ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP in Sri Lanka wins strong support for plantation workers’ conference

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்வரும் தோட்டத் தொழிலாளர் மகாநாட்டுக்காக பிராச்சரம் செய்கிறது

By our reporters
9 March 2019

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பினதும்  அங்கத்தவர்கள், ஹட்டன் நகரசபை மண்டபத்தில், மார்ச் 17 அன்று நடைபெறவிருக்கும் தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டை கட்டியெழுப்புவதற்கான பிரச்சார நடவடிக்கைகளுக்காக, இலங்கையின் மத்திய மலையகப் பிரதேசத்தில் பல்வேறு  தோட்டங்களுக்கும் கடந்த வாரம்  சென்றிருந்தனர்.

"தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகளும் சம்பளம் மற்றும் சமூக உரிமைகளையும் வெல்வதற்கான முன்நோக்கி பாதையும்" பற்றி கலந்துரையாடுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவுடன், எபோஸ்ட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவினால் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எபோஸ்ட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவானது கடந்த டிசம்பர் மாதம் தோட்டத் தொழிலாளர்களின் ஒன்பது நாள் வேலை நிறுத்தத்தின் போது சோசலிச  சமத்துவக் கட்சியின் அரசியல் தலையீட்டின் பின்னர் ஸ்தாபிக்கப்பட்டது.

அந்த போராட்டத்தில் 1,000 ரூபாய்  நாளாந்த அடிப்படை சம்பளத்தைக் கோரி 100,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்குபற்றினர். இறுதியாக அந்த போராட்டம், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற தொழிற் சங்கங்களின் ஆதரவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசால் (இ.தொ.கா.) காட்டிக்கொடுக்கப்பட்டது.

தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், தோட்ட தொழிற் சங்கங்களான இ.தொ.கா. மற்றும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஜனவரி 28 அன்று கம்பனிகளுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. வாக்குறுதியை மீறிய இந்த ஒப்பந்தத்தில், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக கம்பனிகளுக்கு வாக்றுதியளித்து, ஒரு அற்ப சம்பள உயர்வை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

கடந்த சில தினங்களில் சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிராச்சாரகர்கள், தெரேசியா ஒட்டரி, டிக்கோயா உட்பட பல்வேறு தோட்டங்களுக்கு சென்றிருந்தனர்.

ஹட்டனிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் பொகவந்தலாவ நகருக்கு அருகில் அமைந்துள்ள தெரேசியா தோட்டமானது மொரார், கிளனி, தெரேசியா ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. மடுல்சீமை பெருந்தோட்டத்துக்கு சொந்தமான இந்த தோட்டங்களில் சுமார் 900 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

எல்லா பிரிவுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தால் வாராந்த வேலை நாட்களை 6 இல் இருந்து 4 ஆக குறைக்கப்பட்டதற்கு எதிராக தொழிற்சங்கங்களுக்கு வெளியில் சுயாதீனமாக, கடந்த 20ம் திகதி முதல் நான்கு நாட்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

ஒரு தொழிலாளி பிரச்சாரகர்களிடம் கூறியதாவது: "தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகின்றன. தோட்டக் கம்பெனிகள் நாங்கள் கோரியபடி எங்கள் ஊதியத்தை அதிகரிக்க மறுத்துவிட்டன. எங்களுக்கு 20 ரூபாய் மட்டுமே சம்பள அதிகரிப்பு கிடைத்தது. நாங்கள் 9 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம், ஆனால் தொழிற்சங்கங்கள் எங்களை காட்டிக்கொடுத்துவிட்டன. இப்போது நிர்வாகங்கள் எங்கள் வேலை நாட்களை குறைத்து வருகின்றன. தொழிற்சங்கத்திலிருந்து சுயாதீனமாக அணிதிரளாது முன்னோக்கி செல்ல முடியாது. நாங்கள் தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கு பெறுவோம், பேசுவோம்."

சோ.ச.க. பிரச்சாரகர் மார்ச் 17 தோட்டத் தொழிலாளர் மாநாடு பற்றி கலந்துரையாடுகிறார்

வி. அண்ணாமலை, தான் ஒரு தொழிற்சாலை சாரதியாக வேலை செய்ததாகவும் குடும்பத்தினை பராமரிக்க போதிய வருமானம் இன்மையால், தொழிலில் இருந்து விலகி கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

