ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US issues new threats of war for oil against Venezuela

அமெரிக்கா எண்ணெய்க்காக வெனிசுவேலாவிற்கு எதிரான புதிய போர் அச்சுறுத்தல்களை வெளியிடுகிறது

By Eric London 
4 February 2019

அரசாங்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமையன்று வெனிசுவேலாவின் வீதிகளை நிரப்புகையில், ஜனாதிபதி ட்ரம்ப், துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஆகியோர் வெனிசுவேலாவிற்கு எதிரான போரைத் தொடக்குவதற்கான அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளனர்.

நேற்று சூப்பர் போல் நிகழ்ச்சிக்கு முன் ஒளிபரப்பப்பட்ட CBS இன் “நாட்டினை எதிர்கொள்" [“Face the Nation”] நிகழ்ச்சியுடன் நேர்காணலில் ட்ரம்ப் இராணுவத் தலையீட்டை "ஒரு விருப்பத் தெரிவு" என்று மீண்டும் வலியுறுத்தினார். வெள்ளிக்கிழமை மியாமியில் இடம்பெற்ற நாடுகடந்த வெனிசுவேலாவின் தீவிர வலதுசாரிகளின் கூட்டத்தில் துணை ஜனாதிபதி பென்ஸ், "இது பேச்சுவார்த்தைக்கான நேரம் இல்லை, அது நடவடிக்கைக்கான தருணம், மற்றும் மதுரோவின் சர்வாதிகாரத்தை முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது... இப்போது பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும்: எல்லா விருப்பத் தெரிவுகளும் மேசையில் உள்ளன " என ௨றுதியளித்தார்.

ஈராக்கின் 2003 படையெடுப்பை தொடக்குவதற்கு முக்கிய பங்கு வகித்த போல்டன், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலா மதுரோ இராஜிநாமா செய்யாவிட்டால், அமெரிக்கா அவரைக் கொல்லும் அல்லது சிறையில் தள்ளும் அல்லது சித்திரவதை செய்யும் என்று வெள்ளிக்கிழமை ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டார். மதுரோவை கொல்லப்பட்ட நிக்கோலா சௌசெஸ்கு மற்றும் பெனிட்டோ முசோலினிக்கு ஒப்பிட்டு வலதுசாரி வானொலி தொகுப்பாளர் ஹக் ஹெவிட்டுக்கு போல்டன் பின்வருமாறு கூறினார்: விரைவில் அவர் அதைப் பயன்படுத்தினால் [அதாவது இராஜினாமாவை], விரைவில் அவர் குவாண்டனாமோ போன்ற கடற்கரைப் பகுதிகளில் இருப்பதை விடவும்" ஒரு அழகான கடற்கரையில் ஒரு நல்ல அமைதியான ஓய்வு எடுக்கும் வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

எதிர்வரவிருக்கும் நாட்களில் வெனிசுவேலா எல்லையுடன் மூன்று இடங்களில் அமெரிக்க உதவி வழங்குவதாக "இடைக்கால ஜனாதிபதி" என தானாக பிரகடனப்படுத்திதக்கொண்ட ஜுவான் குவைடோ அறிவித்துள்ளதன் மூலம் அமெரிக்காவும் தெற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அவர்களது கூட்டாளிகளும் வெனிசுவேலா இராணுவம் மதுரோவை கைவிட வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்துவதை இலக்காக கொண்ட ஒரு புதிய ஆத்திரமூட்டலை தயாரித்து வருகின்றன.

மதுரோ மற்றும் வெனிசுவேலா இராணுவத் தலைமையினர் அவர்களின் உதவியை மறுப்பதாக கூறியுள்ள போதினும், உணவு மற்றும் மருந்துகளைப் பெறுவதற்கு திரள்கின்ற மக்களின் கூட்டங்களின் படங்கள் இராணுவத்தை எதிர்த்தரப்பை நோக்கி செல்ல தூண்டிவிட்டு உதவிகளை விநியோகிக்க உதவுவதற்கு அல்லது பெறுமதிமிக்க பிரச்சார காட்சிகளையும் வழங்கி ஒரு "மனிதாபிமான" தலையீடு தேவை என்பதை நியாயப்படுத்தலாம் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

வெனிசுவேலா கொலம்பியா எல்லையிலுள்ள மூன்றில் ஒரு உதவி விநியோக நிலையம் அமைந்துள்ள குகூட்டா நகரில் கடந்தவார இறுதியில் நூற்றுக்கணக்கான ஆயுதம்தரித்த கொலம்பிய படையினர் யுத்த உடைகளுடன் காட்சியளித்தனர். வலதுசாரி ஜனாதிபதி இவான் டூக் "வெனிசுவேலா சர்வாதிகாரத்திற்கு சில மணிநேரமே இருக்கிறது" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கடந்த வாரம் மதுரோவை கவிழ்க்க வாஷிங்டனின் நகர்வுகளை அறிவித்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், போல்டன் தனது கையில் ஒரு குறிப்பேடு வைத்திருந்தார், அதில் "கொலம்பியாவிற்கு 5000 துருப்புகள்" என எழுதப்பட்ட வார்த்தைகள் பகிரங்கமாக தெரியக்கூடியதாக காணப்பட்டது.

