ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Days after coming to the brink of all-out war
India and Pakistan stoke chauvinism, exchange threats

போரின் விளிம்பிற்கு வந்ததற்கு பிந்தைய நாட்களில்

இந்தியாவும் பாகிஸ்தானும் பேரினவாதத்திற்கு எரியூட்டுவதுடன், கடும் அச்சுறுத்தல்களையும் பரிமாறிக் கொள்கின்றன

By Deepal Jayasekera
6 March 2019

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) பகுதி எங்கிலும் நடத்தப்பட்டு வரும் எல்லை தாண்டிய குண்டுவீச்சுத் தாக்குதல்கள் கடந்த 48 மணித்தியாலங்களாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், தெற்காசியாவின் அணுவாயுதம் தரித்த இந்த போட்டி வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து உச்சபட்ச கொதி நிலையில் இருப்பதானது அப்பிராந்தியத்தை ஒரு பேரழிவுகர போரின் விளிம்பிற்குள் தள்ளாடி விழும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இரு தரப்பினரும், ஆக்கிரோஷமான அச்சுறுத்தல்களை பரிமாறிக் கொள்வதையும், “பயங்கரவாத” தாக்குதல்கள் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் உட்பட, மேலதிக இராணுவத் தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருவதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதையும் தொடர்கின்றனர்.

நேற்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய விரோத கிளர்ச்சிக்காக இஸ்லாமாபாத் அதன் பிராந்தியத்தில் இருந்து வழங்கி வரும் அனைத்து தளவாட உதவிகளையும் முற்றிலும் நிறுத்தாத பட்சத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அச்சுறுத்தியுள்ளார். “நாம் [பாகிஸ்தானுக்கு] ஏற்கனவே கூறியிருக்கிறோம்,” “அவர்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை அவர்களே அறிவார்கள்” என்று மோடி தெரிவித்தார்.

செவ்வாய் அன்று முற்பகலில், பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் நாட்டின் முன்னணி ஆங்கில மொழி நாளிதழ், Dawn இல், “கடந்த 24 மணித்தியாலங்களாக இந்தியா வெளிப்படையாக பின்பற்றும் மூலோபாய பொறுமை” என்பது இஸ்லாமாபாத் அதன் அச்சுறுத்தல் மட்டத்தை குறைப்பதற்கு வழி வகுக்காது. “நமது தொடர் கண்காணிப்பையும் தயார்நிலையையும் நம்மால் குறைத்துக் கொள்ள முடியாது. எவ்வித சாகச செயலையும் எதிர்கொள்ள நாம் தயார்நிலையில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

புது தில்லி பதட்டங்களைத் தணிக்க விரும்புவதாக கூறுவதை நம்பும்படியாக எதையுமே இஸ்லாமாபாத் பார்க்க முடியவில்லை என்று கஃபூர் மேலும் கூறினார். இந்த கட்டத்தில், போர் விரிவாக்கத்தை நிறுத்துவதற்கு “உணர்வுபூர்வமாக” இந்தியா “தயாராக இல்லை” என்றும் கஃபூர் குற்றம்சாட்டினார். இந்திய இராணுவத்தினர், பாகிஸ்தானை “ஈர்க்கவும்” “தூண்டவும்” கடந்தவார இறுதியை செலவழித்தனர் என்றும் அவர் கூறினார்.

நேற்று பிற்பகுதியில், பாகிஸ்தான் நீர்நிலைக்குள் ஒரு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் நுழைய முயன்றபோது அதனை தனது படைகள் துரத்திச் சென்றதாக இஸ்லாமாபாத் கூறியது. புது தில்லி அந்த கூற்றை மறுத்து, நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவியதாக பாகிஸ்தான் ஆதாரமாக வெளியிட்டிருக்கும் காணொளி காட்சிகள் உண்மையில் 2016 இல் தேதியிடப்பட்டவை என்றும் கூறுகிறது.

கடந்த வாரம், 1971 இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் ஒருபோதும் நிகழாத வகையிலான முழுப் போருக்கு மிகநெருக்கமாக இந்தியாவும் பாகிஸ்தானும் வந்தன. பிப்ரவரி 26, செவ்வாய் அன்று அதிகாலையில், இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஆழமாக ஊடுருவிச் சென்று தாக்குதல்களை நடத்தி, இஸ்லாமிய காஷ்மீரி பிரிவினைவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed-JeM) இன் முக்கிய முகாம்கள் என புது தில்லி கூறும் பகுதிகளை அழித்துவிட்டுத் திரும்பின, இக்குழுதான் ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய பாதுகாப்பு படையினரைக் கொன்று குவித்த பிப்ரவரி 14 தற்கொலை குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

