ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US imperialism stages provocation on Venezuela’s borders

வெனிசுவேலா எல்லைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆத்திரமூட்டலை நடத்துகிறது

Eric London
25 February 2019

வெனிசுவேலாவுக்கு "மனிதாபிமான உதவிகளை" வழங்குவதற்கான அமெரிக்காவின் இவ்வாரயிறுதி முயற்சி நாடகபாணியிலான ஓர் ஆத்திரமூட்டலாக இருந்தது, படைவீரர்களைச் மறைத்து கொண்டு சென்ற குதிரை பொம்மைகளுக்கு (Trojan horse) நிகராக இந்த நவீனகாலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீள்வடிவ டிரக்குகள் சேவையாற்றின.

கொலம்பியாவின் கூகுட்டா (Cúcuta) மற்றும் பிரேசிலின் பகாராய்மாவில், ட்ரம்ப் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் வலதுசாரி கொலம்பிய மற்றும் பிரேசிலிய அரசாங்கங்களின் அதிகாரிகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஏற்றி வந்த ட்ரக்குகளை வெனிசுவேலா எல்லைக்குள் நகர்த்த முயன்றனர். வெனிசுவேலா அரசாங்கம் நுழைவதை அனுமதிக்காது என்று அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்குத் தெரியும் என்பதால், எல்லைக் கடந்து வருவதைக் கூடுதலாக பலப்படுத்துவதற்காக, அதிவலது மக்கள் விருப்பம் கட்சியின் (Popular Will party) ஓர் உறுப்பினரும், தன்னை சுயமாக வெனிசுவேலாவின் "இடைக்கால ஜனாதிபதியாக" அறிவித்துக் கொண்டவருமான குவான் குவைடோவின் ஆதரவாளர்களை அவை தூண்டிவிட்டன. அதைத் தொடர்ந்து நடந்த மோதல்களில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், அந்த ஆத்திரமூட்டல் ஒரு தோல்வியாக இருந்தது. அமெரிக்கா மற்றும் அதன் அதிவலது கொலம்பியன் மற்றும் பிரேசிலிய கூட்டாளிகள் தலையிடக்கூடிய சாத்தியக்கூறை வரவேற்று பாரிய வெனிசுவேலினிய மக்கள் கூட்டம் எதுவும் அங்கே இருக்கவில்லை. அங்கே வெனிசுவேலிய ஆயுதப்படைகளில் இருந்து எந்த கட்சித் தாவல்களும் இருக்கவில்லை.

இந்தளவுக்கு அப்பட்டமான ஓர் ஆத்திரமூட்டலில் பங்கெடுக்க செஞ்சிலுவை சங்கம் போன்ற சுதந்திர உதவி அமைப்புகளும் மறுத்திருந்தன. சனிக்கிழமை கொலம்பியா-வெனிசுவேலா எல்லையில் பிரிட்டன் பில்லியனர் ரிச்சார்ட் பிரான்சன் குவைடாவுக்கு ஆதரவான ஒரு இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த போது, பல பிரபல கலைஞர்களும் அந்நிகழ்வில் கலந்து கொள்ள சர்வசாதாரணமாக மறுத்திருந்தனர்.

ஆனால் அந்நடவடிக்கையின் மத்திய நோக்கம் இராணுவ தலையீட்டுக்கு ஒரு சாக்குபோக்கை உருவாக்குவதற்காக இருந்தது. ட்ரம்பும் அவரின் அப்பிராந்திய கூட்டாளிகளும் வெனிசுவேலாவில் "ஜனநாயகத்தை" கொண்டு வருவதற்கு அழைப்புவிடுக்கையில் அவர்கள் மனதில் என்ன வைத்திருந்தார்கள் என்பதை அந்த ஆத்திரமூட்டலில் யார் கலந்து கொண்டார்கள் என்பது எடுத்துக்காட்டியது.

