ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Over one million protest extension of Bouteflika’s term in Algeria

அல்ஜீரியாவில் புட்டஃபிளிக்கா ஆட்சி நீட்டிக்கப்படுவதை ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் எதிர்க்கின்றனர் 

By Will Morrow 
16 March 2019

நேற்று, அல்ஜீரியா எங்கிலுமாக நகரங்களிலும் மற்றும் சிறு நகரங்களிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, இந்த நான்காவது வெற்றிகர வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் இராணுவ ஆதரவிலான தேசிய விடுதலை முன்னணி (FLN) கட்சியின் ஆட்சியையும், மற்றும் அதன் பெயரளவிலான தலைவர் அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவையும் நீக்கும்படி கோரிக்கை விடுக்கின்றன.

தலைநகர் அல்ஜீயர்ஸில் மட்டும் ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் ஒன்றுகூடினர் என்ற வகையில், நேற்றைய ஆர்ப்பாட்டங்கள், முந்தைய வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களைக் காட்டிலும் பரந்தளவினதாக அல்லது மிகப்பரந்தளவினதாக இருந்தன என்று வேறுபட்ட மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. El Watan நாளிதழ், மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்துள்ளதும் மற்றும் அந்நாட்டின் கபிலி பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமுமான பெஜையாவில் நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர் என மதிப்பிடுகிறது. மேலும், இரண்டாவது பெரிய நகரமான ஓரானிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், தலைநகருக்கான போக்குவரத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் அல்ஜீயர்ஸில் நடந்த ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முனைந்தது. El Mouradia இணைய செய்தி போயிரா, பெஜையா மற்றும் டிஜி-ஒசாவு போன்ற பகுதிகளுக்கான சாலை வழிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன என தெரிவித்ததுடன், சாலைத் தடைகளை மீறி நடந்து செல்லும் இளைஞர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டது.

இருந்தபோதிலும், தலைநகரின் மத்தியில் மட்டும் 1.8 மில்லியன் பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருப்பார்கள் என ஒரு மதிப்பீடு கூறுகிறது. Tout sur l’Algérie (TSA) செய்தி ஊடகம் இவ்வாறு குறிப்பிட்டது: "மத்திய அல்ஜீயர்ஸில், தெருக்களில் நகர்வதற்கு கூட முடியாத அளவிற்கு மிக நெருக்கமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியிருந்தனர். தெருக்களும் சுற்றியுள்ள சந்துக்களும் மக்கள் வெள்ளத்தில் ‘மூழ்கியிருந்தன.’ மெல்லிய தூக்கத்தில் இருந்த குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் கையிலேந்தியிருந்த நிலையில் அனைவரும் மிக அமைதியாக இருந்தனர். அல்ஜீயர்ஸில் ஒரு பண்டிகை சூழல் ஆதிக்கம் செய்வது போல் இருந்தது, என்றாலும் எந்தவித அசம்பாவிதமும் அங்கு நிகழவில்லை.”

ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புக்கு மத்தியில் அல்ஜீயர்ஸில் வெகுஜன போக்குவரத்தும், நீண்டதூரம் செல்லும் இரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பதுடன், பல கடைகளும் மூடப்பட்டிருந்தன. தேசிய தொழில்துறை வாகன நிறுவனத்திலும் (National Industrial Vehicles Company - SNVI) தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தேசிய மின்உற்பத்தி மற்றும் எரிவாயு நிறுவனமான சோனேல்காஸ் இலும் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு வேலையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர், மேலும் தேசிய இயற்கை எரிவாயு ஏகபோக உற்பத்தி நிறுவனமான சோனாட்ராக்கிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்பட்டது.

அல்ஜீரியாவின் மூன்றாவது பெரிய நகரமான கான்ஸ்டன்டைனில் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன என்றும், மேலும் பெஜையாவிலும் வணிக நடைமுறைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும் ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.

இந்த ஆர்ப்பாட்டங்களின் விரிவாக்கம் என்பது, ஆட்சியையும் அதன் பெயரளவிலான தலைவரையும் உண்மையில் பாதுகாக்கும் ஒரு அரசியல் மாற்றம் பற்றி, ஞாயிறன்று இரவு புட்டஃபிளிக்காவின் பெயரில் ஒரு கடிதமாக வெளியிடப்பட்ட ஆட்சியின் அறிவிப்பை நிராகரிப்பதை பிரதிபலிக்கிறது.

