ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump recognizes Israeli annexation of Golan Heights: Green light for global war

கோலன் குன்றுகளை இஸ்ரேல் இணைத்துக் கொள்வதை ட்ரம்ப் அங்கீகரிக்கிறார்: உலகளாவிய போருக்கான பச்சை விளக்கு

Bill Van Auken
26 March 2019

அவசர அவசரமாக முடித்துக் கொள்ளப்பட்ட வெள்ளை மாளிகை விழாவில், சிரியாவின் கோலன் குன்றுகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக இணைத்துக் கொள்வதற்கு அமெரிக்காவின் உத்தியோகப்பூர்வ அங்கீகரிப்பை வழங்கும் ஓர் உத்தரவாணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நடவடிக்கை, மேலோட்டமாக பார்க்கையில், மத்தியக் கிழக்கின் மண்ணில் ஒருசில உண்மைகளை மாற்றுவதற்குரியதாக தெரியும். ஆனால் யாரும் அதன் உலகளாவிய தொலைநோக்கு உத்தேசங்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹூ முன்னிலையில், ஒரு சிறிய பிரகடனத்தில், ட்ரம்ப் அறிவிக்கையில், "கோலன் குன்றுகள் இஸ்ரேல் அரசின் பாகம் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது,” என்று அறிவித்தார்.

1967 இல் கோலன் குன்றுகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தமையும், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பகுதியை அது ஒருதலைபட்சமாக இணைத்துக் கொண்டமையும், அப்பகுதியில் யூத குடியமர்வுகள் மற்றும் இஸ்ரேலிய முதலாளித்துவச் சுரண்டலை ஆக்ரோஷமாக கட்டமைப்பதற்காக தொடர்ந்து அதன் மீது கட்டுப்பாட்டை வலியுறுத்தியமையும் அனைத்தும் "சிரியாவிடமிருந்தும் மற்றும் [ஈரான் உட்பட] ஏனைய பிராந்திய அச்சுறுத்தல்களிடம் இருந்தும் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தால்" நியாயப்படுவதாக ட்ரம்ப் வாதிட்டார்.

என்னவொரு அபத்தம். ட்ரம்ப் யதார்த்தத்தைத் தலைகீழாக்குகிறார். சிரியா மீது இடைவிடாது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு ஏவுதளமாக கோலன் குன்றுகளை இஸ்ரேல் பயன்படுத்துகிறது, பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கான போரில் ISIS உட்பட இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களுக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங்குவது மற்றும் ஒத்துழைப்பு வழங்குவது, அத்துடன் ஆயிரக் கணக்கான வான்வழித் தாக்குதல்களும் அதில் உள்ளடங்குகின்றன, இதை இஸ்ரேலின் சொந்த இராணுவ தலைமை தளபதியே இந்தாண்டு தொடக்கத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

சிரியாவிலிருந்து "துருப்புகளை நாட்டுக்குத் திரும்ப" கொண்டு வரப் போவதாக கடந்தாண்டு இறுதியில் ட்ரம்ப் குறைபிரசவ அறிவிப்பாக அறிவித்த பின்னரும் கூட, சிரியாவின் பிரதான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி பகுதிகள் உட்பட அந்நாட்டின் கிழக்கில் அமெரிக்க இராணுவம் அதன் நிரந்த ஆக்கிரமிப்பை பலப்படுத்தி வருகிறது என்ற அறிக்கைகளுக்கு இடையே தான், “கோலன் குன்றுகள் மீது இஸ்ரேலின் இறையாண்மையை" வாஷிங்டன் அங்கீகரிப்பது வருகிறது. ஈராக்கில் எல்லை நெடுகிலும் உள்ள பெரும் எண்ணிக்கையிலான பின்புல துருப்புகளுடன், சுமார் 1,000 துருப்புகள் சிரிய மண்ணில் நிறுத்தப்பட்டிருப்பார்கள் என்றும், அதேவேளையில் அமெரிக்க இராணுவம் அமெரிக்க-ஆக்கிரமிப்பு பகுதிக்குள் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு சென்று கொண்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் சமீபத்திய வாரங்களில் செய்திகள் வருகின்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யூப்ரரேடஸ் நதியின் கிழக்கே சிரிய எல்லையை வாஷிங்டன் நடைமுறையளவில் ஆக்கிரமித்து இணைத்து வருகின்ற நிலையில் தான், கோலன் குன்றுகளை இஸ்ரேல் இணைப்பதை ட்ரம்ப் அங்கீகரிக்கிறார்.