"உதவி" நிலையங்களில் ஒன்று பிரேசில் எல்லைப் பகுதியில் இருக்கும். அங்கு பிரேசில் கடந்த வருடம் எல்லையில் துருப்புக்களை அனுப்பியது, அதே நேரத்தில் மூன்றாவது கரீபியன் தீவில் இருக்கும் என்று குவைடோவும் அறிவித்தார்.

மதுரோ அரசாங்கத்தின் முதுகெலும்பாக உள்ள வெனிசுவேலா இராணுவத்தில் இந்த அதிகரித்த அழுத்தமானது ஆரம்ப பிளவு ஒன்றை உருவாக்கியது. வார இறுதியில், ஒரு விமானப்படைத் தளபதி மற்றும் ஒரு சிறிய குழு மத்தியதர விமானப் படை அதிகாரிகள் ஆகியோர் கைவிட்டோடி தங்களது சக ஊழியர்களை தம்முடன் சேருமாறு பகிரங்க அழைப்பு விடுத்தனர்.

மதுரோவை எதிர்க்கும் வெனிசுவேலா சட்டமன்ற உறுப்பினரும், ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான ஜெர்மென் ஃபெர்ரெர், CBS இடம், விமானப்படை அரசாங்கத்தை கவிழ்த்துவிடலாம் என்ற அச்சத்தில் மதுரோ போர் விமானங்களை முடக்கிவிட்டார் என்று கூறினார்.

அமெரிக்கா வெனிசுவேலா எண்ணெய் மீதான தடைகளை சுமத்தி வருகிறது, அது எண்ணெய் ஏற்றுமதிகளுக்கும் தடையாக உள்ளது. பொருளாதாரப் போரின் இந்த செயல் சமூக துயரங்களை அதிகரிக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.

கடந்த வாரம் வங்கியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிர்வாகங்களின் மாநாட்டில் வெளியுறவுக் குழுவின் சானன் ஓ நெய்ல், பொருளாதாரத் தடைகள் "அதிக இழப்புக்கு வழிவகுக்கும்,  தற்போது நாம் கொடுக்கும் குறைந்தபட்சமானது கூட மக்களுக்கு அதிகளவு  இழப்பை கொடுக்கும்" என்று கூறினார். "இந்த தடைகள் ஆயிரக்கணக்கில் மக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தும், அவர் மேலும் கூறியதாவது: "நீங்கள் இன்னும் தென் அமெரிக்க முனையிலுள்ள நாடுகளுக்குள்ளும் உலகெங்கிலும் அதிகளவு அகதிகளை காணப் போகின்றீர்கள்" என்று கூறினார்.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடவடிக்கையின் தற்போதைய காலகட்டம் மதுரோ அரசாங்கத்திற்கு வெளியேறும் பாதையை கட்டியெழுப்பவதை நோக்கமாக கொண்டது என Brookings Institution விளங்கப்படுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வார்த்தை பிரயோகத்தில் இது ஈராக்கின் சதாம் ஹுசையின், லிபியாவின் கடாபி மற்றும் சிரியாவின் அசாத்தைப் போல் வெளியேறும் பாதையை தேர்ந்தெடுக்காத தலைவர்களின் நாடுகளுக்கு வானத்திலிருந்து குண்டுகளினதும் ஏவுகணைகளினதும் மழைக்கு உள்ளாவதையும் தரையில் அமெரிக்க இராணுவத்தை அல்லது பினாமி இராணுவத்தை பயன்படுத்துவது என்பதையே அர்த்தப்படுத்துகின்றது.

வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் ஓ'நெய்ல் பெருநிறுவன மாநாட்டில் கூறினார், "இந்த ஆட்சியை சிதைப்பதற்கு அது செயல்படவில்லை என்றால், இராணுவ தலையீடு போன்றவற்றை தவிர ஆயுதப்பெட்டியின் கையிருப்பில் அதிகமாக வேறு எதற்கும் இடமில்லை" என்று கூறினார்.

30 மில்லியன் மக்களைக் கொண்ட வெனிசுவேலாவில் ஒரு இராணுவத் தலையீடானது, நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று லத்தீன் அமெரிக்காவை ஒரு ஏகாதிபத்திய படுகொலைக் களமாக மாற்றும்.

