ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The working class and the fight to free Julian Assange

ஜூலியான் அசான்ஜை விடுவிப்பதற்கான போராட்டமும் தொழிலாள வர்க்கமும்

James Cogan,
23 February 2019

ஜூன் 19, 2012 இல் இருந்து, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியான் அசான்ஜ் ஈக்வடோரின் சிறிய இலண்டன் தூதரகத்திற்குள், நேரடி சூரிய ஒளி படாத, போதுமான மருத்துவ சிகிச்சை இல்லாத, கடந்த ஆண்டிலிருந்து வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ளக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு கைதியாக இருந்து வருகிறார்.

ஒரு தைரியமிக்க பத்திரிகையாளரும், செய்தி வெளியீட்டாளருமான அசான்ஜ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களையும், மற்றும் உலகெங்கிலுமான ஆளும் வர்க்க குற்றங்களையும் ஊழல்களையும் அம்பலப்படுத்த உதவினார் என்ற காரணத்திற்காக, அமெரிக்கா, மற்றும் உலகம் முழுவதுமுள்ள அதன் எடுபிடி நாடுகளினால் இரக்கமற்ற வகையில் அவர் வேட்டையாடப்பட்டு வருகிறார். பேச்சு சுதந்திரத்திற்கு எதிராகவும், இணையத்தில் எதிர்த்தரப்பு குரல்களை தணிக்கை செய்வதற்காகவும் பூகோள அளவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் முகப்பாக அவர் மீதான இந்த துன்புறுத்தல் இருக்கின்றது.

அசான்ஜ் மீது பாலியல் தாக்குதல் தொடர்பான “சந்தேகத்தின்” பேரில் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சுவீடனுக்கு அவரை நாடுகடத்த பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் ஒரு பிடிவராந்திற்கு உத்தரவிட்ட பின்னர், ஈக்வடோரிடம் அரசியல் தஞ்சம் கோரும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

அப்போது, அசான்ஜ் சுவீடனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில், அவரை அமெரிக்காவிற்கு கொண்டு வர அதன் சொந்த நாடுகடத்தல் விண்ணப்பத்தை அமெரிக்க நீதித்துறை வெளியிடும் என்பதையும் அசான்ஜூம் அவரது வழங்கறிஞர்களும் சரியாக மதிப்பீடு செய்தனர். வேவுபார்த்தல் குறித்த தவறான குற்றச்சாட்டுக்களின் பேரில் அமெரிக்காவில் ஒரு ஜோடிப்பு வழக்கை எதிர்கொள்ளும் அபாயத்தை அசான்ஜ் முகம்கொடுத்தார், இன்னமும் அதற்கு முகம் கொடுத்து வருகிறார்.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் அசான்ஜை பேச்சு சுதந்திரத்திற்கான ஒரு முதன்மை போராளியாக பார்க்கின்றனர். இருப்பினும், சர்வதேச சோசலிச அமைப்பு (International Socialist Organization), ஜாக்கோபின் (Jacobin) இதழ் மற்றும் சோசலிச மாற்று (Socialist Alternative) போன்ற போலி இடது அமைப்புக்கள், அவரை கைவிட்டு விட்டன அல்லது அவரை கைது செய்யவோ அல்லது நாடுகடத்தவோ கோரிக்கை விடுக்கும் புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஏகாதிபத்திய பிரச்சாரக் குழுக்களுடன் அவை இணைந்துவிட்டன என்றே கூறலாம்.

2011 இல் துனிசியாவிலும், பின்னர் எகிப்திலும் எழுச்சி பெற்ற தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களின் வெடிப்பைத் தொடர்ந்து, வலது நோக்கிய மற்றும் ஏகாதிபத்திய சார்புநிலை எடுத்துக்கொண்டதன் ஒரு பகுதியாக அசான்ஜூக்கு எதிராக அவர்கள் திரும்பியுள்ளனர். தொழிலாள வர்க்கம் அரசியலில் நுழைந்தமையானது, கடந்த நான்கு தசாப்தங்களாக தொழிலாளர்களின் நிலைமைகளை அழிப்பதன் மூலமாக தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ள உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவினரை அச்சுறுத்துகின்றது.

