ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The desecration of Marx’s grave: A warning

மார்க்ஸ் கல்லறையைச் சேதப்படுத்திய நடவடிக்கை: ஓர் எச்சரிக்கை

Chris Marsden
19 February 2019

ஹைகேட் கல்லறை சதுக்கத்தில் அமைந்துள்ள கார்ல் மார்க்ஸ் கல்லறை மீது வெறும் இரண்டு வார இடைவெளியில் இப்போது இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முதலாவதும் அதிகமாக சேதமேற்படுத்திய நடவடிக்கையானது, கார்ல் மற்றும் அவர் மனைவி ஜெனி புதைக்கப்பட்ட இடத்தைக் குறிக்கும் வகையில், 1956 இல் அவர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுஸ்தூபியில் பொறிக்கப்பட்டிருந்த மார்க்சின் பெயரைச் சுத்தியல் கொண்டு நீக்குவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. இரண்டாவது, இந்த வாரயிறுதியில் அந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்க்சின் முகம் அளவிலான சிலையைத் தாங்கி நிற்கும் அடித்தள கட்டுமானத்தில் கம்யூனிச-விரோத கோஷங்களைக் கிறுக்கிச் சென்றதாக இருந்தது.

மார்க்ஸ் புதைக்கப்பட்ட இடம் உலக வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு தளமாகும், 20 ஆம் நூற்றாண்டின் போக்கை வடிவமைத்ததில் வேறெவரையும் விட அதிகமானதைச் செய்துள்ள எழுத்துக்களுக்குரியவரும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயங்களில் தனிச்சிறப்பார்ந்த இடத்தைத் தக்க வைத்திருக்கும் ஒரு மனிதருக்கு மரியாதை செலுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் பல பத்தாயிரக் கணக்கானவர்கள் அங்கே விஜயம் செய்கின்றனர். அவரொரு தலைச்சிறந்த பிரமாண்டமான தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரமுகர், அவரின் ஒட்டுமொத்த வாழ்வும் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனத்திற்காகவும் மற்றும் அவலப்பட்டு வரும் மனிதகுலத்தை உலக சோசலிச புரட்சியின் மூலமாக வர்க்க ஒடுக்குமுறையில் இருந்து விடுவிப்பதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான அக்டோபர் புரட்சி அந்த போராட்டத்தின் தலையாய நிரூபணமாக இருந்தது.

ஆகவே மார்க்சின் கல்லறை மீதான தாக்குதலானது, முதலாளித்துவ வர்க்கத்தால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றதும் மற்றும் பாரிய ஊடகங்களால் ஒத்துழைக்கப்படுகின்றதுமான அதிவலது சக்திகளிடம் இருந்து, ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகரித்து வரும் அபாயத்தின் ஒரு முக்கிய எச்சரிக்கையாகும்.

ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தில் இருந்தபோது செய்ததைப் போலவே, இடதுசாரி நினைவுச்சின்னங்கள் மற்றும் கல்லறைகள் மீதான பாசிசவாத தாக்குதல்கள் ஐரோப்பா எங்கிலும் நடந்து வருகின்றன. சமீபத்திய வாரங்களில் ஸ்பெயினில் மட்டும், உள்நாட்டு போரின் போதிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச தலைவர் Dolores Ibárruri இன் சமாதி, சோசலிஸ்ட் கட்சி ஸ்தாபகர் பப்லோ இக்லெஸியாஸின் சமாதி, மற்றும் சர்வதேச படைப்பிரிவுகளைக் கௌரவிக்கும் பட்டயம் ஆகிய அனைத்தும் இலக்கில் வைக்கப்பட்டன.

சமீபத்திய மாதங்களில், பிரான்சின் ஸ்ராஸ்பேர்க்கிற்கு அருகில் அமைந்துள்ள யூத இன-அழிப்பு நினைவிடமான யூதர்களின் கல்லறைகள் மீது சுவஸ்திகா சின்னங்கள் கிறுக்கப்பட்டன. இதேபோல சேதப்படுத்தல்கள் லித்துவேனியா, போலாந்து, கிரீஸ், உக்ரேன் மற்றும் இங்கிலாந்தின் மான்செஸ்டரிலும் நடந்துள்ளன. கடந்தாண்டு பிரிட்டிஷ் இரயில்வே தொழிற்சங்க தலைவர் ஸ்டீவ் ஹெட்லெ மற்றும் அவர் துணைவியார் மீதான தாக்குதல் உட்பட (அதில் அவரது துணைவியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்), இதுபோன்ற தாக்குதல்கள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இடதுசாரி பிரமுகர்கள் மீது அதிகரித்து வரும் சரீரரீதியான நேரடி தாக்குதல் அலையுடன் சேர்ந்துள்ளன.

