ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

War summit in Warsaw

வார்சோவில் போர் உச்சி மாநாடு

Bill Van Auken
15 February 2019

“மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை ஊக்குவிப்பதற்காக" செயல்படுவது என்ற போலிப் பதாகையின் கீழ், இவ்வாரம் வார்சோவில் அமெரிக்கா மற்றும் போலாந்து அரசாங்கங்கள் கூட்டாக நடத்திய மாநாடு, அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுலத்தைச் சாத்தியமானளவுக்கு மற்றொரு பேரழிவுகரமான உலக போருக்குள் இழுக்க தயாரிப்பு செய்து வருகிறது என்ற மிகப்பெரிய உடனடி அச்சுறுத்தலை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது.

இந்த மாநாட்டுக்கு முதல்நாளே, இந்த நிகழ்வுக்காக போலந்துக்கு பறந்த ஒரே முக்கிய அரசு தலைவரான இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகு வார்சோவில் இருந்து ஒரு பேட்டியளித்தார், அதில் அவர் "ஈரானுடனான போரில் பொதுவான நலனை முன்னெடுக்க இஸ்ரேலுடன் சேர்ந்து அமர்ந்துள்ள முன்னனி அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒரு பகிரங்கமான சந்திப்பு" இம்மாநாட்டில் சம்பந்தப்பட்டிருப்பதே இதன் முக்கியத்துவம் என்று அறிவித்தார்.

இந்த போர்நாடும் அறிக்கையின் வாசகம் பின்னர் இஸ்ரேலிய பிரதம மந்திரியின் ட்வீட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது. அதன் பின்னர், அந்நிகழ்வை முன்னெடுத்த அமெரிக்க மற்றும் போலந்து பிரதிநிதிகளின் வெளிப்படையான அரசியல் அழுத்தத்தின் காரணமாக, அந்த ட்வீட் செய்தி "ஈரானை எதிர்ப்பதில் பொதுவான நலனை முன்னெடுக்க" என்று கூறுவதாக மாற்றப்பட்டது.

பெரும்பான்மை ஊடகங்கள் நெத்தனியாகுவின் உண்மையான அறிக்கையைத் தவறாக வெளியிடப்பட்ட ஒன்றாக எடுத்துக்காட்டின. அது அவ்வாறில்லை. இஸ்ரேலிய பிரதம மந்திரி பட்டவர்த்தமான வார்த்தைகளில் வார்சோ மாநாட்டின் நிஜமான நோக்கங்களை வர்ணித்திருந்தார் ஏனென்றால் அவர் மீது மேலெழுந்து வரும் ஊழல் மோசடிகளுக்கு மத்தியில் இரண்டு மாதங்களில் அவர் தேர்தலை எதிர்கொண்டிருப்பதுடன் அவரது வலதுசாரி அடித்தளத்தைத் திரட்ட பதட்டத்துடன் உள்ளார் என்பதால் அவரின் சொந்த அரசியல் நலன்களுக்கு அது பொருந்துவதாக இருந்தது.

வார்சோ ஒன்றுகூடலில் சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட இஸ்ரேலும் மற்றும் பாரசீக வளைகுடாவின் பிற்போக்குத்தனமான முடியாட்சி சர்வாதிகாரங்களும், ட்ரம்ப் நிர்வாகம் ஜோடித்து வருகின்ற ஈரானிய-எதிர்ப்பு அச்சின் இரண்டு தூண்களாக உள்ளன.

“அமைதி" மற்றும் "பாதுகாப்பு" குறித்த பேச்சுக்களைக் கொண்டு இம்மாநாட்டின் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கான அமெரிக்க மற்றும் போலந்து அதிகாரிகளின் முயற்சிகள் கேலிக்கூத்தாக இருந்தன. போலாந்து அதிகாரிகள் வலியுறுத்துகையில், இந்த கூட்டம் எந்தவொரு நாட்டையும் கவனத்தில் கொள்ளவில்லை, மாறாக ஆயுதத் தடை, பயங்கரவாதம், போர் மற்றும் இதர பிற விடயங்கள் போன்ற இப்பிராந்தியம் எதிர் கொண்டிருக்கும் "பரந்த பிரச்சினைகளை" கவனத்தில் கொண்டுள்ளது என்றார்கள். ஆனால் அது தொடங்கியதும், இத்தகைய பிரச்சினைகளைக் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் மற்றும் ஒவ்வொன்றுக்கும் ஈரான் தான் அடியில் இருப்பதாக பார்க்கப்பட்டது.

