ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron sends the French army against anti-austerity protests

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக மக்ரோன் பிரெஞ்சு ஆயுதப்படையை அனுப்புகிறார்

Alex Lantier
22 March 2019

புதன்கிழமை பிரெஞ்சு அரசு செய்தி தொடர்பாளர் பென்ஜமின் கிறிவோ அறிவிக்கையில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான இவ்வார "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் போது ஆயுதப்படைகளை அணிதிரட்ட இருப்பதாக அறிவித்தார்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக 1954-1962 அல்ஜீரிய போரில் பிரெஞ்சு இராணுவம் பாரிய சித்திரவதை மற்றும் படுகொலைகளை நடத்தியதற்குப் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பிரெஞ்சு ஆயுதப்படை அணிதிரட்டப்படுவது இதுவே முதல்முறையாகும், இது ஒரு வரலாற்று திருப்புமுனையைக் குறிப்பதுடன் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். அதிகரித்தளவில் போர்குணமிக்க எதிர்ப்பை முகங்கொடுத்து, நிதியியல் பிரபுத்துவம் வேகமாக இராணுவ-பொலிஸ் ஆட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த நிலைநிறுத்தல்களுக்காக ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் கூறும் உத்தியோகபூர்வ சாக்குப்போக்கில் பொலிஸ் ஆத்திரமூட்டலின் துர்நாற்றம் வீசுகிறது. சனிக்கிழமை பாரீஸில் "மஞ்சள் சீருடை" அணிவகுப்பின் போது சாம்ப்ஸ்-எலிசே வீதி கடைகள் சூறையாடப்பட்டதற்குப் பின்னர், பயங்கரவாத-தடுப்பு படையான ஆபரேஷன் சென்டினெலின் (Operation Sentinel) துருப்புகள் கட்டிடங்களை பாதுகாக்கவும் மற்றும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் வன்முறையை ஒடுக்க கலகம் ஒடுக்கும் பொலிஸை விடுவிப்பதற்கும் என அரசாங்கம் வாதிடுகிறது.

சனிக்கிழமை பாரீஸில் என்ன நடந்ததென்பது மொத்தத்தில் தெளிவாக இல்லை. சாம்ப்ஸ்-எலிசே வீதியைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுபவர்கள் செயல் நேர்த்தி மிக்க நூற்றுக்கணக்கான கொள்ளையர்கள் என்று வேறுவேறு அதிகாரிகள் கூறியுள்ளனர்—ஆனால் அவர்களை அதிதீவிர-இடது என்றும், “கருப்புடை அணிந்த முகமூடி குழு" (black bloc) அல்லது நவ-பாசிசவாதிகளாக கூட இருக்கலாம் என்றும் அவர்கள் பல்வேறு விதமாக அடையாளம் காணுகின்றனர். எந்த அமைப்போ அல்லது சனிக்கிழமை பொலிஸ் கைது செய்த 250 போராட்டக்காரர்களில் எவரொருவரோ சூறையாடியவர்களாக இதற்கு பொறுப்பாக்கப்படவில்லை. அவர்களில் மூன்று பேர் மட்டும் பாதுகாப்பு சேவைகளால் நன்கறியப்பட்டவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் "வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முந்தைய போராட்டங்களில் ஏற்கனவே பங்கெடுத்தவர்கள்" என்றும் L’Express குறிப்பிட்டது.

உண்மையில் அந்த சிலரில் ஒருவர் ஒரு கடையைச் சூறையாடுகையில், பாரீஸ் செயிண்ட் ஜேர்மன் கால்பந்தாட்ட குழுவிற்கான பொருட்கள் விற்பனை கடையில் திருடுகையில், அடையாளம் காணப்பட்டார். ஒரு பத்திரிகையாளரின் கேமராவுக்குள் சிக்கிய இவர் ஒரு கலகம் ஒடுக்கும் பொலிஸ்காரர் ஆவார், பொலிஸ் பின்னர் அந்த பத்திரிகையாளரை தாக்கியது.

முற்றிலும் ஐயத்திற்கிடமான இத்தகைய சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மக்ரோன் அரசாங்கம் ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுப்பதுடன், நாளைய "மஞ்சள் சீருடை" போராட்டத்திற்கு எதிராக இரத்தம் உறைய வைக்கும் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகிறது. பிரெஞ்சு மக்களில் 70 சதவீதத்தினரை உள்ளடக்கி உள்ள “மஞ்சள் சீருடை" போராட்டங்களில் இணைபவர்கள் அல்லது ஆதரிப்பவர்கள் அனைவரையும் சனிக்கிழமை வன்முறைக்கு "உடந்தையாக" மக்ரோன் கண்டிக்கிறார். அங்கே "சில தன்னடக்கம் இருக்கின்ற நிலையிலும்" கூட, ஒவ்வொருவரிடமும் “பாதுகாப்பு படைகள் மக்களைக் காயப்படுத்துகிறது, அல்லது அதைவிட மோசமாக நடந்து கொள்கிறது என்ற கருத்து உள்ளது" என்று உள்துறை அமைச்சக வட்டாரம் Le Parisien பத்திரிகைக்கு தெரிவித்தது.

