ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French “yellow vests” hold 13th protest against social inequality, police brutality

சமூக சமத்துவமின்மை மற்றும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான பிரெஞ்சு “மஞ்சள் சீருடையாளர்களின்” 13வது ஆர்ப்பாட்டம்

By Anthony Torres 
11 February 2019

நீதிமன்ற தீர்ப்புக்கள் எதுவுமின்றி ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய பொலிஸை அனுமதிக்கும் ஒரு பிற்போக்குத்தனமான “குண்டர்-விரோத சட்டத்திற்கு” தேசிய சட்டமன்றம் வாக்களித்த பின்னர், 13வது “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டம் பொலிஸ் உடனான பதட்டங்களுக்கு மத்தியில் திட்டமிட்டபடி நடந்தேறியது. அதில், பிரான்ஸ் முழுவதிலுமாக 51,400 “மஞ்சள் சீருடையாளர்கள்” அணிவகுத்தனர் என்று உள்துறை அமைச்சக புள்ளிவிபரங்கள் தெரிவித்த அதே வேளையில், “மஞ்சள் சீருடையாளர்கள்” தாமே மதிப்பிட்டு “மஞ்சள் எண்ணிக்கை” 116,000 எனக் கூறினர். பாரிசில், பிற பொலிஸ் தலையீடு அலகுகளும் இணைந்து குறைந்தபட்சம் 3,000 நகரும் கலகப் பிரிவு பொலிஸ் அலகுகளும், மேலும் பிரான்சின் எஞ்சிய பகுதிகளில் தோராயமாக 50 கலகப் பிரிவு பொலிஸ் குழுக்களும் பணியமர்த்தப்பட்டிருந்தன.       


பாரிசில், சாம்ப்ஸ்-எலிசே இல் உள்ள வெற்றி வளைவில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் கவச வாகனங்கள்

துலூஸில், Dépêche du Midi செய்தியிதழ், 5,000 முதல் 7,000 வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரண்டனர் என்று கணக்கிட்டது, அதே நேரத்தில், போர்தோவில், Sud Ouest செய்தியிதழ், 4,000 முதல் 5,000 வரையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரண்டதாகக் கணக்கிட்டது. லியோனில், நகரின் மையப்பகுதியை நோக்கி அணிவகுத்து வந்த 4,000 “மஞ்சள் சீருடையாளர்களை” தடை செய்கையில் அவர்களுடன் பொலிசார் கடுமையாக மோதியதுடன், அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், மார்சைய் மற்றும் மோன்ட்பெலியே இல் 1,500 பேர் அணிவகுத்தனர்.


சாம்ப்ஸ்-எலிசே அவென்யூவில் பொலிஸை எதிர்த்து நிற்கும் மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள்

பாரிசில், நான்கு “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் பொலிஸ் நிர்வாக எல்லைக்குட்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான ஒன்றான சாம்ப்ஸ்-எலிசே இல் இருந்து கிளம்பிய ஆர்ப்பாட்டம் தேசிய சட்டமன்றத்தை சென்றடையும் முன்னர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அங்கு மோதல்கள் வெடித்தன. அதே போல, ஈபிள் கோபுரம் அருகே, செனட்டிற்கும் சாம்ப் டு மார்ஸ் (Champ de Mars) பூங்காவிற்கும் இடையேயும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டத்தின் போது சாம்ப்ஸ் எலிசே இல், வெற்றி வளைவிற்கு அருகே கவச வாகனங்களை பொலிசார் நிறுத்தி வைத்திருந்தனர்.


