ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Some economic and political conclusions
The ten-year stock market bull run

சில பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகள்

பத்தாண்டு பங்குச் சந்தை ஏற்றம்

Nick Beams
9 March 2019

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களுக்கு அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பரந்த சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கச்செய்துள்ளதும் மற்றும் நூறு பில்லியன் கணக்கான டாலர்களால் நிதிய செல்வந்த தட்டுக்களை செல்வந்தர்களாக்கிய 2008 உலகளாவிய நிதிய நெருக்கடியை அடுத்து, அமெரிக்க பங்குச்சந்தைகளில் சாதனையளவுக்கு வலுவான ஏற்றம் தொடங்கிய பத்தாவது ஆண்டை இன்று குறிக்கிறது.

கடந்த தசாப்தத்தில், அமெரிக்க அரசு, நிதியியல் ஆணையங்கள் மற்றும் அதிலும் முக்கியமாக அமெரிக்க பெடரல் ரிசர்வும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளின் விளைவாக, நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டுள்ளன. இது டோவ் சந்தை மற்றும் எஸ்&பி 500 சந்தைகளை 300 சதவீதத்திற்கு அதிகமாகவும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக்கை கிட்டத்தட்ட 500 சதவீதத்திற்கும் உயர்த்தி உள்ளது.

2011 இல் வெளியிடப்பட்ட செனட் அறிக்கையின் வார்த்தைகளில் கூறுவதானால், நிதியியல் அமைப்புமுறை  "பேராசை, நலன்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் நிறைந்த பாம்புப்புற்று" போலுள்ளது என்று அந்த பொறிவைக் குறித்த விசாரணைகள் வெளிப்படுத்தின. ஆனால் அந்த குற்றகர நடவடிக்கைக்காக எவரொருவரும் தண்டிக்கப்படவில்லை, ஒபாமாவின் அட்டார்னி-ஜெனரல் எரிக் ஹோல்டர் கூறியதைப் போல ஒரு புதிய முதலாளித்துவ சட்டக் கொள்கைக்கு அழைப்புவிடுத்து "சிறையில் அடைக்க முடியாதளவுக்கு பலமானதாக" இயங்குவதாக இருக்கின்றது.

அவர் மார்ச் 2013 இல் செனட் சபைக்கு கூறுகையில், இன்றியமையா விதத்தில் குற்றகர நடவடிக்கையாக காணப்பட்டுள்ள அதில் சம்பந்தப்பட்டுள்ள நிதியியல் அமைப்புகள், வழக்கிற்கு இழுக்க முடியாதளவுக்கு மிகப் பெரியவை என்பதோடு, குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டாலும் அது "தேசிய பொருளாதாரத்தின் மீதும், ஒருவேளை அனேகமாக உலக பொருளாதாரத்தின் மீதே கூட எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்" என்றார்.

யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, நிதியியல் செல்வந்த தட்டுக்கு பெரும் வெகுமதியும் அளிக்கப்பட்டது. இது உடனடியான 750 பில்லியன் டாலர் வங்கி பிணையெடுப்பு திட்டத்துடன் தொடங்கியது என்றாலும் பின்னர் விரைவாக அமெரிக்க பெடரல் முன்னெடுத்த பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டத்தின் (quantitative easing) மூலம் பாரியளவில் விரிவாக்கப்பட்டு, பின்னர் உலகெங்கிலுமான ஏனைய பிரதான மத்திய வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பத்திரங்கள் கொள்முதல்கள் மற்றும் இலாபங்களை கொடுக்கல்வாங்கல்களை டாலர்களில் வழங்கும் வழிவகைகள் உள்ளடங்கலாக நடைமுறைப்படுத்தப்பட்ட நிதியியல் நடவடிக்கைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்து பார்த்தால், இந்த அமைப்புமுறைக்குள் சுமார் 25 ட்ரில்லியன் டாலர் பாய்ச்சப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிப்போக்கு வட்டி விகிதங்களை வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத குறைந்த மட்டங்களுக்குக் கொண்டு சென்று, அதே ஒட்டுண்ணித்தனமான ஊகவணிக நடவடிக்கையைத் தொடரவும் விரிவாக்கவும் உதவியதுடன், நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் விளைவாக, ஜனவரியில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆக்ஸ்ஃபோம் அறிக்கையின்படி, 26 பில்லியனர்கள் 3.8 பில்லியன் மக்களின் அதாவது உலக மக்கள்தொகையில் அரைவாசி மக்களின் செல்வ வளத்திற்கு நிகரான செல்வத்தைச் சொந்தமாக்கி கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர், மேலும் நிதியியல் செல்வந்த அடுக்கின் செல்வ வளம் நாளொன்றுக்கு 2.5 பில்லியன் டாலர் வீதம் அதிகரித்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் வெறும் மூன்று பில்லியனர்கள் இப்போது 160 மில்லியன் மக்களை விட அதாவது மக்கள்தொகையில் அரைவாசி மக்களை விட அதிகமான செல்வவளத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகள் முன்னெடுத்த பாரியளவிலான அந்த நிதியியல் உதவிப்பொதி திட்டமானது, அமெரிக்க பொருளாதாரமும் மற்றும் உலகளாவிய பொருளாதாரமும் மற்றொரு பெருமந்த நிலைமைக்குள் மூழ்குவதிலிருந்து தடுப்பதற்கு அவசியமானது என்றும், அது மட்டுமே ஒரேயொரு சாத்தியக்கூறு என்றும் கூறி முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் பத்தாண்டுகள் கடந்து விட்டன, உடனடியான நெருக்கடி நிலையைக் கடந்து வந்து நீண்ட காலத்திற்குப் பின்னர், இதில் இன்னும் நிறைய சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. என்ன ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றால், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட செல்வவளத்தை உறிஞ்சி எடுப்பதற்கு ஓர் அமைப்புரீதியிலான பொறிமுறையாகும். நிதியியல் செல்வந்த அடுக்கோ அவற்றின் வெறித்தனமான கனவுகளுக்கும் அப்பால் கொழுத்துள்ள அதேவேளையில் பாரிய பெருந்திரளான உழைக்கும் மக்களோ பணம் இல்லை என்ற அடித்தளத்தில் அவர்களின் கூலிகள் மற்றும் சமூக வசதிகள் வெட்டப்படுவதைக் காண்கின்றனர்.

இந்த நிகழ்சிப்போக்கு, அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளார்ந்த, புறநிலையான தர்க்கம் ஒருமுனையில் செல்வவளத்தின் திரட்சியையும் மறுமுனையில் வறுமை மற்றும் சீரழிவாகவும் உள்ளது என்று விஞ்ஞானபூர்வ சோசலிசத்தின் ஸ்தாபகர் கார்ல் மார்க்ஸின் இன்றியமையா கண்டுபிடிப்புகளில் ஒன்றான, மூலதனத்தின் பக்கங்களில் மட்டுமல்ல, வாழும் சமூக யதார்த்தத்திலும் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பானது ஏதோவிதத்தில் துரதிருஷ்டவசமாக நடந்துவிட்ட நிதியியல் மீட்பு நடவடிக்கையின் துணைவிளைவல்ல. பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான டேவிட் மெக்வில்லியம்ஸ் இம்மாத தொடக்கத்தில் பைனான்சியல் டைம்ஸில் பிரசுரித்த ஒரு கருத்துரையில் குறிப்பிட்டதைப் போல, பெடரல் தலைவர் பென் பெர்னான்கி "இருப்புநிலை கணக்கின் மந்தநிலையை" (balance sheet recession) பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சொத்துக்களை வைத்து (reflating assets) எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்ற தீர்மானத்திற்கு வந்தார்.

“வங்கிகளின் இருப்புநிலை கணக்கில் உள்ள பழைய வாராக் கடன்களை, மிக மிகக் குறைந்த வட்டிவிகிதங்களினுடன், புதிய நல்ல பணத்தைக் கொண்டு மாற்றி விட்டதன் மூலமாக, சொத்து விலைகளைப் பெடரல் விண்ணைத்தொடுமாறு உயர்த்தியது. இந்த மதிப்புயர்வானது இருப்புநிலைக் கணக்குகளைச் சீரமைத்ததுடன், இறுதியில் அதிக செலவுகள் மற்றும் முதலீட்டுக்கு ஒப்புக் கொள்ள செய்தன. ஆனால் 'வறியவர்களுக்கு மிக மிகக் குறைவாகவே பயன்படக்கூடிய' (hyper-trickle-down) இதுபோன்ற பொருளாதாரங்களில் செல்வவள சமத்துவமின்மை என்பது முன்உத்தேசிக்காத விளைவு அல்ல, மாறாக கொள்கையின் புறநிலையான விளைவு என்பதை அது அர்த்தப்படுத்தியது,” என்றார்.