விமானத் தாக்குதலை வரவேற்கும் விதமாக, இந்திய அரசாங்கமும் இராணுவமும், புது தில்லி “ஆட்டத்தின் விதிமுறைகளை” மாற்றிவிட்டது என்று பீற்றிக் கொண்டதுடன், காஷ்மீரில் நடத்தப்படும் அனைத்து பெரும் பயங்கரவாத தாக்குதல்கள் அல்லது அச்சுறுத்தும் தாக்குதல்கள் எதுவாயினும் அதற்கு பதிலடியாக இஸ்ரேலிய பாணியிலான பழிவாங்கும் தாக்குதல்களை இந்தியா அதிகரித்தளவில் தொடுக்கும் என்பதை இனிமேல் பாகிஸ்தான் எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் சமிக்ஞை செய்தன.

பாலக்கோட்டில் இந்திய விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 24 மணித்தியாலங்களுக்கு சற்று பின்னர், ஒரு டசின் பாகிஸ்தான் போர் ஜெட் விமானங்கள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவின, அதைத்தான் இந்திய இராணுவத் தளங்களை தாக்கும் முயற்சி தோல்வியடைந்தது என புது தில்லி வலியுறுத்திக் கூறுகிறது. இந்த தொடரும் நாய் சண்டையில், பாகிஸ்தான் குறைந்தது ஒரு இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

பிப்ரவரி 14 தற்கொலை குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பின்னர் எப்போதும், மோடியும் அவரது பிஜேபியும், பாகிஸ்தான் விரோத பேரினவாதத்தை கடுமையாகத் தூண்டி வருதுடன், இந்தியாவில் நடக்கவிருக்கும் பல கட்ட ஏப்ரல்-மே பொதுத் தேர்தலுக்கான தங்களது பிரச்சாரத்தின் மையமாக இஸ்லாமாபாத்தை மண்டியிட வைக்கப்போவதாக போர்க்குணமிக்க சபதங்களையும் விடுக்கின்றனர்.

1971 க்கு பின்னர் பாகிஸ்தான் மீதான விமானத் தாக்குதலுக்கு தனது அரசாங்கம் தான் முதலில் ஆணையிட்டுள்ளதாக பெருமை பீற்றிக் கொள்வதை சமீபத்திய நாட்களில் மோடி வழமையாக்கியுள்ளார், மேலும், உள்நோக்கம் கொண்டு தான் பாகிஸ்தானை எதிர்த்து நிற்க எதிர்க்கட்சி தவறிவிட்டது எனவும், இந்திய இராணுவ பயன்பாட்டிற்கு ரஃபேல் போர் விமானங்களையும், ஏனைய அதிநவீன ஆயுதங்களையும் விநியோகிக்க அது மறுத்துவிட்டது எனவும் விமர்சித்து எதிர்க்கட்சிக்கு எதிராக அணிதிரட்டியும் வருகிறார்.

நேற்று அலஹாபாத்தில் மோடி பேசுகையில், பாலக்கோட் விமானத் தாக்குதலில் 200 க்கும் அதிகமான “பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டது தொடர்பாக அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என கோருவது குறித்து எதிர்க்கட்சியினரை கண்டித்தார். மேலும், “பயங்கரவாதம் மீதான தாக்குதல்களை மோடி தொடுத்துக் கொண்டிருக்கும்” அதேவேளையில், “அவர்களோ, மோடி மீதான தாக்குதல்களை ஓய்வின்றி நடத்தி வருகின்றனர்” என்று பரிகாசமாக தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக, பாட்னாவில் ஒரு பேரணியில் மோடி பேசுகையில், “கடந்த காலத்தில் தேசிய பாதுகாப்பு குறித்து காங்கிரஸூம் அதன் கூட்டணிகளும் எப்படி நடந்து கொண்டன என்பது பற்றி நாடு நன்கறியும்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அவர், அவரது இந்து மேலாதிக்கவாத பிஜேபி தலைமையிலான “புது இந்தியா” என்பது, இந்திய சிப்பாய்கள் இரத்தம் சிந்தியதான “ஒவ்வொரு தியாகத்திற்கும்” “ஒரு பயனுள்ள பதிலை” வழங்கும் என்றும் சபதம் எடுத்துக் கொண்டார்.