குறுகிய அரசியல் நோக்கில் கூறுவதானால், ட்ரம்பின் நடவடிக்கை கேள்விக்கிடமின்றி அவரின் வலதுசாரி கூட்டாளி நெத்தன்யாஹூவுக்கு முட்டுக்கொடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது, இவர் பல்வேறு ஊழல் குற்றச்சாங்களை முகங்கொடுப்பதுடன், முன்னாள் தலைமை தளபதி பென்னி கண்ட்ஸ் தலைமையிலான நீல-வெள்ளை கூட்டணி என்றழைக்கப்படுவதால் ஒன்றுதிரட்டப்பட்ட உயர்மட்ட தளபதிகளின் கரங்களில் ஏப்ரல் 9 தேர்தல்களில் சாத்தியமான தோல்வியையும் முகங்கொடுக்கிறார்.

இஸ்ரேலின் பிரதம மந்திரியும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான நெத்தன்யாஹூ, ஒரேயொரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதற்காக காசாவுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதை மேற்பார்வையிடுவதற்காக அவரின் வாஷிங்டன் விஜயத்தைப் பாதியில் விட்டு இஸ்ரேலுக்குத் திரும்பினார். அந்த ஏவுகணை தாக்குதலில் ஒரேயொருவர் கூட கொல்லப்படவில்லை என்பதோடு, ஆக்கிரமிப்பு பகுதியை நிர்வகிக்கின்ற ஹமாஸ் மற்றும் அதன் மற்றொரு மிகப்பெரிய ஆயுதப்படை பிரிவான இஸ்லாமிக் ஜிஹாத் இரண்டுமே அதற்கு பொறுப்பேற்க மறுத்துள்ளன.

இஸ்ரேலிய போர்விமானங்கள், அதிக மக்கள் நடமாட்டம் நிறைந்த காசா நகரம் உட்பட காசா பகுதி நெடுகிலும் குண்டுமழைப் பொழிந்தன. ஒட்டுமொத்தமாக தண்டிக்கும் பிற நடவடிக்கைகளில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் அந்த வறிய பகுதிக்குள் நுழைவதற்கான இரண்டே இரண்டு பாதைகளையும் அடைத்தன, இது நடைமுறையளவில் 2 மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு திறந்தவெளி சிறைக்கூடமாக மாறியதுடன், பாலஸ்தீன மீனவர்கள் கடல் எல்லையை ஒட்டி மீன்பிடிக்கும் முயற்சிகளையும் பலவந்தமாக கைவிடச் செய்தது.

எகிப்து மத்தியஸ்தம் செய்த ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையை அவர்கள் எட்டியிருப்பதாகவும், ஆனால் அவ்விடயத்தில் டெல் அவிவ் மவுனமாக இருப்பதாகவும் ஹமாஸ் அதிகாரிகள் திங்களன்று இரவு தெரிவித்தனர். நெத்தன்யாஹூவின் தேர்தல் எதிர்ப்பாளர்கள் அனைவரும் அவரை வலதிலிருந்து தாக்கி வருகின்றனர், அவர்கள் காசாவில் எதிர்ப்பை அடக்க போதுமானளவுக்கு இரத்தக்களரியுடன் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் மீது குறைகூறி வருகின்றனர். இஸ்ரேலின் முதலாளித்துவ "இடது" திசையில் சென்று கொண்டிருக்கும் தொழிற்கட்சியின் தலைவர் நெத்தன்யாஹூவை "செயலுக்குரியவர் அல்ல, வாய்சவடால்" மனிதர் என்று கண்டித்தார். இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்புப்படைகள் இன்னும் 1,000 துருப்புகளின் ஒரு கூடுதல் தரைப்படைப்பிரிவு மற்றும் கவசப்படைப்பிரிவைக் கொண்டு அவர்களின் காசா படைப்பிரிவைப் பலப்படுத்தி உள்ளது, அதேவேளையில் உயர்மட்ட அதிகாரிகளோ "அனைத்து தெரிவுகளும் மேசையின் முன் இருப்பதாக" எச்சரிக்கின்றனர்.

