ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK Labour leader Corbyn endorses Blairite call for second Brexit referendum

பிரிட்டன் தொழிற் கட்சி தலைவர் கோர்பின் இரண்டாவது பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்புக்கான பிளேயரிச அழைப்பை ஆமோதிக்கிறார்

By Robert Stevens
27 February 2019

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின், “சேதம் ஏற்படுத்தக்கூடிய டோரி பிரெக்ஸிட் ஒன்று இந்த தேசத்தின் மீது திணிக்கப்படுவதைத் தடுக்க" அவர் இரண்டாம் கருத்து வாக்கெடுப்பை ஆதரிக்க தயாராக இருப்பதாக திங்களன்று மாலை அறிவித்தார்.

இந்நகர்வானது, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருப்பதை ஆதரிக்கக் கோரும் அக்கட்சியின் பிளேயரிச பிரிவின் பல மாதகால அழுத்தத்திற்குப் பின்னர் வந்தது — கடந்த செப்டம்பர் மாதம் தொழிற் கட்சியின் வருடாந்திர மாநாடுக்குப் பின்னர் இருந்து அது தீவிரப்படுத்தப்பட்டது.

இப்போது வரையில் கோர்பின், தொழிற் கட்சி அதன் மாநாட்டில் ஒப்புக்கொண்ட கொள்கைக்கிணங்க, டோரிக்களை ஒரு பொது தேர்தலில் ஜெயித்த பின்னரும் கூட, அதாவது "தேசிய நலனுக்காக" ஒரே ஐரோப்பிய சந்தையை வரிச் சுதந்திரத்துடன் அணுகும் வகையில் பிரிட்டன் இலகுவாக வெளியேறுவதை (soft-Brexit) நடைமுறைப்படுத்தவே தொழிற் கட்சி விரும்புகிறது என்றும், அது சாத்தியமில்லாது ஆகும்பட்சத்தில் மட்டுமே அவர் "மக்களின் வாக்கெடுப்பாக" இரண்டாவது கருத்து வாக்கெடுப்பு உட்பட மற்ற தெரிவுகளை ஆதரிப்பார் என்றும் நிலைப்பாடு கொண்டிருந்தார்.

அந்த பத்திரிகை வெளியீடு அறிவித்தது, “ஏதோவொரு வழியில், உடன்பாடு எட்டப்படாமல் போவதைத் தடுக்க நம் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்வோம், பெருவாரியாக நிராகரிக்கப்பட்ட தெரேசா மே உடன்படிக்கையின் அடிப்படையில் சேதம் ஏற்படுத்தக்கூடிய ஒரு டோரி பிரெக்ஸிட்டை எதிர்ப்போம். அதனால் தான், நமது மாநாட்டு கொள்கைக்கு இணங்க, நம் தேசத்திற்கு சேதம் ஏற்படுத்தக்கூடிய டோரி பிரெக்ஸிட்டைத் தடுப்பதற்காக, மக்கள் வாக்கெடுப்பை ஆதரிக்கும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிக்க அல்லது முன்னெடுக்கவும் கூட நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம்.”

தொழிற் கட்சியின் பிரெக்ஸிட் திட்டத்தை எடுத்துக்காட்டும் வகையில், கோர்பின் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை முன்நகர்த்தி உள்ளார், இதன் மீது இன்று மாலை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த அரசியலமைப்பு திருத்தம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், அது ஒரு பொது தேர்தலுக்கான கோரிக்கைக்குப் பதிலாக, இரண்டாவது கருத்து வாக்கெடுப்பை அரங்கேற்றுவதற்கான ஆதரவைக் கொண்டு வரும்.

