ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass protests erupt in Algeria against Bouteflika’s bid for fifth term

அல்ஜீரியாவில் ஐந்தாவது முறையாக போட்டியிடுவதற்கான புட்டஃபிளிக்காவின் முயற்சிக்கு எதிராக பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன

By Alex Lantier
2 March 2019

அல்ஜீரியாவில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல்களில் ஐந்தாவது முறையாக போட்டியிடுவதற்கான ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவின் (Abdelaziz Bouteflika) முயற்சிக்கு எதிராக அந்நாடு எங்கிலுமான நகரங்களில் நேற்று பத்தாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஆளும் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி (FLN) பெப்ரவரி 9 இல் அவர் வேட்பாளராக நிற்கவிருப்பதை அறிவித்ததும் புட்டஃபிளிக்காவிற்கு எதிராக மாணவர்களும் பத்திரிகையாளர்களும் நடத்திய போராட்டங்கள் மற்றும் மஹ்ரெப் எங்கிலுமான வேலைநிறுத்தங்களின் அலையைத் தொடர்ந்து இது வருகிறது.


வெள்ளிக்கிழமை அல்ஜீரியா எங்கிலும் நூறாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

2013 இல் பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் இருந்து, புட்டஃபிளிக்கா தகுதியற்ற நிலையில் உள்ளார். அவர் சுவிட்சர்லாந்தில் ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சகோதரர் சாய்த் (Saïd) அதிகாரபூர்வமற்ற அரசு தலைவராக உள்ளார். புட்டஃபிளிக்காவைப் போட்டியில் நிறுத்துவதென்ற FLN இன் முடிவு அல்ஜீரிய முதலாளித்துவ ஆட்சியின் திவாலான மற்றும் கொடுமையான குணாம்சத்தை உறுதிப்படுத்துகிறது, ஓர் இரத்தந்தோய்ந்த 1954-1962 போரில் அல்ஜீரியா பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், சமீபத்திய தசாப்தங்களில், ஏகாதிபத்திய போர் மூலோபாயத்தின் மூலக் கையிருப்பாக உருவெடுத்தது.

அல்ஜியேர்ஸ், ஓரன், கான்ஸ்டன்டைன், அன்னாபா, டிஸி ஓவ்சௌ, பெஜையா, செடிஃப், சிதி பெல் அப்பெஸ் மற்றும் ஏனைய நகரங்களிலும் பாரிய போராட்டங்கள் நடந்தன. அந்த அணிவகுப்புகளை தொலைக்காட்சியில் காட்டுவதற்கு ஆட்சி தடைவிதித்ததுடன், 3ஜி மற்றும் 4ஜி வலையமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கி, இணைய அணுகுதலைத் தடுத்திருந்த போதும் கூட, அந்த அணிவகுப்புகளில் வேலைவாய்ப்பின்மை, குறைவூதியங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான கோபமும், அத்துடன் அந்த ஆட்சியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான அழைப்புகளும் மேலோங்கி இருந்தன.

அல்ஜீரிய போராட்டங்கள், சூடானில் ரொட்டிக்கான கலகங்கள், துனிசியாவில் வேலைநிறுத்தங்கள், பிரான்சின் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள், அமெரிக்கா எங்கிலும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வெடித்து வரும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் என நடந்துவரும் சர்வதேச வர்க்க போராட்ட மேலெழுச்சியின் பாகமாக உள்ளன. தசாப்தங்களாக அரசியல் எதிர்ப்பை நசுக்கி வந்துள்ள அல்ஜீரிய ஆட்சி, இப்போது அடிமட்டத்திலிருந்து ஒரு சவாலை முகங்கொடுக்கிறது. 2011 மேலெழுச்சிகளின் போது துனியாவில் ஜைன் எல் அபிடைன் பென் அலியின் மற்றும் எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய-சார்பு சர்வாதிகாரங்களைப் பதவியிலிருந்து கீழிறக்கிய தொழிலாளர்கள் எழுப்பிய கோஷங்களை, இந்த போராட்டக்காரர்கள் மீண்டும் மேலெழுப்பி வருகின்றனர்.