"ஒரு சிறிய லயன் அறையை பிரித்து இரண்டு குடும்பங்கள் வாழ்வது இங்கு ஒரு பொதுவான விடயம். ஒரு அற்ப வருமானத்தில் எவ்வாறு  வீடொன்றுக்காக செலவிடமுடியும்? பெரும்பாலான தொழிலாளர்கள் தமது வீட்டை திருத்த, தனது ஊழியர் சேமலாபா நிதி வரும் வரை, அல்லது, தமது  குடும்பத்தவர்  வெளிநாடு செல்லும் வரை காத்திருக்க வேண்டும். தோட்ட பிரதேசத்தில் வீட்டு பிரச்சினை ஒரு முக்கியமான எரியும் பிரச்சினை," என அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்களுக்கு அப்பால் தொழிலாளர் அமைப்புகளை அமைத்து  சோசலிசத்துக்காக போராடுவது தொடர்பாக மற்றுமொரு தொழிலாளிக்கு இருந்த சந்தேகத்தை போக்க எமது கலந்துரையாடலுக்கு அவர் ஆதரவளித்தார்.

ஒரு பெண் தொழிலாளி தமது அடிப்படை வசதிகள் எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தினார்.

"எங்களுக்கு ஒரு வைத்தியசாலை இருக்கிறது ஆனால் வைத்தியர் இல்லை. எங்கள் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு நாங்கள் பொகவந்தலாவ மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். தோட்ட பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை மாத்திரமே உள்ளது. எட்டாம் வகுப்புக்கு பின்னர் எமது பிள்ளைகள்  பொகவந்தலாவ நகரத்தில் உள்ள பாடசாலைக்கோ அல்லது அதற்கு அப்பலோ செல்ல வேண்டும்."

ஒட்டரி தோட்டம் ஹட்டனிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் ஒரு பகுதி கலனிவெளி பெருந்தோட்டத்துக்கு சொந்தமான இன்வெரி தோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றைய பகுதியின் உரிமையாளர் படிப்படியாக தோட்டத்தை முடி வருகிறார். ஏற்கனவே தோட்டத்தின் 50 ஏக்கரை இன்னுமொரு வியாபாரிக்கு விற்றபனை செய்துள்ளார். அவர் விற்றபனைக்கு வீடுகளை கட்ட தேயிலை செடிகளை அகற்றி வருகின்றர்.

1983ல் இந்த தோட்டம் ஜனவசம நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அப்போது 150 தொழிலாளர்கள் இருந்தனர். தோட்டத்தை சுத்தம் செய்யாமைக்கு எதிராக ஏழு மாதங்களாக நடந்த போராட்டத்தை தொடர்ந்து தனியாருக்கு வழங்கப்பட்டது. நிர்வாகம் தொழிலாளர்களை 80 ஆக குறைத்தது. நான்கு வருடத்திற்கான ஊழியர் சேமலாப நிதி தொழிலார்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டிருந்த போதிலும், அது மத்திய வங்கிக்கு அனுப்பப்படவில்லை என தொழிலாளர்கள் கூறினர்.

ஒட்டரி சந்தியில் அதன் பிரதான வாயிலில் 1938ல் கட்டப்பட்ட கைவிடப்பட்ட ஒரு கட்டிடம் உள்ளது. அது ஒரு வைத்தியசாலை எனவும் நீண்ட காலத்துக்கு முன்னரே அது கைவிடப்பட்டதாகவும் தொழிலாளர்கள்  தெரிவித்தனர். இது தனியார் மயப்படுத்தல் நடவடிக்கையின் வெளிப்பாடாகும்.

டிக்கோயா தோட்டம் ஹட்டன் நகருக்கு அருகில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

"நாங்கள் எமது நாளாந்த வேதனத்தை பெற 20 கிலோ கொழுந்து பறிக்கவேண்டும். நாங்கள் 15 கிலோ எடுத்தாலும் எங்களுக்கு சம்பளத்தில் அரைவாசியே கிடைக்கும். நாங்கள் மேலதிகமாக பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிர்வாகம் கூறுகிறது. எப்படியாவது இரண்டு அல்லது மூன்று கிலோ மேலதிகமாக பறிக்கலாம். மழை பெய்தால் ஈரத்திற்காக மூன்று கிலோ கழிக்கப்படும். அட்டைகளும்  சிறுத்தைகளும் மற்றுமொரு அச்சுறுத்தல்", என ஒரு தொழிலாளி குறிப்பிட்டார்.

அவருடைய மகள் உயர்தரம் வர்த்தக பிரிவில் படிக்கின்றாள். அவர்  நோரவூட் நகர பாடசாலைக்கு செல்ல நாளாந்தம் போக்குவரத்து செலவு 70 ரூபாயாகும். மாதாந்த மேலதிக வகுப்புக்கு 2,000 ரூபாய் அவரது தயார் செலவு செய்கிறார்.