உற்பத்தி கருவிகளின் தனிச்சொத்துடைமையின் அடிப்படையிலான சுதந்திரச் சந்தை என்றழைக்கப்படுவதும் மற்றும் நிதியும் மட்டுமே நம்பகமான பொருளாதார அமைப்புமுறை என்ற முதலாளித்துவ வர்க்க பொருளாதார நிபுணர்களின், அதாவது மூலதனத்திற்காக வாதாட வாடகைக்கு வாங்கப்பட்டவர்களின் இந்த முட்டாள்த்தனங்களுக்கு எதிராக, மார்க்சிச அரசியல் பொருளாதாரம் எப்போதும் வலியுறுத்துகையில், முதலாளித்துவ அமைப்புமுறை தற்செயலான அல்லது தற்காலிக காரணிகளின் விளைவாக தொடர்ச்சியான நெருக்கடிகளுக்குள் உந்தப்படுவதில்லை, மாறாக அதன் சொந்த புறநிலை முரண்பாடுகளால் உந்தப்படுகிறது என்று வலியுறுத்துகிறது.

இந்த கண்டுபிடிப்பும் கூட பொருளாதார வாழ்வின் யதார்த்தத்தில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருகிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் கட்டுக்கதையின்படி, இலாபங்கள் முதலீடுகளை உருவாக்குகின்றன அவை உற்பத்தியின் விரிவாக்கத்திற்கும், அதிக வேலைகள் மற்றும் கூலி உயர்வுகளுக்கும் இட்டுச் செல்கின்றன, அதுவும் ஏற்றஇறக்கங்கள் என்னவாக இருந்தாலும் அவை அனைத்தும் சாத்தியமான எல்லா உலகங்களில் இருப்பதை விட சிறந்ததிலும் சிறந்ததாக இருக்கிறது என்பதாக உள்ளது.

இது வெடித்து சிதறிவிட்டது. இது சமீபத்திய பொருளாதார வரலாற்றில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பாரிய கடன்கள் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தும், எல்லா பிரதான முதலாளித்துவ பொருளாதாரங்களின் நிஜமான பொருளாதார நடவடிக்கையில் முதலீடோ 2008 க்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது. இப்போது, பின்னடைவு இல்லையென்றாலும், ஒரு பிரதான உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்குறைவுக்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன—அமெரிக்காவின் புதிய வேலைவாய்ப்பு நியமனங்களோ பெப்ரவரியில் வெறும் 20,000 புதிய வேலைகளை உருவாக்கி நடைமுறையளவில் நின்று போயுள்ளது.

ஒட்டுமொத்த உலகளாவிய நிதிய அமைப்புமுறையும் மலிவு பண விநியோகிப்பைச் சார்ந்திருக்கிறது என்பது, ஒருசமயத்தில் "வழமையான" நிதிய கொள்கை என்று கருதப்பட்டதற்கு திரும்புவதற்கான எந்தவொரு நகர்வையும் நிதிய செல்வந்த அடுக்கு வெறித்தனமாக எதிர்ப்பதிலிருந்து எடுத்துக்காட்டப்படுகிறது.

2013 இல், பெடரல் அதன் சொத்திருப்புகளை விலைக்கு வாங்கும் திட்டத்தை நிறுத்த உத்தேசித்து வருவதாக சமிக்ஞை செய்ததும், நிதியியல் சந்தைகள் “taper tantrum" (பணம் பாய்ச்சுவதை வெறித்தனமாக குறைக்கும் நடவடிக்கை) என்றழைக்கப்பட்டதைக் கொண்டு விடையிறுத்தன.

பெடரல் 2015 இல் தவிர்க்கவியலாமல் விகிதங்களை —மிக மிகச் சிறிய அளவில்— உயர்த்த தொடங்கிய போது, அவசியமென கருதினால் அதில் அது குறுக்கிட தயாராக இருப்பதாக கூறிய உத்தரவாதங்களுடன் தான் அதை செய்தது. அங்கே க்ரீன்ஸ்பான் நகர்வோ, பெர்னான்கி நகர்வோ அல்லது யெலென் நகர்வோ இருக்கவில்லை மாறாக பெடரல் நகர்வு இருந்தது — அது பங்குச்சந்தையைத் தாங்கிப் பிடித்திருக்கும் என்பதற்கு மத்திய வங்கியின் ஓர் உத்தரவாதம் இருந்தது.