ஓரனில், பத்தாயிரக் கணக்கானவர்கள் "புட்டஃபிளிக்கா பதவி விலகு,” “அந்த அமைப்புமுறை கலைக்கப்பட வேண்டும்" என்று கூச்சலிட்டனர். “துரதிருஷ்டவசமாக அழுகிப் போயுள்ள இந்த அரசாங்கத்தை" அவர் எதிர்ப்பதாக Le Monde இக்கு ஒருவர் தெரிவித்தார். மற்றொருவர், “நாங்கள் வாழும் அவலநிலையை உங்களால் கற்பனையும் செய்ய முடியாது,” என்றார். மூன்றாவது ஒருவர், ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்தவர்களை மத்திய தரைக்கடலில் மூழ்கடிக்க விட்ட ஐரோப்பிய ஒன்றியத்தை தாக்கினார்: “அடுத்து நாங்கள் என்ன செய்வது? ஒரு கப்பலைப் பிடித்து பிரான்சுக்குக் கிளம்ப வேண்டுமா? இல்லை, நான் கடலில் மூழ்கி சாக விரும்பவில்லை. கடலில் மூழ்கி இறந்த ஆயிரக் கணக்கான இளைஞர்கள் என் நினைவில் இருக்கிறார்கள் என்பதை கூறுவதற்காகவே நானும் அணிவகுப்பில் இருக்கிறேன்,” என்றார்.

பேர்பெர் இனவழி பிராந்தியமான கபிலியிலும் போராட்டங்கள் அதிரச் செய்தன. பெஜையாவில் பத்தாயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்தனர், அதேவேளையில் திஜி ஔஜொவில் 10,000 என்று மதிப்பிடப்பட்டவர்கள், “இந்த ஆட்சி கலைய வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள்,” என்று 2011 எகிப்திய புரட்சியின் அதே கோஷத்தை முழங்கினர்.

தலைநகரான அல்ஜியேர்ஸின் பிரதான வீதிகள் போலிஸ் மதிப்பீட்டின்படி 800,000 என்ற எண்ணிக்கையில், அல்லது பத்திரிகை செய்திகளின்படி மில்லியன்களில் போராட்டக்காரர்கள் நிரம்பியிருந்தனர். பிரதம மந்திரி அஹ்மத் ஔயாஹியா சிரியாவில் போராட்டங்கள் ஒரு தசாப்த கால போருக்கு இட்டுச் சென்றதாக எச்சரித்து அப்போராட்டங்களை அவர் கண்டித்ததும், “அல்ஜீரியா சிரியா கிடையாது,” என்றும், “மக்கள் இந்த ஆட்சி கலைய வேண்டுமென்று விரும்புகிறார்கள்,” என்றும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

ஹைட்ராலிக் தொழில்நுட்ப வல்லுனரான ஓர் இளைஞர் சௌரௌக் El Watan இக்குக் கூறினார்: “ஜனாதிபதி புட்டஃபிளிக்கா இப்போது 20 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கிறார், கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் சமூக வர்க்கங்களுக்கு இடையே பிளவு அதிகரித்து வருவதைக் காண்கிறோம். நடுத்தர வர்க்கம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது, இது பணக்காரர்கள் வர்க்கத்திற்கும் ஏழை வர்க்கத்திற்கும் இடையே ஒரு பரந்த இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. புதிய வரவு-செலவு திட்டக் கணக்குக்குப் பின்னர், எங்களின் வாழ்க்கைத் தரங்களைப் பேணுவது முன்பினும் அதிக கடுமையாக மாறியுள்ளது. கல்வி அமைப்புமுறை சரிந்துள்ளது, அனைத்து மட்டங்களிலும் கல்வி சாதனைகள் குறைந்து வருகின்றன.”