பூகோள அரசியல் உளவுத்துறை சிந்தனைக்கூடமான ஸ்ட்ராட்போர், சமீபத்தில்: "2003 இல் ஈராக் படையெடுப்பிற்குப் பின்னர், விரைவில் உலகின் ஒரு மிகப்பெரிய இராணுவத் தலையீடாக பெருகலாம்." என குறிப்பிட்டது. ஒரு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரும் மற்றும் மதுரோ எதிர்ப்பு சிந்தனையாளரான ஃபிரான்சிஸ்கோ டோரோ, வெளிநாட்டு உறவுகளின் கவுன்சிலில் கூட்டத்தில், "சிரிய உள்நாட்டு யுத்தம் போன்ற ஒரு இராணுவத் தலையீடு" மற்றும் அணுசக்தி ஆயுதங்களுக்கு இடையே மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

அவர் கூறினார்: "வெனிசுவேலாவில் ஒரு இராணுவ நடவடிக்கை நீண்டகாலத்திற்கு இழுபட்டு செல்லுவதற்கான திட்டவட்டமான ஆபத்து இருப்பதுடன், மற்ற நாடுகளும் கூட அதனுள் இழுக்கப்பலாம். நீங்கள் கற்பனை செய்யலாம், எளிதாக, பிரேசில் தென்கிழக்கிலிருந்து நகரும், கொலம்பியா தென்மேற்கிலிருந்து நகரும். அதன் எண்ணெய் நலன்களை பாதுகாக்க ரஷ்யா முயற்சி செய்யலாம். ஏனெனில் ரஷ்யாவின் பெரிய எண்ணெய் முதலீடுகள் வெனிசுவேலாவில் உள்ளன. நீங்கள் கற்பனை செய்யலாம், சீனாவும் என்னவும் செய்யலாம் என்பது எனக்கு தெரியாது. கியூபாவின் உளவுத்துறை ஏற்கனவே வெனிசுவேலா ஆயுதபடைக்குள் ஊடுருவி உள்ளது".

மதுரோவின் மூலோபாயம் மூன்று பகுதிகளைக் கொண்டது ஆகும். முதலாவதாக, தன்னை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒத்துப்போவதாக காட்டிக்கொண்டு, வலதுசாரி எதிர்ப்புடன் பேச்சுவார்த்தைகளுக்கு முயல்கிறார். இரண்டாவதாக, "மற்றொரு வியட்நாம்" அச்சுறுத்தல் என்பதை காட்டி அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு எதிராக பேரம்பேச பயன்படுத்துகிறது. மூன்றாவதாக, பணவீக்கம், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையின் அளவு ஆகியவற்றின்மீது தொழிலாள வர்க்க எதிர்ப்பை வன்முறையாக நசுக்குகிறார்.

பல ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் கோரிக்கையான பிப்ரவரி 2 ம் தேதி புதிய ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை மதுரோ நிராகரித்துள்ளார். காலக்கெடு முடிந்தவுடன், ஐரோப்பிய அரசாங்கங்கள், அதாவது இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா, போர்த்துக்கல், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகியவை உட்பட, குவைடோவை ஜனாதிபதியாக அங்கீகரிப்பதில் பகிரங்கமாக அமெரிக்காவுடன் இணைந்துள்ளன.

மதுரோ இப்பொழுது பெப்ரவரி 5 முதல் பிப்ரவரி 10 வரை நீடிக்கும் பெரிய இராணுவப் பயிற்சியில் பங்குபற்றவுள்ளார். ஒரு தலையீட்டை எதிர்பார்த்து அவரது அரசாங்கம் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் ஒரு இருப்பு பாதுகாப்புப் படையில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை ஆயுதபாணிகளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் மூலோபாயத்திற்கு முக்கியமானது தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உணவுக் கலவரங்கள் மீது கடுமையான இராணுவ ஒடுக்குமுறை ஆகும். இராணுவம் மற்றும் பொலிஸ் வலதுசாரி எதிர்க்கட்சிகளின் "அதிகாரபூர்வமான" ஆர்ப்பாட்டங்களில் கூடுதலான முறையில் ஆத்திரமூட்டாது இருக்கும் நிலையில், அரசாங்கப் படைகள் உணவு, நீர் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்கான ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட டசின் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர்.

பெரும்பாலும் குடிசைப் பகுதிகளில் இரவில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மதுரோ ஆட்சி கொலைப்படைகளின் நள்ளிரவு தாக்குதல்கள் மற்றும்  தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த  எதிர்ப்பாளர்களை இல்லாமல் செய்வதால் பதிலளித்திருக்கிறது. இதனால் மதுரோவின் முன்னோடியான ஹ்யூகோ சாவேஸ்க்கு பலமாக ஆதரவாக இருந்த பகுதிகளை பயமுறுத்த முயல்கின்றது. பெருநிறுவன ஊடகங்கள் இந்த வன்முறைகள் பற்றி எவ்வித செய்திகளையும் வெளியிடவில்லை.