“வழமையாக்கும்" கொள்கைக்கு முயற்சிப்பதற்காகவும் மற்றும் அடுத்த நெருக்கடியை அல்லது சரிவைச் சமாளிக்க ஏதாவது கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், 2019 இல் நிறைய வட்டிவிகித உயர்வு செய்யவிருப்பதற்கான சாத்தியக்கூறுகளுடன், 2018 இல் பெடரல் நான்கு வட்டிவிகித உயர்வுகளை நடத்தியது. அதன் சொத்துக் கையிருப்புகள் 800 பில்லியன் டாலரில் இருந்து 4.5 ட்ரில்லியனுக்கும் அதிக டாலருக்கு அதிகரித்திருந்த நிலையில், அது "தானாகவே அதிகரித்து செல்லும்" தன்மை கொண்ட கொள்கையால் மாதத்திற்கு 50 பில்லியன் டாலர் விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில், அதன் சொத்து கையிருப்புகளைப் பெடரல் குறைக்கவிருப்பதையும் சுட்டிக்காட்டியது.

இதனால், கடந்தாண்டு டிசம்பரில் அமெரிக்க சந்தைகள், பெருமந்தநிலைக்கு மத்தியில் 1931 க்குப் பின்னர் அந்த மாதத்தின் மிக மோசமான விளைவைப் பதிவு செய்ததன் மூலமாக ஒரு கொந்தளிப்பான எதிர்நடவடிக்கையை உருவாக்கியது.

பழைய நிலைக்குத் திரும்பும் மாற்றம் விரைவாக வந்தது. ஆனால் பெடரலின் திறந்த சந்தைக் குழுவின் ஜனவரி மாத கூட்டமோ, மேற்கொண்டு வட்டி விகித உயர்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், சந்தை வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு வழி செய்த சொத்துக் கையிருப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளும் 2008 க்கு முந்தைய மட்டங்களுக்குத் திரும்ப கொண்டு வரும் வகையில் நிறுத்தப்பட இருப்பதாகவும் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பணத்தைப் புழக்கத்தில் விடுவதை குறைத்த முந்தைய நடவடிக்கையை மாற்றிக் கொள்வது என்றும், வங்கிகளுக்கு மிகவும் மலிவு கடன்களை வழங்கவும் அதன் பத்திர கையிருப்புகள் முதிர்ச்சி அடைகின்ற என்பதால் அவற்றில் மறுமுதலீடு செய்வது என்றும் அதன் இவ்வார முடிவு வந்தது.

இது மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தின் உண்மைத்தன்மையை —அதாவது அனைத்திற்கும் மேலாக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிகள் அதற்குள் பொதிந்துள்ள புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளில் இருந்து எழுகின்றன என்ற அதன் வலியுறுத்தலை— குறிப்பிடத்தக்க வகையில் எடுத்துக்காட்டுகிறது. 2008 இல் நிதியியல் அமைப்புமுறையின் உருகுதலைத் தவிர்க்கும் முயற்சியில் கொண்டு வரப்பட்டு அதற்குப் பிந்தைய காலப்பகுதியில் நீடிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளே மற்றொரு பேரழிவுக்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளன என்பதையே கடந்த தசாப்தத்தின் மீதான ஒரு மீளாய்வு எடுத்துக்காட்டுகிறது.

முதலாளித்துவ வட்டாரங்களில் இருந்து வெளிப்படும் குறிப்பிடத்தக்க எச்சரிக்கைகள் இதை தான் சுட்டிக்காட்டுகின்றன. உலகளாவிய கடன், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 225 சதவீதத்திற்கு நிகராக, 2017 இல் 184 பில்லியன் டாலராக, அதன் மொத்த காலத்தில் மிக அதிகபட்சத்தை எட்டியதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