அணிவகுப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையை எட்ட முயன்றதும் மற்றும் பெருவாரியான போலிஸால் சரமாரியாக வீசப்பட்ட கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் உணர்விழக்கச் செய்யும் குண்டுகளில் இருந்து அவர்கள் தப்பிக்க ஓடியதும், 53 போலிஸ் உட்பட டஜன் கணக்கானவர்கள் அல்ஜியேரில் காயமடைந்தனர். போராட்டங்களின் போது முக்கிய அரசு கட்டிடங்களைப் பாதுகாக்க அல்ஜீரிய துணை இராணுவப்படை தலைநகரை நோக்கி டிரக்குகளில் செல்வதை இணைய காணொளிகளும் காட்டுகின்றன.

ஆட்சிக்கு எதிரான இப்போராட்டத்தின் இக்கட்டத்தில், அணிதிரண்டுள்ள சக்திகள் சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளன. சமூக ஊடகங்கள் வழியாக அழைப்பு விடுக்கப்பட்ட இந்த போராட்டங்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பிரிவுகளும், அத்துடன் நிர்வாகிகளும் வியாபார உரிமையாளர்களும், மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் கன்னைகளும் உள்ளடங்கி உள்ளன.

உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சிகளின் பல தலைவர்கள் —இவர்கள் அனைவரும் ஆட்சியுடன் நெருக்கமாக பிணைந்துள்ளதுடன், இவர்களில் சிலர் FLN இல் இருந்து பிரிந்து வந்தவர்கள் என்பதுடன்— இந்த அணிவகுப்புகளில் இணைய அவர்களின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஆட்சிக்கு ஒரு புரட்சிகரமான சவால் வருவதைத் தடுக்கவும் மற்றும் தற்போதிருக்கும் ஆட்சிக்குள் அவர்கள் பெற்றிருக்கும் அதிகாரம் மற்றும் தனியந்தஸ்துகளின் பங்கை அதிகரித்து கொள்ளவும் நோக்கம் கொண்டுள்ளனர்.

பிரான்சின் மக்கள்விரோத சோசலிஸ்ட் கட்சி (PS) போன்ற ஐரோப்பிய ஏகாதிபத்திய சமூக-ஜனநாயகக் கட்சிகளின் சோசலிஸ்ட் அகிலம் என்றழைக்கப்படுவதுடன் இணைந்துள்ள பேர்பெர் தேசியவாத கட்சியான சோசலிஸ்ட் சக்திகளின் முன்னணி (Front of Socialist Forces - FFS), “இந்த ஆட்சியின் முடிவு நெருங்கி வருகிறது,” என்று எழுதியது. “ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட, பன்முக அரசியல் இயக்கவியலுக்கான நிலைமைகளை உருவாக்குவதற்குத் தகைமை கொண்ட அல்ஜீரிய பெண்கள் மற்றும் ஆண்களை அணித்திரட்டி அமைதியான மாற்றத்திற்குரிய சக்தியை ஒருங்கிணைப்பதற்கு செயல்பட" அது சூளுரைத்தது.

தொழிலாளர் கட்சி (PT) தலைவி  லூயிசா ஹனூன் (Louisa Hanoune) அந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார், ஆனால் அவர் வெறுப்பு மிகுந்த கூச்சலை எதிர்கொண்டதுடன், அவரது கட்சியின் பதாகைகளைக் கொண்டு செல்ல முடியவில்லை என்று செய்திகள் குறிப்பிட்டன. போராட்டங்களை ஒடுக்க வேண்டாம், அது கட்டுப்பாடின்றி தொழிலாள வர்க்க கோபம் வெடிப்பதைத் தூண்டிவிட்டு FLN ஐ பதவியிலிருந்து கீழிறக்கிவிடும் என்று PT அந்த ஆட்சிக்கு ஆலோசனை வழங்கியது. “தேசிய அதிகாரிகள்,” ஹனூன் தெரிவித்தார், “செப்பனிட முடியாத ஏதோவொன்றைத் தூண்டிவிடும் அபாயத்தை மேற்கொள்ளாமல், சமூகத்தின் பெருவாரியான பெரும்பான்மையினரான இளைஞர்கள் மற்றும் பரந்த பெருந்திரளான மக்கள் வெளிப்பட்டு வருகின்ற மாற்றத்திற்கான ஆழ்ந்த விருப்பத்தை மட்டுப்படுத்த முயற்சிக்கவும் முடியாது, புறக்கணிக்கவும் முடியாது.”