மோடி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும், முதலீட்டாளர் சார்பு கொள்கைகளுக்கும் எதிரான தொழிலாளர்கள், நகர்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் மத்தியில் பெருகி வரும் எதிர்ப்பை திசை திருப்ப, பாகிஸ்தான் உடனான பதட்டங்களை விஸ்தரிப்பதை மோடி வெட்கமின்றி சுரண்டி வருகிறார், அவருடைய அரசாங்கம் தான் அதற்கு பொறுப்பாக உள்ளது. இச்சூழ்நிலையில், அரசாங்கத்தின் நவ தாராளவாத திட்ட நிரலை நேரடியாக சவால் செய்யும் விதமாக ஜனவரியில் பத்து மில்லியன் பேர் பங்கேற்ற இரண்டு நாள் வேலை நிறுத்தமும், மற்றும் மிக வறிய விவசாயிகள் மத்தியில் எழுந்த பரந்தளவிலான பெரும் ஆர்ப்பாட்டங்களும் உட்பட, பல வேலைநிறுத்த அலைகள் எழுச்சி பெறுவதை சமீபத்திய மாதங்களில் காண முடிகிறது.

நேற்று, பிஜேபி யின் பெருவணிக பொருளாதார திட்ட நிரலையும், அத்துடன் வாஷிங்டன் உடனான இந்திய இராணுவ-மூலோபாய கூட்டாண்மையை அது பலப்படுத்துவதையும் வலுவாக ஆதரிக்கும் ஒரு நாளிதழான, இந்தியன் எக்ஸ்பிரஸ், போர் நெருக்கடியை மோடியும் அவரது பிஜேபி யும் எந்தளவிற்கு “அரசியல்மயமாக்கி”யுள்ளனர், மற்றும் அரசாங்கத்தின் மீதான எந்தவித விமர்சனங்களையும் சித்தரிக்கும் அவர்களது முயற்சிகள், அல்லது இராணுவத்தின் செயல்கள் துரோகமானவை, இல்லையேன்றால் நம்பிக்கைத் துரோகமானவை என்பது பற்றி எச்சரிக்கைக் குரலெழுப்பும் ஒரு தலையங்கக் கட்டுரையை பிரசுரித்துள்ளது.

இது, இராணுவத்திற்கு இருக்கும் மக்கள் ஆதரவை இறுதியில் குறைத்துவிடக்கூடும் என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதில் அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருகட்சி வாதத்தை தடை செய்யவும் கூடும் என்றும் தலையங்கக் கட்டுரை கருத்து கூறியுள்ளது.

மேலும் முக்கியத்துவத்திற்கு எவ்வித குறைவின்றி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கவனத்தில் எடுத்துக் கொண்டது அதாவது எதிர்கட்சிகள், பிஜேபிக்கு பெருமளவில், பணிந்து போயுள்ளன, அதாவது “பசு விழிப்புணர்வு” போன்ற விஷயத்தில் வெறும் “செத்த பிணம்” – போல் அதாவது மாட்டிறைச்சி சாப்பிடும் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து - “அடிபணிந்துள்ளது அல்லது வளைந்து கொடுத்தது” என்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் வழங்குகிறது என குறிப்பிட்டது.

உண்மை என்னவென்றால், இந்திய துணைக்கண்டத்தின் 1947 பிற்போக்குத்தன வகுப்புவாத பிரிவினையில் வேரூன்றியிருக்கும் பாகிஸ்தான் உடனான இந்தியாவின் இராணுவ மூலோபாய பகைக்கு உரக்க குரல் கொடுக்கும் ஆதரவாளர்களாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் – இரட்டை ஸ்ராலினிசக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உட்பட - இருக்கின்றன; அவை காஷ்மீர் மக்கள் மீதான இந்தியாவின் இரத்தக்களரியான அடக்குமுறையை பாதுகாக்கின்றன; மேலும் இந்திய இராணுவத்தின் விரைவான விரிவாக்கத்தையும், இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசாகும் அபிலாஷைகள் முன்னெடுக்கப்படுவதையும் அவை ஆதரிக்கின்றன.

அதேபோல, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தரவின் பேரிலும், அத்துடன் அவரது தேர்தல்கால வாக்குறுதிகளை வெளிப்படையாக தகர்த்தெறியும் வகையிலும் தனது அரசாங்கம் எடுத்த சிக்கன நடவடிக்கைகளின் பேரழிவுகர தாக்கம் மீதான மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்துடன் தேசியவாதத்தைத் தூண்டும் போர் நெருக்கடியை பயன்படுத்தி வருகிறார்.

