ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron publishes platform for European elections calling for EU police state

மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய போலிஸ் அரசுக்கு அழைப்புவிடுத்து, ஐரோப்பிய தேர்தல்களுக்கான அறிக்கையை பிரசுரிக்கிறார்

By Alex Lantier
6 March 2019

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், மே 23-26 இல் நடக்கவுள்ள ஐரோப்பிய தேர்தல்களுக்கான அவரின் திட்டத்தை வரையறுத்து, செவ்வாயன்று, ஐரோப்பா எங்கிலுமான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் ஒரு கட்டுரை வெளியிட்டார்.

கடந்த நவம்பரில் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனை அவர் பாராட்டியதற்குப் பின்னரும், அவரைப் பதவியிலிருந்து விலகக் கோரி வரும் பாரிய "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு மத்தியிலும் வந்துள்ள மக்ரோனின் கட்டுரை, ஐரோப்பாவுக்கான தாராளவாத அபிவிருத்திக் கொள்கையை அவர் அறிவுறுத்தி வருகிறார் என்ற அந்த இற்றுப்போன பாசாங்குத்தனத்தையும் கைத்துறந்துள்ளது. “ஐரோப்பாவைப் புதுப்பித்தல்" என்று தலைப்பிட்ட அக்கட்டுரை, இப்போதும் தேசியவாதம் மற்றும் பிரெக்ஸிட்டை விமர்சிக்கிறது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் புகழ்ந்துரைக்கிறது என்றாலும், அது நடைமுறையளவில் அதிவலதின் சொற்பதங்களில் இருந்து வேறுபடுத்தவியலாதவாறு அதே அர்த்தங்களில் செல்கிறது. ஐரோப்பாவை ஓர் உலக இராணுவ சக்தியாகவும் மற்றும் அதன் வெளி எல்லைகளைப் பாதுகாக்கும் போலிஸ் அரசாகவும் கட்டமைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை முன்மாதிரியான கட்டமைப்பாக அவர் புகழ்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்காக "அயராது" போராட சூளுரைத்து அவர் எழுதுகிறார்: “நம்மால் அடைய முடியாது என்று நம்மிடம் கூறப்பட்டவையும், ஐரோப்பிய பாதுகாப்பு தகைமையை உருவாக்குவதும் மற்றும் சமூக உரிமைகளின் பாதுகாப்பும் உண்மையில் சாத்தியமே என்பதை நாம் எடுத்துக்காட்டியுள்ளோம். ... ஐரோப்பா வெறுமனே ஒரு சந்தை மட்டுமல்ல. அதுவொரு திட்டம். ஒரு சந்தை பயனுள்ளது தான், ஆனால் பாதுகாப்பு எல்லைகளுக்கான தேவைகள் மற்றும் ஐக்கியப்படுத்தும் மதிப்புகளுக்கான தேவைகளில் இருந்து அது திசைதிருப்பக் கூடாது.”

மக்ரோனும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய அவரின் நோக்குநிலையும் எப்போதுமே ஆழமாக பிற்போக்குத்தனமானவை. அவர் வக்கிரமான வலதுசாரி தளத்தில் இருந்து, கடுமையான சிக்கன நடவடிக்கைகள், போலிஸ்-அரசு நடவடிக்கைகள் மற்றும் அனைவருக்குமான இராணுவ சேவைக்குத் திரும்புதல் உட்பட இராணுவமயமாக்கலின் தீவிரப்படுத்தலை அறிவுறுத்தி, பிரச்சாரம் செய்தார். 2017 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது கட்டத்தில் அவருக்கும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னுக்கும் இடையே ஒரு தெரிவை முகங்கொடுத்த மில்லியன் கணக்கான வாக்காளர்கள் வாக்கெடுப்பைத் தவிர்த்து கொள்ளும் அளவுக்கு பெருந்திரளான மக்கள் அவரை வலதுசாரியாக புரிந்து வைத்திருந்தார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தை அதன் எல்லைகளில் ஆக்ரோஷமாக போலிஸ் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஓர் இராணுவ சக்தியாக மக்ரோன் புகழ்ந்துரைப்பதை, ஐரோப்பா எங்கிலும் நவ-பாசிசவாத அரசியல்வாதிகள் பலமாகவும் தெளிவாகவும் ஒரு சமிக்ஞையாக பெற்றுள்ளனர். மக்ரோன், கடந்தாண்டு, ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் போன்ற அதிவலது புலம்பெயர்வுக்கு விரோதமான கிழக்கு ஐரோப்பிய அரசியல்வாதிகளை "பைத்தியக்காரத்தனமான மனங்கள்" என்று கண்டித்ததுடன், அவர்களின் தேசியவாத அரசியல் ஐரோப்பாவுக்குள் "பிளவுகளை" உருவாக்குவதாகவும் கண்டித்தார். அவர் உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனியின் அதிவலது இத்தாலிய அரசாங்கத்தை ஐரோப்பிய அரசியல் உடலில் பரவிவரும் ஒரு "தொழுநோயாகவும்" கண்டித்திருந்தார்.

