ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The working class enters into struggle in Algeria

அல்ஜீரியாவில் தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைகிறது

By Alex Lantier,
13 March 2019

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா ஐந்தாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவிருக்கும் முயற்சியை எதிர்த்து இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு பல வாரங்கள் கழித்து, தேசிய விடுதலை முன்னணி (FLN) ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் முன்னணி சக்தியாக எழுந்துள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் ஆட்சியின் வீழ்ச்சியை கோருகையில் பொதுப்போக்குவரத்து, கார், கல்வி மற்றும் முக்கியமாக இயற்கை எரிவாயு துறைக்கு வேலைநிறுத்தங்கள் பரவின.

அல்ஜீரியாவில் இந்த இயக்கமானது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வர்க்கப் போராட்டம் மற்றும் அரசியல் எதிர்ப்பின் ஒரு சர்வதேச எழுச்சியின் மையத்தில் உள்ளது. போர்த்துக்கல்லில் இருந்து பேர்லின் வரை நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்த அலைகளுக்கு மத்தியில் பிரான்சில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிரான ஆழ்ந்த கோபம், "மஞ்சள் சீருடை" இயக்கமாக தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக வெடித்தது. அமெரிக்கா முழுவதும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள், மெக்சிக்கோவில் மக்கில்லாடோரா வேலைநிறுத்தங்கள் மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் வேலைநிறுத்தங்கள் ஆகியவை சமூக ஊடகங்களின் ஊடாக தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒழுங்கமைக்கப்படுகின்றன.

தேசிய விடுதலை முன்னணி (FLN), வேலைகள், ஒரு நல்ல எதிர்காலம் மற்றும் புட்டஃபிளிக்காவை சுற்றியுள்ள முதலாளித்துவ கும்பலின் சர்வாதிகாரத்தை முடிவிற்கு கொண்டுவர கோரும் எதையும் செய்யப்போவதில்லை. பாரிஸ் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்பட்ட, ஆர்ப்பாட்டங்களை நிறுத்தும் வரையில் புட்டஃபிளிக்காவை அதிகாரத்தில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு ஏப்ரல் 18 தேர்தல்களை இடைநிறுத்தம் செய்துள்ளது. 2011 இல் துனிசியா மற்றும் எகிப்தில் ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற சர்வாதிகாரிகளை கவிழ்த்த தொழிலாளர்கள் எழுச்சிகளின் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின்னர், முதலாளித்துவத்திற்கு எதிரான புதிய சர்வதேச புரட்சிகர போராட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

துனிசிய, எகிப்திய எழுச்சிகளின் படிப்பினைகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ட்ரொட்ஸ்கிச புரட்சிகர முன்னணிப் படை அவசியமாகும் என்பதை காட்டியது. இது இல்லாமல், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வீரம்மிக்க போராட்டங்கள் இருந்தபோதிலும்கூட, எகிப்தின் புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) மற்றும் துனிசியாவின் தொழிலாளர் கட்சி (PT) போன்ற நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகளால் இரு நாடுகளிலும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க முடிந்தது. புரட்சியின் ஒவ்வொரு படியிலும், ஏகாதிபத்திய ஆதரவிலான இராணுவ ஆட்சிக் குழுக்கள் அல்லது இஸ்லாமியவாத கட்சிகள் தேசிய ஜனநாயக சீர்திருத்தங்களை அனுமதிக்கும் என்ற பொய்களை முன்வைத்தன் மூலம் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கி, ஆளும் வர்க்கம் இறுதியில் பழைய சர்வாதிகாரத்தை மீட்டமைப்பதற்கு உதவியது.

FLN (தேசிய விடுதலை முன்னணி) க்கு எதிராக தொழிலாள வர்க்க இயக்கத்தின் எழுச்சியானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தின் வரலாற்று நிரூபணம் ஆகும். 1954-1962 காலப்பகுதியில் பிரான்சிற்கு எதிரான அல்ஜீரிய சுதந்திரப் போருக்குப் பின்னர் FLN அதிகாரத்திற்கு வந்ததானது முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டமோ அல்லது ஜனநாயக மற்றும் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப மார்க்சிச முன்னணி கட்சியோ தேவையில்லை என நிரூபித்துள்ளது என்று குட்டி முதலாளித்துவ "இடதுகள்" வலியுறுத்தின. வேலைகள், சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் கோரி FLN க்கு எதிரான அல்ஜீரிய தொழிலாளர்களின் இன்றைய இயக்கம், இந்த பொய்யை அம்பலப்படுத்துகிறது.