கோலன் குன்றுகளை இஸ்ரேல் இணைத்துக் கொள்வதை ட்ரம்ப் அங்கீகரிப்பது, முதல் கட்டமாக, அந்த ஆக்கிரமிப்பு பிரதேசங்களிலும் அப்பகுதி எங்கிலும் இஸ்ரேல் இராணுவ ஆக்ரோஷத்தை எரியூட்டுவதற்குச் சேவையாற்றும். அது, ஏற்கனவே வலதை நோக்கி சென்று கொண்டிருக்கும் இஸ்ரேலின் முதலாளித்துவ அரசியல் அமைப்புமுறையை இன்னும் கூடுதலாக முற்றுமுதலான பாசிசவாதத்தை நோக்கி செல்லவும் அழுத்தமளிக்கும்.

அமெரிக்க வெளியுறவுத்துறையால் ஒரு பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட Meir Kahane இனது கச் கட்சியின் (Kach Party) ஒரு துணை அமைப்பான பாசிசவாத Otzma Yehudit (யூதர் அதிகாரம்) கட்சியுடன் நெத்தன்யாஹூ தன்னை கூட்டு சேர்த்துக் கொள்வதைத் தற்போதைய தேர்தல் சுழல் கண்டுள்ளது. யூத உள்நாட்டு கட்சியின் (Jewish Home party) மதவாத சியோனிசவாதிகளுடன் சேர்ந்து நெத்தன்யாஹூவின் கூட்டணி, மத்தியக் கிழக்கை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அணிபடிணிய வைப்பது மற்றும் ஈரானுடன் போருக்குத் தயாரிப்பு செய்வதுடன் பிணைந்துள்ள ஓர் ஏகாதிபத்திய காலனித்துவ திட்டமான "மாபெரும் இஸ்ரேல்" குறிக்கோளைப் பின்தொடர்வதற்காக, இஸ்ரேலில் இருந்தும் மற்றும் ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் இருந்தும் பாலஸ்தீன மக்கள் மீது இனச்சுத்திகரிப்பு நடத்துவதற்காக நிற்கிறது.

சர்வதேச அளவில் நடந்து வருவதைப் போலவே, தவறுக்கிடமின்றி தற்போதைய இஸ்ரேலிய தேர்தல்களிலும் இராணுவவாதத்தின் வளர்ச்சியுடன் பிணைந்த பாசிசவாத அரசியலை நோக்கி இஸ்ரேல் பகிரங்கமாக திரும்பி வருகிறது. “பாசிசம்" என்று எழுதப்பட்ட ஒரு பாட்டிலின் வாசனை திரவியத்தை அந்நாட்டின் அதிதீவிர வலதுசாரி நீதித்துறை அமைச்சர் Ayelet Shaked தன்மீது தெளித்துக் கொண்டு, “இது எனக்கு ஜனநாயகத்தைப் போன்ற வாசனை அளிக்கிறது,” என்று கேமராவைப் பார்த்து கூறுவதைப் போன்ற ஒரு தொலைக்காட்சி விளம்பரமும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளடங்கி உள்ளது. இஸ்ரேலில் உள்ள ஒரு பாலஸ்தீன பிரஜையும் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் Balad கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினருமான ஜமால் ஜஹல்காவை, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் (Knesset) வலதுசாரி உறுப்பினர் ஓரென் ஹசன், Clint Eastwood திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியைப் போல நையாண்டியாக சுட்டுத் தள்ளுவது போன்றது மற்றொன்றாக உள்ளது.