இதுபோன்ற கருத்துக்கள் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தன் மற்றும் ஜோர்ஜ் கிளெமொன்ஸோவை மக்ரோன் குறிப்பிட்ட விதத்தில் புகழ்ந்துரைத்ததை நினைவூட்டுகின்றன. பிந்தையவர், ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் பிரான்சுக்குள் ஆயுதப்படை நிலைநிறுத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக அங்கே அதை நிலைநிறுத்திய கடைசி உள்துறை அமைச்சர்களில் ஒருவரான அவர், 18 பேர் ஆயுதப்படைகளால் கொல்லப்படுவதை மேற்பார்வையிட்டார், அப்போது அந்நேரத்தில் இந்த ஆயுதப்படை வழமையாக வேலைநிறுத்தங்கள் மற்றும் மே தின பேரணிகளில் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்தன.

பிரான்சின் "பணக்காரர்களுக்கான ஜனாதிபதிக்கு" உள்ள எதிர்ப்பாலும், அல்ஜீரிய இராணுவ ஆட்சியின் வீழ்ச்சியைக் கோரி கடந்த மாதம் வெடித்த பாரிய போராட்டங்களாலும் ஸ்தம்பித்து, அரசாங்கம் மக்களைப் பயமுறுத்த முனைந்து வருகிறது என்பதுடன், அவசியமானால், போராட்டங்களை இரத்தத்தில் மூழ்கடிக்க முயலும் நிலைமைகளுக்குத் திரும்பவும் விரும்புகிறது. எவ்வாறிருப்பினும் இது வெறுமனே தனிப்பட்ட பிரெஞ்சு நிகழ்வுபோக்கு இல்லை, மாறாக அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்புக்கு எதிராக எதேச்சதிகாரத்தை ஊக்குவிப்பதும் இராணுவத்திடம் தஞ்சம் புகுவதும் சர்வதேச அளவில் நிதியியல் பிரபுத்துவத்தில் அதிகரித்து வரும் ஒருமித்த வெளிப்பாடாக உள்ளது.

மக்ரோன் பிரான்சுக்குள் இராணுவத்தை நிலைநிறுத்துகையில், ட்ரம்ப் நிர்வாகமோ அமெரிக்காவில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது, அதேவேளையில் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக துருப்புகளை அனுப்புகிறது. இதேபோன்ற நிகழ்வுபோக்குகள் ஐரோப்பா எங்கிலும் நடந்து வருகின்றன. ஜேர்மனியில் அதிதீவிர வலதுசாரி பேராசிரியர்கள் ஹிட்லரின் குற்றங்களைப் பூசிமொழுகுகின்றனர் என்பதோடு, பாசிசவாத Vox கட்சி உறுப்பினர்கள் ஸ்பெயினில் மார்க்சிசத்திற்குத் தடைவிதிக்க அழைப்பு விடுத்து வருகின்றனர், அதேவேளையில் பிரிட்டன் அதிகாரிகளோ பிரெக்ஸிட்டின் போது பிரிட்டனுக்குள் ஆயுதப்படைகளை நிலைநிறுத்த தயாரிப்பு செய்து வருகின்றனர்.

வர்க்கப் போராட்டத்தின் அதிகரித்து வரும் சர்வதேச மேலெழுச்சிக்கு விடையிறுப்பதில் அதிவலது ஆட்சி வடிவங்களை நோக்கிய நிதியியல் பிரபுத்துவத்தின் முனைவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர், பிரான்சின் அரசு-நிதியுதவி பெறும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு வெளியே சமூக ஊடகங்கள் மூலமாக, நூறாயிரக் கணக்கானவர்கள் பின்னோக்கி அதிகரித்து செல்லும் எரிபொருள் வரியுயர்வுகள், பணக்காரர்களுக்கான வரி வெட்டுக்கள், குறைவூதியங்கள், இராணுவச் செலவினங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக "மஞ்சள் சீருடை" போராட்டங்களை தொடங்கினர். அதே நேரத்தில், அமெரிக்க ஆசிரியர்களில் இருந்து போர்ச்சுக்கல் செவிலியர்கள் வரையில், மெக்சிக்கன் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் வரையில், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் பாரிய வேலைநிறுத்தங்கள் பரவின.