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஓர் உணர்ச்சிகரமான பேருரை வழங்கினார், அதில் அவர் "மற்றொரு இனப்படுகொலைக்கு" அச்சுறுத்தி வருவதாக தெஹ்ரானைக் கண்டித்ததுடன், ஈராக், சிரியா மற்றும் லெபனான் வழியாக "மேலாளுமைக்கான பாதையை" திறப்பதன் மூலமாக அது மீண்டும் பாரசீக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் உரையைக் காரசாரமாக்கிய பென்ஸ், நம்பிக்கையும் கடவுளும் மத்திய கிழக்குக்கு அமைதியை வழங்கும் என்று கூறியதுடன், ஈரானை "பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் முன்னணி அரசு என்றும், அப்பிராந்தியத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை விதைக்கும் மற்றும் மிகப்பெரிய முரண்பாடுகளை விதைக்கும் அரசு, அது சம்பந்தமாக தான் இங்கே இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம்" என்றும் விவரித்தார்.

“பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் முன்னணி அரசு" என்ற இந்த சொற்பதம், குற்றச்சாட்டை உண்மைகளைக் கொண்டோ அல்லது ஆதாரங்களைக் கொண்டோ நிரூபிக்கும் எந்த முயற்சியும் இல்லாமல், அமெரிக்க அதிகாரிகளால் விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. இது, லிபியா மற்றும் சிரியா இரண்டு இடத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான வேட்கையில் அல் கொய்தா-தொடர்புபட்ட ஆயுதக் குழுக்களின் பயங்கரவாத போர்களுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சிய ஓர் அரசிடமிருந்து வருகிறது.

வார்சோ மாநாடு நடந்து கொண்டிருக்கும் போதே கூட, ஈரானில் ஒரு பயங்கரவாத தற்கொலை குண்டுவெடிப்பில் அந்நாட்டின் புரட்சிகர படையினர் குறைந்தபட்சம் 27 நபர்கள் கொல்லப்பட்டனர், இவர்கள் பாகிஸ்தானை ஒட்டிய அந்நாட்டின் எல்லையில் நிலைநிறுத்தலில் இருந்து வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனர். அரபு உலகில் வாஷிங்டனின் பிரதான கூட்டாளியான சவூதி அரேபியாவுடன் தொடர்பு வைத்துள்ள அல்-கொய்தா தொடர்புபட்ட ஒரு நிழலுலக குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

“மிகப்பெரிய பாதிப்பையும் மிகப்பெரிய முரண்பாடுகளையும் விதைக்கும் அரசை" பொறுத்த வரையில், முகத்திற்கு நேராக எவரொருவரும் கூற முடியும், அதாவது அப்பிராந்தியத்தில் ஒரு கால் நூற்றாண்டாக முடிவின்றி அழிவுகரமான போர்களை நடத்தியுள்ள, ஒட்டுமொத்த சமூகங்களையும் தரைமட்டமாக்கி மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும், ஊனமடைவதற்கும், இடம் பெயர்வதற்கும் விட்டு வைத்த வாஷிங்டனுடன் யாரும் சவால் செய்ய முடியுமா?

எவ்வாறிருப்பினும் பென்ஸ் உரையின் மிகவும் அதிர்ச்சியூட்டும் அம்சம், ஈரான் சம்பந்தப்பட்ட உறவில் அமெரிக்க வழியில் இணைய தவறும் வாஷிங்டனின் சமீபம் வரையிலான நேட்டோ கூட்டாளிகளுக்கு எதிராக திரும்பி இருந்தது. 2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்த ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அனைத்தும் அந்த உடன்படிக்கையைக் கிழித்தெறிவதில் வாஷிங்டனின் தலைமையைப் பின்தொடர வேண்டுமென்றும், போர் நடவடிக்கைக்கு நிகரான ஒரு பொருளாதார தடையை விதிக்க வேண்டுமென்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி கோரினார்.