ஆனால் மக்ரோனின் கட்டுரை இப்போது பிரசுரிக்கப்பட்டிருக்கையில், நேற்று ஓர்பன், இதுவே “ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து அக்கறையோடு விவாதிக்க சரியான நேரம்" என்று கூறி, மக்ரோனின் முன்மொழிவுகளை வரவேற்றார்.

மக்ரோனின் கட்டுரை குறித்து ராய்டர்ஸ்க்கு ஓர்பன் மின்னஞ்சல் செய்த ஓர் அறிக்கையில் இவ்வாறு அறிவித்தார்: “இது தீவிர ஐரோப்பிய விவாதத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக இருக்கும். ... விவரமாக கூறுவதானால், நிச்சயமாக நாம் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறோம் தான், ஆனால் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து தீவிரமாகவும் ஆக்கபூர்வமாகவும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்க இந்த முன்முயற்சி சரியான தருணமாக உள்ளது என்பது இத்தகைய வெவ்வேறு கண்ணோட்டங்களை விடவும் மிக முக்கியமானதாக உள்ளது.”

ஓர்பன் மக்ரோனின் முன்மொழிவுகளை ஆமோதிக்கிறார் என்றால், அது மக்ரோனின் போலிஸ்-அரசு முன்மொழிவுகள் கிழக்கு ஐரோப்பா எங்கிலுமான முதலாளித்துவ ஆட்சிகள் பின்பற்றும் அதிவலது கொள்கைகளுக்கு பொருத்தமாக உள்ளன என்பதாலாகும்.

சட்ட அமலாக்கம் குறித்து குறிப்பிடுகையில், மக்ரோன் புலம்பெயர்ந்தவர்களை இலக்கு வைத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும், அதேவேளையில் ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையே போலிஸ் கூட்டுறவை ஆழப்படுத்தவும் அழைப்பு விடுக்கிறார். அவர் "எல்லைக் கட்டுப்பாடுகள் கெடுபிடிகளுக்கும்" அத்துடன் "ஒரு பொதுவான எல்லை பாதுகாப்புப்படை மற்றும் தஞ்சம் கோருவோருக்கான ஓர் ஐரோப்பிய அலுவலகம், கடுமையான கட்டுப்பாடுகளுக்கான கடமைப்பாடுகள் மற்றும் ஐரோப்பிய நல்லிணக்கம் இதற்காக ஒவ்வொரு நாடும் உள்நாட்டு பாதுகாப்புக்கான ஐரோப்பிய சபையினது அதிகாரத்தின் கீழ் பங்களிப்பு செய்ய" அழைப்புவிடுக்கிறார்.

இந்த கொள்கைகளுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தணிக்கையை மிகப் பெரியளவில் தீவிரப்படுத்துவதும் இணைக்கப்பட இருக்கின்றன. ட்ரம்பின் ஜனாதிபதி வெற்றிக்கு ரஷ்ய அரசியல் தலையீட்டைக் குறைகூறி அமெரிக்காவில் ஜனநாயக கட்சி பிரச்சாரம் எதிரொலிப்பதைப் போல, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் அடையாளம் தெரியாத வெளிநாட்டு தலையீடு அச்சுறுத்தலுக்கு விடையிறுப்பதற்காக என்ற பாசாங்குத்தனத்துடன், இணையத் தணிக்கை பிரச்சாரத்திற்கும் மக்ரோன் அழைப்புவிடுத்தார்.