கோலன் குன்றுகளைப் பொறுத்த வரையில், அப்பிரதேசத்தின் பூர்வீக மக்களில் எஞ்சி இருப்பவர்களையும் வெளியேற்றுவதற்கான இஸ்ரேலின் முனைவை ட்ரம்பின் ஆணை ஐயத்திற்கிடமின்றி இன்னும் அதிகமாக தூண்டிவிடும். 1967 இல் இஸ்ரேலிய இராணுவம் கோலன் மீது படையெடுத்த போது சுமார் 130,000 சிரியர்கள் உயிர்பிழைக்க அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிகபட்ச பெரும்பான்மையாக அங்கே எஞ்சியிருக்கும் 25,000 ட்ரூஸ் அரேபியர்கள் இஸ்ரேலின் குடியுரிமையை ஏற்குமாறு அவர்களை நிர்பந்திக்கும் டெல் அவிவ்வின் முயற்சிகளை நிராகரித்து, தாங்கள் சிரியர்கள் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

ட்ரம்ப் பிறப்பிக்க உள்ள உத்தரவை எதிர்க்கும் போராட்டத்தில், சனிக்கிழமை, நூற்றுக் கணக்கானவர்கள் கோலன் குன்றுகளின் Majdal Shams இல் அணிவகுத்தனர். ஒருவர் ஊடகத்திடம் கூறுகையில், “கோலன் [குன்றுகள்], அரேபியர்கள் மற்றும் சிரியர்களுடையது என்று இங்கிருந்து நாங்கள் கூறுகிறோம், ட்ரம்ப் ஆகட்டும் வேறெந்த நபர் ஆகட்டும் அதன் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாது,” என்றார். மற்றொருவர் கூறுகையில், “அவர் இஸ்ரேலுக்கு மண்ணை கொடுக்க விரும்புகிறார் என்றால், அமெரிக்காவில் அவர் மாநிலங்களில் ஒன்றையோ அல்லது இரண்டையோ கொடுக்கட்டுமே,” என்றார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவை இஸ்ரேல் மற்றும் லெபனான் இரண்டுக்கும் வரச் செய்திருந்த அவரின் கடந்த வார மத்தியக் கிழக்கிற்கான விஜயத்தின் போது, ஒரு செய்தியாளர் அவரிடம், ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டதைக் குற்றமாக கூறுகின்ற அதேவேளையில், இது தடையாணைகள் விதிப்பதற்கும் மற்றும் நேட்டோவிடம் இருந்து இராணுவ அச்சுறுத்தல்களை ஆக்ரோஷமாக தீவிரப்படுத்துவதற்கும் சாக்குப்போக்காக இருந்த நிலையில், சிரியாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள் விடயத்தில் இஸ்ரேலின் இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிப்பதன் மூலம் அது "இரட்டை நிலைப்பாட்டு கொள்கையை" பின்பற்றுகிறதா என்று வினவினார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலன் குன்றுகளில் உள்ள மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிராகரிக்கின்றனர், அதேவேளையில் கிரிமியாவிலோ பெரும்பான்மையினர் ரஷ்ய குடியுரிமையை வரவேற்றனர் என்பது கருத்தில் கொள்ளப்படவில்லை.

பொம்பியோ முட்டாள்தனமாக, “இல்லை, இல்லவே இல்லை,” என்று பதிலளித்தார். “கோலன் குன்றுகள் விடயத்தில் ஜனாதிபதி என்ன செய்தார் என்றால் அந்த மண்ணின் யதார்த்தத்தை அங்கீகரிக்கிறார், இஸ்ரேலிய அரசைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்பு நிலைமை அவசியப்படுகிறது. அது தான்—அவ்வளவு தான்,” என்றார்.