சிலியில் ஆகுஸ்டோ பினோசேயின் சர்வாதிகாரத்துடன் "நல்லிணக்கம்" அறிவித்திருந்தவரும், அந்த சர்வாதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் ஒரு சட்டத்தை கடந்தாண்டு நீக்கியவருமான அந்நாட்டின் ஜனாதிபதி செபஸ்டியான் பினெரா, கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படைகளுக்கு [FARC] எதிரான ஒடுக்குமுறையில் யாருடைய துணை இராணுவப் படைகள் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோ அந்த முன்னாள் ஜனாதிபதி Álvaro Uribe இன் அரசியல் வாரிசான கொலம்பிய ஜனாதிபதி Iván Duque, மற்றும் பிரேசிலிய இராணுவ சர்வாதிகத்தின் ஒரு பகிரங்க பாதுகாவலரான அதிவலது பிரேசிலிய ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோவின் பிரதிநிதிகள் ஆகியோர் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாரயிறுதியில் அரங்கேற்றப்பட்ட அந்த சம்பவத்தை ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி வரும் அதன் போர் அச்சுறுத்தல்களை நியாயப்படுத்த பயன்படுத்தி வருகிறது. எல்லை மோதல்களின் காரணமாக, அவர், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் "அனைத்து விருப்பத்தெரிவுகளையும் திறந்து" வைத்திருக்க வேண்டுமென, அதாவது ஓர் இராணுவ தலையீட்டுக்குத் தயாராக இருக்க வேண்டுமென, விரும்புவதாக அமெரிக்க கைப்பாவை குவைடோ சனிக்கிழமை ட்வீட் செய்தார்.

திங்களன்று, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், குவைடோ மற்றும் ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகள், அத்துடன் கனடாவின் தலைவர்களுடன் இணைவதற்காக கொலம்பியா பயணிப்பார். கனடா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவுக்கு எதிரான வாஷிங்டனின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரிப்பதில் லிமா தேசங்களின் குழு (Lima Group of nations) என்றழைக்கப்படுவதில் இணைந்துள்ளது.

கொலம்பியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை இருப்பதாக இப்போது செய்திகள் வருகின்றன, சமீபத்தில் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜோன் போல்டன் அங்கே 5,000 அமெரிக்க துருப்புகளை அனுப்ப எச்சரித்திருந்தார்.

மதுரோவின் "நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவித்தார். புளோரிடா குடியரசு செனட்டர் மார்கோ ரூபியோ, முன்னாள் லிபிய தலைவர் மௌம்மர் கடாபி உயிருடன் இருப்பதாக ஒரு புகைப்படத்தையும், அவரின் சிதைந்த சடலத்தின் மற்றொரு புகைப்படத்தையும் அடுத்தடுத்து இரண்டு புகைப்படங்களை ட்வீட் செய்தார்.

சர்வதேச சட்டத்தை ஆணவத்துடன் மீறுகின்ற நாஜி-பாணியிலான இந்த அச்சுறுத்தல், அமெரிக்க தலையீட்டுக்கு வெனிசுவேலா உள்ளானால் எந்தளவுக்கு குற்றத்தன்மையும் சீரழிவும் இருக்கும் என்பதற்கு ஓர் எச்சரிக்கையாக உள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபிய மற்றும் சிரிய போர்களில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போலவே, அமெரிக்கா தொடுகின்ற ஒவ்வொன்றும் இடிந்த குவியல்களாக மாற்றப்படுகின்றன.

30 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாடான வெனிசுவேலாவின் மக்கள்தொகையில் 88 சதவீதத்தினர் நகர்புறங்களில் வாழ்கின்றனர் என்பதுடன், இலத்தீன் அமெரிக்காவிலேயே மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதன் தோல்விகளைத் தொடர்ந்து, அமெரிக்கா, வெனிசுவேலாவிலும் இராணுவப் பேரழிவின் சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறது. ஆப்கான் மலைகளில் வறிய ஆயுதமேந்திய போராளிகளுடன் 17 ஆண்டுகளாக சண்டையிட்டப் பின்னரும், அமெரிக்கா ஒரு அவமானகரமான தோல்வியை அனுபவித்துள்ளது. தாலிபான் அதன் கைப்பாவை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்பது தான் அங்கிருந்து வெளியேறுவதற்கான வாஷிங்டனின் பிரதான நிபந்தனையாக உள்ளது.