அல்ஜீரியப் போர், நூறாயிரக்கணக்கான உயிர்களை இழந்ததோடு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாரிய சித்திரவதை மற்றும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு வீரம்மிக்க போராட்டம் ஆகும். போரை முடிவுக்கு கொண்டுந்த 1962 ம் ஆண்டு எவியான் உடன்படிக்கைகளில், பாரிஸ் அல்ஜீரியாவில் தொழிலாள வர்க்கத்திடம் அல்லாது, மாறாக FLN இடம் அதிகாரத்தை வழங்கியது. அல்ஜீரியாவின் 1963 அரசியலமைப்பில் சோசலிசத்தை கட்டமைப்பதற்கான ஒரு உறுதிமொழியை அது பொறித்தாலும், FLN ஒரு முதலாளித்துவக் கட்சியாகும். அது, வேலைத் தளங்களில் தொழிலாளர்களின் குழுக்களிலோ அல்லது முதலாளித்துவ சொத்துடைமையை பறித்தெடுப்பதிலோ தன்னை அடித்தளமாக கொண்டிருக்கவில்லை.

ஆனால் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விட்டோடிய பப்லோவாத குட்டி முதலாளித்துவ மார்க்சிச எதிர்ப்பு குழுக்கள் FLN ஐ பாராட்டின. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளுக்குள் கரைக்கும் முயற்சியை எதிர்த்த நான்காம் அகிலத்திலிருந்து 1953 இல் பிரிந்து சென்ற பப்லோவாதிகள், நான்காம் அகிலத்தினை பிரதியீடு செய்வதாக கூறப்படும் பல இயக்கங்களில் ஒன்றாக FLN ஐ ஊக்குவித்தனர். இந்த இயக்கங்களில், 1959 ஆம் ஆண்டு கியூபாவில் அதிகாரத்தை கைப்பற்றிய காஸ்ட்ரோவின் கெரில்லாக்களிலிருந்து, 1947 இல் பிரிட்டனிலிருந்து முறையான சுதந்திரம் என்பதன் ஒரு பகுதியாக சுமத்தப்பட்ட இந்தியாவின் பிரிவினையிலிருந்து வெளிப்பட்ட முதலாளித்துவ அரசுகள் வரை உள்ளடங்கியிருந்தன.

அல்ஜீரிய யுத்தம் என்பது, ஒரு "ஒரு ஐக்கியப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய போராட்டம், தன்னை தவிர்க்கமுடியாது ஒரு ஆழ்ந்த சமூகப் புரட்சியாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு உயிர்வாழும் நிரந்தரப் புரட்சி” என்று பப்லோ கூறினார். இந்த அடிப்படையில், பப்லோ FLN இன் ஆலோசகராக இருந்து ஜெனரல் ஹொவாரி பூமெடியனின் 1965 ஆட்சி கவிழ்ப்பில் ஜனாதிபதி அகமது பென் பெல்லாவை பதவியிலிருந்து வெளியேற்றும்வரை அப்பதவி வகித்தார்.

அல்ஜீரியாவில் தொழிலாள வர்க்கப் புரட்சிக்கான ஒரு சோசலிச முன்னோக்கை விரிவுபடுத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே போராடியது. பப்லோவாதிகளுடனான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு கோட்பாடற்ற மறுஐக்கியத்தை அமெரிக்க தலைமையில் ஜோசப் ஹான்சன் முன்மொழிகையில், சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) எதிர்த்தது. அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரித்தானிய பிரிவான அது, மார்க்சிசத்தையும் ட்ரொட்ஸ்கிசத்தையும் பாதுகாத்தது.