அரசுகளின் "பாதுகாப்பு நிலைமைக்கு" என்ன அவசியமோ அதற்காக “மண்ணின் யதார்த்தத்தை" அங்கீகரிப்பது என்பது தான் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி நெடுகிலும் நூறு மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற இணைப்புகளுக்காக வழங்கப்படும் பகுத்தறிவார்ந்த முழு பதிலாக இருந்தது.

1909 இல் போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினாவை ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய சாம்ராஜ்ஜியம் இணைத்துக் கொண்டமை வரலாற்றாளர்களால் முதல் உலக போருக்கான முன்னறிவிப்பாக பார்க்கப்படுகிறது, அதேவேளையில் ஜேர்மனியில் நாஜி ஆட்சி நடத்திய தொடர்ச்சியான பல இணைப்புகள் தான் இரண்டாம் உலக போருக்குக் களம் அமைத்தது.

இத்தகைய வரலாற்று "யதார்த்தங்களை" அங்கீகரித்து தான், இரண்டாம் உலக போருக்குப் பின்னர், பிரதான சக்திகள், அமைந்துவிட்ட அரசுகளின் எல்லை ஒருமைப்பாடு மீதான அச்சுறுத்தல்களை நிராகரித்து, இதுபோன்ற இணைப்புகளைச் சட்டவிரோதமாக்கும் நோக்கில் ஜெனீவா தீர்மானங்களில் திருத்தம் கொண்டு வந்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக சாசனத்தை ஏற்றன.

மூன்றாம் உலக போருக்கான தயாரிப்பில், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தகைய கோட்பாடுகள் குப்பைக் குவியல்களுக்குள் வீசப்படுகின்றன. கோலனில் இஸ்ரேல் பறித்துக் கொண்ட நிலப்பகுதிகளை ட்ரம்ப் நிர்வாகம் புனிதப்படுத்துவது புதிய மற்றும் தொலைதூரத்திலும் இரத்தக்களரியான படையெடுப்புகள், இணைப்புகள் மற்றும் முற்றுமுதலான 21 ஆம் நூற்றாண்டு காலனித்துவத்தின் புத்துயிரூட்டலுக்கு களம் அமைக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்தியக் கிழக்கில் மிகப் பெரிய போர்களுக்கு வழி வகுப்பதற்காக அரை-நூற்றாண்டு காலத்திய பழைய குற்றத்தைச் சட்டப்பூர்வமாக்க முயன்று வருகிறது. ஆனால் அதன் நடவடிக்கையானது, அல்ஜீரியாவை உலுக்கி உள்ள பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் இருந்து, மொரொக்கோவில் முடியாட்சிக்குச் சவால்விடுத்து வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் போராட்டம் வரையில், ஈரானில் தொழிலாளர்களின் போராட்டங்கள் வரையில், காசாவில் படுமோசமான சமூக நிலைமைகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் இஸ்ரேலிலேயே கூட அரசுக்கும் உத்தியோகப்பூர்வ தொழிற்சங்கம் Histadrut இக்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கைகளை எதிர்த்து அறைகூவல் விடுக்கின்ற ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் வரையில் என அப்பிராந்தியம் முழுவதிலும் வர்க்க போராட்டம் ஒரே சீராக தீவிரமடைந்து வருவதற்கு மத்தியில் வருகிறது.

போர் மற்றும் பாசிச அச்சுறுத்தலுக்கான ஒரே பதில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் சுயாதீனமாக அணிதிரட்டுவதில் தான் தங்கியுள்ளது. வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ்வின் வலதுசாரி திருப்பத்திற்கு விடையிறுப்பதில், இது பூமி எங்கிலும் முதலாளித்துவத்தை முடிவு கட்டுவதற்கான போராட்டத்தின் பாகமாக மத்தியக் கிழக்கின் ஒரு சோசலிச கூட்டமைப்புக்கான போராட்டத்தில், யூத மற்றும் அரபு தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை முன்னிறுத்துகிறது.