மறுபுறம் வெனிசுவேலா செயல்பாட்டில் உள்ள 350,000 சிப்பாய்களையும், பின்புலத்தில் 2,000,000 சிப்பாய்களையும் கொண்ட ஓர் இராணுவத்தைக் கொண்டுள்ளது. அது S-300VM ஏவுகணை-தகர்ப்பு அமைப்புமுறை மற்றும் Buk போர்விமானம் தகர்ப்பு சாதனங்கள் உட்பட அதிநவீன ரஷ்ய-தயாரிப்பு ஆயுத அமைப்புகளைச் செயல்படுத்தக்கூடியதாகும். சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்கா படையெடுத்துள்ள எந்தவொரு நாடுகளையும் போலன்றி, வெனிசுவேலா அமெரிக்க-தயாரிப்பு எஃப்-16 ரக போர்விமானங்கள் மற்றும் ரஷ்ய-தயாரிப்பு Su-30MK2 போர்விமானங்களைக் கொண்ட, நடவடிக்கையில் இறக்கிவிடத்தக்க விமானப்படையையும் கொண்டுள்ளது.

ஒரு போரானது அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பெருங்குழப்பத்தில் மூழ்கடிக்கும். ஏகாதிபத்திய தலையீட்டுக்கு அங்கே ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பு இருக்கும். மில்லியன் கணக்கான அகதிகள் வெனிசுவேலாவில் இருந்து தப்பித்து, பனாமா நீர்முனையைக் கடந்து ஏற்கனவே குண்டர் வன்முறை, வறுமை மற்றும் முன்பில்லாதளவிலான சமத்துவமின்மை மட்டங்களால் சீரழிந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகள் வழியாக தப்பிக்க முயல்வார்கள். ஒருவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வருவதானால் எட்டு நாடுகளது எல்லைகளைக் கடந்து 3,000 க்கும் அதிகமான மைல்கள் பயணிக்க வேண்டியிருக்கும். அந்த படகுகள் எல்லாம் கரீபிய கடலிலேயே மூழ்கிவிடும். தங்களின் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள்.

அமெரிகாவின் ஒரு தலையீடு மற்றொரு அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் ஒரு மோதலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறும் உள்ளது. அங்கே வெனிசுவேலாவின் எண்ணெய் எடுப்பு தொழில்துறையில் கணிசமான எண்ணிக்கையில் ரஷ்யர்கள் பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்க இராணுவம் ரஷ்யாவுடன் சாத்தியமாகக்கூடிய ஒரு மோதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்று அமெரிக்க கடற்படை தளபதி கிரேக் ஃபெல்லர் இம்மாதத்தின் தொடக்கத்தில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்குத் தெரிவித்தார், இதில் இலத்தீன் அமெரிக்காவின் "நமது அண்டைநாடு" சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று ஃபெல்லர் தெரிவித்திருந்தார்.