சமூக சேவைகளுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் இஸ்லாமாபாத் செலவழித்து வரும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடுகளைக் கூட வெட்டுகின்ற அதேவேளையில், கான் இராணுவச் செலவினங்களை அதிகரிக்க முனைகிறார் என்பது போன்ற எந்தவொரு விமர்சனத்தையும் மவுனமாக்க இந்தியாவுடன் தொடர்ந்து வெடிப்புறும் பதட்டங்களை சந்தேகத்திற்கு இடமின்றி அவரும் பயன்படுத்துவார் என்பது மட்டும் உறுதி.

பாகிஸ்தான், இஸ்லாமிய கூலிப் படைகளை வளர்த்து அவர்களைக் கொண்டு காஷ்மீரின் முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினர் மீது வகுப்புவாத தாக்குதல்களை தொடுத்தது உட்பட, பல தசாப்தங்களாக அதன் சொந்த பிற்போக்குத்தன புவிமூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்காக, ஜம்மு காஷ்மீரில் நிகழ்த்தப்படும் இந்தியாவின் அட்டூழியங்களை இழிவான வகையில் அது சுரண்டி வந்துள்ளது.

பிப்ரவரி 27 நாய் சண்டைக்குப் பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல்களை மேலும் விஸ்தரிக்கக் கூடாது என வலியுறுத்துவதற்கு ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுடன் வாஷிங்டனும் இணைந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாறாக, பிப்ரவரி 14 புல்வாமா தற்கொலை குண்டுவீச்சு தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக, “சுய பாதுகாப்பு” குறித்த இந்தியாவின் “உரிமை” என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் அறிவித்து, பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியிருந்தது.

மேலும், இந்திய-அமெரிக்க “பூகோள-மூலோபாய பங்காளித்தனத்தை” குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் கீழான ஒரேமாதிரியான வாஷிங்டனின் உந்துதல் மூலமாக புது தில்லி தைரியமூட்டப்பட்டுள்ளது.

மார்ச் 3 அன்று New York Times பத்திரிகையில் வெளியான, “பாகிஸ்தான் உடனான நாய் சண்டையில் இந்தியா தோற்ற பின்னர், அதன் “அனுபவமிக்க” இராணுவம் பற்றி கேள்விகள் எழும்பும்,” என்ற தலைப்பிலான கட்டுரை, 15 பில்லியன் டாலருக்கு கூடுதலான மதிப்பு கொண்ட அமெரிக்க ஆயுதங்கள் இந்தியாவிற்கு விற்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், அதன் பெரும்பாலான இராணுவ ஆயுதங்கள் பழமையானவை என்பது பற்றிய கவலைகளையும் அக்கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளையும் வாஷிங்டன் சிந்தனைக் குழாம்களின் பல்வேறு பிரசுரங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அக்கட்டுரை, சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்களின் மையமாக இந்தியா இருப்பதுடன், பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலால் அதன் பலவீனம் வெளிப்பட்டமையானது இந்திய இராணுவ நவீனமயமாக்கத்திற்கு அமெரிக்கா மேலதிக உதவியை வழங்கத் தூண்டுதல் அளிக்க வகை செய்தது என்பதை வலியுறுத்திக் கூற முனைந்தது. மேலும், Times பத்திரிகை, “எந்த வகை பிரச்சினைகள்” எழுந்தாலும், “சீனாவின் வளர்ந்து வரும் பிராந்திய அபிலாஷைகளுக்கு எதிராக புதர் வேலி அமைக்க வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவை ஒரு முக்கிய நட்பு நாடாக உருவாக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது” என்றும் தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் நிகழ்வது போன்று, தெற்காசியாவிலும், பூகோள அளவிலான மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதல் ஒரு எரியூட்டும் தாக்கத்தைக் கொண்டுள்ளது. புது தில்லி உடனான அதன் மூலோபாய அரவணைப்பு, பிராந்திய சம பல நிலையை உயர்த்தியுள்ளது, இந்தியாவை ஊக்கப்படுத்துவதாக உள்ளது, மேலும் இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கு வெடிப்புறும் ஒரு மின்விசை சக்தியை சேர்த்துள்ளது என்ற நிலையில், தற்போது நிகழ்ந்து வரும் போர் நெருக்கடியைப் போல, அதிகரித்து வரும் பதட்டங்களால் உருவாகும் அதிகரித்தளவிலான அபாயம், ஒரு பூகோள அளவிலான மோதலாக விரைவில் விரிவடையக் கூடும் என்பதுடன், அணுவாயுத பரிமாற்றங்களைக் கொண்ட ஒரு பேரழிவுகர மோதல் எதிரெதிர் தரப்பினரின் பெரும் வல்லரசுகளையும் போருக்குள் இழுத்துவிடும்.