“வெளிநாட்டு சக்திகள் ஒவ்வொரு தேர்தலிலும் நமது வாக்குகள் மீது செல்வாக்கு செலுத்த முனைகின்றன. ஜனநாயகங்களின் பாதுகாப்புக்கான ஓர் ஐரோப்பிய முகமையை உருவாக்க நான் முன்மொழிகிறேன், அது, ஒவ்வொரு அங்கத்துவ அரசும் இணைய தாக்குதல்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு எதிராக அவற்றின் தேர்தல் நடைமுறைகளைப் பாதுகாக்க ஐரோப்பிய வல்லுனர்களை வழங்கும். நாம் சுதந்திரத்திற்கான இதே உத்வேகத்துடன், வெளிநாட்டு சக்திகள் ஐரோப்பிய அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவது மீதும் தடை விதிக்க வேண்டும். இணையத்திலிருந்து வரும் வெறுப்பு மற்றும் வன்முறையின் அனைத்து தூண்டுதல்களையும் தடுக்கும் விதத்தில், அதேவேளையில் தனிநபர்களை மதிக்கும் வகையில் ஐரோப்பிய விதிகளை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பது நமது நாகரீகத்தின் கண்ணியத்திற்கான அடித்தளமாகும்,” என்று மக்ரோன் எச்சரிக்கிறார்.

குறிப்பாக “மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு இடையே, மக்ரோனுக்கு எதிரான அவற்றின் அறிக்கைகளை ஊடகங்கள் வழமையாக வெறுப்பு உரையாக அவதூறுபடுத்துகின்ற நிலையில், இது ஐரோப்பிய ஒன்றிய கொள்கைக்கு அரசியல் எதிர்ப்பைத் தணிக்கை செய்வதற்கான பகிரங்க அழைப்பாக உள்ளது. பாரீசுக்கும் பேஸ்புக்குக்கும் இடையிலான கூட்டுறவின் முன்மாதிரியில், அதுவும் தகவல்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவும் பேஸ்புக் அலுவலகங்களில் பிரெஞ்சு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்ற நிலையில், இது இணைய தணிக்கைக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத "ஐரோப்பிய வல்லுனர்களுக்கு" அசாதாரண அதிகாரங்களை வழங்கும். இந்த கொள்கைகள் அவசியப்படுகின்றன என்று அவரின் வலியுறுத்தலை நியாயப்படுத்த, மக்ரோன் ஐரோப்பாவில் தேர்தல் ஊடுருவலுக்கான ஒரு எடுத்துக்காட்டை மேற்கோளிட கூட அக்கறை கொள்ளவில்லை.

ஓர் பிரதான இராணுவ சக்தியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தியே மக்ரோனின் கட்டுரையில் உள்ள மற்றொரு பிரதான கவலையாக உள்ளது. “ஐரோப்பா இரண்டாம்-நிலை அதிகாரம் இல்லை,” என்று அறிவிக்கிறார். அவர் தொடர்ந்து கூறுகிறார், “கடந்த இரண்டாண்டுகளாக கணிசமான முன்னேற்றம் நடந்துள்ளது என்றாலும், நாம் இன்னும் நெருக்கமான போக்கை அமைக்க வேண்டியுள்ளது: பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மீதான ஓர் உடன்படிக்கை நேட்டோ மற்றும் நமது ஐரோப்பிய கூட்டாளிகளுடனான கூட்டுறவில் நமது அடிப்படை கடமைப்பாடுகளை வரையறுக்க வேண்டும்: அதாவது பாதுகாப்புத்துறை செலவுகளை அதிகரிப்பது, ஓர் உண்மையான செயல்பாட்டுக்குரிய பரஸ்பர பாதுகாப்பு வகைமுறை, நமது ஒருமித்த முடிவுகளை மேற்கொள்ள பிரிட்டனையும் உள்ளடக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு சபை ஆகியவை.”

