ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Karl Marx’s grave desecrated by fascists

பாசிசவாதிகளால் கார்ல் மார்க்சின் கல்லறை சேதப்படுத்தப்பட்டது

By Chris Marsden
18 February 2019

இலண்டனின் ஹைகேட் கல்லறை சதுக்கத்தில் கார்ல் மார்ச்சின் கல்லறைக்கு எதிராக நடத்தப்பட்ட கோழைத்தனமான நாசவேலை நடவடிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது.

வெண்கலத்தில் செய்யப்பட்ட மார்க்சின் மார்பளவு சிலை ஒன்றை தாங்கியுள்ள கிரானைட் கட்டுமானம் வெள்ளிக்கிழமை இரவு கம்யூனிச-விரோத வாசகங்களால் கிறுக்கப்பட்டிருந்தது. இது கடந்த இரண்டு வாரங்களுக்குள் நடந்துள்ள பாசிசவாதிகளின் இரண்டாவது தாக்குதலாகும்.


சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் கார்ல் மார்க்சின் கல்லறை (நன்றி: ஹைகேட் கல்லறை)

மார்க்சின் காலத்தால் அழியா வார்த்தைகளான, “உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்,” மற்றும் "மெய்யியலாளர்கள் தான் இந்த உலகை பல்வேறு விதத்தில் சித்தரிக்கிறார்கள். இருப்பினும் விடயம் அதை மாற்றுவது தான்,” என்ற இப்போதிருக்கும் தங்கநிற கல்வெட்டு வாசகங்களின் மேலேயே, “போல்ஷிவிக் மனிதயினப் படுகொலையின் நினைவிடம்,” என்பது உட்பட அந்த கோஷங்கள் பெரிய எழுத்துக்களில் சிவப்பு நிற வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தன.

அந்த வண்ணம் நீக்கப்பட்டு வருகிறது, ஆனால் அவ்விடத்தின் பராமரிப்பு ஒப்பந்ததாரர்களின் தகவல்படி பெப்ரவரி 4 இல் நடத்தப்பட்ட முந்தைய ஒரு தாக்குதலில் கல்லறை கற்களின் சில பாகங்கள் சிதைக்கப்பட்டிருந்தன. 1881 இல் மறைந்த மார்க்சின் அன்புக்குரிய மனைவி ஜென்னி வொன் வெஸ்ட்பாலென் (Jenny von Westphalen) க்காக மார்க்ஸ் வாங்கியிருந்த இடத்தில் தான், 1883 இல் அவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. 1954 இல், கார்ல் மற்றும் ஜென்னியின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அந்த கல்லறை சதுக்கத்தின் கிழக்கே இன்னும் முக்கியமான இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது. மார்பளவிலான அந்த சிலை 1956 இல் கொண்டு வரப்பட்டு தற்போதைய நினைவுச்சின்னத்தில் பொதியப்பட்டது.


முதல் தாக்குதலின் போது கல்லறையின் மீதான பளிங்குப் பகுதி நொருக்கப்பட்டது

மார்க்சின் பெயரைத் துடைத்தழிக்கும் முயற்சியில், முதல் தாக்குதலின் போது அந்த பளிங்கு கற்களினாலான தலைப்பகுதியை உடைக்க ஓர் உலோக கருவியோ அல்லது சுத்தியலோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த நினைவிடத்தை சிறப்பு வல்லுனர்களைக் கொண்டு கவனத்துடன் செப்பனிட்டாலும் கூட, அது "ஒருபோதும் மீண்டும் அதேபோல" ஆகாது என்று ஹைகேட் கல்லறை சதுக்க நண்பர்கள் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி Ian Dungavell தெரிவித்தார்.

இத்தகைய கலாச்சார அட்டூழிய நடவடிக்கைகள் மீது எந்த கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1999 இல் அந்த கல்லறை முதல் தர வரலாற்று கட்டிடமாக பட்டியலிடப்பட்டதற்குப் பின்னரும், அங்கே எந்த பாதுகாப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.