அதேவேளையில் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பாசிசவாத கட்சிகள் நாடாளுமன்றங்களுக்குள் நுழைந்து வருகின்ற நிலையில், மார்க்சின் கல்லறை மீதான இத்தாக்குதல் அரசியல் "இடது" என்று கடந்து வந்துள்ளவைகளிடம் இருந்து எந்த தீவிர விடையிறுப்பையும் கொண்டு வரவில்லை, சில அமைப்புகளிடம் இருந்து மொத்தத்தில் விடையிறுப்பே இல்லை.

பெரும்பாலான பாகத்தில், இந்த பாசிசவாத தாக்குதல் மீதான அரசியல் கருத்துரை வலதுசாரி முதலாளித்துவ பத்திரிகைகளில் இருந்து வந்துள்ளது — இவை "பயங்கரவாதத்தைக் கட்டமைத்தவர்,” “ஒடுக்குமுறை" மற்றும் "பாரிய படுகொலை" என்று அந்த கட்டுமானத்தில் காடையர்கள் கிறுக்கியமை வரலாற்றுரீதியில் சரியானதே என்று விவரிப்பதற்கு முன்னதாக, சம்பிரதாயத்திற்காக ஆட்சேபனைக் குரல்களை எழுப்புகின்றன. ரஷ்ய அக்டோபர் புரட்சியே ஒரு கொடூரமான சம்பவம் என பொதுவாக "இடது" ஏற்றுக் கொள்கிறது, ஆனால் அதற்கு மார்க்சை "நேரடியாக" பொறுப்பாக்க கூடாது என்று கருத்துரைக்கிறது.

இவர்கள் அனைவரிலும் மிகவும் திட்டவட்டமாக மவுனமாக இருப்பது பிரிட்டிஷ் தொழிற் கட்சியாகும்.

மார்க்ஸ் கல்லறை மீதான தாக்குதல் இலண்டனில் நடந்துள்ளது, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் தொல்லைகளில் இருந்து தப்பித்து, அரசியல் அகதிகளுக்கான சொர்க்கம் என்று பெருமிதம் கொண்டிருந்த ஒரு நகரில் அவர் அகதியாக அடைக்கலம் புகுந்த பின்னர், கடந்த 200 ஆண்டுகளில் மிகவும் முக்கியத்துவம் மிக்க நூலான மூலதனத்தை எழுதிய அந்த ஆசிரியருக்கு எதிராக அத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதுஎவ்வாறிருப்பினும், வலதுசாரி போக்கிரி ஒருவரிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்பதைப் போல, தொழிற் கட்சியின் இலண்டன் நகரசபை தலைவர் சாதிக் கான், அந்நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற அந்த வரலாற்று வசிப்பாளரின் கல்லறை சேதப்படுத்தப்பட்டதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை.

மிகவும் குறிப்பாக, தொழிற் கட்சி தலைவர் ஜேர்மி கோர்பினிடம் இருந்தோ, அல்லது அவரின் நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல்லிடம் இருந்தோ, மார்க்சைப் பாதுகாத்தோ அல்லது அந்நடவடிக்கையைக் கண்டித்தோ ஒரேயொரு வார்த்தை கூட வெளிப்படவில்லை. இருவருமே முன்னரே மார்க்ஸ் மீதான அவர்களின் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள். கோர்பின் குறிப்பிடுகையில் அவர் "தலைச்சிறந்த பொருளாதார நிபுணர்... அவரிடம் இருந்து நிறைய விடயங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்,” என்று 2018 இல் அவரின் இருநூறாவது பிறந்தநாளில் குறிப்பிட்டிருந்தார். தரந்தாழ்ந்த ஊடகங்களால் "மார்க்சிஸ்ட் சான்சிலர்" என்று கூறப்படும் மெக்டொன்னெல், "மார்க்ஸ் எழுத்துக்களுக்கு மறுவாழ்வளிக்க ஒரு-நபர் பிரச்சாரம்" என்று அவர் தன்னைத்தானே குறிப்பிட்டுக் கொண்டதுடன், மூலதனம் நூல் "ஒன்றரை நூற்றாண்டில் நமக்குக் கிடைத்திராத அரசியல் சிந்தனையின் மிகவும் ஆர்வத்துக்குரிய அம்சங்களில் ஒன்று" என்று அறிவித்திருந்தார்.

இதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல் கோழைத்தனத்தின் அளவுதான் மலைப்பூட்டுகிறது. பிரிட்டனில் மட்டுமல்ல மாறாக சர்வதேச அளவில் போலி-இடதின் அன்புக்குரியவரான கோர்பின் 21 ஆம் நூற்றாண்டின் சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவராக புகழப்படும் இவர், தொழிலாளர் இயக்கத்தின் மிகப் முக்கிய வரலாற்று பிரமுகர்களில் ஒருவருக்கு எதிரான இந்த குற்றகர நடவடிக்கைக்கும், இன்றைய இடதுசாரி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான ஒரு மறைமுகமான அச்சுறுத்தலுக்கும் இரண்டுக்கும் எதிராக மக்கள் எதிர்ப்பை அணித்திரட்ட ஒன்றுமே செய்யவில்லை.

இது வெறுமனே கோர்பினின் முதுகெலும்பற்ற தனிமனிதயியல்பின் வெளிப்பாடு அல்ல, மாறாக இது தொழிற் கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் அதைச் சுற்றியுள்ள குட்டி-முதலாளித்துவ பரிவாரங்களும் எந்தளவுக்கு வலதுக்குப் பயணித்துள்ளன என்பதற்கான வெளிப்பாடாகும்.

1947 இல் தொழிற் கட்சி அதன் நூறாவது நினைவாண்டைக் குறிக்க, ஹரோல்ட் லாஸ்கியின் ஓர் அறிமுக உரையுடன் கம்யூனிஸ்ட் அறிக்கையை மறுபதிப்பு செய்தது, அது அறிவிக்கையில் "...பிரிட்டிஷ் சோசலிசவாதிகள் ஐரோப்பா கண்டத்தில் அவர்களின் கூட்டாளிகளிடம் இருந்து தங்களை ஒருபோதும் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் இல்லை. மார்க்சிடம் நேரடியாக வேரூன்றிய இக்கண்டத்தின் சோசலிச கருத்துக்களில் இருந்து நமது சொந்த கருத்துக்கள் வித்தியாசமாக இருந்துள்ளன என்றாலும், ஐரோப்பிய சிந்தனையாளர்கள் மற்றும் போராளிகளின் நூற்றுக் கணக்கான வழிகளில், அனைத்திற்கும் மேலாக அந்த அறிக்கையை எழுதிய எழுத்தாளர்களின் வழியில், நாமும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்,” என்று அறிவித்தது.

2011 இல் மார்க்ஸ் கல்லறை மீது கிறுக்கப்பட்ட ஒரு தாக்குதல், கோர்பினின் அரசியல் ஆலோசகராக இருந்து அப்போது ஓய்வூ-பெற்றிருந்த டோனி பென்னை இவ்வாறு எழுத தூண்டியது, “அந்த கல்லறை தாக்கப்பட்டிருப்பதைக் கேள்விபட்டு வருந்துகிறேன். வரலாற்றில் மார்க்ஸ் தலைச்சிறந்த பிரமுகர்களில் ஒருவர். சமூகம் குறித்து அவர் கூறியது மிகவும் முக்கியமானது, இப்போதும் உலகெங்கிலும் அவர் வாசிக்கப்படுகிறார், இறந்து 100 க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின்னர் பலரைப் பொறுத்த வரையில் இது இவ்வாறு இருப்பதில்லை.”