1971 இல் சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பில் (OCI) இருந்து உருவான பிரான்சின் சுதந்திர ஜனநாயக தொழிலாளர் கட்சியுடன் (POID) தொழிலாளர் கட்சி (PT) பிணைந்துள்ளது. FLN க்கு PT ஒரு நீண்டகால ஆதரவாளராகும். ஐந்தாவது முறையாக போட்டியிடுவதென புட்டஃபிளிக்காவின் முயற்சிக்கு எதிரான ஆரம்ப போராட்டங்களுக்கு இடையே, கடந்த வாரம் ஹனூன், “கோஷங்கள் புட்டஃபிளிக்காவுக்கு எதிரானவை இல்லை,” என்று கூறி ஏளனங்களை ஈர்த்தார்.

இது, இராணுவத்தின் ஆதரவுடன், போராட்டங்களின் குரல்வளையை நெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கை வட்டாரங்களில் இருந்து அல்ஜீரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அழைப்புகளை மட்டுமே எதிரொலிக்கிறது. இலண்டன் கிங்க்ஸ் கல்லூரி பேராசிரியர் ஜொனாதன் ஹில் பின்வருமாறு அனுமானித்தார்: “ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சிடம் இருந்து அதன் வழிகாட்டுதலைப் பெறும், அதையொட்டி அது அதிகார மாற்றத்தை அரங்கேற்ற இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும்.”

“மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு மத்தியில், முன்பில்லாதளவில் கருத்துக்கணிப்புகளில் செல்வாக்கிழந்துள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அசாதாரண இரகசிய நடவடிக்கையாக, அல்ஜீரியாவுக்கான பிரெஞ்சு தூதர் Xavier Driencourt ஐ செவ்வாயன்று பேச்சுவார்த்தைக்காக பாரீசுக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மாலியிலும் மற்றும் பரந்த சாஹெலிலும் பிரெஞ்சு போர்களுக்கு FLN வழங்கிய உளவுத்தகவல் மற்றும் தளவாட பரிவர்த்தனை உதவியின் காரணமாகவும் மற்றும் பிரான்சின் பலமான மூன்று மில்லியன் அல்ஜீரிய சமூகத்தின் எதிர்ப்பை மட்டுப்படுத்தியதற்காகவும், FLN க்கு அவர்கள் முட்டுக்கொடுக்க பெரும்பிரயத்தனப்படுவதாக எலிசே ஜனாதிபதி மாளிகை ஆதாரநபர்களும் சுட்டிக்காட்டினர். புட்டஃபிளிக்காவுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு எந்த விட்டுக்கொடுப்புக்களும் செய்ய அவர்களுக்கும் எந்த உத்தேசமும் இல்லை.