பிரிட்டனை தவிர, ஐரோப்பிய சக்திகளில் எதுவுமே வார்சோ ஒன்றுகூடலுக்கு ஒரு வெளியுறவு அமைச்சர் மட்டத்திற்கு யாரையும் அனுப்பவில்லை, இந்த ஒன்றுகூடல் துல்லியமாக ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்கா முன்னெடுக்கும் அணிவகுப்பு என்பதாக பார்க்கப்பட்டது. ஈரான் அணுசக்தி உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் பங்கெடுத்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் பெடிரிகா மொஹிரினியும் கலந்து கொள்ள மறுத்திருந்தார்.

“ஈரானின் படுகொலை புரட்சிகர ஆட்சிக்கு எதிரான அமெரிக்க தடையாணைகளை உடைக்க" முயற்சிக்கும் "நமது முன்னணி ஐரோப்பிய பங்காளிகளில் சிலரை" பென்ஸ் குறைகூறினார். இங்கே அவர், அமெரிக்காவின் கடுமையான எல்லை தாண்டிய தடையாணைகளிலிருந்து நழுவுவதற்காக, அமெரிக்க டாலரைப் பயன்படுத்தியோ அல்லது நேரடி நிதியியல் பரிவர்த்தனைகளோ இல்லாமல் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் ஈரானுக்கும் இடையே பண்டமாற்றை அனுமதிக்க இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸூம் அறிமுகப்படுத்திய ஒரு நிதியியல் இயங்குமுறை குறித்து குறிப்பிடுகிறார். இந்த நடவடிக்கையானது, ஈரான் அணுசக்தி உடன்படிக்கைக்கு உதவவும் மற்றும் அதற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் தடையாணை விலக்குகள் அனைத்தும் துடைத்தழிக்கப்படுவதை முகங்கொடுத்து தெஹ்ரான் அந்த உடன்படிக்கையைக் கைதுறப்பதிலிருந்து அதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக இருந்தது.

அந்த அணுசக்தி உடன்படிக்கையை உயிரற்றதாக்கி ஐரோப்பிய சக்திகள் "எங்களுடன் நிற்க வேண்டும்" என்று அமெரிக்க துணை ஜனாதிபதி கோரினார், அது ஊகிக்கத்தக்க வகையில் ஈரான் உடனான போருக்கு தயாரிப்பு செய்வதாகும். அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் முறையாக பின்பற்றியது என்பதை ஒப்புக் கொள்ளும் விதத்தில், பென்ஸ் கூறுகையில், பிரச்சினை முறையாக பின்பற்றியமை சம்பந்தப்பட்டதல்ல, மாறாக அந்த உடன்படிக்கையே விரும்பத்தக்கதாக இருக்கவில்லை என்று அறிவித்தார்.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தின் அச்சாணியாக விளங்கிய ஷாவின் அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரத்தைத் தூக்கி வீசிய பெருந்திரளான ஈரானிய தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் 1979 புரட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் மன்னித்து விட்டுவிடவில்லை. அந்த புரட்சி அயெத்துல்லா கொமெனியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட முதலாளித்துவ-மதசார்பு ஆட்சியால் கைப்பற்றப்பட்டது என்றாலும், வாஷிங்டன் ஓர் அமெரிக்க கைப்பாவை சர்வாதிகாரத்தை மீள-நிலைநிறுத்தக்கூடிய ஆட்சி மாற்றத்திற்குக் குறைவின்றி எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

அமெரிக்க தடையாணை முறைகளிலிருந்து நழுவுவதற்கான எந்தவொரு முயற்சியும், "ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இன்னும் அதிக தூரத்தை உருவாக்கும்" என்று பென்ஸ் அவரது வார்சோ உரையில் எச்சரித்தார்.

ஈராக் மீதான 2003 அமெரிக்க படையெடுப்புக்கு முன்னதாக, அப்போதைய பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஜேர்மனி மற்றும் பிரான்ஸை “பழைய ஐரோப்பா” என்று குறிப்பிட்டு குற்றகரமான போர் ஆக்கிரமிப்புக்கான அவற்றின் எதிர்ப்பை ஏளனம் செய்ததுடன், கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகள், பிரதானமாக போலாந்தை உள்ளடக்கிய "புதிய ஐரோப்பாவிடம்" இருந்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான ஆதரவை மெச்சி இருந்தார்.