மறுசீரமைப்பு தொடங்கிய பின்னர் ஞாயிறன்று எடுக்கப்பட்ட கல்லறையின் புகைப்படம்

இந்த சமீபத்திய தாக்குதலை ஹைகேட் கல்லறை சதுக்க அறக்கட்டளை, “அர்த்தமற்றது. முட்டாள்தனமானது. அறிவற்றது,” என்று குறிப்பிட்டது. ஆனால் அது, அதற்கெல்லாம் மேலாக, மார்க்சின் கல்லறையைக் கூட ஓர் இலக்காக கருத்தில் கொள்ளும் அளவுக்கு அவரை அச்சத்துடனும் வெறுப்புடனும் பார்க்கும் வலதுசாரி கசடுகள் ஊடுருவி நடத்திய அரசியல்ரீதியில் உந்தப்பட்ட ஒரு குற்றமாகும். 1970 களில் ஒட்டுமொத்த நினைவிடத்தையும் தகர்க்கும் வேறொரு முயற்சி தோல்வி அடைந்த நிலையில், அந்த மார்பளவு சிலையின் முகத்தை ஒரு குழாய் குண்டு சேதப்படுத்தியது தான் கடைசியாக நடந்த பெரிய தாக்குதலாக இருந்தது. சுவரில் கிறுக்குவது மற்றும் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்து வைப்பது உட்பட சிறிய சிறிய நாசவேலைகள் சமீபத்திய தசாப்தங்களில் நடந்துள்ளன.

வலதுசாரி சக்திகள் உத்தியோகபூர்வ கம்யூனிச-எதிர்ப்பு பிரச்சாரத்தின் பின்னால் எந்தளவுக்கு ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஹைகேட் கல்லறை சதுக்க அட்டூழியம் சமீபத்திய ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே ஆகும். சான்றாக, அதிவலது பத்திரிகையான Breitbart News இல் அந்த தாக்குதல் குறித்த ஓர் அறிக்கை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டிடம் இருந்தும் பாசிசவாத வசைமொழி பதில்களின் ஓர் அலையைத் தூண்டியது.

மார்க்ஸ் கல்லறையின் தோற்றத்தைச் சீர்கெடுத்த இந்நடவடிக்கையானது, ஏங்கெல்ஸ் சரியாக விவரித்ததைப் போல உலகின் "தலைசிறந்த சிந்தனையாளர் வாழுமிடம்" என்று விவரிக்கப்பட்ட ஒருவரின் சிந்தனைகளைக் குறித்து அரசியல் பிற்போக்குத்தனங்களின் உலகம் நடுநடுங்கி வருவதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. கடந்த வாரம் மட்டுமே கூட பெல்ஜியம், பிரான்ஸ், போர்ச்சுக்கல், தென் ஆபிரிக்கா, ஜேர்மனி மற்றும் அமெரிக்காவில் மிகப் பெரிய வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் ஜனவரி 2018 இல் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல: “மார்க்சின் இருநூறாவது பிறந்ததினம் அமைகின்ற 2018 இன் இந்த புது வருடம், எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலும் சமூகப் பதட்டங்களின் ஒரு அதி தீவிரப்படலின் மூலமாகவும் வர்க்க மோதல்களின் ஒரு அதிகரிப்பினாலும் குணாம்சப்படுத்திக் காட்டப்படுவதாக இருக்கும். பல தசாப்தங்களாய், அதிலும் குறிப்பாய், 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாக, முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையின் அத்தியாவசிய முரண்பாடுகள் —ஒரு உலகளாவிய பரஸ்பரச் சார்பு கொண்ட பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிப் போன முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானவை; பில்லியன் கணக்கான மனித உயிர்களின் உழைப்பு பங்குபெறுகின்ற சமூக உற்பத்தியின் ஒரு உலகளாவிய வலைப்பின்னலுக்கும், உற்பத்தி சாதனங்களது தனியார் உடைமைத்துவத்திற்கும் இடையிலானவை; மற்றும் வெகுஜன சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்கும் தனிப்பட்ட முதலாளித்துவ பணம்-குவிப்பின் சுயநல நலன்களுக்கும் இடையிலானவை— இப்போது, முதலாளித்துவத்திற்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை இனியும் ஒடுக்குவது சாத்தியமில்லை என்ற ஒரு புள்ளியை துரிதமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

மார்க்சின் ஆய்வு முடிவுகள் மில்லியன் கணக்கானவர்களின் உயிரோட்டமான போராட்டங்களில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருகிறது. மீண்டுமொருமுறை, முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், அவர் எழுத்துக்கள் மீதான ஆர்வம் புத்துயிர் பெற்றுள்ளது.

