ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතු කම්කරු දඩයමට එරෙහි පිකට් උද්ඝෝෂනයට සම්බන්ධ වන්න!

தோட்டத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதற்கு எதிரான மறியல் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்!

By the Abbotsleigh Estate Workers Action Committee and Socialist Equality Party (Sri Lanka)
11 February 2019

சம்பளப் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர் செயற்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுவதற்கு எதிராக, எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவினால் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஒத்துழைப்புடன், பெப்பிரவரி 17 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.00 மணிக்கு, ஹட்டன் பஸ் நிலையத்துக்கு முன்னால் நடத்தப்படவுள்ள மறியல் போராட்டத்தில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அக்கறை கொண்ட அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

டிசம்பர் 13 அன்று, டிக்கோயா என்ஃபீல்ட் தோட்ட நிர்வாகிகள், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தில் பங்கேற்ற, அந்த தோட்டத்தின் எஸ். பாலசுப்ரமணியத்தை வேலை நீக்கம் செய்துள்ளனர். தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையின் கேட்டை மூடி தொழிற்சாலைக்குள் தேயிலை கொழுந்துகளை கொண்டு செல்லவிடாமல் தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், அவருக்கும் பத்மநாதன், சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற கிருஷ்ணன் ஆகிய தொழிலாளர்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலசுப்ரமணியம் என்ஃபீல்ட் தோட்டத்தின் சென் எலியாஸ் பிரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) தோட்டத் தலைவராக இருப்பதோடு, பத்மநாதன் ஸ்டம்போர்ட் தோட்டத்தின் இ.தொ.கா. தலைவராவார். ஏனைய இருவரும் அதன் உறுப்பினர்களாவர். அதற்கும் மேலாக, சம்பவம் நடந்தபோது அங்கிருந்து அதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத அருள்நாயகி, கிளேரா, சிவசாமி ஆகிய மேலும் மூன்று இ.தொ.கா. பிரதிநிதிகளுக்கு எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தோட்ட நிர்வாகம் உள்ளக ஒழுக்காற்று விசாரணை ஒன்றையும் நடத்தியுள்ளது. தொழிற்சாலை வாசலை மூடியதால் 7 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதை அவர் செலுத்த வேண்டும் என்றும் தோட்ட முகாமையாளர் பாலசுப்ரமணியத்திடம் கூறியுள்ளார். பாலசுப்ரமணியமும் சக தொழிலாளர்களும் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.

அத்தோடு, ஜனவரி 10 அன்று, எபோட்சிலி தோட்டத்தின் உதவி முகாமையாளர், தோட்டத்தில் வேலைகளை குழப்புவதாக அந்த தோட்டத்தின் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் தலைவர் பி. சுந்தரலிங்கத்தின் மீது ஏனைய தொழிலாளர்கள் முன்னால் குற்றம் சாட்டியதோடு, அவரை "கவனித்துக்கொள்வதாக" அச்சுறுத்தினார்.

இந்த பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்திற்கு எதிராக பொலிஸ், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், பெருந்தோட்ட முதலாளிமார்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கையாகும். அதே சமயம், அது தங்கள் உரிமைகளுக்காகப் போரடும் உழைக்கும் மக்களுக்கு எதிரான, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினதும் முதலாளிமார்களதும் எதிர்ப்போக்கு கொள்கையுடன் இரண்டறக் கலந்துள்ளது.

இலங்கையில் அண்மைய போராட்டங்களில், ஹம்பந்தொட துறைமுகம், மின்சார சபை மற்றும் இரயில் தொழிலாளர்களுக்கும் எதிராக இத்தகைய அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. இப்போது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஏ.டி.ஜி. தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சாலை நிர்வாகிகளால் ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதேபோல், சம்பளக் கோரிக்கைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட, இந்தியாவின் தமிழ் நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள், மற்றும் பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்களுமாக ஆயிரக் கணக்கானவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக அந்த அரசாங்கங்கள் மற்றும் முதலாளிமார்களால் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம், சமூக உரிமைகளுக்காப் போராடி வரும் மஞ்சள் சீருடை இயக்கத்திற்கு எதிரான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்த வேட்டையாடல் பற்றி சகல தொழிற்சங்கங்களும் மௌனமாகவே இருக்கின்றன. இது தற்செயலானது அல்ல. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை குழப்புவதற்கே வேலை செய்கின்றன.

கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்கள் அன்றாட அடிப்படை ஊதியத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்க கோரி கடந்த சில மாதங்களாக உறுதிப்பாடான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்த தோட்ட உரிமையாளர்களும் அரசாங்கமும், தொழிற்சங்கங்களின் நேரடி ஒத்துழைப்புடன் தொழிலாளர்கள் மீது ஒரு வறிய ஊதியத்தை தினிப்பதற்கு நடவடிக்கை எடுத்தன. இ.தொ.கா. மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் முதலாளிமாருடன் கையொப்பமிடப்பட்ட ஒரு கூட்டு ஒப்பந்தத்தில், நாள் சம்பளம் 750 ரூபா வரை, வெறும் 20 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் இதை கடுமையாக எதிர்ப்பதால், தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணியினதும் தலைவர்கள், மீண்டும் அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் பயனற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள தொகைக்கும் மேலாக ஒரு சதமேனும் அதிகரிக்க முடியாது என தோட்டக் கம்பனிகள் கூறிவிட்டதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஒரு தலைவரான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், தொழிலாளர்களின் உரிமைகளுக்கான மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை, தொழிலாளர்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்ய வேண்டும். பெப்பிரவரி 17 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மறியல் போராட்டத்தில் இணைந்து கொண்டு அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பங்களிப்புச் செய்யுங்கள்.