மிகமிகக் குறைந்த வட்டிவிகித முறையானது, மிதமிஞ்சிய கடனுக்கு இட்டுச் சென்றுள்ளது, அதிக இலாபத்தைத் தேடி முதலீட்டாளர்களின் நிதியுதவியுடன் பெருமதியற்ற பெருநிறுவன பத்திரங்களின் வெளியீடும் கணிசமான உயர்ந்துள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் OECD முக்கிய அறிக்கை ஒன்றை தயாரித்தது, அதில் அது வரலாற்றுரீதியில் குறைந்த விகிதங்களுடன் வெளியிடப்பட்டுள்ள முன்னொருபோதும் இல்லாதளவிலான கடன்தொகை குறித்து எச்சரித்தது. ஒரு பொருளாதார வீழ்ச்சியின் அதிகரித்து வரும் அறிகுறிகளுக்கு இடையே, அது எச்சரித்தது: “ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் திவாலாகிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பெருநிறுவன பத்திர முதலீட்டுத் தொகை, நிதியியல் நெருக்கடியில் ஏற்பட்டதைக் காட்டிலும் குறிப்பிடத்தக்களவுக்கு மிக அதிகமாக இருக்கலாம்.”

பெருநிறுவன பத்திரங்களின் வடிவில் நிதித்துறை அல்லாத பெருநிறுவனங்கள் வெளியிட்ட உலகளாவிய கடன் 2018 இன் முடிவில் ஏறத்தாழ 13 ட்ரில்லியன் டாலராக இருப்பதை, அதாவது நிஜமான வரையறைகளில் 2008 முடிவில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதை அது கண்டறிந்தது.

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி அதன் சமீபத்திய காலாண்டு மீளாய்வில், தரவரிசை பட்டியலில் மிகக்குறைந்த முதலீட்டு தரமான BBB என்ற தரத்தில் பெருநிறுவன பத்திரங்கள் அதிகரித்து கொண்டிருப்பது குறித்து அதன் கவலையை வெளியிட்டுள்ளது, அதாவது இதுபோன்ற பத்திரங்களில் பரஸ்பர நிதிகள் வைத்திருக்கும் கையிருப்பின் பங்கு 2010 இல் 20 சதவீதத்தில் இருந்து 2018 இல் 45 சதவீதத்திற்கு அதிகரித்திருந்ததாக அது சுட்டிக்காட்டியது.

BBB தரத்தில் உள்ள பத்திரங்கள் அவை வழங்கும் உயர்ந்த வட்டிவிகிதங்களின் காரணமாக ஈர்க்கப்படுகின்றன என்றாலும், மிதமிஞ்சிய திடீர் விற்பனை வீழ்ச்சியில் போய் விளையக்கூடும் என்றது எச்சரித்தது. “பொருளாதார பலவீனம் மேலும் மோசமடைகையில், போதுமானளவுக்கு பத்திர வெளியீட்டாளர்கள் BBB தரத்தில் இருந்து மதிப்பற்ற தர அந்தஸ்துக்குத் திடீரென தரம் குறைக்கப்பட்டு, பரஸ்பர நிதிகளும், மிகவும் பரந்தளவில், ஏனைய சந்தை பங்களிப்பாளர்களும்" முதலீட்டு தரத்திற்குரிய பத்திரங்களாக அவற்றை வைத்திருக்க வேண்டியிருந்தால், அது "பெரும் எண்ணிக்கையில் பத்திரங்களை துரிதமாக விற்றுத்தள்ள நிர்பந்திக்கலாம்.”

பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ரானா ஃபொரூஹர் இம்மாத ஆரம்பத்தில் ஒரு கருத்துரையில் குறிப்பிடுகையில், “மிக அதிகளவிலான நிதியமயமாக்கலின் மற்றொரு அறிகுறியாக தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும் சந்தைகளால் பெடரல் பின்னோக்கி திருப்பம் எடுக்க நிர்பந்திக்கப்பட்டது. நாம் அண்மித்து 10 ஆண்டுகளாக ஒரு பொருளாதார மீட்சிக்குள் இருக்கிறோம் என்றாலும், சுலபமான பணம் இல்லாமல் பல நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் எதையும் செய்ய முடியாது என்றளவுக்கு அது ஒரு வலிநிவாரணியாக மாறியுள்ளது,” என்றார்.

ஏதேனும் நிதியியல் நெருக்கடி வெடிக்குமா என்பதல்ல கேள்வி, மாறாக எப்போது அது தாக்கும் என்பதே கேள்வியாக உள்ளது. அதுவும் அது 2008 ஐ விட, தொலைதூரத்திற்கும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் இன்னும் அதிக தீவிரமாக இருக்க அச்சுறுத்துகிறது.

