ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass protests to hit Algeria today against Bouteflika regime

புட்டஃபிளிக்கா ஆட்சிக்கு எதிராக பாரிய போராட்டங்கள் இன்று அல்ஜீரியாவைத் தாக்கவிருக்கின்றன

By Will Morrow
8 March 2019

அல்ஜீரியாவில் ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா ஆட்சியைக் நீக்கக் கோரி, சமூக ஊடகங்களில் “20 மில்லியன் பேர்களின் அணிவகுப்பு" என்று குறிப்பிடப்படும், போராட்டங்களில் நூறாயிரக் கணக்கானவர்கள் அணிவகுக்க உள்ளார்கள்.

பெப்ரவரி 22 முதல் ஒவ்வொரு நாளும், குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சிறிய சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன, இத்துடன் வாராந்தர பிரார்த்தனைகளுடன் பொருந்திய பாரம்பரிய ஆர்ப்பாட்ட தினமான கடந்த வெள்ளியன்று மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் நடந்தது. பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகளை நிராகரித்த ஆளும் கட்சியான தேசிய விடுதலை முன்னணி (FLN), எதிர்வரும் ஏப்ரல் 18 தேர்தல்களில் ஜனாதிபதி போட்டியிடுவார் என்று ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்ததைத் தொடர்ந்து, போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

1999 இல் இருந்து பதவியில் இருந்து வருகின்ற 82 வயதான புட்டஃபிளிக்கா உடல்நிலை மோசமடைந்திருக்கும் நிலைமையில் சுவிட்சர்லாந்து ஜெனிவா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அவர் உயிரற்ற ஓர் அரசியல் வெற்றுடலாக உள்ளார், 2013 இல் அவர் கடுமையான பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டதில் இருந்து அவர் பொதுவிடங்களில் உரையாற்றியதில்லை என்பதோடு, இராணுவம் மற்றும் கண்காணிப்பபு சேவைகளின் மீது தங்கியுள்ள இந்த ஆட்சியின் உள்வட்டாரங்களில் அடையாளத்திற்கு பெயரளவிலான ஒரு தலைவராக பார்க்கப்படுகிறார். அவருக்கு அடுத்து ஒரு பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுக்க முயன்று வரும் அவர்கள், இந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓராண்டுக்குள் புட்டஃபிளிக்கா பதவி விலகுவார் என்று சூளுரைத்துள்ளனர்.

வேலைநிறுத்தங்கள் மூலமாக தொழிலாள வர்க்கம் தலையீடு செய்ய தொடங்கி வருகிறது, இவற்றின் மீது தொழிற்சங்கங்கள் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு முயன்று வருகின்றன. ஆசிரியர்கள் ஏற்கனவே போராட்டங்களில் மாணவர்களுடன் இணைந்து வருகின்ற நிலைமைகளின் கீழ், ஆசிரியர் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு புதன்கிழமை கூட்டத்தில் ஒரு வார இடைவெளியில், மார்ச் 13 இல், நாடு தழுவிய ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வாக்களித்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, டிஸி ஓவ்சௌ இல் Mouloud Mammeri பல்கலைக்கழக ஆசிரியர்கள் அந்த வளாகத்தில் ஒரு கூட்டம் நடத்தி, போராடி வருகின்ற மாணவர்களுடன் வளாக நூலகத்திலிருந்து அணிவகுக்க வாக்களித்தனர்.

செவ்வாய்கிழமை உற்பத்தி சக்திகளின் சுதந்திரமான கூட்டமைப்பு சங்கம் (COSYPOF), புட்டஃபிளிக்கா தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தேர்தல் ஆணையம் அவரை தகுதிநீக்கம் செய்ய கோருவதற்காக, மார்ச் 10-14 இல் ஐந்து நாள் வேலைநிறுத்தத்திற்கான ஓர் உத்தியோகபூர்வ அறிவிப்பைச் சமர்பித்தது. இந்த தொழிற்சங்கத்தில் எரிசக்தித்துறை தொழிலாளர்களும் அத்துடன் சுகாதாரத்துறையின் சில தொழிலாளர்களும் உள்ளடங்குவர். அல்ஜீரியவின் மிகப் பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான அல்ஜீரிய தொழிலாளர்களுக்கான பொது சங்கம் (UGTA) நேரடியாகவே FLN உடன் அணி சேர்ந்துள்ளதுடன், அது அந்த ஜனாதிபதிக்கு அதன் ஆதரவை அறிவித்துள்ளது.