Nouvel Obs இக்கு ஒரு ஆதாரநபர் கூறினார்: “பிரான்சும் மற்றும் ஜனாதிபதியும் அல்ஜீரியாவில் என்னவொன்று நடந்தாலும் அதை அலட்சியப்படுத்த முடியாது. நாங்கள் கணிசமானதைப் பணயம் வைத்துள்ளோம். அல்ஜீரியாவுடன், நமது வரலாற்று, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் மிகவும் ஆழமானவை. பிரான்ஸ் அங்கே அதன் நலன்களைக் கொண்டுள்ளது, அது பெரும்பான்மையாக அல்ஜீரிய மற்றும் பிராங்கோ-அல்ஜீரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஆகவே எங்களைப் பொறுத்த வரையில், அதுவும் குறிப்பாக அவ்விரு நாடுகளும் புவியியல்ரீதியில் அருகருகே அமைந்திருப்பதும் மற்றும் மனித உறவுகளைக் கொண்டிருப்பதனாலும், அல்ஜீரியாவின் ஸ்திரப்பாடு என்பது ஒரு பிரதான பிரச்சினையாகும். அங்கே, பிராந்திய மட்டத்தில் உள்ளடங்கலாக, பாதுகாப்பு பிரச்சினைகளும் உள்ளது. சாஹெலில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக போராடுவதற்கு எங்களுக்கு அல்ஜீரியாவின் கூட்டுறவு தேவைப்படுகிறது.”

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சியுடன் நோக்குநிலை கொள்வதே FLN ஆட்சியுடன் போராட்டத்தினுள் நுழையும் தொழிலாளர்களுக்கு முன்னிருக்கும் வழியாகும். மஹ்ரெப் எங்கிலுமான தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக கோரிக்கைகளை, அல்ஜீரிய ஆட்சியின் பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உட்பட, சர்வதேச அளவில் ஆளும் வர்க்கத்தின் வளங்களைப் பறிமுதல் செய்யாமல் பூர்த்தி செய்யவியலாது. இதற்கு, அல்ஜீரிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை FLN உடன் பிணைத்து வைக்க தசாப்தங்களாக செயல்பட்டு வந்துள்ள அனைத்து சக்திகளுடனும் விட்டுக்கொடுப்பின்றி முறித்துக் கொண்டு, முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசத்திற்கான ஒரு நனவுபூர்வமான போராட்டம் அவசியமாகிறது.

FLN ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில், அல்ஜீரிய தொழிலாளர்களின் தலையாய கூட்டாளிகள் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் போராட்டத்தில் நுழைந்து வருகின்ற தொழிலாளர்களாவர். கடந்தகால புரட்சிகர மேலெழுச்சிகள் மீதான ஒரு இருப்புநிலைக் கணக்கையும் இன்றைய போராட்டங்களின் புதிய அனுபவங்களையும் வரைவது தான் இந்த போராட்டத்தின் முக்கிய கூறுபாடாகும். அல்ஜீரிய சம்பவங்கள், 2011 இல் துனிசிய உழைக்கும் மக்களின் ஆரம்ப மேலெழுச்சிக்கு ICFI இன் விடையிறுப்பை நேரடியாக மேற்கொண்டு வருகின்றன.

“துனிசியாவில் பாரிய மேலெழுச்சியும் நிரந்தர புரட்சிக்கான முன்னோக்கும்" என்ற அதன் 17 ஜனவரி 2011 அறிக்கையில், ICFI பின்வருமாறு எச்சரித்தது:

எவ்வாறிருப்பினும், பெருந்திரளான துனிசிய மக்கள், அவர்களின் போராட்டங்களின் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே உள்ளனர். புதிய இடைக்கால ஜனாதிபதியின் கீழ் ஏற்கனவே இராணுவ வன்முறை தொடரப்பட்டதில் இருந்து தெளிவாவதைப் போல, தொழிலாள வர்க்கம் அளப்பரிய அபாயங்களை முகங்கொடுக்கிறது. புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் தலைமை மீதான முக்கிய கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒரு புரட்சிகரத் தலைமை வளர்க்கப்படாவிட்டால், பென் அலிக்குப் பிரதியீடாக தவிர்க்கவியலாமல் மற்றொரு எதேச்சதிகார ஆட்சி நிறுவப்படும்.

இப்போது செய்ய வேண்டிய பணி, தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சர்வதேச இயக்கத்திற்கு அரசியல் தலைமை வழங்க அல்ஜீரியாவிலும் மற்றும் மத்திய தரைக் கடல் பகுதி எங்கிலும் மற்றும் உலகெங்கிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பதாகும்.