நடைபெற்று வரும் இந்திய-பாகிஸ்தான் இராணுவ பதட்டங்கள் பற்றிய கலந்துரையாடலில் இருவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். "பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படி பாக்கிஸ்தானுக்குள் இந்தியா இலக்குகளைத் தாக்கியது என்று வானொலியில் கேட்டேன். நாம் உடனடியாக ஒரு அச்சுறுத்தலை உணர்கிறோம்" என்று இளம் பெண் கூறினார்.

கடந்த மாதம் இந்தியாவில் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் நடந்தது,  தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாக்கிஸ்தான் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன வேலைத் திட்டத்தின் காரணமாக அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. இந்திய முதலாளித்துவமும் அதன் சமதரப்பான பாக்கிஸ்தானிய முதலாளித்துவமும் சமூக எழுச்சிகளை நசுக்குவதற்காக தேசியவாத உணர்வுகளைத் தூண்டி வருகின்றன.

கலந்துரையாடலின் முடிவில் அவர்கள் "சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையை வாங்கினர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் தோட்டத் தலைவர் கே. லட்சுமணன், சோ.ச.க. தலையீட்டை வரவேற்றார். 2015 ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையை அவர் கவனமாக வைத்திருக்கிறார். அவர் அதைக் காட்டினார், "நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச தீர்வுக்காக தொடர்ந்து போராடுகின்றீர்கள். உங்கள் அறிக்கையின் தலைப்பு “போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டம்,” என்பதாகும். அது சரியான நேரத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


கே
. லட்சுமணன்

"[இ.தொ.கா. தலைவர்] ஆறுமுகம் தொண்டமான் தோட்டத்திற்கு குழாய் நீர் வழங்குவதாக தம்பட்டம் அடித்தார். எங்களுடைய வீடுகளுக்கு முன்னால் நாங்கள் குழாய் அமைத்தோம். ஆனால் இன்னும் காத்திருக்கிறோம். தொழிலாளர்கள் இன்னும் தொலைதூர இடங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டு வருகின்றனர். நீர் நிலைகளில் தண்ணீர் சேகரிக்க நீண்ட வரிசைகள் உள்ளன."

தோட்டத் தொழிலாளர்களுக்கு மலசலகூடம் போன்ற அடிப்படைவசதிகள் கூட இல்லை. லட்சுமனனின் தந்தையும் அவரது தாத்தாவும் தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் ஐந்து குடும்பங்கள் ஒரு லயன் அறையில் வசிக்கின்றனர். அது  மிகவும் பழமையானது என்று அவர் கூறினார். “நாங்கள் பாழடைந்த இந்த வீடு இரவில் எம்மீது சரிந்து விடுமோ என்ற பீதியிலேயே உறங்குவோம்”.


டிக்கோயா தோட்டத்தில் குடும்பங்கள் தண்ணீருக்காக காத்திருக்கின்றன

"அரசாங்கங்கள் மாறிவிட்டன, ஆனால் பிரச்சினைகள் எஞ்சியுள்ளன. நான் தொழிலாளர்கள் மத்தியில் உங்கள் முன்னோக்கைப் பற்றி கலந்துரையாடவும் மாநாட்டை கட்டியெழுப்ப கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யவும் விரும்புகிறேன்," என அவர் தொடர்ந்து கூறினார்.

குமார் (34), தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு மற்றும் அவர்களது வாழ்க்கை நிலைமைகள் குறித்து கோபத்துடன் பேசினார். அவரது வீட்டின் ஒவ்வொரு சுவரிலும் வெடிப்புகளை காட்டினார். ஒரு கழிப்பறை கட்டியமைக்காக சட்ட விதிகளை மீறியதாக அவருக்கு 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.


சாக்கினால் சுவர் அமைக்கப்பட்ட தோட்டத் தொழிலாளயின் குடியிருப்பு

அவர் தனது மூத்த சகோதரியின் வீட்டைக் காட்டினார். அதன் சுவர்கள் செங்கல்லால் கட்டப்பட்டவை அல்ல. அது தற்காலிகமாக சாக்குகளில் அமைக்கப்பட்டிருந்தது. வீடு ஒரு செங்குத்தான பள்ளத்தில் அமைந்திருந்தது. ஏனைய லயன் அறைகள் போலவே கூரை இத்துப் போயிருந்தது. அவர் மூன்று பிள்ளைகளுடன் இந்த வீட்டில் வாழ்கிறார்.

"இந்த முதலாளித்துவ தலைவர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட வேண்டும். எங்களுக்கு ஒரு புதிய தலைமை தேவை. இளைஞர்களின் ஆதரவை நாங்கள் பெற  வேண்டும்," என்று குமார் கூறினார். அவர் ஒரு நடவடிக்கை குழுவை உருவாக்கவும், மாநாட்டிற்கு முன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்யவதாகவும்  குறிப்பிட்டார்.