழையும்” என அவர் கூறினார்.

தங்களுடைய நிலங்களுக்குத் திரும்பிய சில குடும்பங்கள் இன்னும் தற்காலிக கொட்டகைகளில் தங்கியிருக்கின்றன, ஒரு சில குடும்பங்களே எப்படியாவது வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளன. "பகுதி பகுதியாக கட்டும் வகையில் அரசாங்கம் 800,000 ரூபாவை பகுதி பகுதியாக வழங்கியது. எஞ்சியவற்றுக்கு நாம் வங்கியில் கடன் வாங்கி இப்போது கடன்காரர்களாகி இருகின்றோம். கிணறு கட்டிய ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாதத்திற்கு 2,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் தண்ணீர் குடிக்க உகந்தது அல்ல," என ரஞ்சனாதேவி விளக்கினார்.

தனது நிலம் காடாகி இருந்ததாகவும் அதை சுத்தப்படுத்த 25,000 ரூபா செலவிட வேண்டியிருந்ததாகவும் எம். யமுனா கூறினார். "இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. சந்தைக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மருதனார் மடத்திற்கு செல்ல வேண்டும், மருத்துவமனைக்கு ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். என் குழந்தைப் பருவத்தில் இருந்தே என் குடும்பம் பல தடவை இடம்பெயர்ந்து வந்துள்ளது. இடம்பெயர்வின் போது என் தந்தை இறந்தார். சமீபத்தில் என் அம்மா சிறுநீரக பிரச்சனையில் இறந்தார்."

யுத்தம் முடிவடைந்தவுடன், சுமார் இரண்டரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக இராணுவம் நடத்திய முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தடுத்து வைப்பின் பின்னர், இந்த குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தங்கள் கிராமங்களில் கொட்டப்பட்டனர். கூடாரம் அமைக்க சில தரப்பாள்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. பல குடும்பங்கள் காடுகளை துப்புரவு செய்தபின் வலுக்கட்டாயமாக மீள்குடியேற்றப்பட்டன. குடியேற்றப்பட்ட காணிகளிலும் கிணறுகளிலும் இன்னமும் உயிர்கொல்லி குண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கொடூரமான போரை ஆதரித்த அமெரிக்கா, அவரது அரசாங்கத்தை சீனாவில் இருந்து தூர விலகுவதற்கு நெருக்குவதன் பேரில், அவரது அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை சுரண்டிக்கொண்டு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்களைக் கொண்டுவர அணுசரனையளித்தது.

2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், அமெரிக்கா ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை திட்டமிட்டது. அதில் சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார். பெய்ஜிங் உடனான கொழும்பு அரசாங்கத்தின் உறவுகளை முறித்துக் கொள்ள வைப்பதே இந்த ஆட்சி மாற்றத்தின் இலக்காக இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தி, ஆட்சி மாற்றத்தை முழுமையாக ஆதரித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி அவர்களை சிறிசேனவுக்கு வாக்களிக்க வைப்பதற்காக, சிறிசேன இராணுவம் கைப்பற்றியுள்ள நிலங்களை திரும்ப ஒப்படைப்பார் என்றும், பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டு வருவார் என்றும் வாக்குறுதியளித்தது.

மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை நிலைமை "மீளாய்வு” செய்யப்படும். அமெரிக்கா உட்பட பெரும் வல்லரசுகள், சீனாவில் இருந்து கடன்களையும் முதலீடுகளையும் பெறுவதற்கான கொழும்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன.

இருப்பினும், பாதுகாப்புப் படைகள் இரண்டு மாகாணங்களிலும் தமது முகாம்களையும் கட்டிடங்களையும் பலப்படுத்தி இருப்பதோடு பண்ணைகள், வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் முதலியவற்றையும் ஸ்தாபத்துள்ள அதேவேளை, பௌத்த ஆலயங்களை கட்டியெழுப்புவது மற்றும் புத்தர் சிலைகளை வைப்பதன் மூலம், சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முயற்சித்து வருகின்றது. அனைத்து கலாச்சார மற்றும் மத நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் அல்லது அவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம், சமூகத்தின் சில தட்டுகளுக்குள் தனது செல்வாக்கை ஸ்தாபிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும் அது சுரண்டிக்கொள்கின்றது.

எவ்வாறெனினும், நூறாயிரக்கணக்கான சிப்பாய்களுடன் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதானது அடக்குமுறைக்கு மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், முதலாளித்துவ அரசை பாதுகாக்கவும் தமிழர் விரோத இனவாதத்தை கிளறிவிடுவதற்குமே ஆகும்.

அதனாலேயே, சோசலிச சமத்துவக் கட்சி, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றக் கோருவதோடு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்தின் அவசரத் தேவையையும் வலியுறுத்துகிறது.