இந்த கடிதம், ஒரு அடையாள “தேசிய மாநாட்டின்” உருவாக்கத்திற்கும், ஒரு புதிய அரசியலமைப்பை வடிவமைக்க ஏற்புடைய ஆட்சியின் சொந்த கண்காணிப்பிற்கும் மற்றும் புதிய தேர்தல்களுக்கு தேதியை நிர்ணயிப்பதற்கும் அழைப்பு விடுத்தது. 2013 முதல் பொதுவிடங்களில் பேசவியலாமல் இருக்கும் புட்டஃபிளிக்காவின் இந்த நான்காவது ஆட்சிக் காலம் நீட்டிக்கப்பட்டு வருவதுடன், முன்னரே ஏப்ரலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்தல்களும் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள், “உங்களது அனைத்தையும் விட்டுச் செல்லுங்கள்,” “புட்டஃபிளிக்கா இல்லாத தேர்தல்களை நாங்கள் விரும்பினோம் ஆனால் இப்போது தேர்தல்கள் இல்லாமல் புட்டஃபிளிக்காவை மட்டும் நாங்கள் கொண்டிருக்கிறோம்,” “அவர்கள் எங்களை புதைக்க முயன்றார்கள், என்றாலும் நாங்கள் விதைகளாக இருந்தோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை” என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர் அல்லது அத்தகைய சுலோகங்களை ஏந்தி நின்றனர். மேலும், புட்டஃபிளிக்காவை ஆதரிக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை நேரடியாக தாக்கும் வகையில், “மக்ரோன், மஞ்சள் சீருடையாளர்களைப் பற்றி கவனியுங்கள், அதுமட்டும் உங்களுக்குப் போதுமானது” அல்லது “மக்ரோன், விறகுகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இந்த ஆண்டு அல்ஜீரிய எரிவாயு விநியோகிப்பு உங்களுக்கு இருக்காது” என்பது போன்ற சில கோஷங்களையும் முழங்கினர்.

இந்த ஆட்சி அமைச்சரவையையும் கலைத்துவிட்டது என்பதுடன், 2015 இல் இருந்து உள்துறை அமைச்சராக இருந்து வரும் நூரெதின் பெடுவோய் தான் புதிய பிரதமர் எனவும் பெயர் குறிப்பிட்டுள்ளது. புதனன்று, பெடுவோய் தலைநகரில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்ததுடன், ஒரு தொழில்வல்லுனர்களின் “தேசிய திறன்மிக்க அரசாங்கம்” அடுத்த வாரம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், தேர்தல் தேதிகள் பற்றி குறிப்பிட அவர் மறுத்துவிட்டதோடு, இந்த அரசாங்கம் “ஒரு குறுகிய காலத்தையே” கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

புதிய துணை பிரதமர் ராம்ரன் லமாம்ரா 2013 முதல் 2017 வரை வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். அவர், தற்போது ஐக்கிய நாடுகளுக்கான தூதராக இருக்கிறார் என்பதோடு, 1996 முதல் 1999 வரை அமெரிக்க தூதராகவும் இருந்துள்ளார்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் —மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமானோர் 30 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர்— அவர்களது சமூக நிலைமைகளை எதிர்த்து போராட்டத்தில் இறங்க உந்தப்பட்டு வருகின்றனர். மார்ச் 12 அன்று Deutsche Welle க்கு சுட்டிக்காட்டிய ஒரு இளைஞன், “தேர்தல்கள் தாமதமாவதை நாங்கள் விரும்பவில்லை, அத்துடன் [புட்டஃபிளிக்காவின்] ஐந்தாவது முறை ஆதிக்கத்தையும் நாங்கள் விரும்பவில்லை. இந்த அமைப்புமுறையை நாங்கள் நிராகரிக்கிறோம். அதன் பலனை நாங்கள் போதுமானளவு அனுபவித்து விட்டோம்” என்று தெரிவித்தார், மேலும், மக்களின் “ஆரோக்கியத்தை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் அதனால் எடுக்கப்படவில்லை” என்ற உண்மை நிலையை கண்டித்தார்.

இளைஞர் வேலைவாய்ப்பின்மை 30 சதவிகிதமாக உள்ளது. 2015 இல் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான அல்ஜீரிய குழு வெளியிட்ட ஒரு அறிக்கை, 80 சதவிகித தேசிய செல்வ வளத்தை 10 சதவிகித மக்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்று மதிப்பிட்டது, மேலும் நாளொன்றுக்கு 1.5 டாலருக்கும் குறைந்த ஊதியத்துடன் மோசமான வறுமையில் சுமார் 14 மில்லியன் மக்கள் வாழ்வதையும் அது கண்டறிந்துள்ளது. 4,500 குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வு, 2014 இல் இருந்து ஒரே வருடத்தில் அவர்களது சராசரி வாங்கும் சக்தி சராசரியாக 60 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது என சுட்டிக்காட்டுகிறது.