சோசலிஸ்டுகளாக தங்களை தவறாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் அமைப்புக்களின் மத்தியில் இந்த பிரதிபலிப்பானது மிகக் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டது. 2011 இல், முயம்மர் கடாபியின் லிபிய ஆட்சியை தூக்கியெறிவதற்கான அமெரிக்க தலைமையிலான இராணுவ தலையீட்டிற்கும், அதனைத் தொடர்ந்து, பஷார் அல் அசாத் தலைமையிலான மதசார்பற்ற ஆட்சிக்கு எதிராக சிரியாவில் ஒரு குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தத்தை தூண்டியதான அமெரிக்க ஆதரவிலான சுன்னி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கும் இந்த குழுக்கள் ஆதரவளித்தன.

ஆஸ்திரேலிய சோசலிச மாற்றீடு (Socialist Alternative) அமைப்பானது, அமெரிக்க ஆதரவிலான சிரிய இஸ்லாமிய “கிளர்ச்சியாளர்களுக்கு” அவர்கள் வழங்கும் ஆதரவை விமர்சிப்பதை “முழங்கால் நடுங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு” எனும் பேரில் கண்டனம் செய்தது.

மத்திய கிழக்கில் நவ காலனித்துவ நடவடிக்கைகளுடன் போலி இடதுகள் இணைந்திருந்த அதே நேரத்தில், பாலின மற்றும் அடையாள அரசியலை நாடு ஊக்குவிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் மற்றும் திசைதிருப்பும் வகையிலான சர்வதேசரீதியான ஆளும் உயரடுக்கின் நனவுபூர்வமான  முயற்சிகளையும் அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.

உதாரணமாக, அமெரிக்க சோசலிச மாற்றீடு அமைப்பு, டிசம்பர் 2010 இல், அசான்ஜ் இற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஜோடிக்கப்பட்டவை என்றும், “வெட்கக்கேடானவை” என்றும் அறிவித்தது. என்றாலும், ஆகஸ்ட் 2012 க்குள், இக்கூற்றுக்கள் “விசாரணை செய்யப்பட வேண்டும்” என்றும் “அசான்ஜ் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டையாடல் அவர் குற்றமற்றவர் என அர்த்தப்படுத்தாது” என்றும் வலியுறுத்தி, முற்றிலும் எதிர்மாறான நிலைப்பாட்டிற்கு அது தாவியது.

இந்த குழுக்கள், குற்றமற்றவர் என்ற ஊகம், மற்றும் முறையான விசாரணைக்கான உரிமை போன்ற அடிப்படை ஜனநாயக கொள்கைகளை அவமதிக்கும் விதத்தில், வலதுசாரி #MeToo இயக்கத்திற்கு இணையாக, அசான்ஜ் இற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஒரு பங்கிரங்கமான ஜோடிப்பாக இருந்தபோதிலும் (மேலும் குற்றவியல் வழக்கின் அடிப்படையில் பின்னர் அது கைவிடப்பட்டது) அதை பற்றி விசாரிக்க வேண்டும் என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு எடுக்கவேண்டும் என கோருகின்றன.

ஜூலியான் அசான்ஜ், —இவர் உயிரோடு இருப்பது ஆளும் வர்க்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது— மற்றும் விக்கிலீக்ஸூக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பது, ஏகாதிபத்தியத்துடன் இணைந்து போகும் மற்றும் அடையாள அரசியல் பிரச்சினைகளை உயர்த்திப்பிடிக்கும் அமைப்புக்களுக்கும் தனிநபர்களுக்கும் சாத்தியப்படாத விடயங்களாக இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் புஷ் நிர்வாகம் இழிவாக நிகழ்த்திய போர் குற்றங்களை வெளிப்படுத்த விக்கிலீக்ஸ் முனைந்தது என்பது ஒரு காரணமாக இருந்தது. மேலும், அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்ட மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்பு முறையை அச்சுறுத்திய செய்திகளை வெளியிட அதற்கிருந்த சுயாதீனமும், செய்திகளை வெளியிடும் முக்கிய ஊடகமாக அது இருந்ததும் முற்றிலும் மற்றொரு முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால், அசான்ஜ் துன்புறுத்தப்படுவது குறித்து அவர்களது மவுனமான ஒத்துழைப்பை இந்த வலதுசாரி அமைப்புக்கள் தொடரும் அதேவேளையில், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள அனைவரது மத்தியில் ஒரு பத்திரிகையாளராக அவருக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.