1963ல் சோசலிச தொழிலாளர் கழகம் எழுதியது: அல்ஜீரிய அரசாங்கத்திற்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான எவியான் உடன்படிக்கையை சோசலிச தொழிலாளர் கழகம் கண்டித்ததை ஹான்சன் பாரிய விடயமாக்கினார். நாங்கள் இவ் உடன்படிக்கையை ஒரு காட்டிக்கொடுப்பு என்று கூறியபோது, ஹான்சன் அதனை ஒரு தீவிர இடது தவறு என்று குறிப்பிட்டு, எவியான் உடன்படிக்கை ஆகக்குறைந்தது தேசிய சுதந்திரத்தை உள்ளடக்கியிருப்பதால் அதனை ஒரு வெற்றி என வரவேற்க வேண்டும் என்றார். நாங்கள் ஒரு வர்க்க ஆய்வின் அடிப்படையில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் FLN தலைமை உடன்படிக்கைக்கு வந்தமையானது அல்ஜீரிய மக்கள் தங்கள் சொந்த ஜனநாயக கோரிக்கைகளை வெல்வதை தடுத்தது. இந்த "வெற்றியில்" மட்டும் கவனம் செலுத்தியவர்கள் பென் பெல்லா மக்களை ஏமாற்றுவதற்கு உதவிசெய்வதுடன், சோசலிஸ்டுகளின் சக்தியை, ஒரு சுயாதீனமான புரட்சிகர கட்சியை கட்டுவதை நோக்கி திருப்புவதை விட்டு முதலாளித்துவத்துடன் கூட்டமைப்பதற்கு திருப்புகின்றனர் எனக் குறிப்பிட்டோம்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த பகுப்பாய்வையும் ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியின் அடிப்படை முன்னோக்கான லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.

முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் கட்டுண்டுள்ளதோடு, தொழிலாள வர்க்கத்தை கண்டு அச்சமும் கொண்டுள்ளது ஆகையால் ஒரு ஜனநாயகப் புரட்சியை வழிநடத்த முடியாது என ட்ரொட்ஸ்கி நிறுவிக்காட்டியிருந்தார். ஜனநாயகக் கோரிக்கைகளுக்கான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் தன்பின்னே ஏனைய ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை அணிதிரட்டி ஒரு சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறினால் மட்டுமே முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிப்பதன் மூலம் இது சாத்தியமாகும். உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் மூலம், முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றி, உலகப் பொருளாதாரத்தை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதன் மூலமாக மட்டுமே, முன்னாள் காலனித்துவ நாடுகளில் உண்மையான சோசலிச மற்றும் ஜனநாயக சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான வளங்கள் திரட்டப்பட முடியும்.

ஏகாதிபத்தியத்துடன் கட்டுண்டு, தொழிலாளர்களை அச்சுறுத்தும் அல்ஜீரிய ஆட்சி, சோசலிச சமுதாயம் ஒருபுறமிருக்க, ஒரு ஜனநாயகத்தை கட்டமைக்கவும் இலாயக்கற்றது என்பதை நிரூபித்துள்ளது. அல்ஜீரியாவின் இயற்கை எரிவாயுவினால் கிடைத்த செல்வத்தின் மூலம், தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்கும், போதுமான ஊதியம் வழங்கும் வேலைகளை உருவாக்குதல் மற்றும் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துதல் என்பவற்றிற்கு பதிலாக FLN தலைமையைச் சுற்றிய முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணி குழுக்களின் வங்கிக் கணக்குகளை விரிவுபடுத்தியது.

FLN க்கு எதிராக அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும் தன் பின்னால் அணிதிரட்டி தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சோசலிசப் புரட்சியை நோக்கி செல்வதன் மூலம் மட்டுமே ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் முன்செல்ல முடியும். சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி அல்ஜீரியாவில் தொழிலாளர்களுக்கு பரந்த அரசியல் சாத்தியங்களை திறந்துவிட்டுள்ளது. ஒரு சர்வதேசரீதியான அளவில் தொழிலாள வர்க்கம் நிதிய பிரபுத்துவத்தை கையகப்படுத்தி முன்னாள் காலனித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் கைகளில் உண்மையான சோசலிச மற்றும் ஜனநாயக சமூகத்தை கட்டியெழுப்ப தேவையான பொருளாதார வளங்களை வைக்க முடியும். ஆனால் இதில் எதுவும் ஒரு தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட முடியாது: மாறாக, சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தினை நோக்கிய ஒரு தீர்க்கமான திருப்புதல் தேவைப்படுகிறது.