செவ்வாயன்று, இராணுவ முப்படைத் தளபதி, லெப்டினென்ட் ஜெனரல் கயேட் சலாஹ் (Gaed Salah) இராணுவம் தலையீடு செய்ய தயாராகி வருவதாக அச்சுறுத்தி Ennahar தொலைக்காட்சியில் ஓர் அறிக்கை வெளியிட்டார். “பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டுக்கு" “உத்தரவாதமளிப்பவராக" இராணுவம் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், “பயங்கரவாதத்தைத் துடைத்தழிப்பதில்...” இராணுவத்தின் நடவடிக்கைகள் "சில கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன, அவர்கள் அல்ஜீரியாவின் ஸ்திரப்பாடு மற்றும் பாதுகாப்பைக் கண்டு நிலைகுலைந்திருந்தன.” அது "முன்கணிக்கவியலா அச்சுறுத்தல்களுக்கு அல்ஜீரியாவை உள்ளாக்கும் எந்தவொன்றுக்கும் எதிராக ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கும்,” என்றார்.

இராணுவம் மற்றும் இஸ்லாமியவாத சக்திகளுக்கு இடையிலான 1992-2002 உள்நாட்டு போரில் 200,000 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அத்தகைய "வலிநிறைந்த ஆண்டுகளுக்கு" திரும்புவதை இராணுவம் அனுமதிக்காது என்று சலாஹ் அச்சுறுத்தினார்.

அந்த ஆட்சி வியாழனன்று புட்டஃபிளிக்காவின் பெயரில் இருந்த ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, எந்தவொரு சமூக அமைதியின்மைக்கு எதிராகவும் எச்சரித்ததுடன் ஒரு புதிய அச்சுறுத்தலையும் வெளியிட்டது: “எந்தவொரு துரோகத்தனமான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு குழுவும் இந்த அமைதியான வெளிப்பாட்டை உடைப்பது ஆட்சி விரோத செயல்பாடுகளுக்கும் குழப்பத்திற்கும் இட்டுச் சென்று, நெருக்கடிகள் மற்றும் தொல்லைகளை ஏற்படுத்தும்.”

இந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் கோஷங்கள் முற்றிலுமாக புட்டஃபிளிக்காவை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையில் மையமிட்டுள்ளன என்றாலும், ஆர்ப்பாட்டங்களில் உள்ள தொழிலாளர் மற்றும் இளைஞர்களை அதை விட பரந்த சமூக பிரச்சினைகள் இயக்கமூட்டி வருகின்றன. அந்நாட்டில் சமூக நிலைமைகள் வெடிப்பார்ந்து உள்ளன. மக்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் 30 வயதிற்கு குறைந்தவர்களாக உள்ளனர், நடத்தர வயது 28 ஆக உள்ளது—இளைஞர்களில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

ஆனால் புட்டஃபிளிக்கா-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தற்போது ஆதரித்து வருகின்ற கட்சிகளும் அமைப்புகளும், புட்டஃபிளிக்கா ஆட்சிக்கு எந்தளவுக்கு விரோதமாக இருக்கின்றனவோ, அதற்கு குறைவின்றி தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நிலைமைகளைச் சீர் செய்வதற்கும் அல்லது மேம்படுத்துவதற்கும் குரோதமாக  இருக்கின்றன.

அந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரிப்பவர்கள், அந்த ஆட்சியின் அதிருப்தி கன்னைகளுக்காகவும் மற்றும் புட்டஃபிளிக்காவின் உள்வட்டாரங்களின் ஏகபோகத்துடன் அதிருப்தி கொண்ட அல்ஜீரிய முதலாளித்துவ மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கங்களில் உள்ளவர்களுக்காக பேசுகிறார்கள், இவர்கள் ஆளும் அடுக்கிற்குள் அதிகாரம் மற்றும் செல்வவளத்தின் மறுபகிர்வை விரும்புகிறார்கள்.

பேஸ்புக் மூலமாக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் செயலூக்கத்துடன் உள்ளதும், சர்வதேச ஊடகங்களில் “ஜனநாயக இயக்கத்தின்” தலைமை என்று குறிப்பிடப்படுகின்ற முவட்டானா (Mouwatana), அல்லது "மக்கள் ஜனநாயகம்" என்பது புட்டஃபிளிக்காவின் முன்னாள் பிரதம மந்திரியான அஹ்மெட் பென்பீட்டூர் (Ahmed Benbitour) ஆல் ஜூலை 2018 இல் ஒரு குடை அமைப்பாக ஸ்தாபிக்கப்பட்டது.