மத்திய கிழக்கு விவகாரங்களில் போலந்து குறிப்பிடத்தக்க தீர்க்கமான பாத்திரம் வகிக்கவில்லை என்றாலும், போலந்தின் இந்த ஈரான் போர் முன்னெடுப்பு மாநாடு, "பழைய" ஐரோப்பாவுக்கு எதிராக "புதிய" ஐரோப்பாவை எதிர்நிறுத்தும் அந்த முந்தைய முயற்சியை மீண்டும் புதுப்பிக்கிறது.

ஈரானிய-விரோத சிலுவைப் போருக்கான வார்சோவின் ஆதரவானது ரஷ்யாவிடமிருந்து எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் ஒரு பாதுகாப்பு அரணாக கருதப்படும் போலந்தில், ஒரு நிரந்தர அமெரிக்க இராணுவ பிரசன்னத்தைப் பாதுகாப்பதற்கான அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கத்தினது சொந்த முயற்சியுடன் பிணைந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில், போலந்து ஜனாதிபதி Andrzej Duda போலந்து மண்ணில் "ட்ரம்ப் கோட்டையைக்" கட்டியெழுப்புவதற்கான அவர் அரசாங்கத்தின் விருப்பத்தை வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்தார்.

“அமைதி" மற்றும் "பாதுகாப்புக்கான" வார்சோ மாநாட்டில் கொட்டப்பட்ட தீவிர ஈரானிய-விரோத வாய்வீச்சு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ வழங்கிய ரஷ்யாவுக்கு எதிரான பழியுரைகளுடன் பொருந்தி இருந்தன, போலந்தில் சதியாலோசனைகளுக்காக துருப்புகளுடன் வந்திருந்த இவர், மாநாட்டில் கலந்து கொள்வதையும் அத்துடன் இணைத்துக் கொண்டார்.

பொம்பியோ பனிப்போரின் போது ஜேர்மனியில் ஒரு டாங்கி அதிகாரியாக இருந்த அவரின் இராணுவ தொழில் வாழ்வைக் கையிலெடுத்தார். அந்நேரத்தில் ஜேர்மனியின் ஃபுல்டா இடைவெளி (Fulda Gap) மேற்கு ஐரோப்பா மீதான சோவியத் படையெடுப்பு நடந்தால் மோதலுக்குரிய புள்ளியாக பார்க்கப்பட்டதைப் போல, "ரஷ்ய ஆக்கிரமிப்பின்" காரணத்தால் போலந்து இப்போது அதே இடத்தை எடுத்துள்ளது என்றவர் அறிவித்தார்.

இன்று, “பழைய ஐரோப்பாவில்" இருந்த வாஷிங்டனின் சமீப காலம் வரையிலான கூட்டாளிகளுக்கு எதிராக "புதிய ஐரோப்பாவின்" வலதுசாரி ஆட்சிகளை வைத்து விளையாடுவதற்கான அதன் முயற்சி, ஈரானில் சாத்தியமான ஓர் இரத்தஆறு ஓடச் செய்வதுடன் மட்டும் பிணைந்ததில்லை, மாறாக ஒரு புதிய உலக போருக்கான தயாரிப்புகளுடன் பிணைந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பிரதான உலக போட்டியாளரான சீனாவின் எரிசக்தி வளங்கள் மீதான அணுகுதலை மறுக்கும் ஆற்றலைப் பெறும் வகையில், உலகின் எரிசக்தி வளங்கள் அனைத்தின் மீதும் அதன் சவாலுக்கிடமற்ற கட்டப்பாட்டை ஸ்தாபிப்பதற்காக ஈரான் மீதும், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வெனிசூலா மீதும் அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்த தீர்மானகரமாக உள்ளது.

வார்சோ மாநாட்டின் கேலிக்கூத்தான அம்சங்கள் மற்றும் கொதிப்பான வாய்வீச்சுக்கு மத்தியில், அது மரணகதியிலான தீவிர உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. அது உலகின் பிரதான அணுசக்தி நாடுகளுக்கு இடையே மூன்றாம் உலக போரை நோக்கிய உந்துதலில் ஒரு முக்கிய கட்டமாக அமைகிறது.