சாம்ப்ஸ்-எலிசே பகுதியை முற்றுகையிட்டிருக்கும் பொலிஸ்

தேசிய சட்டமன்றம் அருகே மோதல்கள் வெடித்த போது, அங்கு நடந்த GLI கண்ணீர் புகைகுண்டு தாக்குதலில் ஒரு ஆர்ப்பாட்டக்காரரின் கை சேதமடைந்து வீங்கியது. மேலும், “மஞ்சள் சீருடை புகைப்படக்காரர்” ஒருவர், “தேசிய சட்டமன்றத்தின் பாதுகாப்பு வேலி மீது மக்கள் தள்ளப்படுவதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில்… அங்கு கூடியிருந்த கூட்டத்தை பொலிசார் கலைக்க முயன்றனர், அப்போது உணர்ச்சிகளை மழுங்கச் செய்யும் வகையில் அவரது பின்னங்காலில் பாய்ந்த கையெறிகுண்டுத் தாக்குதலை அவர் தாங்கினார். மேலும் அது தனது காலில் பாய்ந்து வெடித்துவிடும் முன்னர் அதை தட்டிவிட அவர் நினைத்தார், ஆனால் அதை அவர் தொட்ட உடனேயே அது ஊதத் தொடங்கியது” என்று ஒரு சாட்சியாளர் L’Express நாளிதழுக்கு தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்கு முன்னர், 18 ஆக இருந்ததில் இருந்து அதிகரித்து குறைந்தபட்சம் 39 பேர் வரை தற்போது கைது செய்யப்பட்டுளார்கள் என பாரிஸ் பொலிஸ் நிர்வாகம் சுட்டிக்காட்டியது.

பாரிசில், பொலிஸ் வன்முறையை எதிர்த்தும், உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனெரை இராஜிநாமா செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஸ்டீபன் என்பவரை உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்: “என்னைப் பொறுத்தவரை, இந்த ஆர்ப்பாட்டம் காயமடைந்த அனைவருக்கும், மற்றும் காஸ்டனெர் மீது அரசியல் குற்றம்சாட்ட கோரிக்கை விடுப்பவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்மையில், குடியரசின் ஜனாதிபதியிடம் காஸ்டனெரை வெளியே தூக்கி எறியுமாறு நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம், ஏனென்றால் அவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் இருக்கிறார்.”

மேலும், ஸ்டீபன், நானும் போராடிக் கொண்டிருக்கிறேன் “ஏனென்றால் துரதிர்ஷ்டவசமாக, வெகு நீண்ட காலமாக பிரான்ஸ் அதன் சொந்த மக்களை மறக்கும் ஒரு போக்கைக் கொண்டிருப்பதைக் கண்டு அதற்கு எதிராக நான் கோபம் கொண்டுள்ளேன். உண்மையில், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இடத்திலும் இப்படித்தான் இருக்கிறது. யார் எப்போதும் நன்றாக சாப்பிடுகிறார்களோ, அவர்களே பசியிலும் இருக்கிறார்கள்.”

“மஞ்சள் சீருடையாளர்கள்” உடனிணைந்து கூட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்த முனையும் தொழிற்சங்கங்களை எதிர்த்த ஸ்டீபன் இவ்வாறு தெரிவித்தார்: “வெளிப்படையாக சொன்னால், நான் கொஞ்சம் கடுமையானவன், எனவே, சில நபர்களுடன் கூட்டு வைப்பதை நான் ஆதரிக்கவில்லை என்பதுடன், தொழிற்சங்க அதிகாரிகள் உடனான கூட்டுக்களை நாம் வளர்த்துக் கொள்வதையும் நான் விரும்பவில்லை. அவர்கள் நமக்காக ஏதாவது செய்ய நினைத்திருந்தால், இதற்கு முன்னரே அதை அவர்கள் செய்திருக்க வேண்டும். இப்போது அது மிக எளிது, ஏனென்றால் எங்களது முன்னெடுப்பை அப்படியே தமதாக்கிக் கொள்ள வெறுமனே அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். அதனால்தான் எந்தவொரு அரசியல் கட்சி சார்பாகவும் நான் இல்லை… கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வெறுமனே நெருக்கமானவர்களாக இருக்கின்ற சுவரொட்டி சிறுவர்களை நாம் விரும்பவில்லை.”      