அடிப்படையில் கோர்பினின் நகர்வு, பிரெக்ஸிட்டின் விளைவு குறித்து ஆளும் வர்க்கத்தினுள் நிலவும் மோதல்களுக்குள் அரசியல் சக்திகளின் சமநிலையை மாற்றிவிடாது என்பதுடன், அதேவேளையில் பிளேயரிசவாதிகள் முன்வைத்த ஒவ்வொரு கோரிக்கையையும் அவர் ஒப்புக் கொள்வார் என்பதை அது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிளேயரிசவாதிகள் ஒரு பொதுத் தேர்தலை எதிர்க்கிறார்கள் என்பதையும், அதிகாரத்தில் பழமைவாதிகள் இருப்பதையே விரும்புகிறார்கள் என்பதையும் அவர்கள் பல முறையும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

ஆனால், இரண்டாவது கருத்து வாக்கெடுப்பை தொழிற் கட்சியே முன் கொண்டு வந்தாலும் கூட இந்தக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் அதுபோன்றவொரு முடிவுக்குப் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. தொழிற் கட்சியின் 35 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்க்கக்கூடும். அக்கட்சியின் கணிசமான வலதுசாரி உறுப்பினர்கள் உட்பட தொழிற் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெருவாரியாக பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் வடக்கு இங்கிலாந்தில் ஆசனங்களைக் கொண்டுள்ளனர். இரண்டாவது கருத்து வாக்கெடுப்புக்கு எதிரான பட்டியலில் குறைந்தபட்ச மூன்று நிழலமைச்சரவை மந்திரிகளும் உள்ளனர். அனைத்திற்கும் மேலாக, ஷரத்து 50 ஐ விரிவாக்கவும் மற்றும் பிரெக்ஸிட்டைத் தாமதப்படுத்தவும் அங்கீகரிக்கும் வகையில் பிளேயரிச Yvette Cooper ஆல் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு அரசியலமைப்பு திருத்தத்தின் போது, தொழிற் கட்சியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எட்டு நிழலமைச்சரவை மந்திரிகள் எதிராக வாக்களித்தனர் அல்லது வாக்கெடுப்பதைத் தவிர்த்திருந்தனர்.

கோர்பினின் இந்த சமீபத்திய அடிபணிவு, பிரதம மந்திரி தெரேசா மேயின் நாடாளுமன்ற அறிக்கைக்கு ஒரு சில மணி நேரத்திற்குப் பின்னர் வந்தது, அதில் அப்பெண்மணி ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவர் எட்டிய திருத்தத்திற்கு கூடுதல் அவகாசம் பெற உபாயங்களைக் கையாண்டிருந்தார். அப்பெண்மணி அவரது கட்சியில் உள்ள பிரிட்டன் கடுமையாக-வெளியேறுவதை (hard-Brexit) ஆதரிக்கும் பிரிவுக்கும் மற்றும் அவரது சிறுபான்மை அரசாங்கத்தை நிலைநிறுத்த அவர் சார்ந்திருக்கும் ஜனநாயக ஒன்றியவாத கட்சியையும் திருப்திப்படுத்துவதற்காக, வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையே பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய எல்லை (post-Brexit border) சம்பந்தமாக அந்த வெளியேறும் உடன்படிக்கையில் சில பகுதிகளை மாற்ற முயன்று வருகிறார்.

மார்ச் 12 இல் அவர் உடன்படிக்கையின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் "அர்த்தமுள்ள" வாக்கெடுப்பை வழங்க இருப்பதாக மே தெரிவித்தார். இந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்தால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான தேதியான மார்ச் 29 இல் உடன்பாடு எட்டப்படாமலேயே பிரிட்டன் வெளியேறுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்களா என்பதன் மீது அதற்கடுத்த நாள் மற்றொரு வாக்கெடுப்பை அவர் நடத்துவார். உடன்பாடு எட்டப்படாமலேயே பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அது பின்னர் ஷரத்து 50 ஐ கொண்டு பேச்சுவார்த்தை நிகழ்முறையைத் தாமதப்படுத்த கோரும் வகையில் —அதுவும் குறைந்தபட்சம் ஜூன் இறுதி வரையில் மட்டுமே இருக்கும் என்கின்ற நிலையில்— மார்ச் 14 இல் மற்றொரு வாக்கெடுப்பைக் கொண்டு வரும்.

ஐரோப்பிய ஆய்வுக் குழுவினுள் உள்ள பிரிட்டன் கடுமையாக வெளியேறுவதை ஆதரிக்கும் அவரது கட்சியின் பிரிவுக்கு முறையிட்ட மே, “ஜூன் மாதத்திற்குப் பின்னர் ஒரு நீட்சி என்பது பிரிட்டன் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பதைக் குறிக்கும். இப்போதிருந்து அண்மித்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு வாக்களித்த 17 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு என்ன கூறுவது? ... ஒரு சிறிய நீட்சி ஒரேயொரு முறைதான் கிடைக்கும் —ஜூனுக்குப் பின்னர் கிடைக்காது— என்பதில் சபை தெளிவாக இருக்க வேண்டும்,” என்றார்.

