ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The working class and socialism

தொழிலாள வர்க்கமும் சோசலிசமும்

Andre Damon
9 February 2019

திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இங்கே, அமெரிக்காவில், நம் நாடு சோசலிசத்தை ஏற்க வேண்டுமென்ற புதிய அழைப்புகளால் நாம் எச்சரிக்கப்பட்டுள்ளோம்... அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோசலிஸ்ட் நாடாக ஆகாது என்ற நமது தீர்மானத்தை இன்றிரவு நாம் புதுப்பிப்போமாக,” என்று அறிவித்து அவரது மாநில கூட்டாட்சி மன்ற உரையை நிறைவு செய்தார்.

ட்ரம்பின் சோசலிச-விரோத வெடிப்புக்கு வெறும் மூன்று நாட்களுக்குப் பின்னர், சோசலிச அச்சத்தை ஊக்குவித்துக் கொண்டிருப்பது எது என்பதைக் காட்டும் ஓர் அறிக்கையை, அதாவது வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியைக் குறித்த ஓர் அறிக்கையை தொழிலாளர் புள்ளிவிபர ஆணையம் (BLS) வெளியிட்டது. BLS தகவல்களின்படி, கடந்தாண்டு வேலைநிறுத்தத்தில் இறங்கிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 1986 க்குப் பிந்தைய—மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமாக காலத்தை விட—மிக அதிகபட்ச எண்ணிக்கையில் இருந்தது. கடந்தாண்டு, அரை மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கி இருந்தனர், இது 2017 ஐ விட 20 மடங்கு அதிகமாகும்.

மிகப் பெரிய பணி நிறுத்தம் கடந்த ஏப்ரலில் 81,000 அரிசோனா ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வேலைநிறுத்தமாக இருந்தது, இது 486,000 மனித வேலை-நாள் இழப்புகளை உண்டாக்கியது. அதே மாதத்தில் 20,000 ஆக்லஹாமா ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் 405,000 மனித வேலை-நாள் இழப்பை ஏற்படுத்தியது. தொழிலாளர் புள்ளிவிபர ஆணையம் தொடர்ந்து குறிப்பிட்டது, “கல்வித்துறை சேவைகளில் மாநிலந்தழுவிய மிகப் பெரிய பணி நிறுத்தங்கள் மேற்கு வேர்ஜீனியா, கென்டக்கி, கொலாராடோ மற்றும் வடக்கு கரோலினாவிலும் நடந்தது.”

இந்த போராட்டங்களின் அலை—அமெரிக்காவிலும், வடக்கு அமெரிக்கா எங்கிலும், மற்றும் உலகெங்கிலும்—இந்த புதிய ஆண்டில் தீவிரமடைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில், பத்தாயிரக் கணக்கான ஆசிரியர்கள் கடந்த மாதம் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். மெக்சிகோ மத்தாமோரொஸின் வாகனத்துறை ஆலைகளில் எழுபதாயிரம் தொழிலாளர்கள் மிகப்பெரிய வேலைநிறுத்தம் தொடங்கினர், அது ஏற்கனவே அமெரிக்காவில் வாகனத்துறை உற்பத்தியைத் தொந்தரவுக்கு உட்படுத்தி வருவதுடன், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

அதுவும் இது வெறும் ஆரம்பம் மட்டுந்தான்.

1981 இல் PATCO வேலைநிறுத்தத்தை நசுக்கியதற்குப் பின்னர், அமெரிக்க ஆளும் வர்க்கம் தசாப்தங்களாக தொழில்துறை அழிப்பு, பாரிய வேலைநீக்கங்கள், சம்பளம் மற்றும் சலுகை விட்டுக்கொடுப்புகளுக்குத் தலைமை தாங்கியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் ஒத்துழைத்துள்ளன என்பதோடு, ஒவ்வொரு போராட்டத்தையும் விற்றுத் தள்ளி உள்ளன, ஒவ்வொரு ஆலைமூடலையும் ஏற்றுக் கொண்டுள்ளன, அத்துடன் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியாக குறிப்பிட்டு வந்துள்ளன.

இது அமெரிக்க வரலாற்றில் செல்வவளத்தை மிகவும் வேகமாக உயர்மட்டத்திறத்கு மறுபகிர்வு செய்வதில் போய் முடிந்துள்ளது.