ஆட்சி மாற்றம் செய்வதற்காக வாஷிங்டனின் மனிதாபிமான பாசாங்குத்தனங்கள் ஒரு வெளிப்படையான மோசடியாக உள்ளன. யாங்கீ (Yankee) ஏகாதிபத்தியம் உலகின் மிகப்பெரியதாக நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வயல்களைக் கொண்ட வெனிசுவேலாவின் எண்ணெய்யைக் கொள்ளையடிக்க விரும்புகிறது. கடந்த மாதம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஃபாக்ஸ் நியூஸ் இக்குத் தெரிவிக்கையில், “அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுவேலாவின் எண்ணெய் தகைமைகளை உருவாக்கவும், அவற்றில் முதலீடு செய்யவும் முடியுமானால் அமெரிக்காவுக்குப் பொருளாதாரரீதியில் அது மிகப் பெரிய வித்தியாசத்தைக் கொண்டு வரும்,” என்றார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற இந்த ஆத்திரமூட்டல்களுக்கு அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தினுள் ஏறத்தாழ எந்த எதிர்ப்பும் இல்லை. அதற்கு நேர்முரணாக, பெருநிறுவன ஊடகங்கள் மதுரோ எல்லையில் கண்ணீர் புகைக்குண்டு பிரயோகிப்பார் என்றும், எல்லை கடந்து வருவதற்கு தடைவிதிப்பார் என்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் கதைகளால் நிரம்பி இருந்தன. வெனிசுவேலாவின் எல்லைகளை அதிரச் செய்து கொண்டிருக்கும் வலதுசாரி குண்டர்களுக்கு எதிரான வெனிசுவேலா இராணுவத்தின் தந்திரோபாயங்கள், தஞ்சம் கோரி விண்ணப்பிப்பதற்கான தங்களின் உரிமையைப் பயன்படுத்த முனைகின்ற நிராதரவான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அமெரிக்க எல்லை ரோந்துப்படை பயன்படுத்தும் அணுகுமுறைகளுக்கு ஒத்திருக்கின்றன என்பது குறித்து ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு சட்டபூர்வத்தன்மையை வழங்கியுள்ள ஜனநாயக கட்சியின் சுய-பாணியிலான "இடதுசாரியின்" விடையிறுப்புதான் மிகவும் திட்டவட்டமாக உள்ளது. கடந்த வாரம் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் நிற்கவிருப்பதை அறிவித்த செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ், சனிக்கிழமை பின்வருமாறு ட்வீட் செய்தார்: “வெனிசுவேலா மக்கள் தீவிரமான மனிதாபிமான நெருக்கடியைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மதுரோ அரசாங்கம் அதன் மக்களின் தேவைகளை முதலில் முன்நிறுத்தி, அந்நாட்டிற்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

காங்கிரஸில் இடம் பெற்றுள்ள நியூ யோர்க் உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ், வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்களுக்கு "விடையிறுக்க செயல்பட்டு" வருவதாக பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செய்தியாளர் Max Blumenthal க்கு தெரிவித்திருந்தார், அவர் அதற்குப் பின்னர் இருந்து எந்தவொரு பகிரங்க அறிக்கையும் வெளியிடவில்லை.

கடந்த வாரம் மியாமியில் அவரது பாசிசவாத உரையின் போது ட்ரம்ப் அறிவித்தார், “நமது புவிமண்டலத்தில் சோசலிசத்தின் அஸ்தமனம் வந்துவிட்டது,” என்றார். வெனிசுவேலாவுக்கு எதிரான அந்நிர்வாகத்தின் போர் அச்சுறுத்தல்கள் இரட்டை நோக்கத்திற்குச் சேவையாற்றுகின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கம் இலத்தீன் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அடிபணிவையும், அப்பிராந்தியத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஆதாரவளங்களைச் சுரண்டுவதன் மீதும் அமெரிக்க பெருநிறுவனங்களது சுதந்திரமான அதிகாரத்தைக் கோரி வருகிறது.

அதேநேரத்தில், சோசலிசத்தின் மீதான ட்ரம்பின் நாஜி-பாணியிலான தாக்குதல், அமெரிக்காவில் வேலைநிறுத்த நடவடிக்கையின் அதிகரிப்பு எடுத்துக்காட்டுவதைப் போல அதிகரித்தளவில் முழு பலம் பெற்று வருகின்ற தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே சோசலிசத்திற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மதுரோ அரசாங்கத்தின், பகுதியாக, சோசலிச-விரோத, முதலாளித்துவ தேசியவாத கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட சமூக சீரழிவுடன் சோசலிசத்தை அடையாளப்படுத்துவதன் மூலமாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் சோசலிசத்தை இழிவுபடுத்தி, உள்நாட்டில் பெருந்திரளான மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்குத் தயாரிப்பு செய்வதன் மூலமாக புரட்சியின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளலாமென கருதுகிறது.

அமெரிக்கா வெனிசுவேலாவில் போரை நோக்கி நகர்கையில் உலக வரலாற்று பகுதியின் மீதான ஒரு பேரழிவு அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் திட்டங்களை நிறுத்துவதற்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரும் எதிரியான அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.