பிரிட்டன் வெளியேறுவதை இரண்டாண்டுகளுக்கு ஒத்தி வைக்குமாறு கோரி முன்னணி ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான மேயின் தற்போதைய சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், பிரச்சினையைத் தவிர்க்கவோ அல்லது தள்ளிப்போடவோ அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

தலைமைக்கான போட்டியில் கோர்பினால் ஓரங்கட்டப்பட்டு மூன்றாண்டுகளுக்குச் சற்று அதிகமான காலத்திற்குப் பின்னர், கட்சிக் கொள்கையானது நடைமுறையளவில் பிளேயரிசவாதிகளின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதையே இவ்வார சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தொழிற் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவிய நடவடிக்கை, இவர்களைத் தொடர்ந்து உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் சுதந்திரக் குழுவை (pro-EU Independent Group) அமைப்பதற்காக கடந்த வாரம் மூன்று டோரிக்கள் இவர்களுடன் இணைந்த நிலையில், இந்த நிகழ்வுபோக்கு தீவிரமடைந்துள்ளது. தொழிற் கட்சியின் 20 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறுபரிசீலனை செய்து கொண்டிருப்பவர்களும் கட்சியிலிருந்து வெளியேற பரிசீலித்து வருவதாக, அதிலேயே தங்கியிருக்கலாம் என்பதை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கு வாரயிறுதியில் செய்திகள் கசியவிடப்பட்டன.

கட்சி மாறிய எட்டு பேரும் வெளியேறிய போது, மற்றொரு கோர்பின்-விரோத நாடாளுமன்ற உறுப்பினரும் (Ian Austin) இவர்களைத் தொடர்ந்து செல்லவிருக்கின்ற நிலையில், எஞ்சிய பிளேயரிச நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்பதே தொழிற் கட்சி உறுப்பினர்களின் பிரதான உணர்வாக இருந்தது.

அதற்கு மாறாக, கோர்பினின் விடையிறுப்போ பிளேயரிசவாதிகளுடன் மீண்டுமொருமுறை நல்லிணக்கத்திற்கு அழைப்புவிடுப்பதாக உள்ளது. அவரின் சரணடைவும் அவரின் நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெலின் அதே நிலையும் தொழிற் கட்சியின் துணை தலைவர் டோம் வாட்சனை பிபிசி இன் ஆண்ட்ரூ மர் நிகழ்ச்சியில் சுதந்திரமாக இவ்வாறு பேச வைத்தது: கோர்பின் "கட்சியை ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதோடு, சோசலிச கண்ணோட்டங்களை விட சமூக ஜனநாயக கண்ணோட்டங்கள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக பலம் சேர்க்க நிழலமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும்,” என்றார். “கொள்கைகளை அபிவிருத்தி செய்வதில் கட்சியின் சமூக ஜனநாயக பாரம்பரியத்தை நம்பும்" வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு குழுவை அவர் இவ்வாரம் கூட்ட இருப்பதாக அறிவித்தார்.

பிளேயரிசவாதிகளை எதிர்த்து போராட மறுப்பது, கோர்பினின் ஆதரவாளர்களைப் பொறுத்த வரையில் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும், இவர்கள் இஸ்ரேல் அரசையோ மற்றும் பாலஸ்தீனர்கள் மீதான அதன் ஒடுக்குமுறையையோ விமர்சிக்க துணியும் எவரொருவருக்கு எதிராகவும் யூத-எதிர்ப்புவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் முன்பினும் அதிக வெறித்தனமாக வேட்டையாடப்படுவதை முகங்கொடுக்கிறார்கள்.

கட்சியில் குற்றஞ்சாட்டப்படும் யூத-எதிர்ப்புவாத விடயங்கள் அனைத்தையும் "பட்டியலிடவும் மற்றும் கண்காணிக்கவும்...” இப்போது தனது அலுவலகத்திற்கு நகர்த்த இருப்பதாக வாட்சன் இவ்வாரம் தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்.