அமெரிக்காவில் வெறும் மூன்று நபர்கள், சமூகத்தின் அடிமட்ட அரைவாசி மக்களுக்கு நிகரான செல்வவளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். 2008 நிதியியில் நெருக்கடிக்குப் பிந்தைய பத்தாண்டுகளில், பில்லினர்களின் எண்ணிக்கை அண்மித்து இரட்டிப்பாகி உள்ளது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும், ஒரு பில்லியனர் உருவாகி உள்ளார்.

கடந்தாண்டின் போது, உலக பில்லியனர்களின் செல்வவளம் நாளொன்றுக்கு 2.5 பில்லியன் டாலர் என்றளவில் அதிகரித்தது, அதேவேளையில் மனிதகுலத்தின் மிக வறிய அரைவாசி மக்களின் செல்வவளமோ தேங்கிய 11 சதவீதத்திலிருந்து வீழ்ச்சி அடைந்தது.

எந்த இடத்திலும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் பரந்த பெரும்பான்மை மக்களின் சமூக அரசியல் நலன்களுக்கான எந்தவொரு வெளிப்பாடும் இல்லை. ட்ரம்பின் அதிவலது அரசியலோ, ஒவ்வொரு பாசிசவாத இயக்கத்தின் மத்திய குணாம்சமான வெளிப்படையான சோசலிச வெறுப்பின் மீது இன்னும் கூடுதலாக அடித்தளமிட்டு வருகிறது.

ஜனநாயகக் கட்சியோ, அதன் பங்கிற்கு, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு முறையீட்டையும் புறக்கணிப்பதன் மீது அதன் அரசியலை ஒருங்குவித்துள்ளது. அதற்கு பதிலாக அது அடிப்படை சமூக பிளவு வர்க்கம் அல்ல, மாறாக இனம் மற்றும் பாரம்பரிய குணம் சம்பந்தப்பட்டது என்ற கட்டுக்கதைகளின் அடிப்படையில் இனவாத மற்றும் கலச்சார அடையாளங்களைச் சுற்றி ஒரு "ஜனரஞ்சகவாத" இயக்கத்தை உருவாக்க முனைந்துள்ளது. இது, அதிகாரம் மற்றும் தனிச்சலுகைக்கான இடங்களுக்காக போட்டியிடுகின்றதும், நிதியியல் பிரபுத்துவம் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் செல்வாக்கான பிரிவுகளுடன் அணி சேர்ந்துள்ளதுமான உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் அரசியலாகும்.

அரசியல் மயக்கமூட்டுவதற்கான ஒரு முயற்சியில், ஜனநாயக கட்சியினர் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர் Alexandria Ocasio-Cortez போன்ற ஒரு சில பிரமுகர்களை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது, ஒரு வலதுசாரி கட்சிக்கு இடது பூச்சை வழங்குவது தான் இவர்களின் பணி.

ஆனால் ட்ரம்பின் மாநில கூட்டாட்சி மன்ற உரைக்கு அவர்களின் பதில்களில், அவர்கள் இருவரும் உண்மையில் சோசலிஸ்டுகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தினர். “சோசலிசம்" ஒரு "வெற்றி செய்தியா" என்று கேட்ட போது, Ocasio-Cortez அறிவித்தார், “இறுதியில், 'இசம்' (ism) சம்பந்தப்பட்டதாக இருக்காது. துல்லியமாக இதை தான் ஜனாதிபதி கூற முயல்கிறார் என்று நினைக்கிறேன். அவர் குணாம்சத்தை மாற்றிக்காட்ட, ஜோடிக்க, தொடர்புபடுத்த முயன்று வருகிறார்.”

ட்ரம்ப் உரைக்கு அவரது 27 நிமிட நீண்ட பதிலில், சாண்டர்ஸ், சோசலிசம் என்ற வார்த்தையின் மதிப்பைக் குறைத்ததைத் தவிர அதை பயன்படுத்த மறுத்திருந்தார், அமெரிக்காவில் "பணக்காரர்களுக்கான சோசலிசம்" இருப்பதாக குறை கூறினார்.