இன்று இதுபோன்ற கருத்துக்கள் அவர்களுக்குப் பொருத்தமற்றவையாக உள்ளன. ஐயத்திற்கிடமின்றி இந்த இலாபகர அமைப்புமுறையைப் பாதுகாப்பதை அரவணைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்துடன் அவர்களின் கடைசி முறிவைச் செய்துள்ள அதிகாரத்துவ அமைப்புகளுக்குள் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் சாயலும் கூட சகிக்கவியலாததாக ஆகிவிட்டன. கோர்பினும் மெக்டொன்னெலும் தொழிற் கட்சியின் வலதுசாரி நாடாளுமன்ற பெரும்பான்மையில் இருக்கும் வெறித்தனமான கம்யூனிச விரோதிகளுடன் அன்னியப்படும் அபாயத்தை எடுப்பதோ அல்லது அவர்கள் கட்சியை நிஜமான சோசலிசத்துடன் வார்த்தையளவிலாவது இணைத்துக் காட்டுவதையோ விட, அவர்கள் ஹைகேட் கல்லறை சதுக்கத்தில் நடத்தப்பட்ட அரசியல் அட்டூழியத்தைக் குறித்து பேசாமல் விட்டுவிடக்கூடும்.

தொழிற் கட்சியினதும் மற்றும் உலகின் பழைய அதிகாரத்துவ அமைப்புகளினதும் அரசியல் துர்நாற்றம், அதிகரித்து வரும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் முன்னால் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்க கடும் அபாயங்களை முன்னிறுத்துகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), சர்வதேச தொழிலாள வர்க்க மூலோபாயமும், 2019 இல் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும் என்ற அதன் புத்தாண்டு அறிக்கையில் எச்சரித்தது:

"யூத-எதிர்ப்புவாதத்தின் புத்துயிர்ப்பு உட்பட அதி-வலது மற்றும் பாசிச இயக்கங்களின் வளர்ச்சியானது தொழிலாள வர்க்கத்திற்கு மிகத் தீவிர அபாயத்தை முன்நிறுத்துகிறது. ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி, முன்கண்டிராத சமூக சமத்துவமின்மை மட்டங்கள் மற்றும் உலகப் போருக்கான தயாரிப்புகள் ஆகிய நிலைமைகளின் கீழ், ஆளும் உயரடுக்கினர் இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றங்களுக்குப் பொறுப்பான அரசியல் கசடுகள் அத்தனையையும் மீண்டும் எழுப்பி நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். ... இந்த அரசியல் நோயானது அதீத சமத்துவமின்மையின், குறிப்பாக முதலாளித்துவத்திற்கான ஒரு சோசலிச மாற்றுக்காக போராடுகின்ற ஒரு அரசியல் இயக்கம் இல்லாத ஒரு சூழ்நிலைக்குள்ளாக அபிவிருத்தி காண்கிறது.

"பாசிசம், 1930களில் அது இருந்தது போல, இன்னும் ஒரு வெகுஜன இயக்கமாக ஆகிவிடவில்லை. ஆயினும் வளர்ந்து செல்லும் அபாயத்தை உதாசீனம் செய்வது அரசியல்ரீதியாக பொறுப்பற்றதாக இருக்கும். பரந்த மக்கள் உணர்கின்ற அதிருப்தியையும் கோபத்தையும் வலது-சாரி இயக்கங்கள், ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசின் பிரிவுகளது ஆதரவுடன், வாய்வீச்சில் சுரண்டிக் கொள்ள முடிந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிவலது மற்றும் பாசிச இயக்கங்கள் மீண்டும் எழுவதைத் தடுப்பதற்கு எதிரான போராட்டமானது ஒரு அவசரமான அரசியல் கடமையாக இருக்கிறது.”

இந்த பணி இன்றைய மார்க்சிசமாக விளங்கும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFI இன் மீது விழுகிறது. முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அதன் அரசியல் பொறுப்பாகும். அதை செய்வதற்கான நிலைமைகள் வேகமாக முதிர்ந்து வருகின்றன என்பதோடு, முன்னாள் சீர்திருத்தவாத கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களைப் பகிரங்கமாக எதிர்த்து நடந்து வரும் உலகளாவிய வர்க்க போராட்ட மேலெழுச்சியில் இதை ஆதாரபூர்வமாக காணலாம்.