இது, கோர்பினே தனிப்பட்டரீதியில் பார்த்துள்ள யூத-எதிர்ப்புவாதம் சம்பந்தமான 50 விடயங்களை அவர் புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டிய பின்னர் நடந்தது. யூத-எதிர்ப்புவாதம் குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மேற்பார்வையிட, முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயருடன் தங்கியிருந்தவரும், நெருக்கமான நம்பிக்கைக்குரியவரும் மற்றும் 2003 இன் சட்டவிரோத ஈராக் படையெடுப்பில் ஒரு முக்கிய ஆலோசகராக இருந்தவருமான சார்ல்ஸ் ஃபல்கொனரை வரவேற்றதே கோர்பினின் விடையிறுப்பாக இருந்தது. அவர் "ஒவ்வொன்றையும் கண்காணிக்க மற்றும் ஒவ்வொருவருடனும் பேச" அனுமதிக்கப்படுவார் என்று டெய்லி மெய்ல் பத்திரிகைக்கு ஓர் ஆதாரநபர் கூறினார்.

பிரிட்டனில் சர்வசாதாரணமாக மிகவும் வெறுக்கப்படும் அரசியல்வாதியாக இருந்தவாறு ஒரு தொழிற் கட்சி உறுப்பினராக இருந்து வரும் பிளேயரே கூட, அந்த சுதந்திர குழுவை உருவாக்குவதற்காக பிளவை உண்டாக்கிய அவரின் செல்லப்பிள்ளைகளை புகழ்ந்துரைத்தார். “தொழிற் கட்சியின் அங்கத்துவம்" "இடதின் ஜனரஞ்சகவாதத்திற்கு அடிபணிந்துள்ளதாக" அவர் குறைகூறினார்.

யூத-எதிர்ப்புவாத அவதூறுகளைப் பேசுவதற்கு உறுதிப்படுத்திக் கொண்டு அவர் அறிவித்தார், “கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் எரிச்சல் தொழிற் கட்சியின் யூத நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீடித்த தாக்குதலின் கீழ் வைக்கப்பட்டிருப்பதுடன் சேர்ந்து யூத-எதிர்ப்புவாதம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக உள்ளது ... இரண்டு பிரதான கட்சிகளுக்கு உள்ளேயும், அவற்றுக்கு வெளியேயும் மாற்றி மாற்றி தாக்கிக் கொள்கின்ற சண்டை நடந்து வருகிறது, இதில் கடந்த வாரம் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய அரசியல் குழுவை உருவாக்க கட்சி மாறினார்கள்.”

தொழிற் கட்சிக்கு வெளியே ஓர் அரசியல் குழுவாக்கத்திற்கான இந்த பகிரங்கமான ஆதரவு கோர்பினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதுடன் கூட, எந்தவொரு வடிவ கண்டனத்தில் இருந்தும் பிளேயர் விடுபடுகிறார்.

இத்தகைய அபிவிருத்திகள், கோர்பின், தொழிற் கட்சிக்கு உண்மையான ஒரு சோசலிச கட்சியாக மறுவடிவம் வழங்குவார் என்ற ஒவ்வொரு போலி-இடது போக்கும் விடாப்பிடியாக ஊக்குவித்து வரும் பொய்யை அம்பலப்படுத்துகிறது.

இத்தகைய அபிவிருத்திகளானது, பிளேயரிசவாதிகளின் அரசியல் முன்முனைவைக் கையாள்வதிலும் மற்றும் உத்தியோகபூர்வ அரசியலில் வலதை நோக்கிய ஓர் அபாயகரமான மறுகுழுவாக்கத்திற்கு ஒத்துழைப்பதிலும் நேரடியான பொறுப்பு கோர்பினுடையது என்ற புரிதல் தொழிற் கட்சியின் உறுப்பினர்களிடையே அதிகரித்து வருவதற்கே இட்டுச் செல்கின்றன. இது இடதை நோக்கி உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகள் தொழிற் கட்சியிலிருந்து உடைத்துக் கொண்டு, சோசலிச சமத்துவக் கட்சியால் (SEP) தொடர்ந்து தொழிலாள வர்க்கம் தெளிவுபடுத்தப்பட்டு வருவதன் அடிப்படையில், அடித்தளத்தை அமைக்கிறது.