“பிரெஞ்சின் ஐந்தாவது குடியரசு சமன் ஜேர்மன் மூன்றாம் ரைஹ், நமது நாகரிகத்தின் பின்னடைவு வேண்டாம்”

மக்ரோனின் கொள்கைகளை எப்படி எதிர்ப்பது என ஸ்டீபனிடம் வினவியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்: “ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நமக்கு ஒரு புரட்சி தேவைப்படும், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட புள்ளியும் கிடையாது. பிரான்சை குடியிருக்க தகுதியற்றதாக்கும் வகையில் வெறுமனே தனது கொள்கைகளைத் தொடர்வதற்கு அவர் விரும்புகிறார் என்ற நிலையில், நாம் கட்டாயம் போராடியாக வேண்டும் என்பதுடன், அதை நாம் நிறுத்த மாட்டோம் என்பதையும் காண்பிக்க வேண்டும். இங்கு பிரெஞ்சு மக்கள் பசியோடு இருக்கிறார்கள். இந்நிலையில், குடிமக்களின் அமைதியான புரட்சி, அல்லது அதிக சக்திவாய்ந்த புரட்சி எதுவானாலும் சரி, நமக்கு ஒரு புரட்சி தேவை. ஏதோவொரு வழியில் அது தேவைப்படும் என்பதால், அது குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும்.”

சனிக்கிழமை போராட்டத்திற்கு வந்திருந்த ஒரு தொழிற்சங்கவாதியான மெரினா என்பவரையும் WSWS நிருபர் சந்தித்த போது அவர், “அதிகளவு வாங்கும் சக்தியைப் பெறவும், அத்துடன் என் வேலைக்காகவும் இதில் நான் பங்கேற்றுள்ளேன். ஒரு செவிலித்தாயாக கூறுகிறேன், எங்களது வேலையை செய்ய எங்களுக்கு மிக மிக குறைந்த பணியாளர்களே வழங்கப்பட்டுள்ளனர் என்பதுடன், மிக மிக குறைந்தளவு ஊதியம் தான் அரசால் எங்களுக்கு வழங்கப்பட்டும் வருகிறது. அரசின் செயல்பாட்டை நாம் மாற்றியமைக்க வேண்டும். செல்வந்தர்களும் வரிசெலுத்த வேண்டும். வரிகளைச் செலுத்த மாட்டேன் என்று நான் கூறவில்லை, அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதுதான் சரி, அத்தோடு வரிகள் நல்ல முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.


மெரினா

மேலும், மெரினா, “மருத்துவமனைகளில், சமூக பாதுகாப்பு அதிகாரம் வரையறுத்த எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தான் எங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. நான் சிறுநீர் பிரிப்பு (dialysis) பிரிவில் வேலை செய்கிறேன். உதாரணமாக, எங்களது மருத்துவமனையில் ஒருமுறை சிறுநீர் பிரித்தெடுக்க முன்னர் 300 யூரோக்கள் செலுத்தப்பட்டு வந்தது, தற்போது வெறும் 200 யூரோக்கள் மட்டுமே செலுத்தப்படுகிறது. எனவே, நிச்சயமாக, நாம் எங்காவது செலவைக் குறைக்க வேண்டும். அதனால், மருத்துவமனை இயக்குனர்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்து அதன் மூலம் பணம் சேமிக்கிறார்கள், ஏனென்றால் அது தான் மிகப்பெரிய செலவினமாக இங்கு உள்ளது. எனவே, நாங்கள் தொடர்ந்து மிகவும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பணியாளர்கள் உடன் தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம், நாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு கூட எங்களுக்கு நேரம் இருப்பதில்லை. மேலும், சில சமயங்களில், அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் சிகிச்சைக்காக 8 முதல் 10 மணிநேரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்” என விளக்கினார்.