மார்க்ஸ் சோசலிசத்தை விஞ்ஞான அடித்தளங்களின் மீது நிறுத்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகர இயக்கத்திற்கான அரசியல் மற்றும் புத்திஜீவித அடித்தளங்களை அமைத்தளித்தார். ஏங்கெல்ஸ், அவரின் வாழ்நாள் கட்சி தோழர் மற்றும் நண்பருக்கு ஹைகேட் கல்லறை தோட்டத்தில் வழங்கிய அவரின் புகழ்மிக்க இறுதிஅஞ்சலி பேருரையில், உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்களால் இன்று மார்க்ஸ் ஏன் இந்தளவுக்கு வெறுக்கப்படுகிறார் என்பதை விவரித்தார்:

“... மார்க்ஸ் வேறு எல்லோரையும் விட முன்னதாக ஒரு புரட்சியாளராவார். வாழ்வில் அவரின் நிஜமான நோக்கம், ஏதோவொரு விதத்தில், முதலாளித்துவ சமூகத்தையும் மற்றும் அது ஏற்படுத்தி வைத்துள்ள அரசு அமைப்புகளையும் தூக்கியெறிய பங்களிப்பு செய்வதும் மற்றும், நவீன பாட்டாளி வர்க்கத்தின் சொந்த நிலைமையை மற்றும் அதன் தேவையைக் குறித்தும், அதன் விடுதலைக்கான நிபந்தனைகள் மீதான நனவு குறித்தும் முதன்முதலாக நனவுபூர்வமாக ஆக்கியவர் என்றரீதியில் நவீன பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்வதுமாக இருந்தது. போராடுவதே அவரின் தன்மையாக இருந்தது. அவர், உணர்வுபூர்வமாக, விடாப்பிடியாக மற்றும் ஒரு சில போட்டியாளர்களே அந்தளவுக்கு போட்டியிட முடியும் என்றளவுக்கு வெற்றிக்காக போராடினார்...

“இதன் விளைவாக, மார்க்ஸ் தான் அவர் காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட மிகவும் அவதூறுகளுக்கு உள்ளாக்கப்பட்ட மனிதராக இருந்தார். வரம்பிலா முடியாட்சிகளும் சரி குடியரசு அரசாங்கங்களும் சரி, இரண்டுமே அவற்றின் எல்லைகளில் இருந்து அவரை நாடு கடத்தின. பழமைவாத முதலாளித்துவ வர்க்கம் ஆகட்டும் அல்லது அதிதீவிர-ஜனநாயகவாத முதலாளித்துவ வர்க்கம் ஆகட்டும் அவர் மீது அவதூறுகளைக் குவிப்பதில் ஒன்றோடொன்று போட்டியிட்டன. ஆனால் இதற்கு நேர்மாறாக —சேர்பியாவின் சுரங்கங்களில் இருந்து கலிபோர்னியாவின் சுரங்கங்கள் வரையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் எல்லா பகுதிகளிலும்— அவரை நேசித்த மில்லியன் கணக்கான புரட்சிகர சக தொழிலாளர்கள் அவர் மரணத்திற்கு துக்க அஞ்சலி செலுத்தினர். அவருக்கு பல எதிர்ப்பாளர்கள் இருந்திருக்கலாம் என்றாலும், அவருக்கு ஒரேயொரு தனிப்பட்ட எதிரியும் கிடையாது என்பதை நான் உறுதியாக் கூறுவேன்.

“அவர் பெயர் காலங்களைக் கடந்து வாழும், அவ்வாறே அவர் படைப்புகளும்.”