இந்த வழியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் தன்னுடைய எதிர்ப்பாளர்களுக்கும், அவரது ஆதரவாளர்களான ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் உறுதியற்ற நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், எண்ணெய் வினியோகத்தை தக்க வைத்திருப்பதற்கும் தானே சிறந்த தேர்வு என்பதை நிரூபிப்பதற்கு மதுரோ முயன்று வருகிறார்.

வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் தீவிர முயற்சிகளின் வேர்கள், சீன மற்றும் ரஷ்ய செல்வாக்கை ஒழிப்பதை இலக்காகக் கொண்ட "லத்தீன் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம்" என்பதன் ஒரு பகுதியாகும். மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான முழு மலிவு உழைப்பு மற்றும் முதன்மை ஆதார களமாக  முழு மேற்கு அரைக்கோளத்தை மாற்றியமைக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.

2018 ம் ஆண்டு நவம்பர் மாதம், “கொடுங்கோன்மை முக்கூட்டு" (Troika of Tyranny) எனப்படும் கியூபா, வெனிசுவேலா மற்றும் நிக்கரகுவா ஆகியவற்றை குறிப்பிட்டு அறிவிக்கையில், கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு எதிராகவும், தென் ஆசியாவில் சீனாவிற்கு எதிராகவும் மற்றும் மத்திய ஆசியாவில் சீனா ரஷ்யா இரண்டிற்கும் எதிராகவும் நடவடிக்கைகளை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்த முடியாது என்ற மூலோபாய பார்வையை போல்டன் விவரித்திருந்தார். இதில் "அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில்" அவர்களின் பிரசன்னத்தை இல்லாமல் செய்யாது அமெரிக்கப் போர் இயந்திரத்திற்கு அப்பிராந்திய வளங்களை விடுவித்துக்கொள்ளவும் முடியாது என்றார். 1940 களின் முற்பகுதியில் "அமெரிக்கா முதல்" என்ற இயக்கத்தின் மத்திய வெளியுறவுக் கொள்கையாக ஒரு அமெரிக்காவினால் ஆளப்படும் "அமெரிக்க கோட்டை" நிறுவப்படுவது இருந்தது.

அமெரிக்க இராணுவப் பாதுகாப்புக் கல்லூரி "அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் இலத்தீன் அமெரிக்காவின் மூலோபாய ரீதியான முக்கியத்துவம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு மார்ச் 2018 ஆவணத்தில் இராணுவம் 1970 மற்றும் 1980 களின் சர்வாதிகார வீழ்ச்சியின் பின்னர், "மிகவும் ஜனநாயக மேற்கத்திய அரைக்கோளத்தில் உள்ள சமுதாயங்கள் "பலவீனமானதாகவும், உறுதியற்றதாகவும் இருந்தன. இதன்மூலம் வெளிநாட்டு சக்திகளால் (சீனா மற்றும் ரஷ்யா போன்றவை) இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை எதிர்ப்பதன் மூலம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன."

இந்த மூலோபாய ஆவணம் வெனிசுவேலாவில் சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்கான மற்றொரு காரணத்தை சுட்டிக்காட்டியது: அமெரிக்க இராணுவம் அதிக அளவில் மக்கள்தொகை கொண்ட நகர்புற பகுதிகளில் அதன் இயக்க திறன்களை சோதிக்க வேண்டும்.

"இலத்தீன் அமெரிக்க பெருநகரங்கள், அதன் மூலோபாய பங்காளிகளின் கூட்டுழைப்புடன் இன்னொரு முக்கிய விடயத்திற்கு கவனம் செலுத்தும் அமெரிக்காவின் இராணுவத்திற்கான ஒரு ஆய்வகமாகும். அல்லது, ஒருவேளை, பனிப் போரிற்கு பிந்திய சர்வதேச அமைப்பு முறை பற்றிய ஒரு பழைய பிரச்சினையான: வழக்கத்திற்கு மாறான சூழலில் ஒரு வழக்கமான யுத்தத்தை எவ்வாறு செய்வது" என்பது பற்றியது என ஆவணம் கூறுகிறது. "21 ஆம் நூற்றாண்டில் மோதல்களுக்கான புதிய அரங்கங்கள் பெருநகரங்கள் ஆகும். ஆகையால், அமெரிக்க அரசாங்கமும் இராணுவமும் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் செயற்படுத்தி முடிப்பதற்கும் தயாரற்ற நிலையில் இருக்க முடியாது” எனவும் அது குறிப்பிட்டுள்ளது.