அசான்ஜை பாதுகாப்பதற்கான ஜூன் 17, 2018 கூட்டத்தில் ஜேம்ஸ் கோகன் உரையாற்றுகிறார்

சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா), மார்ச் 3 அன்று சிட்னியிலும், மார்ச் 10 அன்று மெல்போர்னிலும் அசான்ஜை விடுவிக்கக் கோரிக்கை விடுக்கும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்து வருகின்றது. ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் சொந்த குடிமக்களில் ஒருவர் துன்புறுத்தப்படுவதற்கு ஒத்துழைப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக தலையீடு செய்து, அதன் இராஜதந்திர மற்றும் சட்ட அதிகாரங்களின் முழு பலத்தையும் பிரயோகித்து, அசான்ஜை ஈக்வடோரிய தூதரகத்தை விட்டு விடுவிக்க அனுமதியளிக்கவும் ஆஸ்திரேலியாவிற்கு அவரை திருப்பியனுப்பவும் பிரிட்டனை நிர்பந்திக்க இந்த பேரணிகள் வலியுறுத்தும்.

SEP ஆர்ப்பாட்டங்கள், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் கொள்கை ரீதியிலான தனிநபர்கள், வெளியீடுகள் மற்றும் அமைப்புக்களின் முக்கிய ஆதரவை வென்றுள்ளன. இது, மார்ச் 3 சிட்னி ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றவுள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஜோன் பில்ஜெர் (John Pilger) மற்றும் பொது உரிமைகள் வழக்கறிஞர் பேராசிரியர் ஸ்டுவார்ட் ரீஸ் (Stuart Rees) ஆகியோரை உள்ளடக்கியது. மேலும் இது, பாடகர் / பாடலாசிரியருமான ரோஜே வாட்டர்ஸ் (Roger Waters), சுயாதீனமான பத்திரிகையாளர்கள் கிறிஸ் ஹெட்ஜஸ் (Chris Hedges), எலிசபெத் வோஸ் (Elizabeth Vos) மற்றும் ஜோ லோரியா (Joe Lauria) போன்றோரையும், மேலும் அசான்ஜின் விடுதலைக்காகப் போராடும் பரந்த விக்கிலீக்ஸின் பாதுகாப்பு இயக்கத்தையும் உள்ளடக்கியது.

சோசலிச சமத்துவக் கட்சி அசான்ஜை பாதுகாக்கையில், இது ஆளும் தட்டினரின் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பூகோள அளவிலான தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில், தொழிலாள வர்க்கம் என்பது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான சக்திவாய்ந்த, வெகுஜன சக்தி என்பதை வலியுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலுமாக, அமெரிக்காவில் ஆசிரியர்களில் தொடங்கி மெக்சிக்கோவில் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் வரையிலும், இந்தியாவில் பொதுத்துறை ஊழியர்கள் வரையிலும் என வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலைகளில் தொழிலாள வர்க்கம் தீவிரப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த இயக்கம் விரிவடைந்து வரும் நிலையில், இது கட்டாயம் மேலும் தொடர்ந்து அரசியல் கோரிக்கைகளை அதிகரித்தளவில் எழுப்பும். அக்கோரிக்கைகளில் மிக முக்கியமானவையாக வெளிப்பாட்டு சுதந்திரமும், உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையும் இருக்கும். எனவே, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஜூலியான் அசான்ஜின் விடுதலைக்காக போராடுவது இன்றியமையாத ஒன்றாகும். வரவிருக்கும் போராட்டங்களில், பாரியளவிலான தொழிலாளர்களால் இது தொடர்பான கோரிக்கைகள் கட்டாயமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.