வர்க்க போராட்டம் நசுக்கப்பட்டும், 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டும் பல தசாப்தங்களுக்குப் பின்னர், முதலாளித்துவத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில், வர்க்க போராட்டம் மீண்டும் உலகெங்கிலும் மீளெழுச்சி பெற்று வருகிறது. “தேர்தலில் தோற்றுவிடுவோம் என்றோ, 'சீர்திருத்தம்' செய்ய முடியாமல் போகலாம் என்பதைக் குறித்தோ, அல்லது பங்குச்சந்தை இழப்புக்களைக் குறித்தோ அல்ல, மாறாக கிளர்ச்சி, கலகம், கொடிய வறுமை நிலை குறித்து" நிதியியல் பிரபுத்துவம் இப்போது அஞ்சுகிறது என்று Le Monde diplomatique எழுதியது. இருந்தாலும் கூட அது 2008 முறிவுக்குப் பின்னர் வரி வெட்டுக்கள் மற்றும் பொதுச்சொத்தில் இருந்து வழங்கப்பட்ட பிணையெடுப்புகளால் பெற்றுள்ள ட்ரில்லியன் கணக்கிலான யூரோக்களில் ஒரு பகுதியை கூட தொழிலாளர்களின் இரத்தம் மற்றும் வியர்வைக்கு விலையாக கொடுக்க விரும்பவில்லை.

“மஞ்சள் சீருடை" இயக்கத்திற்கு எதிராக ஆயுதப்படைகளை மக்ரோன் அணித்திரட்டுவதுடன், வர்க்க போராட்டத்தின் இந்த மீளெழுச்சியினது முதல் கட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தவர்கள், சுவிஸ் பாணியிலான குடிமக்கள் ஆரம்பித்து வைத்த சர்வஜன வாக்கெடுப்புகள் (RIC) போன்ற ஏதோவித உத்தி ஒரு தேசிய ஜனநாயக சீர்திருத்தத்தின் அடிப்படையில் மக்ரோன் இப்போதைய அமைப்புகள் மூலமாக அவர்களுடன் ஓர் உடன்பாட்டை எட்ட அவரை நிர்பந்திக்க அனுமதிக்கும் என்று பல மாதங்களாக நம்பியிருந்தார்கள். ஆயுதப்படைகளை அனுப்புவதற்கான மக்ரோனின் முடிவு சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும்: அவர்கள் முகங்கொடுக்கும் மாற்றீடுகள் சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்பதல்ல, மாறாக புரட்சியா அல்லது எதிர்புரட்சியா என்பதாகும்.

இராணுவ-பொலிஸ் சர்வாதிகார அச்சுறுத்தலால் மேலெழுந்துள்ள இந்த முக்கிய கேள்விகளுக்கான பதில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதும், அதற்குள் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ-சார்பு கட்சிகளில் இருந்து சுயாதீனப்பட்ட நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதும் மற்றும் அவற்றை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதுமாக உள்ளது.

தொழில்முறையிலான ஆயுதப்படைகள் மற்றும் கலகம் ஒடுக்கும் பொலிஸ் கூட்டத்தால் தொழிலாளர்களுக்கு முன்னிறுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல் நிஜமானதும் மிகவும் அபாயகரமானதுமாகும். ஆனால் வரலாறு நெடுகிலும், பிற்போக்குத்தனமான ஆட்சிகள், அவற்றிடையே தீர்வுகள் இல்லாத சிக்கலான சமூக பிரச்சினைகளை அப்பட்டமான ஒடுக்குமுறையும் பீதியூட்டலும் கடந்து வரச் செய்துவிடும் என்று நம்பி வந்துள்ளன; இதுவொரு பேராபத்தான தப்புக்கணக்காக இருக்குமென்பது இம்முறையும் நிரூபிக்கப்பட உள்ளது.

பிரான்சிலும் ஏனைய இடங்களிலும் ஆயுதப்படையிடமும் கலகம் ஒடுக்கும் பொலிஸிடமும் பாரிய ஆயுத தளவாடங்கள் உள்ளன என்றாலும், அவர்கள் இப்போது ஆழ்ந்த அன்னியப்படலையும், அரசாங்கம் மற்றும் நிதியியல் பிரபுத்துவம் மக்களிடையே செல்வாக்கு இழந்திருப்பதையும் முகங்கொடுக்கின்றனர். அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையிலான எதிர்ப்பை அணித்திரட்ட மற்றும் ஒருங்கிணைக்க சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஏற்படுத்துவதற்கான போராட்டமே மக்ரோனின் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆயுதப்படைகளை அனுப்பும் மக்ரோனின் நகர்வு, சில குறிப்பிட்ட அடிப்படை யதார்த்தங்களைத் தெளிவுபடுத்துகின்றது. பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலுமான அனைத்து தொழிலாளர்களும், ஆளும் உயரடுக்கு எதிராக, மற்றும் அரசுக்கு எதிராக, மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் தனியுரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் விலைபேசவும் இருக்கின்ற அதன் "ஆயுதமேந்திய நபர்களின் அமைப்புகளுக்கு" எதிராகவும் ஓர் அரசியல் போராட்டத்தில் உள்ளனர்.

மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு, ஒரு சோசலிச வேலைதிட்டத்திற்கான தொழிலாளர்களின் போராட்டமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை (Parti de l'égalité socialiste – PES) கட்டமைப்பதற்கான போராட்டமும் அவசியப்படுகிறது.