உத்தியோகபூர்வ எதிர்ப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்களும் உட்பட, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை பிரிக்கும் ஒரு வர்க்க பிளவு உள்ளது. கடந்த வாரம் எழுச்சியுற்ற இவ் வேலைநிறுத்தங்களை கண்டு தொழிற்சங்கங்கள் பீதியடைந்துள்ளன என்பதுடன், தொழிற்சங்கங்களை புறக்கணித்து சுயாதீனமாக பாரியளவில் சமூக ஊடகங்கள் மூலம் பரவலாக்கப்பட்டு தேசியளவிலான வேலைநிறுத்தங்களாக ஞாயிறன்று அவை வெடிப்புற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைநிறுத்தங்களை நிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் சாத்தியமான அனைத்தையும் செய்யும் நிலையிலும், திங்களன்றும் அவை தொடர்ந்து விரிவடைந்து, பெஜையா மற்றும் டிஜி-ஒசாவு போன்ற சில பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றுள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை வழி தவறச் செய்வதற்கும் ஒடுக்குவதற்கும், லூயிசா ஹனூனின் தொழிலாளர் கட்சி (PT), சோசலிச தொழிலாளர் கட்சி (PST, பிரான்சில் பப்லோவாத முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் கூட்டு வைத்துள்ளது) போன்ற உத்தியோகபூர்வ “இடது” எதிர்ப்பு கட்சிகள், மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஊடாக அனைத்து ஆளும் கட்சிகளின் கீழ் ஒரு அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (பார்க்கவும்: Socialist Workers Party seeks to derail movement against Algerian regime)

புட்டஃபிளிக்காவின் அறிவிப்பு வெளிவந்து 24 மணித்தியாலங்களுக்கு பின்னரும் அதற்கு பதிலிறுப்பாக ஒரு வார்த்தையை கூட PT வெளியிடவில்லை. ஆட்சிக்கு ஒரு விசுவாசமான கன்னையாக PT பகிரங்கமாக அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த மாத தொடக்கத்திலேயே ஆர்ப்பாட்டங்களின் போது பல கேள்விகளால் ஹனூன் திணறடிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாடங்களில் இருந்து வெளியேறவும் நிர்பந்திக்கப்பட்டார்.

மார்ச் 12 இல் PT இன் அரசியல் குழு வெளியிட்ட ஒரு அறிக்கை, அரசாங்கத்தின் அறிவிப்பு, “ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்கத்தக்கதாக இருந்திருக்கும், ஆனால் தற்போது முற்றிலும் காலம்கடந்துவிட்டது” என்று எச்சரித்தது.

கிட்டத்தட்ட இது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை ஒத்ததான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தது: "வார்த்தைகளை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலம் ஜனாதிபதி மக்களுக்கு உண்மையாக ஒரு உறுதிமொழியை கொடுக்க விரும்பினால், அவர் முழு வெளிப்படைத்தன்மையில் செயல்படும் ஒரு தொழில்வல்லுனர்களின் அரசாங்கத்தை நியமிப்பார்" என்று உறுதியளிக்கும் மற்றும் தேசபக்தி மக்களால் ஆன, பெரும்பான்மை கருத்தை கேட்கக்கூடிய திறன் கொண்ட, பெரும்பான்மை ஆட்சியின் தன்மையை நிர்ணயிக்கும் வரையில் தற்போதைய விவகாரங்களை நிர்வகிக்கவும் தேர்தல்களை நடத்தவும் அதற்கு தேதியை நிர்ணயிக்கவும் கூறுகிறது.

முன்னாள் பிரதமர் அலி பென்ஃபிலிஸின் Talaie El Hourriyet கட்சி உட்பட ஏனைய பிரதான கட்சிகள், புட்டஃபிளிக்காவின் ஆட்சி மற்றும் அதன் அறிவிப்புக்கு எதிராக வெடித்த பாரிய தொழிலாளர் எதிர்ப்புக்கு ஒரு கூட்டு பதிலிறுப்பை வழங்குவது பற்றி விவாதிப்பதற்கு புதனன்று அல்ஜீயர்ஸில் ஒரு கூட்டத்தை நடத்தின. அப்போது, அறிவிப்பை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்களை ஆதரித்தும் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

எதிர் கட்சிகளின் பிரதான கோரிக்கை என்னவென்றால், இராணுவம் அதிகாரத்தில் பெயரளவிலான ஒரு மாற்றீட்டு தலைவரை நியமிக்க வேண்டும், அத்துடன், ஏற்கனவேயுள்ள ஆட்சியில் அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். மார்ச் 15 வெள்ளியன்று, Le Monde நாளிதழுக்கு பென்ஃபிலிஸ் அளித்த ஒரு பேட்டியில், இராணுவத்திற்கும் ஜெனரல் கேயல் சலாஹ் இற்கும் தனது முழு ஆதரவை தெரிவித்து, பின்வருமாறு அவர் கூறினார்: “அல்ஜீரிய மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக இராணுவம் செயல்படக்கூடும் என்றவொரு சூழ்நிலையை என்னால் ஒரு கணம்கூட கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்றார்.