ஏனைய மொழிகளில்

Print Version|Feedback
Demand the unconditional reinstatement of Sri Lankan plantation worker S. Balasubramaniyam!

இலங்கை தோட்டத் தொழிலாளி எஸ். பாலசுப்பிரமணியத்திற்கு நிபந்தனையின்றி மீண்டும் வேலை வழங்க கோருவோம்!

By M. Thevarajah and W.A. Sunil 
7 March 2019

நுவரெலியா மாவட்டத்தின் டிக்கோயாவில் உள்ள என்ஃபீல்ட் தோட்டத்தின் தொழிலாளியான எஸ். பாலசுப்பிரமணியம், சமீபத்திய தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தில் செயலூக்கத்துடன் ஈடுபாடு காட்டியதன் காரணமாக, பெப்பிரவரி 27 அன்று நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டார்.


எஸ். பாலசுப்பிரமணியம்

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பாலசுப்பிரமணியத்தின் பழிவாங்கலை எதிர்த்து, அவருக்கு உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீண்டும் வேலை கொடுக்க கோர வேண்டும். அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டமை அனைத்து உழைக்கும் மக்களின், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபா (5.50 டாலர்) அல்லது தினசரி அடிப்படை ஊதியத்தில் 100 சதவிகித அதிகரிப்பைக் கோருகின்றனர்.

என்ஃபீல்ட் தோட்டத்தின் சென் எலியாஸ் பிரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தோட்டத் தலைவரான பாலசுப்பிரமணியம், டிசம்பர் 13 முதல் வேலை நீக்கம் செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

பெப்ரவரி 27, என்ஃபீட்ல்ட் தோட்ட குழு முகாமையாளர் ஏ.எம்.சி.பி. அத்தநாயக்க, பாலசுப்பிரமணியத்திற்கு வேலை நீக்க கடிதத்தை கொடுத்துள்ளார். நிர்வாகம் நடத்திய "உள்ளக விசாரணை" என்று அழைக்கப்படுவதன் மூலம், பல்வேறு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாளியாகக் கண்டறியப்பட்ட பின்னர், பாலசுப்பிரமணியம் வேலை நீக்கம் செய்யப்பட்டார், என அது கூறியது. இந்த கடிதம் அவர் "உடனடியாக" வேலை நீக்கம் செய்யப்படுவதாகவும், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் ஒரு அற்ப நிதியான "ஓய்வுக் கொடுப்பனவை" அவர் பெற முடியும் என்றும் அது அறிவித்துள்ளது.

பாலசுப்பிரமணியம் மீது ஏழு குற்றச்சாட்டுக்கள் திணிக்கப்பட்டுள்ளன. அதில், அவர் டிசம்பர் 5 அன்று என்ஃபீல்ட் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலை பூட்டினார், பலருடன் சேர்ந்து தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ளே மற்றும் வெளியே வாகனங்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தினார், போன்ற குற்றச்சாட்டுக்களும் அடங்கும்.

நிர்வாகத்தின் பக்கச் சார்பான, ஜனநாயகமற்ற "உள்ளக விசாரணையானது" ஒரு கேலிக்கூத்து ஆகும். பாலசுப்பிரமணியத்திற்கு சட்டபூர்வமான ஆதரவைப் பெறுவதற்கோ அல்லது அவரது பாதுகாப்பிற்கான ஆதாரங்களை வழங்குவதற்கோ வாய்பு கொடுக்கப்படவில்லை. நடந்ததாக சொல்லப்படும் இந்த சம்பவத்திற்கு பத்மநாதன், சுப்பிரமணியம், கிருஷ்ணன் ஆகிய மூன்று என்ஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் பாலசுப்பிரமணியத்திற்கு ஆதரவளித்ததாகவும், அருள்நாயகி, கிளேரா, சிவசாமி ஆகிய மூன்று இ.தொ.கா. செயற்பாட்டாளர்கள் இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். நிர்வாகம் புகார் அளித்தபின், பொலிஸ் இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. பாலசுப்பிரமணியமும் ஏனைய ஆறு பேரும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றனர்.

100,000 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் நாளாந்த அடிப்படை ஊதியத்தை 100 சதவிகிதம் அதிகரிக்கக் கோரி காலவரை அற்ற தேசிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய அதே நாளிலேயே, நிர்வாகம் கூறுகின்ற இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய வேலைநிறுத்தத்தின் போது தேயிலை தொழிற்சாலைக்கு வாகனங்களை அனுப்புவதற்கு என்ஃபீல்ட் தோட்ட நிர்வாகம் முடிவு எடுத்தமை தெளிவான ஆத்திரமூட்டலாக இருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஊதிய விவகாரத்தை "தீர்ப்பதாக" கொடுத்த ஒரு போலி வாக்குறுதியை சுட்டிக் காட்டி, இ.தொ.கா. தலைமைத்துவம் வேலை நிறுத்தத்தை கைவிடும் வரை அது ஒன்பது நாட்கள் தொடர்ந்தது. தொழிற்சங்கங்கள் "வேலைக்குத் திரும்புவதற்காக" எடுத்த முடிவை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்த்ததோடு மேலும் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர்.

நிர்வாகத்தின் நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமற்றது என்று உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பாலசுப்பிரமணியம் கூறினார். "உள்ளக விசாரணையில்," சம்பவத்தின் போது அவருடன் இருந்த மற்ற தொழிலாளர்களின் பெயர்களை பாலசுப்பிரமணியத்திடம் இருந்து தெரிந்தகொள்வதற்காக நிர்வாகம் முயன்றது.

தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றி பேசியதாலும் கடந்த ஆண்டு தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தை மூடுவதை எதிர்த்ததாலுமே பாலசுப்பிரமணியத்தை நிர்வாகம் இலக்கு வைத்தது என்று மற்றொரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். உற்பத்தித் திறனை உயர்த்துவதை இலக்காகக் கொண்ட "வருமானப் பகிர்வு மாதிரியை" தோட்டத்தில் அமுல்படுத்துவதை அவர் விமர்சித்தார்.

பாலசுப்பிரமணியத்திற்கு மீண்டும் வேலை வாங்கி கொடுக்க அல்லது ஏனைய என்ஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்களையும் இ.தொ.கா. தோட்டத் தலைவர்களையும் பாதுகாக்க இ.தொ.கா. எந்தவொரு போராட்டத்தையும் ஒழுங்கமைக்க மறுத்துவிட்டது. இந்தக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையே பாலசுப்பிரமணியத்தை வேலை நீக்குவதற்கு தோட்ட நிர்வாகத்தை ஊக்கப்படுத்தியது.

தேசிய ஊதிய வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொண்ட பின்னர், இ.தொ.கா. மற்றும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் ஒரு விற்றுத் தள்ளும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

100 சதவிகித ஊதிய அதிகரிப்புக்கான தொழிலாளர்களின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு, தொழிற்சங்கங்கள் 40 சதவிகித அதிகரிப்புக்கு உடன்பட்டதோடு முன்னர் போராடிப் பெற்ற கொடுப்பனவுகளை இரத்து செய்யவும் உடன்பட்டன. உண்மையில், தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் 20 ரூபாவால் அல்லது 11 அமெரிக்க சதத்தால் அதிகரிப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் இந்த காட்டிக்கொடுப்பை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அவர்களின் கோபத்தை திசை திருப்பும் முயற்சியில், மற்ற தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக போலியாக கூறிக்கொண்டன.

புதிய கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு பிரதான பிரிவு தொழிற்சங்கங்கள் "வெளியார் உற்பத்தி மாதிரியை" சுமத்துவதற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொள்கின்றன. இது தொழிலாளிக்கு  ஒரு துண்டு தேயிலைத் தோட்ட காணியை ஒப்படைக்கும் ஒப்பந்த முறையாகும். இதன் கீழ் அந்த நிலத்தை பராமரிக்கும் மற்றும் அறுவடை செய்யும் பொறுப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆகக்கூடிய சுரண்டல் திட்டமானது தோட்டத் தொழிலாளர்களை நவீன குத்தகை விவசாயிகளாக மாற்றுவதோடு அவர்கள் தமது வருமானத்திற்காக தோட்டக் கம்பனிகளுக்கு தேயிலைக் கொழுந்துகளை வழங்குவதில் தங்கியிருப்பர். கம்பனி அதன் செலவுகளையும் இலாபத்தையும் வெட்டிக்கொண்ட பின்னர் ஒரு தொகையை தொழிலாளிக்கு கொடுக்கும்.

"தினசரி சம்பள மாதிரியை" நிறுத்துவதற்கு விரைவில் இந்த முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தோட்டத் கம்பனிகள் வலியுறுத்துகின்றன – உதாரணமக, ஊதிய செலவினங்களை கடுமையாக குறைத்து, மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் போராடிப் பெற்ற வேலை நிலைமைகள் மற்றும் நலன்களை இல்லாமல் ஆக்குவதாகும்.

தொழிற்சங்கங்களுடன் கூட்டு சேர்ந்து, தோட்டக் கம்பனிகள் இலாபத்திற்கான ஈவிரக்கமற்ற உந்துதலுக்காக சகல தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் நசுக்குவதற்கு உறுதியாக உள்ளன என்பதையே பாலசுப்பிரமணியத்தின் மீதான வேட்டையாடலும் வேலை நிறுத்தமும் தெளிவாக சமிக்ஞை செய்கின்றன. தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய போராட்டங்களை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்தமை கம்பஃனிகள் மற்றும் அரசாங்கங்த்தின் கைகளை பலப்படுத்தியுள்ளது.

பாலசுப்பிரமணியத்தின் வேலை நீக்கம் மற்றும் ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சம்பவம் அல்ல.

ஜனவரி 11 அன்று, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆறு ஏ.டி.ஜி. சிலோன் தொழிலாளர்கள், சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து வேலை நிறுத்தப்பட்டனர். ஏ.டி.ஜி. தொழிலாளர்கள், வேலை நிறுத்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்குமாறு கோரி, காலவரை அற்ற வேலைநிறுத்தத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

என்ஃபீல்ட் தோட்ட நிர்வாகம் பாலசுப்பிரமணியத்தை வேலை நீக்கியதை எதிர்த்து அறிக்கைகள் வெளியிடுமாறும், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும் தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய போராட்டத்தில் தலையீடு செய்ததுடன், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைய வேண்டும் என்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தமது தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்டுவதன் மூலம், ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரே முன்நோக்கிய பாதை என்று விளக்கியது. எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் அந்த அழைப்புக்கு செவி சாய்த்து தங்கள் சொந்த நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவைக் கொண்ட எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழு, தங்கள் போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள் மற்றும் முன்னோக்கிய பாதை பற்றி கலந்துரையாடுவதற்காக, தோட்டத் தொழிலாளர்களின் மாநாடு ஒன்றை நடத்துகிறது. பாலசுப்பிரமணியத்தின் வேலை நிறுத்தம் பற்றியும் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றியும் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படும். இந்த மாநாடு, மார்ச் 17 அன்று ஹட்டன் நகர மண்டபத்தில் நடைபெறும். இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.