இத்தகைய போராட்டங்களுக்கு பப்லோவின் அரசியல் எச்சசொச்சங்களுடனான ஒரு இரக்கமற்ற அரசியல் முறிவு அவசியப்படுகிறது. பப்லோவாத சோசலிச தொழிலாளர் கட்சி (PST) மற்றும் அதன் கூட்டாளியான 1980 களில் FLN இன் தோல்வியுற்ற "ஜனநாயகமயமாக்கல்" போது உருவான லூயிசா ஹானுன் இன் தொழிலாளர் கட்சி (PT) ஆகியவை FLN ஐ வீழ்ச்சியிலிருந்து தடுத்து நிறுத்தும் ஒரு பொறியை தயார் செய்கின்றன. இன்று PST ஆனது PTஉடன் சேர்ந்து, மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் அல்ஜீரியாவின் அரசாங்க சார்பு தொழிற்சங்கங்களுடன் கூட்டு சேர்ந்து FLN இன் ஜனநாயக சீர்திருத்தத்திற்காக மீண்டும் அழைப்பு விடுகிறது.

அது எழுதுகிறது: மக்களின் இடதுசாரி பிரிவினர் அதன் பங்கிற்கு ஏறக்குறைய ஒரு ஒத்திசைவான வழியில் அரசியலமைப்பு சட்டமன்றத்தை தெரிவு செய்யும் முன்னோக்கு வழியாக மக்களுக்கு ஒரு குரலைக் கொடுக்கும் வழியிலிருந்து ஒரு தீர்வு மற்றும் உடனடியாக அதன் இறையாண்மைக்கு அதன் பங்கை மீண்டும் நிலைநிறுத்துவதை முன்மொழிகின்றது… ஜனநாயக, திறந்த சந்தை எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைப்பதற்காக PST இந்த முன்னோக்கை பகிர்ந்து கொள்ளும் அனைத்துக் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் சமூக இயக்கங்களையும் ஒன்றிணைப்பதை முன்மொழிகிறது.

தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு தயார் செய்வதுதான் பிரதான கடமையாக உள்ளது, அது PST போன்ற மத்தியதர வர்க்க சக்திகளுடன் சமரசத்திற்கு இடமற்ற முறிவை வேண்டிநிற்கிறது. ஜனநாயகத்தை கட்டமைப்பதற்கான அவற்றின் உறுதிமொழியானது, கீழிருந்து எழும் ஒரு இயக்கத்தை கண்டு அச்சமுறும் தொழிற்சங்க அதிகாரத்துவம், கல்விமான்கள் மற்றும் தொழில் வல்லுனர்களிடமிருந்து வரும் பிரச்சாரமாகும். ஏனெனில் இவ்வாறான இயக்கமானது, அவர்கள் FLN உடன் உள்ள தொடர்பின் மூலம் பெறும் பிரத்தியேக சலுகைகளை அச்சுறுத்துகின்றது. எகிப்திலும் துனிசியாவிலும் போலவே, தோல்விகளை ஒழுங்கமைக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஆட்சியுடன் கட்டிவைப்பதற்கு முனைகின்றனர். அவர்கள் அதிகாரத்தில் புட்டஃபிளிக்காவை வைத்திருப்பதற்கான FLN இன் சூழ்ச்சிக்கையாளலை, தற்போதைய இயக்கம் அடைந்திருக்கும் "ஒரு படி பின்னுக்கு" தள்ளிய வெற்றியாக அவர்கள் வரவேற்கின்றனர்.

இந்த போக்குகளுக்கு எதிரான ஒரு சோசலிச போராட்டத்தின் அடித்தளத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்கில் கண்டுகொள்ள வேண்டும். புரட்சிகர போராட்டத்திற்குள் நுழையும் தொழிலாளர்களும் இளைஞர்களும், இப்பொழுது அல்ஜீரியாவில் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் நாடுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்பவேண்டும்.