இதுவரை நாளான இந்த இயக்கத்தைப் பற்றி என்ன படிப்பினைகளை எடுத்துக்கொண்டுள்ளார் எனக் கேட்டபோது, மெரினா பின்வருமாறு தெரிவித்தார்: “மெட்ஸ் (Metz) க்கு அருகேயிருக்கும் மொசெல் (Moselle) பகுதியில் இருந்து நான் வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக ஒரு வீதிச் சந்தியை நாங்கள் முற்றுகையிட்டுள்ளோம், அதனால் நாங்கள் என்ன சாதித்தோம் எனக் கேட்பது சரியானதே. நான் ஒரு தொழிற்சங்கவாதி, நீண்ட காலமாக நானும் எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறேன், என்றாலும், மக்கள் போதுமானளவு கடுமையாகப் போராடவில்லையோ என்று நான் நினைக்கிறேன். எனவே, மக்கள் முன்னர் போராடியதை விட இன்னும் கூடுதலாக முன்னேறிச் செல்வார்களேயானால், நான் மகிழ்ச்சியடைவேன். மேலும், போக்குவரத்து வீதிச் சந்தியை முற்றுகையிட எங்களுக்கு நிதியுதவி செய்த மக்களிடம் நாங்கள் ஒற்றுமையை காண்கிறோம், அதனால் தான், ஆர்ப்பாட்டங்களையும், அதற்கான துண்டு பிரசுரங்கள் மற்றும் அனைத்து தேவைகளையும் எங்களால் ஒழுங்கமைக்க முடிந்தது.”

மேலும் அவர், “எங்களிடையே மிகுந்த ஒற்றுமை இருக்கின்றது, எனவே இன்னும் அதிகம் செயலாற்ற முடியும். வீட்டில் இருந்து கொண்டு எதுவும் செய்யாத மக்கள் நிறைய பேர் இருக்கின்றனர். … தொழிற்சங்கங்களைப் பற்றி நான் குறிப்பிடுகையில், அதில் பெரும் பிரச்சினைகள் இருப்பதை நான் அறிவேன், என்றாலும் அவற்றில் இருந்து நாங்கள் சுயாதீனமானவர்கள். ஆனால், ஆலைகளில் இருந்து தொடங்கக்கூடியதான ஒரு இயக்கம் எங்களுக்கு உண்மையில் அவசியமாகும். பிரச்சினை என்னவென்றால், ஒரு வேலைநிறுத்த நாள் என்பது, ஒரு நாள் வேலைக்குறைப்பாகும், மக்களோ எப்போதும் தங்களது பெல்ட்டுகளை இறுக்கிக் கொள்ளவேண்டும், ஆகவே அந்நாளுக்கான ஊதியத்தை வேலைவழங்குநர்கள் வழங்கமாட்டார்கள் என்பதாகும்” என்று கூறினார்.

WSWS நிருபர்கள், ஃபிராங்க் என்பவரையும் சந்தித்து பேசியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்: “ஒரு ஜாதி 200 ஆண்டுகளாக நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது, நாமும் மனிதர்கள் தானே எங்கும் பணத்தின் ஆட்சிதான் நடக்கிறது. எஞ்சியுள்ள 99 சதவிகிதத்தினர் மீது ஆட்சி செலுத்தும் மிகுந்த செல்வந்தர்கள் இங்கு இருக்கும்போது, நடுத்தர வர்க்கத்தினராக இருக்கும் நாம் எல்லா நேரங்களிலும் போதுமான பணம் செலுத்தி வந்துள்ளோம் என்பதை நான் வெளிப்படையாகக் கூற வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இது போதும் என்று நாம் சொல்கிறோம், ஆட்சியை மாற்றுவது நமக்கு அவசியமாகிறது. வாழ்க்கையை உண்மையாக வாழ நாம் விரும்புகின்றோம், மேலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகின்றோம். ஆனால், நாம் வறுமையில் சிக்கியுள்ளோம்.”

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான இந்த இயக்கத்தின் சர்வதேச குணாம்சம் பற்றியும் குறிப்பிட்டு, ஃபிராங்க் இவ்வாறு தெரிவித்தார்: “குறிப்பாக, மொத்த மனித குலத்தின் பாதிக்கும் அதிகமானவர்களின் செல்வத்தைக் காட்டிலும் அதிகளவு செல்வத்தை 26 பில்லியனர்கள் மட்டுமே வைத்திருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், இந்த அமைப்புமுறையை கட்டாயமாக நாம் மாற்றியமைக்க வேண்டும்… இல்லையெனில், உலகளவில், அது மிகவும் பயங்கரமானதாக உருவெடுக்கும். அது நிறுத்தப்பட வேண்டும்.”