ஓர் அரசியல் இருப்புநிலை கணக்கு வகுக்கப்பட வேண்டியுள்ளது. உலகெங்கிலுமான அரசாங்கங்கள், அவை எந்த அரசியல் சாயத்தில் இருந்தாலும், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி, பிரிட்டனில் தொழிற் கட்சியில் இருந்து கிரீஸில் போலி-இடது சிரிசா வரையில், அவை உலகளாவிய நிதியியல் செல்வந்த அடுக்கின் கலப்படமற்ற பாதுகாவலர்கள் என்பதையும், அவர்கள் பொறுப்பில் அவரவர் தீர்மானகரமாக உள்ளார்கள் என்பதையும் எடுத்துக்காட்டி உள்ளன.

அவை ஒரு தசாப்தத்திற்கு முன்னர், நெருக்கடியால் மலைத்துப் போயிருந்த மற்றும் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சங்க எந்திரங்களால் கசக்கிப் பிழியப்பட்டு வந்த, ஓர் ஒத்திசைவான விடையிறுப்பை அபிவிருத்தி செய்ய முடியாமல் இருந்த ஒரு தொழிலாள வர்க்கத்தை கண்டார்கள்.

இந்நிலைமை மாறியுள்ளது. உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் ஒரு மீளெழுச்சியையும் தொழிற்சங்கங்களின் இரும்புப்பிடியிலிருந்து உடைத்துக் கொள்வதற்கான வேட்கையாலும் கடந்த மாதங்கள் குணாம்சப்பட்டுள்ளது. இத்துடன் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கட்சிகள் மீதும் ஆழமடைந்து வரும் விரோதம் மற்றும் குறிப்பாக இளைஞர்களிடையே சோசலிசத்திற்கு அதிகரித்து வரும் ஆர்வம் மற்றும் ஆதரவு ஆகியவையும் ஒன்று சேர்ந்துள்ளன.

அடுத்த பொருளாதார நெருக்கடிக்கு 2008 இல் உதவியதைப் போல உதவுவதற்கான சூழல்கள் இப்போது இல்லை என்பதும், வர்க்க போராட்டத்தின் ஒரு மேலெழுச்சியை முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும ஆளும் வர்க்கங்களுக்கு நன்றாக தெரியும். அவை சீர்திருத்தங்கள் மற்றும் விட்டுக்கொடுப்புகளைக் கொண்டு அவற்றை எதிர்கொள்ளாது—அவ்விதம் சாத்தியமில்லை. அதனால் தான் கடந்த தசாப்தத்தில் அனைத்து அரசு ஒடுக்குமுறை எந்திரமும் விரிவாக்கப்பட்டுள்ளன.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். அவர்கள் போக்கை மாற்றுவதற்கு அரசியல் ஸ்தாபகத்திற்குப் பயனற்ற முறையீடுகள் —அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸின் மற்றும் அலெக்சாண்டிரியா ஒக்காசியோ-கோர்டெஸ் இன் மோசடியான பிரச்சாரங்கள் போன்றவற்றை— அடித்தளமாக ஏற்கக் கூடாது, மாறாக இந்த இலாபநோக்கு அமைப்புமுறையின் கட்டளைகளின் அடித்தளத்தில் அல்லாமல் மனிதகுல தேவையின் அடித்தளத்தில் ஓர் உயர் வடிவ சமூக-பொருளாதார அமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான தொடக்கப்புள்ளியாக, மிகப் பெரும் பெருவணிகங்கள் மற்றும் நிதியியல் மூலதனத்தின் கோட்டைகளைப் பறிமுதல் செய்வதை அடிப்படையாக கொண்ட ஓர் உண்மையான சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதை அடித்தளமாக கொள்ள வேண்டும்.

இதற்கான தயாரிப்புகள், தொழிற்சங்கங்களின் திக்குமுக்காட செய்யும் பிடியை உடைக்க வர்க்க போராட்டத்தின் புதிய அமைப்புகளை அபிவிருத்தி செய்வது மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதன் பிரிவுகளாக சோசலிச சமத்துவக் கட்சிகளையும் கட்டமைப்பதைச் சார்ந்துள்ளன.