“நமது அமெரிக்க மற்றும் சீன போட்டியாளர்கள் செய்வதைப் போல, மூலோபாய தொழில்துறைகளிலும் மக்களுக்கான நமது கொள்முதல்கள் மீதும் ஐரோப்பிய முன்னுரிமையை ஏற்பதை" முன்மொழிந்து, மக்ரோன் ஒரு பாதுகாப்புவாத கொள்கையையும் அறிவுறுத்துகிறார்.

இந்த அதீத-இராணுவவாத கொள்கையானது சமூக உரிமைகள் மற்றும் மானிய உரிமைகளுடன் இணக்கமாக இருப்பதாக கூறும் மக்ரோனின் வாதம் ஓர் அரசியல் மோசடியாகும். உண்மையில் சமீபத்திய ஆண்டுகளில் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களைப் புதிய இராணுவ செலவுக்களுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கிய வாக்குறுதிகள் அதிகரித்தளவில் தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து வருகின்றன, தொழிலாள வர்க்கம் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்து ஒரு தசாப்தமாக ஆழ்ந்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொதுத்துறையின் சம்பள உயர்வின்மைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 1930 களுக்குப் பின்னர் முதலாளித்துவத்தின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே, ஐரோப்பிய ஒன்றியம் தொழிலாள வர்க்கத்தைப் பல தசாப்தங்களுக்குப் பின்னோக்கி தூக்கி வீசியுள்ளது.

உண்மையில், “அமைதி, செல்வவளம் மற்றும் சுதந்திரத்தின் முன்னொருபோதும் இல்லாத ஒரு திட்டத்தில் ஒரு பாழாக்கப்பட்ட கண்டத்தின் நல்லிணக்கத்தை" உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு "வரலாற்று வெற்றியாக" வர்ணித்ததற்கு இடையே, மக்ரோன் கூறுகையில் ஐரோப்பிய ஒன்றியம் "நவீன உலகின் முக்கிய அதிர்ச்சிகளில் இருந்து அதன் மக்களின் தேவைகளைப் பாதுகாத்து விடையிறுக்க தவறவிட்டதை" ஒப்புக் கொள்கிறார்.

ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு 1991 இல் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டமையானது கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் மட்டும் நாசமாக்கவில்லை, மாறாக அது கிழக்கத்திய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் விரிவாக்கத்திற்கும் களம் அமைத்துள்ளது, இது ரஷ்யாவையும் நேட்டோவையும் போரின் விளிம்பிக் கொண்டு வந்து விட்டுள்ளது. கடந்தாண்டு, ரஷ்யா மற்றும் நேட்டோ இரண்டுமே பனிப்போருக்குப் பிந்தைய, ரஷ்யா விடயத்தில் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய, மிகப் பெரிய இராணுவ ஒத்திகைகளை நடத்தின. அதேநேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சம்பள உயர்வின்மைகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலை, சமீபத்திய வாரங்களில் பிரான்சை மட்டுமல்ல, போர்ச்சுக்கல், பெல்ஜியம், மற்றும் ஜேர்மனியையும் உலுக்கி உள்ளது.

அதிகரித்து வரும் இந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பை முகங்கொடுக்கையில், மக்ரோனும் ஏனைய ஆளும் உயரடுக்கினரைப் போலவே, இராணுவ போலிஸ் மற்றும் புலம்பெயர்வோர்-விரோத வாய்சவடால்களுக்கு திரும்பி எதிர்வினையாற்றுகிறார். இதுவொரு எச்சரிக்கையாகும்: ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய்களை அதன் ஸ்தாபக உடன்படிக்கைகளை திருத்தி எழுதுவதற்கான முயற்சிகள் மூலமாகவோ அல்லது பிற சர்வரோக நிவாரணிகளைக் கொண்டோ தீர்த்துவிட முடியாது. இறுதியாக ஐரோப்பிய மற்றும் முதலாளித்துவ திவால்நிலையில் வேரூன்றியுள்ள ஒரு நெருக்கடியை கையாள தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதும் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதியீடு செய்வதற்கான புரட்சிகர போராட்டத்தை நோக்கி திரும்புவதன் மூலமாக மட்டுமே கையாள முடியும்.