“சோசலிச ஆபத்தை" ட்ரம்ப் தூண்டுவது குறித்து கருத்துரைத்த நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளரும், ஜனநாயகக் கட்சியினரின் ஓர் அனுதாபியுமான பௌல் க்ரூக்மன் அறிவித்தார், “ஜனநாயகக் கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் வலது சாரி ஊடகம், அவரை லியோன் ட்ரொட்ஸ்கியின் இரண்டாம் வருகை என்று சித்திரிக்கும்,” என்று எழுதியதுடன், “மற்ற ஊடகங்களாவது அமெரிக்க சோசலிசத்தின் சிறிய இரகசியத்தை, என்னவென்றால் அது எவ்வகையிலும் தீவிரமானதில்லை என்பதைத் தெளிவுபடுத்துமென நம்புவோமாக” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

க்ரூக்மன் இங்கே சரியாக உள்ளார். மிகக் குறைந்த உண்மையான சோசலிஸ்ட்களைத் தவிர்த்து, சாண்டர்ஸூம் Ocasio-Cortez உம் "எவ்வகையிலும் தீவிரமானவர்கள்" இல்லை.

நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், நவீன சோசலிச இயக்கம் தோன்றிய போது, கார்ல் மார்சும் பிரெடெரிக் ஏங்கெல்ஸூம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் இவ்வாறு பிரகடனப்படுத்தினார்கள், “கம்யூனிஸ்ட்கள் பகிரங்கமாக, இந்த ஒட்டுமொத்த உலகின் முன்னால், அவர்களின் கண்ணோட்டங்களை, அவர்களின் நோக்கங்களை, அவர்களின் போக்குகளை வெளியிடுவதற்கு இதுவே சரியான தருணம், கம்யூனிச பூதம் குறித்த மழலையர் கட்டுக் கதைகளைக் கட்சியின் பிரகடனத்தைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.”

இப்போது, அதே "கம்யூனிச பூதம்" ஆளும் வர்க்கத்தைத் துரத்துகின்ற போது, சோசலிஸ்டுகள் அவர்கள் எதற்காக நிற்கிறார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டியுள்ளது. சோசலிஸ்டுகள் ஒரு சில சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை, முதலாளித்துவத்தின் கீழ் இது சாத்தியமில்லாதது, மாறாக ஆளும் வர்க்கத்தின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்து சமூகம் மொத்தத்தையும் மறுஒழுங்கு செய்ய நிற்கிறார்கள். மருத்துவக் கவனிப்பு, கல்வி, நல்ல சம்பளத்தில் வேலை மற்றும் பாதுகாப்பான ஓய்வூகாலம் ஆகியவற்றை ஒவ்வொருவருக்குமான அடிப்படை சமூக உரிமையாக உறுதிப்படுத்த, மிகப் பெரிய பெருநிறுவனங்களைப் பொதுத்துறை நிறுவனங்களாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகரீதியிலான கட்டுப்பாட்டின் கீழ் மாற்றுவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

வர்க்க போராட்டம் வளர்ச்சியுறுவதற்கு ஒரு புறநிலையான தர்க்கம் உள்ளது. தனித்தனி வேலையிடங்களிலும் சமூகங்களிலும் நடக்கும் போராட்டங்கள் தொழிலாள வர்க்க விரோதமான தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்களை முன்பினும் அதிக நேரடியான மோதலுக்குக் கொண்டு வருகின்றன, இதற்காக, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை ஐக்கியப்படுத்துவதற்காக சுயாதீனமான ஆலைக் குழுக்கள் மற்றும் வேலையிடக் குழுக்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் இதர வாகனத்துறை நிறுவனங்களால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலைநீக்கத்தை எதிர்க்க, இன்று, சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டிணைவிற்கான வழிகாட்டல் குழு மற்றும் WSWS வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழ் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. இது பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் கட்டளைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கான ஒரு முக்கிய படியாக இருக்கும்.

அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி அடைந்து வரும் போராட்டங்கள் முன்பினும் அதிகமாக வெளிப்படையாக முதலாளித்துவ-எதிர்ப்பு நோக்குநிலையும் சோசலிச தன்மையும் பெறும். ட்ரம்பும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் அஞ்சுவதைப் போல, தொழிலாள வர்க்க போராட்டங்களின் தர்க்கம் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கி உள்ளது, அது சமூகத்தை தனியார் இலாபத்திற்காக அல்ல சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்யவும் மற்றும் அரசியல் அதிகாரத்தின் கேள்வியையும் எழுப்பும்.

தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் வேலைத்திட்டம் சோசலிசமாகும். இந்த வேலைத்திட்டத்தை உணர்ந்தறிய ஓர் அரசியல் தலைமையைக் கட்டமைப்பது அவசியப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினது அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, சமரசத்திற்கிடமின்றி புரட்சிகர மூலோபாய மற்றும் சோசலிச முன்னோக்குடன் புறநிலையான தொழிலாள வர்க்க இயக்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.