முவட்டானா குடை அமைப்பின் முன்னணி கட்சிகளில் ஒன்றான ஜில் ஜதித் இன் தலைவர் Sofiane Djilali தான் முவட்டானாவின் தேசிய இயக்குனராக உள்ளார். 2017 இல் வெளியிடப்பட்ட அதன் வேலைத்திட்டம் ஆட்சியைத் திறந்துவிடுவதற்கான ஓர் அழைப்பாக உள்ளது. இளைஞர்கள் "நிறைய சம்பாதிப்பதற்குக் வெறுமனே குறைந்த முயற்சியோடு உழைக்கிறார்கள். அவர்களின் வேலைகளில் தங்கியிருப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. குறைவாக வேலை செய் நிறைய சம்பாதி; இது தான் பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் உள்ள கோஷமாக உள்ளது...” என்று அறிவித்து, அது தொழிலாளர்களின் நலன்களுக்கு அதன் குரோதத்தைத் தெளிவுபடுத்துகிறது.

புட்டஃபிளிக்காவும் அவர் பிரதம மந்திரியும் இராஜினாமா செய்ய வேண்டுமென கோருவதற்காக முவட்டானா இன்று போராட்டங்களுக்கு அழைப்புவிடுக்கும் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது.

முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு கன்னையும் தொழிலாள வர்க்கத்தின் ஏதேனும் இயக்கம் குறித்து பீதியுற்றுள்ளது. ஆளும் கட்சியான FLN இல் பல மந்திரிமார்கள் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக புட்டஃபிளிக்காவை நீக்க வேண்டியிருக்கும் என்று கணக்கிட்டு, சமீபத்திய நாட்களில் அவர்களின் இராஜினாமாக்களை அறிவித்துள்ளனர்.

பிரதான ஏகாதிபத்திய சக்திகள், ஐயத்திற்கிடமின்றி நேரடியாக நிலைமைக்குள் தலையீடு செய்ய, நெருக்கமாக கண்காணித்து வருகின்றன. இந்நாடு, நோர்வே மற்றும் ரஷ்யாவை அடுத்து, ஐரோப்பாவுக்கான மூன்றாவது மிகப் பெரிய எரிவாயு வினியோகஸ்தராக விளங்குகிறது, அத்துடன் அது ஸ்பெயினின் எரிவாயு தேவைகளில் அரைவாசியை வினியோகிக்கிறது. அது வட ஆபிரிக்காவில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட மிகப் பெரிய எரிவாயு வயல்களைக் கொண்டுள்ளது. புட்டஃபிளிக்கா ஆட்சி பிரெஞ்சு பாதுகாப்புத்துறை செயல்பாடுகளில் ஒரு முக்கிய பாத்திரம் வகிப்பதுடன், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்கள் மற்றும் நவ-காலனித்துவ ஒடுக்குமுறையால் உண்டான வாழ்க்கை நிலைமைகளில் இருந்து தப்பிக்க ஐரோப்பாவுக்குத் தப்பி செல்வதிலிருந்து ஆபிரிக்க புலம்பெயர்வோரைத் தடுப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகளிலும் முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில், சீனா அல்ஜீரியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆகியுள்ள நிலையில், இது பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இரண்டுக்கும் கவலையை உண்டாக்கி வருகிறது. செவ்வாயன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரோபர்ட் பல்லாடினோ பத்திரிகையாளர்களுக்குக் கூறுகையில், “அல்ஜீரியாவில் நடந்து வரும் போராட்டங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து நாங்கள் அதை செய்வோம். அமெரிக்கா அல்ஜீரியா மக்களையும் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான அவர்களின் உரிமையையும் ஆதரிக்கிறது என்பதை நான் கூறுவேன்.”

புதன்கிழமை மாலை, பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் குறிப்பிடுகையில், “அல்ஜீரியாவின் ஸ்திரப்பாடு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்" பிரான்சுக்கு "முற்றிலும் இன்றியமையாததாகும்,” என்றார்.

பிரான்சில் "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் பிரதிபலித்தவாறு அளப்பரிய சமூக கோபத்தின் நிலைமைகளின் கீழ், அல்ஜீரிய தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கமானது, வேகமாக பிரான்சுக்கு உள்ளேயே கூட பரவக்கூடும் என்பதை குறித்து மக்ரோன் அரசாங்கம் நிச்சயமாக அறிந்து வைத்துள்ளது. ஏறக்குறைய அரை மில்லியன் அல்ஜீரியாவில் பிறந்த புலம்பெயர்ந்தவர்கள் உட்பட அல்ஜீரிய வம்சாவழியைச் சேர்ந்த நான்கு அல்லது ஐந்து மில்லியனுக்கு இடைப்பட்ட மக்கள் பிரான்சில் வாழ்கிறார்கள்.